
உங்களின் கதைதான் இது என்று எடுத்துக் கொள்ளுங்கள். நீங்கள் ஒரு கவிஞனாக இருக்கலாம். இல்லாவிட்டால் ஒரு ஓவியனாக இருக்கலாம். அதுவும் இல்லாவிட்டால் ஒரு அரசியல் சிந்தனையாளனாக இருக்கலாம். இல்லாவிட்டால் நீங்கள் ஒரு பாடகனாக இருக்கலாம். அதுவும் வேண்டாம். நீங்கள் வயதான ஒரு பத்திரிக்கையாளனாக இருக்கலாம். எது வேண்டுமானாலும் இருக்கட்டும். நீங்கள் மக்களுடன் ஒருவராக இருக்கிறீர்கள். மக்களுக்காக உங்களின் திறமையைப் பயன்படுத்தி இருக்கிறீர்கள்.
ஆனால், நீங்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்ற சமயத்தில் உங்களிடம் நல்ல வார்த்தைகள் பேச இங்கு ஆள் இல்லை என்பதே உண்மை. சரி அதுவும் போகட்டும். பாராட்டுவதற்கு அவர்களுக்கு நேரமில்லை என்று எடுத்துக்கொள்ள வேண்டியதுதான். ஆனால், உங்களை வேதனைப்படுத்துவதற்கு மட்டும் அவர்களுக்கு நேரம் இருக்கிறது. உங்களைக் கண்டபடி திட்டிப் பேசுவதற்கு அவர்களுக்கு நேரம் இருக்கிறது. சொல்லப்போனால் - மக்கள் எல்லோருமே உங்களுக்கு எதிராக இருக்கிறார்கள்.
ஆனால், நீங்கள் பட்டினி கிடக்கிறீர்கள். பட்டினி கிடந்தவாறு நீங்கள் இரவும், பகலும் வேலை செய்கிறீர்கள். சாப்பிட ஒன்றுமே இல்லை என்கிற நிலை வருகிறபோது, பச்சைத் தண்ணீரைக் குடித்து வயிறை நிரப்பிக்கொண்டு நீங்கள் கிராமஃபோனில் பாட்டைக் கேட்டுக்கொண்டே ஆனந்தமடைந்து கொண்டிருக்கிறீர்கள்.
அப்போதும் நாடு முழுக்க உங்களைப் பற்றித்தான் பேச்சாக இருக்கிறது. எல்லாப் பத்திரிகைகளும் உங்களைப் பற்றி எழுதுகின்றன. எல்லா மேடைகளிலும் உங்களைப் பற்றித்தான் எல்லோரும் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.
எல்லா மதத்தைச் சேர்ந்தவர்களும் உங்களுக்கு எதிராகத் திரண்டு நிற்கிறார்கள். கடவுள் இருக்கிறது என்று கூறுபவர்களும் உங்களை எதிர்க்கிறார்கள். கடவுள் இல்லை என்று பேசுபவர்களும் உங்களுக்கு எதிராகவே இருக்கிறார்கள். உங்களைப் பற்றி அவர்கள் ஒவ்வொருவரும் எவ்வளவு மோசமாக அபிப்ராயம் கூற முடியுமோ, அந்த அளவுக்கு கருத்து தெரிவிக்கிறார்கள். கெட்ட பழக்கங்கள் உடையவர், பெண்களிடம் சல்லாபம் புரிபவர், மது மயக்கத்தில் சிக்குண்டவர் - இப்படி உங்களைப் பற்றி எத்தனையோ குற்றச்சாட்டுகள். மொத்தத்தில் அவர்கள் பார்வையில் - நீங்கள் ஒரு சமூக விரோதி!
அவர்கள் சொல்வதை எல்லாம் ஏற்றுக்கொண்டு நீங்கள் பட்டினி கிடந்து ஒரு இரவிலோ பகலிலோ வெறுமனே யாருக்குமே தெரியாமல் செத்துப்போகிறீர்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள். அதோடு உங்களின் எல்லா கஷ்டங்களும் தீர்ந்துவிட்டன என்றுதானே நீங்கள் நினைக்கிறீர்கள்! அப்படி நீங்கள் நினைப்பதுதான் தவறு. உங்களிடம் கஷ்டம் எதுவுமே தீராது. ஆர்ப்பாட்டம்... ஓட்டம்... சாடுதல்... பொதுக்கூட்டம்... எல்லா மதத்தைச் சேர்ந்தவர்களும், எல்லா பத்திரிகையாளர்களும், எல்லா அரசியல் இயக்கங்களும், கடவுள் நம்பிக்கை கொண்டவர்களும், நம்பிக்கை இல்லாதவர்களும்... எல்லோரும் ஒன்றுசேர்ந்து கூப்பாடு போடுவார்கள்...கதறுவார்கள்...நெஞ்சில் அடித்துக்கொண்டு அழுவார்கள்.
"அய்யோ...! போயிட்டீங்களே!... எங்களைத் தவிக்கவிட்டுப் போயிட்டீங்களே!"
இப்படியே கொஞ்ச நாட்கள் ஓடும். அதற்குப் பிறகு உங்களை நினைவு கூர்ந்து ஞாபகச் சின்னங்கள் எழுப்புவார்கள். கூட்டங்கள் நடத்துவார்கள்... உங்களை நினைவுபடுத்தும் விதமாகப் பாடுவார்கள். கவிதைகள் இயற்றிப் படிப்பார்கள்.
இவர்கள் பேசுவதையும், பாடுவதையும் கேட்டால் அல்லது படித்தால் நீங்கள் இந்த உலகத்தில் மக்களுடன் வாழ்ந்த ஒரு மனிதன்தான் என்ற எண்ணமே உண்டாகாது.
