படகோட்டி
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 7049
தேங்காய்களை எடை போட்டு கணக்கு முடித்து பணம் கையில் கிடைத்தபோது தெரு விளக்குகள் எரியத் துவங்கி விட்டிருந்தன. “சரி... நாம போகலாம்'' என்று படகோட்டியிடம் கூறிய முதலாளி படகின் நடுப்படியில் ஏறினான்: “உன் விளக்கை இங்கே கொஞ்சம் எடு.''
கார்ளோஸ் தகர விளக்கை எரிய வைத்து ஜானியிடம் நீட்டினான். அவன் அதை வாங்கி அருகில் வைத்துவிட்டு நோட்டுகளை மீண்டும் எண்ணி தாளில் சுற்றி மடிக்குள் பத்திரமாக வைத்தான். பிறகு லாப- நஷ்டங்களை மனதிற்குள் கணக்கு போட்டுப் பார்க்க ஆரம்பித்தான்.
“இவங்ககிட்ட வியாபாரம் பண்ணி லாபம் சம்பாதிக்குறதுன்றது ரொம்பவும் கஷ்டமான விஷயம்.'' துடுப்பைப் போட்டுக் கொண்டே படகோட்டி சொன்னான்: “ஒரு தேங்காய்ல எங்கேயாவது ஒரு மஞ்சள் புள்ளி விழுந்திருந்தா, அதைத்தான் அவனுங்க எடுத்து பெரிசா காட்டுவானுங்க. பிறகு அவனுங்க போடுறதுதான் விலை...''
ஜானி சொன்னான்: “இனி இந்த வேலை வேண்டாம். பணத்தையும் போட்டு, பத்து பதினைஞ்சு நாட்கள் பாடுபட்டு, கடைசியில வியாபாரம் முடிஞ்ச பிறகு கணக்குப் போட்டுப் பார்த்தால், அப்போதான் உண்மையான விஷயமே வெளியே தெரியுது.''
“பத்திரிகையில நல்ல விலை போட்டிருக்கும். அவங்க என்ன, வாங்கவா போறாங்க? சும்மா எழுதினா போதுமா? சரக்கை எடுத்துக் கொண்டு வியாபாரிக்கிட்ட போனால், பிறகு அவனுங்க சொல்லுறதுதான் விலை.''
“அது எப்படி வேணும்னாலும் போகட்டும்னு கூட வச்சுக்கு வோம். அவங்க கழிவுன்னு ஒண்ணு எடுக்குறாங்களே, அதுதான் தாங்க முடியாத விஷயம். நம்ம சரக்குல ரெண்டு ராத்தல் கழிவுன்னு எடுத்திருக்குறாங்க!''
“அதுதான் நான் சொன்னேனே! நம்ம சரக்கை கோணியோட கொடுக்குறப்போ, கிலோ கிலோன்னு மணி மாதிரி சத்தம் கேட்டது. அதுல ரெண்டு ராத்தல் கழிவாம். அப்போ எவ்வளவு ரூபாய் நம்மை விட்டு போகுது? அம்பத்தொன்பது ரெண்டு. அறுபது ரெண்டு. ஆறு ரெண்டு பன்னிரெண்டு. நூற்றி இருபது. நூற்றுப் பதினெட்டு. எழுபது ரூபாய் அதுலயே போயிடுச்சே!''
“எழுபதா? பிறகு அந்தக் கழிவுக்கு அவங்க என்ன விலை வச்சாங்க தெரியுமா? அது என்ன எடை இல்லாமலா இருந்தது?''
“அப்படித் தர வேண்டிய அவசியமே இல்ல. நான் இதை அவங்ககிட்ட சொல்லல. இருந்தாலும், அதனால நஷ்டம் வருமா என்ன?''
“இல்லாம எப்படி இருக்கும்? மாசத்துல ரெண்டு தடவை பெரிய அளவுல சரக்கு கொண்டு வர்றவங்களை விட்டுட்டு, காலையில தேங்காயை உடைச்சு சாயங்காலம் அதை எடுத்துட்டு வர்ற ஏழைங்கள் கிட்ட சரக்கெடுத்தா, நஷ்டம் வராம எப்படி இருக்கும்?''
“அதைத்தான் நானும் சொல்றேன். நாம பாதிக்குப் பாதி நல்லா காய்ஞ்ச தேங்காயை எடுத்தாலும், அதை எடை போடுறப்போ நமக்கு நஷ்டம்தான் வருது. பிறகென்ன இது ஒரு தொழில்! அஞ்சாறு குடும்பங்கள் இதை வச்சு பொழைக்குதுன்றதைத் தவிர இதுல வேற என்ன இருக்கு?''
“அஞ்சாறு குடும்பங்கள் பொழைக்கணும்ன்றதுக்காக நான் நஷ்டப்பட முடியுமா? அதனால இனி தேங்காய் வியாபாரமே வேண்டாம். இன்னைக்கு நடந்த வியாபாரத்துல எவ்வளவு ரூபாய் நஷ்டம் உண்டாகியிருக்கு தெரியுமா?''
“சொன்னால் தெரியும். இல்லாட்டிகூட ஓரளவுக்கு தெரியும். இனிமேல் நாம கொல்லத்துக்கு சரக்கைத் தர வேண்டாம். ஆலப்புழை இதைவிட பரவாயில்லை...''
