Lekha Books

A+ A A-

கள்ள நோட்டு

kalla nottu

ள்ள நோட்டு என்பதே தெரியாமல் கள்ள நோட்டு வாங்கி, தாயே தான் பெற்ற மகளை விற்ற சம்பவத்தை, அந்த மகள்மீது காதல் கொண்டிருந்த போலீஸ் கான்ஸ்டபிள் சமீபத்தில் சொன்னான்: நல்ல பெரிய மார்பகங்களையும், தடித்த பின்பகுதியையும் கொண்ட ஒரு இளம் பெண் அவள். பட்டாளக் கேம்ப்பை அடுத்துள்ள ஒரு மரத்தினடியில் இருந்த ஒரு குடிசையில் அவள் தாயுடனும் சகோதரிகளுடனும் இருந்தாள்.

ஒவ்வொரு நாளும் அவன், அந்தப் பெண்ணைக் குடிசை வாசலில் பார்ப்பான். சில நேரங்களில் ஒன்றுமே செய்யாமல் வெறுமனே நின்றிருப்பாள். வேறு சில நேரங்களில் கயிறு பிரித்துக் கொண்டிருப்பாள். இளம் வயது போலீஸ் கான்ஸ்டபிள் அவளைப் பார்க்கும் நேரங்களில் காமம் கலந்த தன் பார்வையை அவள் மீது வீசுவான். பதிலுக்கு அவனை அவள் கவனித்தாளா இல்லையா என்பது அவனுக்கே தெரியாது. பார்ப்பதற்கு அழகான பெரும்பாலான பெண்களிடம் இளைஞர்களுக்கு சாதாரணமாகத் தோன்றக்கூடிய ஈர்ப்புதான், அவள்மீதுஅந்த போலீஸ் கான்ஸ்டபிளுக்கும் ஏற்பட்டிருந்தது.

இருந்தாலும், ரத்தம் புரண்ட கள்ள நோட்டுகளுடன் அவளைக் கண்ட பயங்கர காட்சியை இதயத்தில் நினைத்துப் பார்த்த போதுதான் அவனுக்கே என்னவோ போல் இருந்தது.

அவள் மட்டுமல்ல- அவளின் தாயும் வழக்கில் சிக்கினாள். தாய் தன் சொந்த மகளை விற்றதாக ஒரு வழக்கு; கள்ள நோட்டு கையில் வைத்திருந்ததாக இன்னொரு வழக்கு. மூன்றாவது வழக்கு வெட்கப்படத்தக்கது- கள்ள நோட்டு அச்சடித்ததாக. உண்மையான திருடனைப் பிடிக்க முடியாவிட்டால், கண்ணில் படுபவனைத் தூக்கில் போட வேண்டியதுதான் என்ற பழங்காலப் பழக்கம்தான் இப்போது அங்கு நடைமுறையில் எடுக்கப்பட்டிருந்தது. அதற்காக போலீஸையும் அரசாங்கத்தையும் குறை சொல்ல முடியுமா என்ன? பழங்காலந்தொட்டு வழக்கத்தில் இருந்த ஒன்றைத்தான் இப்போதும் செயல்படுத்தி இருக்கிறார்கள் என்பதே உண்மை.

அப்படியானால் அந்தக் கள்ள நோட்டைத் தயாரித்தது யாராக இருக்கும்? கள்ள நோட்டு அச்சடிக்க வேண்டுமென்றால், அதற்கு நல்ல பேப்பர் வேண்டும். புதிய நோட்டு அடிப்பதற்கான இயந்திரம் வேண்டும். யுத்தம் தொடங்குவதற்கு முன்பு இருந்த மாதிரியான இயந்திரமோ, அச்சோ இப்போது சரியாக வராது. பிறகு... போர் வந்தபிறகு எல்லாப் பொருட்களுக்கும் விலைவாசி ஏறியதுபோல, பேப்பருக்கும் கடுமையாக விலை கூடியிருக்கிறது. அது மட்டுமல்ல... பணமே அதிகமாகக் கொடுத் தால்கூட, பேப்பர் கிடைப்பது என்பது கஷ்டமான ஒரு விஷயமாக இருக்கிறது. நிலைமை இப்படி இருக்க, நோட்டு அச்சடிக்க நல்ல பேப்பரும் மற்ற தேவையான பொருட்களும் எங்கிருந்து கிடைத்தன?

காற்றில் மிதந்து வந்த வதந்திகள் இரண்டு விதத்தில் இருந்தன. பெரிய பணக்காரர் யாரோ பேப்பரையும் மற்ற பொருட்களையும் சேர்த்து வைத்துக் கொண்டு கள்ள நோட்டுகளை அச்சடித்து புழக்கத்தில் விட்டுக் கொண்டிருக்கிறார் என்பது முதல் வதந்தி. எதிரிநாடுகள் இதற்கென இருக்கும் தரகர்கள் மூலம் கள்ளத்தனமாக நோட்டுகளை அச்சடித்து ரகசியமாக நம் நாட்டுக்குள் வினியோகம் செய்கிறார்கள் என்பது இரண்டாம் வதந்தி.

