ஆள் இல்லாத வீடு - Page 3
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 6992
அறைக்குள் சில அசைவுகளும், ஒலிகளும் கேட்டன. எதையுமே கவிஞரால் தெளிவாகப் புரிந்துகொள்ள முடியவில்லை. அவர் மனதில் இலேசாக சந்தேகம் உருவெடுத்தது. கொஞ்சம் மனதில் கலவரமும் உண்டானது. அவர் பேனாக் கத்தியை ஜன்னல் இடுக்கு வழியே நுழைத்து ஒரு பக்க கதவைக் திறந்தார். உள்ளே தாங்க முடியாத நாற்றம்! அப்போதும் அந்த விளக்கு வெளிச்சம் அங்கு இருக்கவே செய்தது. எலிகள் 'கீச் கீச்' சென்று கத்தியவாறு இங்குமங்குமாய் ஓடின.
மேஜை மேல் கிராமஃபோன் திறந்தே கிடந்தது. அதில் ஒரு இசைத்தட்டும் இருந்தது. அந்த இசைத்தட்டின் இறுதியில் ஒலிப்பேழையின் ஊசி நின்று கொண்டிருந்தது. ஒரே நொடியில் கவிஞர் கவனித்த விஷயங்கள் இவை.
அறையில் மத்தியில் மேலே மின்சார பல்பு எரிந்து கொண்டிருந்தது. ஓவியன் எப்போதும் படுக்கும் படுக்கையைக் கவிஞர் பார்த்தார். அடுத்த நிமிடம் - பயந்து விறைத்துப்போய் ' அய்யோ!' என்று அவர் கத்தினார்.
படுக்கையில், கால் நீட்டியவாறு படுத்துக் கிடந்தது ஒரு எலும்புக்கூடு!
அப்போதும் அந்த ஜன்னலின் நீல நிறக் கதவில் சிவப்பு எழுத்துக்களால் எழுதப்பட்டிருந்த அந்த வாசகம் விளக்கொளியில் நன்கு தெரியவே செய்தது:
'நான் உறங்கிக் கொண்டிருக்கிறேன். நான் மிகவும் களைப்பாக இருக்கிறேன். தயவு செய்து என்னை யாரும் எழுப்ப வேண்டாம்.'
சுபம்.