முதலாளி வெற்றிலைப் பொட்டலத்தை எடுத்துப் பிரித்து வெற்றிலை போட்டான். ஆடையைக் கழற்றி அங்கிருந்த கொக்கியில் தொங்க விட்டான். விளக்கை அணைத்தான். அன்றைய வியாபாரத்தின் லாபத்தை நினைத்த அந்த மனிதனின் மனதும் குளிர்ச்சியான இளம் காற்றை அனுபவித்த உடம்பும் சிலிர்த்தன. வெற்றிலை போட்டது நல்ல ஒரு புத்துணர்ச்சியைத் தந்தது.
“பாயைக் கொஞ்சம் விரிச்சிப் போடு... காத்து இருக்குற மாதிரி இருக்கும்.''
கார்ளோஸ் நடுப்பகுதி வழியே முன் பக்கம் சென்று பாய்மரத்தில் கட்டியிருந்த கயிறைப் பிடித்தவாறு திரும்பி வந்தான். காற்று வருவதற்காக அவன் மெதுவாக ஊதினான்.
“அந்தப் பையனிடம் நான் எவ்வளவோ சொன்னேன்- படகுல போறதா இருந்தா திரும்பவும் படகுத்துறையை அடையிறது வரை உனக்கும் பொறுப்பு இருக்கு. அதனால நாம சேர்ந்து போவோம்னு. அப்போ அவனுக்கு வீட்டுக்கு அவசரமா போகணும்போல இருக்கு. இந்தக் கயிறைப் பிடிக்கிறதுக்கு அவன் இருந்திருந்தால்...!''
“அவன் சாயங்காலம் வர்றது வரை இங்கேயே சுற்றிச் சுற்றி நின்னுக்கிட்டு இருந்தது எதுக்கு? அப்படி அவசரமா போறதா இருந்தால்?'' ஜானி கேட்டான்.
“வண்டிக் கூலிக்கு உங்ககிட்ட சக்கரம் (திருவிதாங்கூர் நாணயம்) வாங்கணும்னு நின்னான்.''
“நிலா மறையிறதுக்கு முன்னாடி நாம அங்கே போயிடுவோம்ல?''
“காற்று இருந்தால் நாம போன பிறகுகூட நிலா மறைஞ்சிருக் காது!''
“சாயங்காலம் சாப்பிடுறதுக்கு சாதம் இருந்ததா?''
“படகு... இடது பக்கம் வா. சாதமும் குழம்பும் இருந்தது. நம்மோட ஒரு குழந்தை வந்திடுச்சு. அதுக்குக் கொடுத்துட்டேன்.''
“உன் குழந்தையா? எங்கேயிருந்து வந்தது?''
“என்னோடதுன்னா... நமக்குக் கொஞ்சம் வேண்டியதுன்னு அர்த்தம். நான் படகுல வந்திருக்கேன்னு விஷயத்தைத் தெரிஞ்சிக் கிட்டு, ரெண்டு மூணு ரூபாய் வேணும்னு கேட்டுக்கிட்டு அங்கே வந்தது. நான் அதுக்கு சாதத்தைத் தந்தேன்.''
ஜானிக்கு கார்ளோஸுக்கு நன்றி சொல்ல வேண்டும்போல் இருந்தது. அந்தத் தேவையைச் சொல்லி படகோட்டுவதற்கான கூலி இல்லாமல், அதற்கு மேல் இரண்டு மூன்று ரூபாய் அவன் கடன் கேட்டு, கையில் இவ்வளவு ரூபாய்களை வைத்துக் கொண்டு தான் கொடுக்காமலிருந்தால் அவன் தன்னைப் பற்றி என்ன நினைத்திருப் பான்? இன்னொருத்தன் கையில் பணம் இருப்பதைப் பார்க்கும் போது தேவையை உண்டாக்கிக் கொண்டு கடன் வாங்கி அதை நிறைவேற்றப் பார்க்கும் மனிதர்கள் கூட்டத்தைச் சேர்ந்தவன் இல்லை அவன் என்ற திருப்தி முதலாளியின் மனதில் உண்டானது.
“உன்கிட்ட பணம் கேட்டு அந்தக் குழந்தை வந்திருக்கா? நீ என்ன நிறைய சம்பாதிக்கிறவனா என்ன?''
“அந்தக் குழந்தை அப்படி யார்கிட்டயும் கேக்குற ஆள் இல்லை. அந்த அளவுக்கு அதுக்குக் கஷ்டம்போல...''
“சும்மா பணம் கிடைக்கும்னா இப்படியெல்லாம் கஷ்டம் அது இதுன்னு சொல்லத்தான் செய்வாங்க!''
“அது அப்படிப்பட்டது இல்ல. அதோட புருஷன் ஆலப்புழையில் ஒரு அலுவலகத்துல வேலைக்குப் போயிருக்கான்!''
“உன்கிட்ட பணம் கேட்டது ஒரு பொண்ணா? அவ புருஷனுக்கு அங்கே கிடைக்கிற சம்பளம் செலவுக்குப் பத்தாம இருக்கலாம். இல்லையா? ஆலப்புழையில ஒரு மாசம் இருக்குறதா இருந்தா, அதுக்கு எவ்வளவு ரூபாய் வேணும்?''