நீர்நாகம்
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 4667
எனக்கு ஆறு அல்லது ஏழு வயது உள்ளபோது நடந்த கதை இது. எங்களுடைய ஊரில் பாம்புகளைக் கொல்லக்கூடிய ஒரு தைரியசாலி இருந்தான். எப்படிப்பட்ட பயங்கரமான நாகத்திடமும் அவன் போராடுவான். அவனைப்போல ஒரு தைரியசாலியாக ஆக வேண்டும் என்று நான் நினைத்தேன். நான் முதலில் போராடியது ஒரு நீர்நாகத்துடன்.
நான் கூறும் நீர்நாகம் மிகவும் அப்பிராணி. ஒரு இரண்டடி நீளம். சுண்டு விரல் அளவிற்கு பருமன். வாய்க்காலில் ஆம்பல் மலருக்கு அருகிலேயே தலையை நீட்டிக் கொண்டு அது இருந்தது- ஏதாவது சிறிய மீன்கள் போனால் பிடிக்கலாமே! நீர்ப்பாம்பு என்பது அதன் பெயர். நான் ஒரு பெரிய பச்சை ஈர்க்குச்சியை எடுத்து நுனியில் ஒரு சுருக்கு உண்டாக்கினேன். பிறகு மெதுவாக... மிகவும் மெதுவாக அவனுடைய கழுத்தில் வைத்து இறுக்கி ஒரு இழு! அதோ... நீர்நாகம்.... ஈர்க்குச்சியின் நுனியில் தொங்கிக் கொண்டிருக்கிறது! அவனைத் தூக்கிக் கொண்டு அருகில் இருக்கும் பல வீடுகளிலும் ஏறி இறங்கினேன். சம வயதைக் கொண்டவர்களும் அதைவிடக் குறை வான வயதைக் கொண்டவர்களுமான ஏராளமான சிஷ்யர்களையும் சிஷ்யைகளையும் சம்பாதித்தேன்.
நடுப்பகல் வந்தது. பசி எடுக்க ஆரம்பித்தது. நீர்நாகத் தையும் தூக்கிக் கொண்டு நான் வீட்டை அடைந்தேன். வாசலில் விரிப்பிற்கு மத்தியில் நீர்நாகத் தைத் தொங்கவிட்டேன். அதற்கு மிகவும் அருகிலேயே இரண்டு மூன்று பிரம்புகள் வைக்கப்பட்டிருந்தன. வயதிற்கேற்ற கணுக்களை அவை கொண்டிருந்தன. பெரிய பிரம்பு என்னை அடிப்பதற்காக வைக்கப்பட்டிருந்தது. இந்த பிரம்புகள் ஒவ்வொன்றை யும் தரம் வாரியாகப் பிரித்து குடயத்தூர் மலையிலிருந்து என் வாப்பா கொண்டு வந்திருந்தார். வாப்பா மர வியாபாரம் செய்பவர். நான் சமையலறைப் பக்கம் போனபோது, உம்மா குழம்பு தாளிப்பதிலோ கடுகு வறுப்பதிலோ ஈடுபட்டிருந்தாள். உணவு தயாராக சற்று நேரம் ஆகும். நான் பக்கத்து வீடுகளுக்குச் சென்று சிஷ்யர்களுடன் பேசிக்கொண்டிருந்தேன். ஒரு சிஷ்யனின் கையில் இருந்து பாதி தேங்காய்த் துண்டை வாங்கித்தின்றேன். அப்போது வாப்பாவின் முரட்டுத்தனமான அழைப்பு கேட்டது:
“டேய்...!''
“என்ன?'' என்று நான் கேட்டேன். தொடர்ந்து வீட்டிற்குச் சென்றேன். அங்கு ஒரு சம்பவம் நடந்து முடிந்திருந்தது. நடுப்பகல் தொழுகைக்காக வாப்பா தொழுகைப் பாயை விரித்திருக் கிறார். கால்களைக் கழுவிவிட்டு வந்து அதில் முதுகை நிமிர்த்திக் கொண்டு நின்றிருக்கிறார். "அல்லாஹு அக்பர்' என்று இரண்டு கைகளையும் உயர்த்தி மார்பில் கட்டுவதற்காகப் போன போது.... அதோ கிடக்கிறது, நேர் எதிரில் கண்களுக்கு முன்னால் ஒரு நீர்நாகம்! வாப்பா தொழுகையை முழுமை செய்தார். பொதுவாக பிரார்த்தனைக்கு நடுவில் ஏதாவது நடந்தால் அதைப் பொருட் படுத்துவதில்லை. பழைய காலங்களில் போரில் அம்பு பாய்ந்தால், தொழுகையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் நேரத்தில்தான் அதை மற்றவர்கள் பிடித்து இழுப்பார்கள்.
“அடியே!''- வாப்பா அழைத்தார்.
“என்ன?''- உம்மா அந்த அழைப்பைக் கேட்டுக் கொண்டு வந்தாள். வாப்பா சுட்டிக் காட்டினார்.
“அது என்னடி?''
“ஒரு நீர்ப்பாம்புக் குட்டி.''
“அப்படின்னா நீ அதைக் கொண்டுபோய் பால் கொடுத்து வளர்த்துக்கோ.''
“நான் ஏன் பால் கொடுத்து வளர்க்கணும்? நானா பெற்றெடுத்தேன்?''