எது எப்படி இருந்தாலும் அந்தக் கள்ள நோட்டையும் நல்ல நோட்டையும் அருகருகில் வைத்துப் பார்த்தால், அவற்றுக்கிடையே உள்ள வேறுபாட்டைக் கண்டுபிடிப்பதென்பது கஷ்டமான ஒரு விஷயமாகவே இருந்தது. போருக்குப் பிறகு, நோட்டுகள் ஆயிரம் மடங்கு பெருகிவிட்டன. வெள்ளியால் ஆன காசுகளையோ, தங்க நாணயங்களையோ இப்போது பார்க்கவே முடியாது. வெள்ளியும் பொன்னும் எங்கேதான் போயின? போருக்குத் தேவைப்படும் என்று வெள்ளியாலும் தங்கத்தாலும் பீரங்கி குண்டுகள் தயாரிக்கிறார்களோ என்னவோ? யாருக்கும் இது பற்றிய அறிவு கொஞ்சமும் கிடையாது. பலரிடமும் கள்ள நோட்டு இருக்கிறது. கொழுத்துப்போன பணக்காரர்கள், பெரிய வியாபாரிகள், உயர்ந்த அதிகாரிகள்- இவர்களிடம் கட்டாயம் கள்ளப் பணம் இருக்கவே செய்கிறது.

இப்படிப்பட்ட வதந்திகளை இங்கு பரப்புவது யார்? கள்ள நோட்டு, கள்ள நோட்டு என்று பலரும் சொல்லிக் கேள்விப் பட்டிருக்கிறார்கள். ஆனால், அவர்களால் கள்ள நோட்டை நேரில் காட்ட முடியுமா? சொல்லப்போனால் எல்லாருக்குமே இந்த விஷயத்தில் மிகவும் பயம் அதிகம். காரணம்- கள்ள நோட்டு அச்சடிப்பவர்களுக்குக் கிடைக்கும் தண்டனை  பெரிது. தான் அந்தக் குற்றத்தைச் செய்யவில்லை என்று அவன் நிரூபித்தே ஆகவேண்டும்.

நாட்டில் உள்ள எந்த மனிதனையும் ஒரே நிமிடத்தில் குற்றவாளியாக்கிவிட முடியும். யாரும் எந்த நேரத்திலும் குற்றவாளிதான்- சம்பந்தப்பட்ட மனிதனே தான் குற்றவாளி அல்ல என்பதை நிரூபிக்கும்வரை. இப்படி ஒரு சட்டம் இருந்ததால், மக்கள் உண்மையிலேயே அச்சத்துடனே இருந்தார்கள். வெறுமனே "இது கள்ள நோட்டு மாதிரி தெரியுதே!' என்று சொன்னால்கூட அவர்களின் முகமே மாறிப்போகும். இந்த விஷயத்தில் அதிகம் பயந்து போயிருந்தது சாதாரண மக்கள்தான். அவர்களுக்கு கைக்கூலி கொடுக்கும் அளவிற்கு வசதிகள் கிடையாது. அவர்கள் அன்றாட வாழ்க்கையை ஓட்டுவதற்கே மிகவும் சிரமப்பட்டுக் கொண்டிருந்தனர்- உண்ண உணவில்லாமல், உடுக்க துணி இல்லாமல், இப்படி...

இருந்தாலும் நீதியை நிலை நாட்டும் அரசாங்கம் எல்லாருக்கும் உணவுப் பொருட்களும் மற்ற பொருட்களும் குறிப்பிட்ட விலைக்குக் கிடைக்கும் வண்ணம் எல்லாருக்கும் ரேஷன் கார்டுகள் கொடுத்திருந்தன. ஒரு குடும்பத்திற்கு நாள் ஒன்றுக்குத் தேவையான பொருட்களை ஒரு வாரத்திற்கு வைத்துக் கொள்ளும்படி ரேஷன் கார்டுகள் மூலம் அரசாங்கம் நியாய விலைக் கடைகளில் கொடுத்துக் கொண்டிருந்தது. ஆனால், அதை வாங்குவதற்கே கையில் காசு இல்லையென்றால்...?

பணமும் இல்லாமல், பணத்தை உண்டாக்கக் கூடிய வேலையும் கிடைக்காமல், ஒவ்வொரு நாளும் எத்தனையோ ஆயிரம் குடும்பங்கள் பசியால் வாடிப்போய் வதங்கி அழிந்து கொண்டிருந்தன. ஆனால், இப்படி நித்தமும் அழிந்து கொண்டிருந்தோர் பட்டிய லில் ஆயிரக்கணக்கான நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் இருந்தார்கள். இவர்களில் நிறைய துன்பங்களை அனுபவிக்கவேண்டி வந்தவர்கள் பெண்கள்தாம்.

அவர்கள் ஒருவேளை உணவுக்காக எதைச் செய்யவும் தயாராக இருந்தார்கள். என்ன செய்தாலும் உணவுப் பொருட்கள் கிடைப்பதென்பது மிகப்பெரிய ஒரு விஷயமாக இருந்தது. பணம் இருந்தால்கூட, உணவுப் பொருட்கள் இல்லை என்ற நிலை. அரசாங்க டிப்போக்கள்கூட கிட்டத்தட்ட காலிதான். நாட்டில் இருந்த தானியங்கள் எங்கே போயின? போரின் காரணமாக வெளிநாடுகளில் இருந்து வரவேண்டிய இறக்குமதிப் பொருட்கள் வரவில்லை என்றாலும், இந்த நாட்டில் தானியங்கள் இருந்தனவே! அவை எங்கே? போருக்கு முன்னால் இருந்தனவே! விவசாயம் செய்யக் கூடிய ஏராளமான நிலங்கள் இங்கு தரிசு நிலங்களாகக் கிடந்தன. அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுத்தது? அரசாங்கத்தின் விவசாய இலாகா, விவசாயம் சம்பந்தமாக பெரிய அளவில் ஆர்வம் எடுத்துச் செயல்படுகிற ஒரு இலாகாவாக இல்லை என்பதே உண்மை.

 

+Novels

Popular

Short Stories

July 31, 2017,

May 28, 2018,

தந்தை விழுந்தபோது...

March 8, 2012,

மகாலட்சுமி

March 22, 2013,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel