படகோட்டி - Page 3
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 7053
“அவள்கிட்ட பணம் இல்லைன்னு சொல்லி அனுப்பிட்டே இனிமேல் உனக்கு எதுக்கு பணம்? நீ இந்த படகுல ஏறின பிறகு சொன்னதெல்லாம் பொய். உனக்கு தூக்கம் வராம இருக்குறதுக்காக, எதையாவது பேசிக்கிட்டு இருக்கணும். நான் படுத்து உறங்காம அதைக் கேட்டுக்கிட்டு இருக்கணும். அப்படியே இல்லைன்னாகூட நான் படுத்து உறங்கப் போறதும் இல்ல. நாம சேர்ந்து இருக்குறப்பவே நாலஞ்சு தடவை தேங்காய்களைத் திருடிக் கொண்டு போகல? ஒரு தடவையாவது இந்த நடுப்படியில இப்படி உட்கார்ந்து இருக்குறதைத் தவிர வேற மாதிரி என்னை எப்பவாவது பார்த்த ஞாபகம் இருக்கா?''
“நான் சொன்னது பொய் இல்ல முதலாளி. அந்தப் பொண்ணு வந்து ஆலப்புழைக்குப் போறதுக்கு ரெண்டு மூணு ரூபாய் வேணும்னு கேட்டா. அவளை தனியா போக வேண்டாம். நானே அழைச்சிட்டுப் போறேன்னு சொன்னேன். அவள் அதுக்கு சரின்னு சம்மதிச்சிட்டா. "முதலாளிக்கிட்ட அஞ்சு ரூபா கடன் வாங்குறேன். அதை படகோட்டி நான் கழிச்சிடுறேன். நாளைக்குக் காலையில ஆலப்புழைக்குப் புறப்படுவோம். இங்கே அந்தக் கோணிகள் அடுக்கி வச்சிருக்குற இடத்துக்குப் பக்கத்துல ஏறி படுத்துக்கோ'ன்னு நான் அவள்கிட்ட சொன்னேன்.''
“என்ன? இந்த படகுலயா?''
“அந்த அப்பிராணி பொண்ணு அந்த இடத்துல சுருண்டு படுத்து தூங்கிக்கிட்டு இருக்கா. நாம பேசினது எதுவும் அவ காதுல விழுந்திருக்காது. குஞ்ஞமர்ஸலியே!''
ஓடு பாய் ஒன்று வளைந்து, சுருங்கி மறு பக்கமாகப் புரண்டு விரிந்து நீள்வதற்கு இடையில் படகு இப்படியும் அப்படியுமாக ஆடியது.
அவனுடைய மர்ஸலி அழைப்பை யாரும் கேட்கவில்லை.
படகு ஏரியைத் தாண்டி ஒடுகலான வாய்க்காலுக்குள் நுழைந்தது.
யாரும் எதுவும் பேசாமல் சில நிமிடங்கள் தாண்டின.
“கார்ளோஸ் அண்ணே.'' முதலாளி அழைத்தான்.
“படகு கிழக்குப் பக்கம் வரட்டும்.''
“இந்தப் படகுல வேற ஒரு ஆளு இருக்குன்னு இதுவரை ஏண்டா சொல்லல?'' அந்தக் குரல் அவ்வளவு பலமுள்ளதாக இல்லை.
“அதைச் சொல்றதுக்குத்தான் இருந்தேனே!''
“என்கிட்ட கேட்காம ஒரு ஆளை இந்த ராத்திரி நேரத்துல படகுல ஏறச்சொல்லி படுக்க வச்சது அவ்வளவு சரியான ஒரு விஷயம் இல்ல. உன் கையில தீப்பெட்டி இருக்கா? இல்லாட்டி வேண்டாம். இங்கே இருக்கு!''
ஜானி விளக்கைப் பற்ற வைத்தான். நடுப்படிக்குப் பின்னால் சிறிது தாண்டி மடித்து வைக்கப்பட்டிருக்கும் அறுபது காலி சாக்கு களுக்கு அருகில் விளக்கை நீட்டி அந்த இளைஞன் பார்த்தான். அப்படி சிறிது நேரம் அவன் குனிந்து நின்றிருப்பதற்கு மத்தியில், அங்கு படுத்திருந்த பெண் அந்த இடத்தை விட்டு எழுந்தாள்.
“நான் பொய் சொல்லலை, முதலாளி.'' கார்ளோஸ் சொன்னான்: “குஞ்ஞமர்ஸலி நல்ல தூக்கத்துல இருக்கணும். பாவம் அந்தப் பொண்ணு...''
அவள் முகத்தைக் குனிந்து கொண்டிருந்தாள். விளக்கை கோணியின்மீது வைத்துவிட்டு, ஜானி நடுப்படிக்கு வந்து அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.
வரதட்சணைக்குப் பதிலாக அவளுக்கு ஏதாவது கொடுத்து திருமணம் செய்துகொண்டு போக நல்ல மணி கட்டிய ஒரு இளைஞன் இல்லாமலா போவான் என்று கார்ளோஸ் சொன்னது ஒரு விதத்தில் பார்த்தால் சரிதான். ஜானி சிரிக்க முயற்சித்தான்.
