படகோட்டி - Page 2
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 7053
“அவன் வந்து போய் அஞ்சாறு மாதங்கள் ஆயிடுச்சு. இங்கே ஒரு பைசாகூட அவன் அனுப்புறது இல்ல. அவளும் மாமியாரும் மட்டும்தான் வீட்டுல இருக்குறாங்க. ஆம்பளையா இருக்கிறவன் ஒரு பொறுப்பே இல்லாம இருந்தா பொம்பளைங்க என்ன செய்ய முடியும்?''
“அவங்க பிறகு எப்படி வாழ்றாங்க?''
“அதைத்தான் நானும் யோசிச்சிக்கிட்டு இருக்கேன்.''
“ம்... அதுக்குப் பிறகு?''
“அந்தப் பொண்ணு ஆலப்புழைக்குப் போகணும்.''
“அவன் இங்கே வரலைன்றதுக்காக இவ அங்கே போறதா? சரிதான்...''
“அந்தப் பொண்ணை வேற யாராவது ஒரு ஆண் கல்யாணம் பண்ணிக்கலாமே! வரதட்சணைக்குப் பதிலா அவளுக்கு வேற ஏதாவது தந்து கல்யாணம் பண்ணிக்க நல்ல மணி கட்டிய ஆம்பளைங்க அங்கே இல்லாமலா இருப்பாங்க?''
“சரிதான்... அந்த அளவுக்கு அவ நல்ல பொண்ணா என்ன?''
“யாராக இருந்தாலும் அவளைப் பார்த்தவுடனே, அப்படியே நின்னுடுவாங்க. அந்த அளவுக்கு அழகான பொண்ணு. படகு கிழக்கு பக்கம் வரணும். அந்தப் பொண்ணோட அப்பனுக்கும் சொந்தத்துல படகு இருந்தது. அந்த ஆளுக்கு கள்ளு வாங்கிக் கொடுத்து கைக்குள்ள போட்டுத்தான் அந்தப் பொண்ணையே அவ புருஷன் கட்டினான். மூணோ நாலோ மாதங்கள் அவங்க ஒண்ணா வாழ்ந்தாங்க. அப்போத்தான் அவன் ஆலப்புழைக்குப் போனான்.''
“இதெல்லாம் சமீபத்துல எங்கேயாவது நடந்ததா இருக்கும்.''
“படகு வருது. முன்னாடியும் பின்னாடியும் வருது. படகுலயும் பஸ்லயும் என்ன மக்கள் கூட்டம்!''
படகுகள் இரண்டும் தாண்டிச் செல்கின்றன.
“முதலாளி, என்ன கேட்டீங்க? ஆமா... போன வருடம்தான் கல்யாணம் நடந்தது.''
“உனக்கு அந்தப் பொண்ணுக்கிட்ட எப்படி அப்படியொரு நெருக்கம் வந்தது?''
“நெருக்கம்னு சொன்னா... அவ்வளவு சாதாரணமா அதைச் சொல்லிட முடியாது. அவளோட அப்பனுக்கு என்னை ரொம்பவும் பிடிக்கும். ஆரம்பத்துல நான் அந்த ஆள்கூடத்தான் வேலை பார்த்தேன். நான் அடிக்கடி அந்த ஆளு வீட்டுக்குப் போவேன்.''
“அப்படின்னா நீ சாதத்தைச் சாப்பிடாம, அதை அவளுக்குக் கொடுத்தது சரிதான். உன்னோட அவ உன்கிட்ட பணம் கேட்டான்னா காரணம் இல்லாமலா?''
“என் மனதறிய என்கிட்ட பணம் இருந்தா நான் கட்டாயம் கொடுப்பேன்னு அவளுக்குத் தெரியும். அவளுக்குன்னு இல்ல. ஒரு தேவைன்னு சொல்லிக்கிட்டு யார் வந்தாலும் இல்லைன்னு சொல்ல என்னால முடியாது. பதினாறு வயசுல துடுப்பைக் கையில எடுத்தேன். இப்போ பதினாலு வருடங்கள் ஓடிடுச்சு. எட்டு காசுகூட மிச்சம்னு கையில இல்ல. தெரியுமா? அதுக்காக பட்டினி கிடக்கி றேனா என்ன? அதுவும் இல்ல. அடேயப்பா! பதினாறு வருடங்கள் எவ்வளவு சீக்கிரமா ஓடிடுச்சு!''
“உனக்கு முப்பது வயசுதான் ஆகுதா? என்னைவிட நீ ரெண்டு வயது மூத்தவன்.''
முதலாளி வெற்றிலை போட ஆரம்பித்தான்.
“மாகந்தத் தயிர் உண்டு மதித்து பாடும்
கோகில நேர் மொழியாளே...''
கார்ளோஸ் பாடினான். இனிமையான அந்த இரவுப் பொழுதுக்கு பொன்பட்டு நெய்ய முயற்சிப்பதைப்போல அது இருந்தது.
ஜானி விரல்களால் நடுப்படியில் தாளம் போட்டான்.
“தெங்காற்று கிச்சுக்கிச்சு மூட்டும் பூங்குலை
தங்கும் கொன்றைதன் கிளைகள் தோறும்...''
ஜானியும் அவனுடன் சேர்ந்து முணுமுணுத்துக் கொண்டிருந் தான்.
