க்ரேன் ஷாட் - Page 2
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 7002
எனக்கு திருப்தி வந்தபோது நான் கண்களைத் திறந்தேன். என்னுடைய ஆறடி ஏழு அங்குல உயரத்திற்கு நான் உயர்ந்தேன். இரத்தினம் பதித்த மோதிரங்களை அணிந்த விரல்களால் நரை விழுந்திருக்கும் தாடியைத் தடவியவாறு சிறிது நேரம் அசையாமல் இருந்தேன். தலையில் தூய வெள்ளை நிற வெயில் தொப்பியை அணிந்தேன். ஆடையிலிருந்த சுருக்கங்களை விரலால் தடவி நீக்கினேன். ‘‘சரி...’’ நான் சொன்னேன்.
கூடியிருந்த கூட்டத்திற்கு மத்தியில் நீளமான என்னுடைய கால்களால் அடியெடுத்து வைத்து தூரத்தில் பார்வையைப் பதித்தவாறு நான் நடந்தேன். கூடியிருந்த ஆட்களின் கண்கள் என்னையே பார்த்தன. ஹா, இந்த வெறும் நான்! வெள்ளித் திரையின் இணையில்லாத தலைவன்! ஹா, மக்களே, உங்களுக்காக மட்டுமே நான் இந்த சூரியனைச் சகித்துக் கொண்டும் இந்த கார்மேகங்களுடன் கோபம் கொண்டும் இந்த இயந்திரங்களின் உள் அவயங்களை இயக்கிக் கொண்டும் இருக்கிறேன். நீங்கள் சிரிக்கும்பொழுது நான் மெய் சிலிரித்துப் போகிறேன். நீங்கள் அழும்போது நான் நோய் வாய்ப்பட்ட ஒரு மனிதனின் நிலையில் ஆகிவிடுகிறேன்.
ஆனால், என்னுடைய கறுப்பு விழிகள் தூரத்தில் தெரியப் போகிற சுந்தரியின் அழகு உருவத்தைத் தேடின. மக்கள் கூட்டம் எனக்காக கருங்கடலைப் போல பிளந்தது. பிறகு மீண்டும் ஒன்று சேர்ந்து நெருக்கினார்கள்.
‘ஹோஸானா’ - நான் சொன்னேன். ‘ஹோஸானா! குருத்து ஓலைகளும் பட்டாடைகளும் எங்கே? கன்றுகளே, வாருங்கள். காலத்தின் விருந்து தெருவில்! என்னுடைய காமத்தின் காவலர்களாக ஆகுங்கள்!’’ - திடீரென்று யாரோ என்னைத் தொட்டார்கள்.
ஹோ! யாரது? என்னைத் தொடுவதற்கான தைரியம் யாருக்கு இருக்கிறது? யார் என் சக்தியைக் குறைக்க பார்ப்பது? யார் என் பயணத்தைத் தடை செய்வது? நான் ஒரு புயலைப்போல திரும்பி நின்றேன். என் கண்ணாடியைக் கழற்றி மங்கலான பார்வையுடன் என் கண்களில் நீர் மல்க நான் கேட்டேன்: ‘என்னைத் தொட்டது யார்? யார்?’
உண்மை மட்டும்! எனக்கு உண்மை வேண்டும்! உண்மையைத் தவிர வேறு எதனாலும் நான் திருப்தி அடைய மாட்டேன். இந்த மேகங்கள் சாட்சி. இந்த மணல் சாட்சி. சீக்கிரம் சொல். எனக்கு முன்னால் நின்றிருந்த மக்கள் கூட்டம் செயலற்று நின்றிரந்தது. அவர்களின் சிரிப்பு முழுமையாக நின்று போய் விட்டிருந்தது. அவர்களின் குரல்கள் அடங்கிப் போயிருந்தன.
என்னை யாரோ தொட்டார்கள். நான் மீண்டும் சொன்னேன். இதோ என்னுடைய உடல் நடுங்குவது தெரியவில்லையா? என் உடலை நடுங்கச் செய்தது யார்? யார் அதை கொடுமைப்படுத்தியது? இது ஒரு கலைஞனின் துன்பம் அனுபவிக்கும் உடல். இதை ஒரே ஒரு ஆள்தான் தொட முடியும். இதை நான் உங்களுக்காக தரவில்லை.
அப்போது மக்கள் கூட்டத்திலிருந்து கறுத்து பிரகாசமாக இருக்கும் ஒரு கை கறும்பாம்பைப் போல நீண்டு வந்து என் சட்டையின் கைப்பகுதியை மெதுவாக பிடித்தது. தூரத்திலிருந்து பறந்து தளர்ந்து வந்ததைப் போல ஒரு குரல் மெதுவாக கேட்டது: ‘சார், என்னை ஞாபகம் இல்லையா? நான்தான் சார்.’
ங்ஹே! யார்? யார் அது?
நான் இதயம் துடிக்க நின்று கொண்டு என்னைச் சுற்றிலும் இருந்த தலைகளுக்கு மத்தியில் என் கண்களை ஓட்டப் பந்தயப் போட்டியில் இருப்பதைப் போல் ஒட்டினேன்.
