குழந்தைகள்
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 4496
குழந்தைகள்
(ரஷ்ய கதை)
ஆன்டன் செக்காவ்
தமிழில்: சுரா
அப்பாவும் அம்மாவும் நதியா அத்தையும் வீட்டில் இல்லை. சாம்பல் நிறக் குதிரை இழுத்துச் செல்லும் வண்டியை வைத்திருக்கும் வயதான அதிகாரியின் வீட்டில் நடைபெறும் ஒரு பெயர் வைக்கும் நிகழ்ச்சிக்கு அவர்கள் சென்றிருக்கிறார்கள். அவர்கள் வருவதை எதிர்பார்த்துக் கொண்டு சாப்பிடும் மேஜையைச் சுற்றிலும் அமர்ந்து ‘லாட்டோ’ விளையாடிக் கொண்டிருந்தனர் குழந்தைகள் — க்ரிஷா, அன்யா, அல்யோஷா, சோனியா... பிறகு சமையல்காரனின் மகன் ஆந்த்ரேயும். அவர்கள் பொதுவாக படுத்து தூங்கக் கூடிய நேரமெல்லாம் கடந்து விட்டது. ஆனால், அம்மா வந்த பிறகு பெயர் வைக்கப்பட்ட குழந்தை எப்படி இருக்கிறது, விருந்தில் என்னென்ன உணவு வகைகளெல்லாம் இருந்தன என்ற விஷயங்களைக் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும். அப்படி இல்லாமல் எப்படி உறக்கம் வரும்?
தொங்கிக் கொண்டிருக்கும் விளக்கின் வெளிச்சத்தில் மேஜையின் மீது விளையாட்டு பொருட்களும் கடலைத் தோல்களும் தாள் துண்டுகளும் பரவி கிடந்தன. ஒவ்வொருவருக்கு முன்னாலும் இரண்டு கார்டுகள் வீதம் இருந்தன. மேஜையின் மத்தியிலிருந்த ஒரு வெள்ளை நிற தட்டில் ஒவ்வொரு ‘கோபெக்’கின் ஐந்து நாணயங்கள் இருந்தன. அதற்கடுத்து பாதி தின்னப்பட்ட ஒரு ஆப்பிள். ஒரு கத்திரி... கடலைத் தோல்களைப் போடுவதற்கு ஒரு பாத்திரம்.
பணம் வைத்துத்தான் விளையாட்டு — ஒவ்வொரு கோபெக். திருட்டு விளையாட்டு விளையாடினால், அந்தக் கணமே வெளியேற்றி விடுவார்கள்.
சாப்பிடும் அறையில் வேறு யாருமில்லை. ஆயா கீழேயிருக்கும் அறையில் சமையல்காரனுக்கு தையல் கற்றுத் தந்து கொண்டிருக்கிறாள். குழந்தைகளில் மூத்தவன் — ஐந்தாம் வகுப்பில் படித்துக் கொண்டிருக்கும் வாஸ்யா — வரவேற்பறையில் போடப்பட்டிருக்கும் ஸோஃபாவில் தூங்கிக் கொண்டிருக்கிறான்.
விளையாட்டு மிகவும் உற்சாகமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. மொட்டைத் தலையையும் வீங்கிய கன்னங்களையும் நீக்ரோக்களிடம் காணப்படுவதைப் போன்ற தடிமனான உதடுகளையும் கொண்டிருந்த ஒன்பது வயது நடக்கும் க்ரீஷாதான் மிகவும் அதிகமான உற்சாகத்துடன் விளையாடிக் கொண்டிருந்தான். ப்ரிப்பரேட்டரி வகுப்பில் அவன் படித்துக் கொண்டிருந்தான். வகுப்பிலேயே மிகுந்த அறிவைக் கொண்ட மாணவன் அவன்தான். மிகவும் பருமனாக இருப்பவனும் அவன்தான். பணத்தை நினைத்து மட்டுமே அவன் விளையாடுகிறான். தட்டிலிருந்த கோபெக்குகளை ஆசைப்படாமலிருந்திருந்தால், அவன் எப்போதோ போய் படுத்து உறங்கியிருப்பான். மற்றவர்களின் கார்டுகளை அவன் அவ்வப்போது ஆர்வமும் பொறாமையும் கலந்த பார்வையுடன் பார்த்துக் கொண்டிருந்தான். தோல்வி பயம், பொறாமை, பணத்தைப் பற்றிய கணக்கு கூட்டல்கள் — மொத்தத்தில் அவனால் அடங்கி இருக்க முடியவில்லை. வெற்றி பெற்றால், உடனடியாக அவன் ஆர்வத்துடன் எல்லா பணத்தையும் அள்ளி தன் பாக்கெட்டிற்குள் போட்டுக் கொள்வான்.
கூர்மையான தாடைப் பகுதியையும் கூர்மையான அறிவு ஒளிர்ந்து கொண்டிருக்கும் கண்களையும் கொண்டிருந்த எட்டு வயது நடக்கும் பெண் குழந்தையான அன்யாவிற்கும் எங்கே தோற்று விடுவோமோ என்ற பயம் இருக்கிறது. விளையாட்டு மாறி வருவதற்கேற்ப அவளுடைய முகம் அவ்வப்போது சிவந்து காணப்படும். சில நேரங்களில் வெளிறி வெளுக்கும். அவளுக்கு பணம் பெரிய பிரச்னையில்லை. ஆனால், வெற்றி என்பது பெருமைப்படக் கூடிய விஷயம்.