படகைக் கரைக்குக் கொண்டு வந்த படகோட்டி ஓடு பாயைச் சுருட்டினான். பாயை எடுத்து படகுக்குள் வைத்தான். முதலாளியின் அருகில் சென்ற அவன் பல்லைக் காட்டினான்.
“கொஞ்சம் தண்ணி குடிக்கணுமே!''
“என்ன வேணும்?''
“உனக்கு காபி வேணுமா, கண்ணு?''
“எனக்கொண்ணும் வேண்டாம்.'' அவள் கீழே பார்த்தவாறு சொன்னாள்.
“நீ என்ன மனிதன்டா? வேணுமான்னு கேட்காம வாங்கிக் கொண்டு வந்து கொடுத்தா, குடிக்காம இருப்பாளா?''
கார்ளோஸ் பல்லைக் காட்டினான்.
ஜானி சிரித்தான்.
அவள் அசையவில்லை.
“சரி... அரை ரூபா தாங்க. முதலாளி, உங்களுக்கு ஏதாவது வாங்கிட்டு வரணுமா?''
“எதுவும் வேண்டாம்.''
கார்ளோஸ் போனான்.
“அங்கே போயி கதை அளந்துக்கிட்டு இருக்கக் கூடாது. சீக்கிரமா வரணும்.'' ஜானி சொன்னான்.
இளம் முதலாளி அந்த இளம் பெண்ணையே பார்த்துக் கொண்டிருந்தான். ஏதாவது பேசினால் நன்றாக இருக்கும் என்று அவனுக்கு ஒரு ஆசை. அவனுடைய கைகளும் கால்களும் பரபரத்தன. ஏதாவது ஒரு பாட்டை முணுமுணுத்தால் என்ன என்று அவன் நினைத்தான். ஆனால், அவன் அதைச் செய்யவில்லை. தன் கணவனை அவள் விரட்டியடித்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் அவளை உதறிவிட்டுப் போக அவனுக்கு எப்படி மனம் வந்தது?
அந்தப் பெண் என்ன நினைத்துக்கொண்டிருப்பாள்? எது எப்படியிருந்தாலும் அவளும் ஏதோ சிந்தனையில்தான் இருப்பாள். ஒரு இளைஞன். நல்ல உடல்நலத்துடன் இருப்பவன். கையில் நல்ல பணம் இருக்கிறது. நள்ளிரவு நேரம். படகுக்குள் வலையறைக்குள் இருக்கிறான். முழுமையான தனிமை. கார்ளோஸ் அண்ணனுக்கு தான் யாருமில்லை என்று அவன் ஏற்கெனவே கூறி விட்டான். திருமணம் செய்யாத பெண்ணும் அல்ல. ஒரு தேவைக்காக இந்த இடத்தில் இருக்க வேண்டிய நிலை அவளுக்கு. கார்ளோஸ் அண்ணன் நம்பி இருப்பது இந்த இளம் வயது முதலாளியைத்தான்.
“கார்ளோஸ் அண்ணனைக் காணோமே?'' அவள் வெளியே பார்த்துக் கொண்டே முணுமுணுத்தாள்.
“அவன் எப்பவும் இப்படித்தான்.'' வெளியே பார்த்தவாறு ஜானி சொன்னாள்: “அங்கே போயி எதையாவது பேசிக்கிட்டு இருப்பான். நாலு மணிக்கு முன்னாடி அவன் திரும்பி வரவே மாட்டான்.''
முதலாளி வெற்றிலைப் பொட்டலத்தை அவிழ்த்து வெற்றிலை போட ஆரம்பித்தான். சத்தம் வரும் வண்ணம் அதைத் துப்பினான்.
மர்ஸலி கொட்டாவி விடுவதை அவன் பார்த்தான்.
ஒரு ஆபத்தான சூழ்நிலையில் தான் இருப்பதைப்போல் ஜானி உணர்ந்தான். மர்ஸலி தலையைத் தூக்கி அவனைப் பார்த்தாள். அவனுடைய பார்வை ஏற்கெனவே அவள் மீதுதான் இருந்தது. அவள் மனதிற்குள் கார்ளோஸைத் திட்டியிருக்கலாம். இல்லா விட்டால் இந்த இளம் முதலாளியுடன் இருக்கும்படி செய்து விட்டு போனதற்காக அவனுக்கு மனதிற்குள் நன்றி கூறிக்கொண்டிருக்கலாம். ஜானியின் தலைக்குள் ஒரு தெளிவற்ற நிலை நிலவிக் கொண்டிருந்தது. "கார்ளோஸ் சொன்னவை அனைத்தும் உண்மையாக இருக்குமா? கட்டிய கணவனைத் தேடி ஒரு அன்னிய இளைஞனுடன் சேர்ந்து ஒரு பெண் புறப்படுவது என்பது... அவள் என்ன வெறும் ஒருத்தியா? இருபது வயது உள்ள ஒரு அழகி! புறப்பட்டிருப்பதோ இரவு நேரத்தில். இதில் ஏதோ திருட்டுத் தனங்கள் இருக்கின்றன. அவன் அவளை ஏதோ பேசி மயக்கி திருட்டுத்தனமாகக் கொண்டு போகிறான்.