அந்த குரல்!
என்னைச் சுற்றிலும் விழித்துக் கொண்டிருந்த தலைகளுக்கு மத்தியில் ஒளிவதும் தெரிவதுமாக இருந்த அந்த புன்னகை ததும்பும் உதடுகளை நான் அடையாளம் தெரிந்து கொண்டேன். மேலுதடின் சிறு ரோமங்களுக்கு மேலே வியர்வைத் துளிகள். அவற்றுக்குக் கீழே வெள்ளைப் பற்களின் எதிர்பார்ப்புகள் மலர்கின்றன.
மின்னல் கொடி!
ஓ, மின்னல்கொடி!
அவள் ஆட்களுக்கு நடுவில் ஒரு கறுத்த மீனைப் போல எனக்கு நேராக தோன்றினாள். ஒளிமயமான பற்களுடனும் எண்ணெய் தடவி பிரகாசித்துக் கொண்டிருக்கும் நெற்றியில் இருக்கும் செந்தூரப் பொட்டுடனும் மின்னல் கொடி எனக்கருகில் வந்து நின்றாள். அவள் சிரித்தாள். கூர்மையும் காதலும் உள்ள அந்த வெள்ளைப் பற்கள் எனக்கு நேராக மந்திரத்தனமான அடையாளங்களை வெளிப்படுத்தின.
அவள் சொன்னாள்: ‘நான் போகட்டுமா சார்? வேலைக்குப் போகிற வழியில் மக்கள் கூட்டத்தைப் பார்த்ததும்... சார், நான் ஓடி வந்துட்டேன்’ - அவள் என் விரல்களைத் தொட்டாள். விரல்களில் இருந்த இரத்தினக் கற்கள் அதிர்ச்சியடைந்து சிரித்தன.
ஓ! என் மின்னல் கொடி!
என்னுடைய அனாதை காலத்தின் அழகு வேசி! என்னுடைய நோய் காலத்தின் காதல் மூச்சு. என் தரித்திர காலத்தின் பொக்கிஷம் என்னுடைய மின்னல்கொடி! என்னுடைய பூரண காம தர்ம ரத்தினம்.
மின்னகொடியின் கறுத்த கண்கள் எனக்கு நேராக மின்னின. அந்தக் கண்களின் அடி ஆழத்தில் பலமான அழைப்புகள் தோன்றி மறைந்தன. அவள் என் உள்ளங்கையை அவளின் உறுதியான விரல்களால் தொட்டாள். என் கையை அந்த விரல்களின் தழும்புகள் உராய்ந்தன.
ஒரு தீ நாக்கைப் போல உராய்வதும் உயர்வதும் கீழே நகர்வதுமாய் என்னைத் தொட்டுக் கொண்டு வெயிலில் மின்னல் கொடி நின்றிருந்தாள்.
ஒரு வியர்வைத் துளி அவளின் சுருண்ட தலை முடிகளிலிருந்து புறப்பட்டு கன்னம் வழியாக வழிந்து வேடம் மாறி கண்ணீர் துளியைப் போல கழுத்தைத் தொட்டுக் கொண்டிருந்தது. அங்கிருந்து அவளின் ப்ளவ்ஸ் வழியாக இடது மார்பகத்தின் மீது அது ஒரு ஈர ஓவியம் வரைவதை நான் பார்த்துக் கொண்டிருந்தேன். மின்னல் கொடி அவளின் கையை எடுத்துக் கொண்டாள்.
நான் சொன்னேன்: ‘மின்னல் கொடி!’
‘சார்’ - அவள் சொன்னாள். தொடர்ந்து மலர்வதும் அலை பாய்வதும் மூடுவதுமாக இருந்த தன்னுடைய கறுப்பு விழிகளால் அவள் என்னையே பார்த்தாள்.
அவள் சொன்னாள்: ‘நான் போகட்டுமா, சார்? உங்களைப் பார்க்க முடிந்ததே, சார். அது எனக்கு போதும்.’
‘சார்... ஷாட் ரெடி’ உதவியாளரின் பயம் கலந்த குரல் என் காதுக்கருகில் கேட்கிறது.
நான் திரும்பிப் பார்த்தேன். கேமராவுக்கு முன்னால் வெள்ளையும் சிவப்பும் அணிந்து சுந்தரி காத்து நின்றிருக்கிறாள்.
ஓ சுந்தரி! என் காதலி!
நான் பெருவிரல் நுனிகளைச் சேர்த்து பிடித்து, சுட்டு விரல்களை உயர்த்திப் பிடித்தவாறு அந்த விரல் இடைவெளியில் சுந்தரியைப் பார்த்தேன். நான் சுந்தரியை இயக்க மட்டுமே செய்கிறேன். நான் அவளின் முகத்தை ஒன்றும் தேடவில்லை. ஹேய்!
அடுத்த நிமிடம் நான் தலையைத் திருப்பினேன்.