ஆறு வயது நடந்து கொண்டிருக்கும் சோனியா விளையாட்டில் கிடைக்கக் கூடிய சுவாரசியத்திற்காக மட்டுமே விளையாடுகிறாள். நல்ல உடல் நலத்தைக் கொண்ட குழந்தைகளிடமும், விலை மதிப்புள்ள பொம்மைகளிடமும் மட்டுமே இருக்கக் கூடிய நிறத்தையும், முடிச் சுருள்களையும் கொண்டிருந்த அவளுடைய முகம் சந்தோஷத்தால் பிரகாசமாக காணப்பட்டது. யார் வெற்றி பெற்றாலும் அவள் கைகளைத் தட்டி, சத்தம் போட்டு சிரிப்பாள்.
சிவந்த நிறத்தைக் கொண்ட குழந்தையான அல்யோஷா சத்தமாக சுவாசம் விட்டுக் கொண்டும், இளைத்துக் கொண்டும், கார்டுகளை உற்று பார்த்துக் கொண்டும் இருந்தான். விளையாட்டில் வெற்றி, தோல்வி, பணம் எதுவுமே அவனுக்கு பிரச்னையில்லை. விளையாட்டில் கலந்து கொள்ள அனுமதித்ததே பெரிய விஷயம் என்பதைப் போல அவனுடைய முகம் இருக்கும். பார்த்தால் வெறும் அப்பாவியைப் போல காணப்படுவான். ஆனால், உண்மையிலேயே கூறுவதாக இருந்தால் — அவன் ஒரு குட்டிப் பிசாசு. அவன் விளையாட்டில் ஈடுபடுவதே விளையாட்டில் இருக்கும் ஆர்வத்தால் அல்ல. விளையாட்டிற்கு மத்தியில் உண்டாகக் கூடிய சண்டைகளைப் பார்ப்பதற்குத்தான். அது அவனுக்கு விருப்பமான விஷயம். ஒரு அடிபிடியோ, கெட்ட சொற்கள் கூறுவதோ நடந்தால் சந்தோஷம் உண்டாகி விடும். அவனுக்கு பத்து வரைதான் எண்ணுவதற்கு தெரியும். அதனால் அன்யாதான் அவனுடைய பாய்ண்ட்களையும் கணக்குகளையும் பத்திரப்படுத்தி வைத்திருப்பாள்.
காலிக்கோ துணியால் ஆன உடுப்பில் மார்புப் பகுதியில் கண்ணாடி சிலுவை பதிக்கப்பட்ட, கனவில் நடப்பவனைப் போல எண்களையே உற்றுப் பார்த்தவாறு நின்று கொண்டிருக்கும் ஐந்தாவது விளையாட்டுக்காரனான சமையல்காரனின் மகன் ஆந்த்ரே கறுத்து வெளிறிப் போன சிறுவன். பணம், வெற்றி, தோல்வி எதுவுமே அவனை பாதிக்கவில்லை. கார்டுகளின் கை மாறலில் உண்டாகக் கூடிய எளிய கணித அறிவியல்தான் அவனை ஈர்த்திருக்கும் விஷயம்.
வரிசைப்படி அவர்கள் விளையாட்டை விளையாடிக் கொண்டிருந்தார்கள். எண்கள் எப்போதும் ஒன்றாகவே இருப்பதால், ஒரு சுவாரசியத்திற்காக ஒவ்வொரு எண்ணையும் அவர்கள் இன்னொரு பெயர் குறிப்பிட்டு அழைத்தார்கள்.
ஏழாம் எண்ணை ‘போக்கர்’ என்று குறிப்பிட்டார்கள். பதினொன்றை ‘கொம்பு’ என்று. விளையாட்டு அந்த வகையில் சுவாரசியமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. ‘முப்பத்திரண்டு’ என்று அழைப்பதற்கு மத்தியில் க்ரிஷா தன் தந்தையின் தொப்பியிலிருக்கும் மஞ்சள் நிற தொங்கல்களைப் பிடித்து பிய்த்துக் கொண்டிருந்தான்.
‘பதினேழு!’
‘போக்கர்!’
‘இருபத்தெட்டு... வாசலை மூடு.’
ஆந்த்ரேவிற்கு இருபத்தெட்டின் அழைப்பு விட்டுப் போனதை அன்யா கவனித்தாள். வேறொரு நேரமாக இருந்தால், அவள் அதை ஞாபகப் படுத்தியிருப்பாள். ஆனால், இப்போது பணம், இன்னும் சொல்லப் போனால் — அதை விட மரியாதை சம்பந்தப்பட்ட விஷயமும் இருந்ததால், அவள் சந்தோஷப்படவே செய்தாள்.
‘இருபத்து மூணு!’ — க்ரிஷா தொடர்ந்தான்.
‘அறுபத்து ரெண்டு.’
‘ஒன்பது!’
‘இதோ ஒரு கரப்பான் பூச்சி!’ — தவிட்டு நிறத்தில் மேஜையின் மீது வேகமாக நடந்து கொண்டிருந்த பூச்சியைச் சுட்டிக் காட்டியவாறு சோனியா சத்தம் போட்டு கூறினாள்.