“தாவி தத்திக் களிக்கும் கிளிகள்
பாடின உன் மேனியழகை...''
சிறிது நேரத்திற்கு அமைதி நிலவியது.
“பாட்டு பாடினப்போ காற்று வந்ததே! கார்ளோஸ் பையா... மீதி பாட்டையும் பாடு.'' முதலாளி சொன்னான்.
அதற்கு பதில் "சொறு சொர்ர்’’ என்றொரு சத்தம்தான். ஒரு சிறிய குழாயின் வழியாக நீர், நீரில் விழும்போது கேட்கும் சத்தம்.
“என்ன பெரிய பாட்டு!'' கார்ளோஸ் சொன்னான்: “இப்போ பாட்டெல்லாம் போயிடுச்சு. ரேஷன் அரிசி வாங்குறதுக்கான வழி என்னன்றதைப் பற்றித்தான் இப்போ சிந்தனை!''
“முன்பு இதைவிட நல்லா பாட்டு பாடுறவனா நீ இருந்திருப்பியோ?''
“நல்லா பாட்டு பாடுறவனா இருந்தேன். எங்களுக்குன்னு ஒரு நாடகக் குழு இருந்துச்சு. அதுல ரெண்டாம் ராஜபார்ட் நான்தான்.''
“அதுக்குப் பிறகு அதை நீ ஏன் விட்டுட்டே?''
“அதைவிட நல்ல வேலை இதுதான். ஒவ்வொரு நாளும் வேலை இருக்கும். பட்டினி கிடக்காம வாழலாம். நாடகத்துல நடிக்கப் போனா எப்பவாவது ஏதாவது கிடைக்கும். அதை கள்ளு குடிச்சே காலி பண்ணிடுவேன். அதனால நாடகம் எனக்கு சரியா வரல. யாராவது நடிச்சா நான் போய் பார்ப்பேன். அவ்வளவுதான். அப்போ நான் அந்தப் பெண்ணோட வீட்டுக்கு எப்பவாவது போனா, எனக்குத் தெரிஞ்ச பாட்டுகளை நான் பாடினா, அதை அந்தப் பொண்ணு நிறுத்தவே சம்மதிக்க மாட்டா.''
“உன் பாட்டுகள் மேல அந்தப் பொண்ணுக்கு அவ்வளவு விருப்பமா?''
“மல்லி செண்பகம் செவ்வந்தி செத்தி
முல்லை ரோஜா குறுமொழி ஆம்பல்
எல்லாம் உன் பார்வைக்கு ஏங்கி
வெம்பி விரியுது தினமும்...''
“இப்படிப்பட்ட பாட்டுகளைக் கேட்ட பிறகு, அதுக்குப் பிறகும் பாடச் சொல்லி அவள் வற்புறுத்துறதுல என்ன தப்பு இருக்கு?''
“எல்லாம் மறந்து போயிடுச்சு!''
“அவளைப் பற்றித்தான் இந்தப் பாட்டு. அப்படித்தானே? இந்த அளவுக்கு பிரியம் வச்சிருக்குற அந்தப் பொண்ணு வந்து உன்கிட்ட ரெண்டு ரூபாய் கேட்டதுக்கு, நீ கொடுக்கலையேடா!''
“ரெண்டு ரூபாயா? ரெண்டு ரூபாயை வச்சு என்ன செய்ய முடியும்? ஆலப்புழைக்குப் போயி அவனைத் தேடிக் கண்டுபிடிக்கணும். ஒரு வேளை திரும்பி வர்றதுக்கும் கையில காசு இருக்க வேண்டியிருக்கும். ஒரு இளம் பொண்ணு அது இல்லாம போகத் தயாரா இருப்பாளா? அஞ்சு ரூபாய் கையில இல்லாம ஒண்ணுமே நடக்காது.''
“திரும்பி வர்றதுக்கு எதுக்குடா பணம்? புருஷனைப் பார்க்குறதுக்குத்தானே அவ போறா?''
“அந்த விஷயத்துக்குத்தானே அவ அங்கே போறதே! அவன் இங்கே வந்து அஞ்சாறு மாசமாச்சுன்னு சொன்னேனே!''
“இங்கே அவளுக்கு ஏதாவது நடக்கக் கூடாதது நடந்திருக்கும்னு அவன் நினைச்சிருக்கலாம்.''
“அப்படிப்பட்ட பொண்ணு இல்ல அது.''
“அதுக்குப் பிறகு நீ அவள்கிட்ட என்ன சொன்னே?''
“பொய் சொல்லி தப்பிக்கிற விஷயமில்ல அது. இருந்தாலும் கையில காசு இல்லைன்றப்போ என்ன செய்ய முடியும்?''
“இதெல்லாம் நீ சும்மா பேச்சுக்காக பேசுறது... உனக்கு அந்த அளவுக்கு கட்டாயம் பணம் வேணும்ன்றது மாதிரி இருந்ததுன்னா, என்கிட்ட கேட்டிருந்தா நான் கடனா அஞ்சு ரூபா கொடுத்திருப்பேனே!''
“ஆமா... நான் உங்கக்கிட்ட கேட்கணும்னு தான் இருந்தேன். அங்கு போன பிறகு கேட்கலாம்னு நினைச்சேன். முதலாளி உங்ககிட்ட இந்த விஷயத்தைச் சொல்லல... அவ்வளவுதான்.''