அந்த நீர்ப்பாம்புக் குட்டியை உம்மா பெற்றெடுக்கவில்லை. இந்து புராணத்தின்படி கத்ரு என்றோ வேறு ஏதோ பெயரைக் கொண்ட பெண்மணி பெற்றவை அனைத்தும் பாம்புகளாக இருந்தன. அனந்தன், வாசுகி, தட்சகன், கார்க்கோடகன் ஆகிய பாம்புகள் கத்ருவின் பிள்ளைகள்தான். கத்ரு அவற்றிற்குப் பால் கொடுத்து வளர்த்தாள். உம்மா பெற்றெடுக்காத ஒரு நீர்ப் பாம்புக் குட்டிக்கு எதற்குப் பால் கொடுத்து வளர்க்கணும்?
“பிறகு இது எதற்குடி?''
“எனக்கு எப்படித் தெரியும்?''
“இங்கு இது எப்படி வந்ததுடீ?''
“எனக்கு எப்படித் தெரியும்?''- உம்மா சொன்னாள்: “அவனாக இருக்கணும்!''
இந்த "அவன்' என்று சொன்னால் "இவன்'தான்.
“அவன் எங்கேடீ?''
“அங்கே எங்கேயாவது இருப்பான்.''
அப்படித்தான் "டேய்' என்ற ஆர்ப்பாட்டம் உண்டானது. நான் அங்கு போய் நின்றேன். நீர்நாகம் கிடந்து நெளிந்து கொண்டிருப்பதை நான் அதிர்ச்சியுடன் பார்த்தேன்.
“இது என்னடா?''
நான் சொன்னேன்: “நீர்நாகம்.''
வாப்பா சிரித்தார்:
“கேட்டியாடீ, அப்பிராணி நீர்ப்பாம்புக் குட்டியின் பெயர் நீர்நாகமாம்!''
உம்மா சொன்னாள்: “பள்ளிக்கூடத்தில் அப்படிச் சொல்லிக் கொடுத்திருப்பாங்க.''
ஆனால் நான் அது பள்ளிக் கூடத்திலிருந்து படித்தது அல்ல. சமீபத்தில் எங்களுடைய ஊருக்கு ஒரு பாம்பு வித்தைக்காரன் வந்தான். தமிழைத் தாய்மொழி யாகக் கொண்டவன். ஓரளவுக்கு பெரிய இரண்டு மூன்று நல்ல பாம்புகள் இருந்தன. அவற்றை மேலே நான் சொன்ன மனிதன் சந்தைக்கெல்லாம் கொண்டு சென்று வித்தைகள் காட்டினான். ஒரு நான்கு மணி ஆன போது, அவன் நன்கு கள்ளைக் குடித்தான். அந்த மனிதனின் தலையில் அது முழுமையாக ஏறிவிட்டது. கள்ளுக்கடைக்குப் பின்னாலிருந்த வெட்டவெளியில் பாம்புகள் இருந்த கூடையை அருகில் வைத்துவிட்டுத் தூங்கிவிட்டான். கண்விழித்துப் பார்த்தபோது, பாம்புகளும் இல்லை; கூடையும் இல்லை. ஊரில் இருக்கும் திருடர்களில் யாரோ திருடிக் கொண்டு போய் விட்டார்கள். பிறகு அந்தப் பாம்புகளும் கூடையும் நான்கு நாட்கள் கழித்துக் கிடைத்தன. அந்த நான்கு நாட்களும் வேலை எதுவும் இல்லாமல் பட்டினி கிடக்க முடியாது என்பதால், அவன் சில பாம்புகளைப் பிடிக்க கடுமையாக முயற்சி செய்தான். பலவகைப்பட்ட பெரிய பாம்புகள் இருக்கும் இடத்திலிருந்து அவனால் நான்கைந்து நீர்ப்பாம்புகளை மட்டுமே பிடிக்க முடிந்தது. அவன் அவற்றை எடுத்துக் கொண்டு சந்தைக்குச் சென்றான்.
“பாருங்க... பாருங்க... நீர்நாகம்!'' என்று உரத்த குரலில் கூவ ஆரம்பித்தான். ஆட்கள் சிரித்தார்கள். அவனிடமிருந்து தான் எனக்கு நீர்நாகம் கிடைத்தது. தமிழ்நாட்டின்மீது இருக் கும் நன்றியை நான் இங்கு மனம் திறந்து ஒப்புக் கொள்கிறேன். ஆனால் வாப்பா இதை ஒப்புக் கொள்வாரா?
“டேய்!'' - வாப்பா சொன்னார்: “இதை எதற்குடா நீ இங்கே கொண்டு வந்து வைச்சே?''
நான் வாய் திறக்கவில்லை. வாப்பா பொதுவாக என்னை அடிப்பதற்காகப் பயன்படுத்தும் பிரம்பால் கால் டஜன் அடிகளை என்னுடைய தொடையில் கொடுத்தார். நல்ல ஒன்றாம் நம்பர் அடியொன்றும் இல்லை. நடுத்தரம். வாப்பா என்னை நீர்நாகத்தை எடுக்கச் செய்து, வாய்க்காலின் அருகில் சென்றார். நான் அந்த சுருக்கை அவிழ்த்து அதை விடுதலை செய்தேன். வாப்பா சொன்னார்:
“அல்லாஹுவின் படைப்புகளில் ஒன்றைக்கூட காரணம் இல்லாமல் துன்பப்படுத்தக்கூடாது!''