அதோடு அவர்களின் வேலைகள் நிற்காது. உங்களின் போதாத காலம் என்றுதான் சொல்ல வேண்டும்! வாசகசாலைகள், அகாடமிகள், சாலைகள், ஹோட்டல்கள், சந்தைகள், பஸ்கள், நாடகக் கொட்டகைகள், பூங்காக்கள் - எல்லாவற்றுக்கும் உங்களின் பெயரை வைப்பார்கள். 'உங்கள்' முகவரி பூங்கா! 'உங்கள்' முகவரி சந்தை!
அதோடு உங்களின் கஷ்ட காலம் முடிகிறதா என்ன? உங்களின் சிலைகள் உருவாக ஆரம்பிக்கின்றன. நான்கு சாலைகள் சந்திக்கின்ற இடங்களில்...பூங்காக்களில்... காற்றையும், மழையையும், வெயிலையும் தாங்கிக்கொண்டு நீங்கள் வெறுமனே சிலைவடிவில் வாடி, வதங்கிப்போய் நின்றுகொண்டிருக்க வேண்டும். பறவைகளின் நிரந்தரக் கழிப்பிடம் உங்களின் தலைதான்!
உலகமே! எதற்கு இந்த காதல்மயமான முட்டாள்தனங்கள்! எதற்கு இந்த ஜீரணிக்க முடியாத பொய்த் தனங்கள்!
ஓ...இதையெல்லாம் நினைத்துப் பார்க்கிறபோது உங்களுக்குச் சிரிக்க வேண்டும்போல் இருக்கிறது அல்லவா? ஒரு வேளை - நான் நினைக்கிறேன், இதையெல்லாம் நினைத்துப் பார்த்துத்தான் நமது பூங்காவில் நின்று கொண்டிருக்கும் சாதனைச் சிற்பியான அந்த ஓவியனின் சிலை புன்னகை சிந்திக் கொண்டிருக்கிறதோ என்று.
அதோடு விஷயம் முடிந்துவிடவில்லை. அந்தக் காட்சியைக் கவிஞர் பார்த்தது ஓவியனின் வீட்டில்தான்.
அப்போது அது ஆள் இல்லாத வீடல்ல. முற்றத்தில் புற்களும், காட்டுச் செடிகளும் வளர்ந்திருக்கவில்லை. பயத்தின் அல்லது அழிவின் அடையாளம் எதுவும் அங்கு ஆக்கிரமித்திருக்கவில்லை. பாராட்டிப் பேசவோ அல்லது எதிர்வாதம் புரியவோ பலரும் அங்கு வந்துகொண்டிருப்பார்கள். இல்லாவிட்டால் அங்கு நிலவும் மயான அமைதியைக் கிழித்துக் கொண்டு இனிய இசை முழங்கிக்கொண்டிருக்கும்.
இப்படிக் காலம் படு வேகமாக ஓடிக் கொண்டிருந்தது.
ஒரு இரவு, அந்த வீடு இருளில் மூழ்கிப்போய் இருந்தது. வாசல் கதவுகள், ஜன்னல்கள் எல்லாமே அடைக்கப்பட்டிருந்தன். ஒரு சிறு அசைவு கூட இல்லை. இருந்தாலும், அந்த ஓவியன் வீட்டிற்குள்தான் இருக்கிறான் - விளக்கு உள்ளே எரிந்து கொண்டிருக்கிறது என்பதெல்லாம் அந்தக் கவிஞருக்கு நன்றாகவே தெரியும்.
ஜன்னல் கதவின் இடுக்கு வழியே பார்த்தபோது உள்ளே விளக்கு எரிந்து கொண்டிருப்பது நன்றாகவே தெரிந்தது.
அவன் உள்ளே ஓவியம் வரைந்து கொண்டிருப்பான். கவிஞர் சிந்தித்தார் - எதற்கு வீணாக அவனைத் தொந்தரவு செய்ய வேண்டும்? தான் புதிதாக எழுதிய கவிதை நூலை வாசல் கதவு அருகில் வைக்கப்பட்டிருந்த தபால் பெட்டியில் - நன்றாக வெளியே இருந்து பார்க்கத்தக்க விதத்தில் வைத்துவிட்டு அந்தக் கவிஞர் கிளம்பினார்.
இது நடந்து கிட்டத்தட்ட இருபத்து ஒன்றோ அல்லது இருபத்து இரண்டோ நாட்கள் ஆகிவிட்டன!
அதுவும் ஒரு இரவுதான். கவிஞர் அந்த வீட்டிற்கு வந்தார். அன்று அவர் வரும்போது இரவு வெகு நேரமாகி இருந்தது. அன்று இரவு அங்கேயே - ஓவியனுடன் தங்கிவிட வேண்டியதுதான் என்ற தீர்மானத்துடன் வந்திருந்தார் கவிஞர்.
ஆனால், அங்கே போனபோது ஒரே மயான அமைதி! கையில் இருந்த எலெக்ட்ரிக் விளக்கை எரிய விட்டவாறு அவர் வராந்தாவில் ஏறினார். தபால் பெட்டியில் கடிதங்கள் நிறைந்து, வெளியேயும் சிதறிக் கிடந்தன. கவிஞர் முன்பு வைத்து விட்டுப்போன கவிதை நூல் இப்போதும் அதே பெட்டியில் அப்படியே இருந்தது.
அவர் விளக்கை அணைத்துவிட்டு, அங்கேயே நின்றார். இரண்டு முறை ஓவியனின் பெயரை சொல்லி அழைத்தார். வாசல் கதவைத் தட்டினார். ஜன்னல் இடுக்கு வழியே உள்ளே பார்த்தார்.
உள்ளே -
விளக்கு எரிந்து கொண்டிருந்தது.
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook