Lekha Books

A+ A A-

ஆள் இல்லாத வீடு

All Illadha Veedu

'நான் உறங்கிக் கொண்டிருக்கிறேன். நான் மிகவும் களைப்பாக இருக்கிறேன். தயவு செய்து என்னை யாரும் எழுப்ப வேண்டாம்' என்றொரு ஆச்சரியமான அறிவிப்பு, அடைக்கப்பட்டிருக்கும் ஜன்னலின் நீல நிறக் கதவில் சிவப்பு எழுத்துக்களில் எழுதப்பட்டிருப்பதை இப்போது கூடப் பார்க்கலாம்.

ஆனால், தட்டி எழுப்புவதற்கு அந்த வீட்டில் யார் இருக்கிறார்கள்?

பல வருடங்களாக அந்த வீட்டில் யாருமே வசிக்கவில்லை என்பதே உண்மை.

சொல்லப்போனால் தைரியமாக அந்த வீட்டில் வசிக்க யாருமே முன்வரவில்லை என்று சொல்வதுதான் பொருத்தமானதாக இருக்கும். வாசலில் புற்களும், காட்டுச் செடிகளும் வளர்ந்து மண்டிக் கிடக்கின்றன. வீட்டுச் சுவர்களின் நிறம் கூட மிகவும் மங்கிப்போய் விட்டது. வீடு முழுக்க சிலந்தி வலை பின்னிவிட்டிருக்கிறது. வீட்டிற்குள் ஒரே அமைதி நிலவுகிறதோ என்னவோ...வெளியில் ஒரு ஒலிகூடக் கேட்கவில்லை. பயத்தைவிட அந்த வீட்டைப் பார்க்கிறபோது ஒருவித மர்மமும், புரிந்து கொள்ள முடியாத புதிரும்தான் பார்ப்போர் மனதில் உண்டாகிறது. எத்தனையோ வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட - பிரமாண்டமான ஒரு பழைய தேவாலயத்தின் முன் நிற்கிற உணர்வுதான் அந்த வீட்டின் முன் நிற்கிறபோது ஒருவருக்கு உண்டாகும்.

அந்த ஆள் இல்லாத வீட்டைப் பற்றி ஏகப்பட்ட கதைகள் கூறப்படுவதுண்டு.

உலகப் புகழ்பெற்ற ஒரு பெரிய ஓவியன் அந்த வீட்டில் வாழ்ந்திருக்கிறான். அவனுடன் வேறு யாருமே இல்லை. வாழ்க்கை என்றால் என்ன என்று மனிதர்களுக்குச் சொல்லித் தருவதற்கென்றோ அல்லது வாழ்க்கை என்றால் என்ன என்பதைத் தன் அனுபவங்கள் மூலம் தெரிந்துகொண்டு கூறுவதற்காகவோ அவன் நிறைய ஓவியங்கள் வரைந்தான்.

ஓய்வு நேரங்களில் இசை கேட்டுக்கொண்டிருப்பது அவனுக்கு மிகவும் பிடிக்கும். யாரையாவது பாடச்சொல்லிக் கேட்பதற்கு அங்கு யாரும் இல்லையே! ஒரு கிராமஃபோன் அவனிடம் இருந்தது. அதோடு நிறைய நல்ல இசைத் தட்டுகளும்.

நள்ளிரவு நேரத்தில் கூட அந்த வீட்டிற்குள் இனிமையான இசையும், பாடல்களும் கேட்டுக்கொண்டிருக்கும்.

அந்தக் காலகட்டத்தில் அவன் உலகப் புகழ்பெற்ற ஓவியனாக இல்லை. இருந்தாலும்... அவனைப் பின் நாட்களில் உலகப் புகழ்பெற்ற மனிதனாக ஆக்கிய பல ஓவியங்களை அப்போதே அவன் வரைந்திருந்தான்.

அந்த ஓவியங்கள் அனைத்தும் அப்போது ஏன் உலகப்புகழ் பெற்றவையாக ஆகவில்லை? அதைப் பார்க்க வேண்டியவர்களும் உலகப்புகழ் பெற்ற பலரும்கூட அன்றே அவற்றைப் பார்த்திருக்கிறார்கள் என்பதே உண்மை.

ஆனால், அப்போது அவர்கள் செய்தது என்ன? அந்த ஓவியங்களைப் பாராட்டுவதை விட குற்றமும், குறையும் சொல்லிக் கொண்டிருந்தார்கள். என்ன குற்றம், என்ன குறை என்று அவர்களுக்கே தெரியாது. ஒரு வேளை புதிய எண்ணங்களைப் பற்றியும், புதிய கலை வெளிப்பாடுகள் பற்றியும், புதிய கலை வடிவங்கள் குறித்தும் அவர்கள் கொண்ட பயம் அதற்குக் காரணமாக இருந்திருக்கலாம். பழையவை எப்போதுமே மக்களின் முழுமையான வரவேற்பைப் பெற்றவையாக இருக்கும். புதிய முயற்சிகள் மீது அப்படி என்ன விரோதமும், நம்பிக்கை இல்லாமையும்!

மக்கள் குற்றப்படுத்தினார்கள். எதிர்க்கருத்துக்கள் சொன்னார்கள். படைப்புகளைப் பற்றி மட்டுமல்ல-படைத்தவனையும். அவனால் எப்போதும் அமைதியாகவே இருக்க முடியவில்லை. இரவும் பகலும் அவனுக்குள் ஒரே போராட்டம்தான். கூட்டம் கூட்டமாக மக்கள் பைத்தியம் பிடித்த மாதிரி அவனைப் பற்றி என்னென்னவோ கூறிக்கொண்டிருந்தார்கள். பத்திரிகைகள், மத நிறுவனங்கள், அரசியல் இயக்கங்கள்- எல்லாமே அவனைப் பற்றி இல்லாததையும் பொல்லாததையும் சொல்லின. அந்த ஓவியனை ஒரு பேய் என்றார்கள்! கடவுள் நம்பிக்கை கொண்டவர்கள், அந்த நம்பிக்கை இல்லாதவர்கள்- எல்லோரும் கூக்குரலிட்டனர்.

வாழ்க்கை மீது கொண்டிருக்கும் நம்பிக்கைக்கு அவன் உலை வைக்கிறான்! அன்றாட மனித வாழ்க்கைக்கு எதிராக அவன் ஆயுதம் தூக்குகிறான்! சமூகத்திற்கு எதிராக அவன் நிற்கிறான்! - அவன் மீது அவர்கள் கூறிய குற்றச்சாட்டுகள் இவை!

அவர்கள் கூறிய இந்தக் குற்றச்சாட்டுகள் அனைத்தையும் கேட்டு அந்த ஓவியன் தனக்குள் சிரித்துக்கொண்டான். அவனுக்கு விளையாடிப்பார்ப்பது என்றால் மிகவும் பிடிக்கும். இருந்தாலும் விருந்தினர்கள் வருவதை அவன் பொதுவாக விரும்புவதில்லை.

இந்த விவரங்கள் அனைத்தையும் அந்த ஓவியன் தனக்கு மிகவும் பிடித்தமான அந்தக் கவிஞரிடம் கூற, கவிஞர் தான் எழுதிய அந்த ஓவியனின் வாழ்க்கைச் சரித்திரத்தில் எல்லாவற்றையும் எழுதி இருக்கிறார். ஒருநாள் அந்தக் கவிஞரிடம் ஓவியன் சொன்னான்:

"அந்த ஜன்னலில் எழுதப்பட்டிருக்கிற வாசகங்களைப் பற்றி எதுவும் நினைக்க வேண்டாம். மனிதர்களைப் பார்த்தாலே எனக்கு என்னவோ போல் இருக்கு. மூச்சே அடைப்பது போல் இருக்கு. வாசல் கதவையும், ஜன்னலையும் பூட்டி வச்சாக்கூட... உள்ளேயிருந்து பாட்டு கேட்கலைன்னாகூட நான் வீட்டுக்குள்ளதான் இருப்பேன். ஒரு பேனாக் கத்தியை உள்ளே விட்டு ஜன்னலோட தாழ்ப்பாளை விலக்கி உங்க விருப்பப்படி நீங்க உள்ளே வரலாம்!"

அதன்படி அந்தக் கவிஞர் இரவு நேரமாக இருந்தாலும் பகல் நேரமாக இருந்தாலும் எந்த நேரத்திலும் தன் விருப்பப்படி உள்ளே புகுந்து அந்த ஓவியனுடன் பேசிக்கொண்டிருப்பார்.

அந்த ஓவியனுடைய வாழ்க்கையை ஒட்டித்தான் கவிஞரின் வாழ்க்கையும் இருந்தது.

எல்லா விவரங்களையும் மிக மிகத் தெளிவாகத் தான் எழுதிய நூலில் எழுதியிருந்தார் கவிஞர். கடைசியாக அவர் கூறியிருந்த ஒரு சம்பவம் உண்மையிலேயே பயங்கரமான ஒன்றுதான்.

அந்த ஆள் இல்லாத வீட்டிலிருந்து தூரத்தில் நடந்த இன்னொரு விஷயம் இது-

2

ந்த ஓவியன் உலகத்தைப் பார்த்து தனக்குத்தானே சிரித்துக் கொண்டிருந்தான். அவனல்ல. அவனின் ஒரு பெரிய சிலை. நகரத்தின் மையத்தில் இருக்கும் ஒரு பூங்காவில் அது இருந்தது.

அந்த சிலை அப்படித்தான் அமைக்கப்பட்டிருந்தது. தலையில் வெள்ளை நிறத்தில் என்னவோ ஒழுகி காய்ந்து கிடந்தது. பறவைகள் பறந்துவந்து எப்போதும் ஓவியனின் தலையில் உட்காருவதுண்டு.

அதைப் பார்க்கிறபோது தன்னையும் மீறி அந்தக் கவிஞருக்கு சிரிப்புத்தான் வரும்.

அந்த ஊர்க்காரர்கள் அமைத்த சிலையே அது.

அதைப் பற்றி அந்த ஓவியனின் வாழ்க்கை  வரலாற்றில் இப்படி எழுதி இருக்கிறார் அந்தக் கவிஞர்:

'இல்லாமற்போவது என்பது ஒரு அசாதாரண விஷயமல்ல. அதை ஒரு பிரிவு என்றும் கணக்கில் எடுத்துக் கொள்ள முடியாது. நான் மறைந்தால்... அந்த இழப்பை ஈடுகட்டி விட முடியுமா? 'நான்' என்று நான் இங்கு குறிப்பிடுவது என்னைப் பற்றி அல்ல. மனித சமுதாயத்தின் ஆரம்பம் முதல் இப்போதிருக்கும் உங்கள் வரை இருக்கும் 'நான்' இருக்கிறதல்லவா? அதைச் சொல்லுகிறேன். உதாரணத்திற்கு - உங்களையே எடுத்துக் கொள்ளுங்கள்.

 

+Novels

Popular

Short Stories

July 31, 2017,

May 28, 2018,

தந்தை விழுந்தபோது...

March 8, 2012,

மகாலட்சுமி

March 22, 2013,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel