குழந்தைகள் - Page 3
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 4497
‘கொஞ்சம் நிறுத்துங்கள். என்னுடைய ஒரு கோபெக் விழுந்து விட்டது’ — க்ரிஷா கவலையுடன் கூறினான். எல்லோரும் விளக்கை எடுத்து, நாணயத்தைத் தேட ஆரம்பித்தார்கள். அங்கேயிருந்த குப்பைகள் அனைத்தும் கைகளில் பட்டன. தலைகள் ஒன்றோடொன்று மோதின. நாணயம் மட்டும் கிடைக்கவில்லை. சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருந்த வாஸ்யா, க்ரிஷாவின் கையிலிருந்து விளக்கை வாங்கி மேஜையின் மீது வைத்தான். க்ரிஷா இருட்டிலும் தேடிக் கொண்டிருந்தான்.
இறுதியில் நாணயம் கிடைத்து விட்டது. எல்லோரும் மேஜையைச் சுற்றிலும் அமர்ந்து, மீண்டும் விளையாட்டை ஆரம்பிப்பதற்கு தயாரானார்கள்.
‘சோனியா தூங்கி விட்டாள்’ — அல்யோஷா உரத்த குரலில் கூறினான். தலை முடிகள் தோளில் விழுந்து கிடக்கின்றன. ஒரு மணி நேரமாவது ஆகியிருக்கும் அவள் உறங்க ஆரம்பித்து என்று தோன்றும் பார்க்கும்போது. அந்த அளவிற்கு சாந்தத் தன்மையுடனும் ஆழமாகவும் இருந்தது அவளுடைய உறக்கம். எல்லோரும் நாணயத்தைத் தேடிக் கொண்டிருந்தபோது, அவள் தூங்கி விட்டாள்.
‘வந்து... அம்மாவின் கட்டிலில் ஏறிப் படு’ — அவளைச் சாப்பிடும் அறையிலிருந்து வெளியே இழுத்தவாறு, அன்யா கூறினாள்.
எல்லோரும் சேர்ந்து அவளை வெளியே கொண்டு சென்றார்கள். ஐந்து நிமிடங்கள் கடந்ததும், அம்மாவின் கட்டில்... பார்க்க வேண்டிய காட்சிதான். சோனியாவிற்கு மிகவும் அருகில் அல்யோஷா படுத்து உறங்கிக் கொண்டிருந்தான். அவர்களுடைய கால்களில் தலைகளை வைத்து, க்ரிஷாவும் அன்யாவும் உறங்கிக் கொண்டிருந்தார்கள். சமையல்காரனின் மகன் ஆந்த்ரேயும் அங்கேயே சுருண்டு படுத்து உறங்கிக் கொண்டிருந்தான். அடுத்த விளையாட்டு ஆரம்பமாகும் வரை, எல்லா சக்திகளையும் இழந்து, நாணயங்கள் அவர்களைச் சுற்றிலும் சிதறிக் கிடந்தன. இனிய கனவுகள்.... சுகமான தூக்கம்.