படகோட்டி - Page 4
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 7053
இந்தப் படகில் வந்து இவள் ஏறுவதை யாராவது நிச்சயம் பார்த்திருப்பார்கள். இப்போது யாராவது வந்து என்னைக் கண்டுபிடித்துவிட்டால்? படகோட்டி ஓடி ஒளிந்து கொள்வான். இவள் மனதில் கெட்ட எண்ணம் இருந்து, நாங்கள் தனியாக படகில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கும் போது, ஏற்கெனவே பேசி வைத்துக்கொண்டு இவளுடைய ஆட்கள் வந்து கண்டு பிடிக்கிறார்கள் என்ற சூழ்நிலை உண்டானால்... இல்லை... இந்த படகுத் துறையில் இவளை இறக்கி விட்டு விடுவேன். என்னிடம் கேட்காமல் எதற்கு கண்ட பெண்ணையெல்லாம் படகில் ஏற்ற வேண்டும்? கார்ளோஸ் இங்கு வரட்டும். இவளை எங்கு வேண்டுமானாலும் கொண்டு போய் அவன் விட்டு வரட்டும். அதற்குப் பிறகு படகுத் துறையில் இருந்து படகு நீங்கினால் போதும். அவனைக் காணவில்லையே!'' ஜானி தனக்குள் கூறிக்கொண்டான்.
மர்ஸலி மனதிற்குள் நினைத்திருக்க வேண்டும். "முதலாளி ஒரு நல்ல மனிதராக இருக்கிறார். அதனால்தான் கார்ளோஸ் அண்ணன் எங்களை தனியாக இருக்கும்படி விட்டுப் போயிருக்கிறார். இல்லாவிட்டால் என்னதான் ஆனாலும் தான் அன்பு வைத்திருக்கும் ஒரு இளம் பெண்ணை இன்னொரு மனிதனிடம் விட்டு விட்டு அந்த நள்ளிரவு நேரத்தில் போக மாட்டார். சரி... அது இருக்கட்டும்... இந்த ஆள் எதற்கு இந்த வெளிச்சத்தில் உட்கார வைத்து என்னையே பார்த்துக் கொண்டிருக்க வேண்டும்? விளக்கை அணைத்து விட்டால், நான் இங்கேயே படுத்துக் கொள்வேனே!'
“காப்பி போடுறதுக்கான நீர்ல சூடு இல்லாம இருந்திருக்கும். நெருப்பு எரிய வச்சிருப்பாங்க.''
“வீட்டுல யாரெல்லாம் இருக்காங்க?'' இளைஞன் கேட்டான்.
“கார்ளோஸ் அண்ணன் சொன்னாருல்ல... அதெல்லாம் உண்மைதான்.''
“இந்த ராத்திரி நேரத்துல...''
“....''
“என்ன புழுக்கம்!''
“இதுக்குள்ளே ஒரே புகையா இருக்கு!''
“விளக்கை அணை.''
“கார்ளோஸ் அண்ணன் ஏதாவது நினைப்பாரு...''
ஜானிக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை.
கார்ளோஸ் திரும்பி வந்தான். அவளுக்கு தின்பதற்கு என்னவோ வாங்கிக் கொண்டு வந்திருந்தான். அவள் அதை வாங்கிச் சாப்பிட்டாள்.
அதற்குப் பிறகு பாட்டு, பேச்சு எதுவும் இல்லை. அந்த விளக்கிற்கு அங்கு வேலையே இல்லாமல் இருந்தது. "நான் படுக்க போகிறேன்பா’’ என்று கூறுவது மாதிரி மர்ஸலி அங்கு படுத்துக் கொண்டாள். படகு கரையை அடைந்தது. ஜானி கரையில் இறங்கினான்.
“ஒரு அஞ்சு ரூபாய் வேணுமே, முதலாளி!'' படகோட்டி சொன்னான்: “இந்தப் பெண்ணைக் கொண்டு போகணும்ல...''
“பொழுது விடியட்டும்.'' பணம் கேட்டது அவனுக்குச் சிறிதுகூட பிடிக்கவில்லை என்பது மாதிரி இருந்தது அந்த பதில். “நீ இப்போ என்ன செய்யப் போற?''
“இந்த நடுராத்திரி நேரத்துல எங்கே போறது? இந்தப் படகுல எங்கேயாவது படுக்க வேண்டியதுதான்.''
அவனுடைய முகத்தில் ஓங்கி ஒரு அடி கொடுத்தால் என்ன என்று நினைத்த ஜானி ஒரு நிமிடம் அங்கேயே நின்றுவிட்டு, பேசாமல் நடந்து தன் வீட்டுக்குச் சென்றான்.
காலையில் கார்ளோஸ் அவனிடம் படகு ஓட்டிய கூலி இல்லாமல் ஐந்து ரூபாய் கடனாகப் பெற்றான்.
இரவு நேரத்தில் முதலாளி ஒரு இளம்பெண்ணைப் படகில் அழைத்து வந்திருந்தான் என்றும், கார்ளோஸுக்கு ஐந்து ரூபாய் பரிசாகக் கிடைத்தது என்றும் கண்டவர்களெல்லாம் கூறி முதலாளியின் மனைவியின் காதுக்கு அந்தச் செய்தி வந்தது. அதைத் தொடர்ந்து அங்கு உண்டான பிரச்சினைகள்...!