சலாம் அமெரிக்கா! - Page 4
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 7611
என்னைப்போல அவளும் எங்கோ இருந்து வந்து இந்த பெரிய கட்டடத்திற்குள் அடைபட்டுக் கிடக்கிறாள். அவள் இதைவிட்டு வேறு எங்காவது போக முடியுமா? என் கையிலாவது காரின் சாவி இருக்கிறது. நான் கடிகாரத்தைப் பார்ப்பது அவளுக்குப் பிடிக்காது. என் கடிகாரம் கட்டப்பட்டிருக்கும் கையை மேலே தூக்கி வேண்டுமென்றே அவள் அடிப்பாள். பிறகு என்மேல் ஏறி அமர்ந்து கொள்வாள். என்னை அவள் விடவே மாட்டாள்.
ஆனால் என்னால் அங்கேயே இருக்கமுடியுமா? நான் அவளிடம் சொல்வேன்: "ஜோஸஃபீனா, என் செல்லத் தங்கமே! நான் உடனே போகணும். இனியும் எனக்கு இருப்பது ரெண்டுமணி நேரம்தான். நான் கொஞ்சம் வெளியே போய் காத்து வாங்கிட்டு வர்றேன். நான்தான் நாளைக்கு வருவேன்ல? நான் எப்பவாவது வராம இருந்திருக்கேனா?'' அவளுக்கு மலையாளத்தில் உள்ள ஒரே ஒரு வார்த்தை மட்டும் தெரியும். அது. "நாளை". அவள் என்மேல் ஏறி என் முகத்தையே உற்றுப்பார்த்தவாறு ஒரு விரலால் என் நெற்றியைக் குத்திக் கொண்டு கூறுவாள்: "நாளை... நாளை... யெஸ்...'' அதற்குப் பிறகு அவளே என்னைப் போகவும் விடுவாள்.
மேலே இருக்கின்ற ஜானிவாக்கரை மனதில் அப்போது நினைத்து கொஞ்சம் தடுமாறுவேன். "வேண்டாம்... வந்து பார்த்துக் கொள்ளலாம். ஏதாவது போலீஸ் வந்து விட்டால், பிரச்சினை ஆகிவிடும்..." நானே மனதிற்குள் கூறிக்கொள்வேன். இப்படித்தான் ஒருமுறை நான் போலீஸ்காரர்களிடம் சிக்கிக்கொண்டேன். மதிய நேரத்திற்குப் பிறகு காரை எடுத்துக் கொண்டு பெல்ஹாம் எக்ஸ்பிரஸ்வே வழியாக படுவேகமாக நான் போய்க்கொண்டிருந்தேன். அப்போது டெஸ்ஸியிடம் ஒரு பழைய ஃபோர்ட் கார் இருந்தது. பழைய காராக இருந்தால் என்ன... வெள்ளைக்காரர்களின் காராயிற்றே அது! நீளமான மொசைக் போட்டதுபோல் காட்சியளிக்கும் சாலையைப் பார்த்ததும், அதன் எல்லை வரை நாம் போய்விட்டு வந்தால் என்ன என்ற ஆர்வம் என் மனதில் உண்டானது. சரி... எங்கே போவது? இருப்பதே இரண்டு மணி நேரங்கள்தாம். இருந்தாலும் நான் வேகமாகக் காரைச் செலுத்தினேன். நான் அன்றுதான் அமெரிக்காவில் கால் வைத்திருந்தேன். எனக்குப் பின்னால் சைரனை முழக்கியவாறு ஒரு போலீஸ்காரன் என்னைப் பின்தொடர்ந்து வேகமாக வந்தான். அடுத்த நிமிடம் என்னை அவன் வளைத்தான். அவனை இடிப்பதுபோல நான் காரை நிறுத்தினேன். தொப்பியும் கூலிங்கிளாஸும் அணிந்து இடுப்பில் துப்பாக்கியும் ரப்பர் பிரம்பும் வைத்திருந்தான் போலீஸ்காரன். நான் வேகமாகக் கதவைத் திறந்து, இறங்கினேன். தலையைக் குனிந்தவாறு அவனைப் பார்த்து ஒரு வணக்கம் சொன்னேன். வேறு என்ன செய்வது? அந்த வெள்ளைக்கார போலீஸ் ரப்பர் பிரம்பால் என் பின்பக்கம் ஒரு அடி அடித்தான். அடுத்த நிமிடம்- என் வயிற்றில் இருந்த ஜானி, ஆவியாக மாறினான். அதற்குள் இன்னும் இரண்டு போலீஸ்காரர்கள் அங்கு வந்துவிட்டார்கள். எல்லாரும் சுற்றி நின்று என்னை பிசாசைப் பார்ப்பதுபோல் பார்த்தார்கள். ஒருவன் துப்பாக்கியை நீட்டியவாறு அருகில் வந்து என் பாக்கெட்டையும் உடம்பையும் சோதனை செய்து பார்த்தான். பிறகு, ஆங்கிலத்தில் கேள்விகள் கேட்க ஆரம்பித்தான். நான் சொன்னேன்: "சார்... எனக்கு ஆங்கிலம் தெரியாது. வீட்ல இருக்க வெறுப்பா இருந்துச்சு. அதுனால நான் காரை எடுத்துக்கிட்டு இங்கே வந்தேன். நான் என்ன தப்பு செய்துட்டேன். சொல்லுங்க சார்... என்னை ஒண்ணும் செஞ்சிடாதீங்க... டெஸ்ஸி மட்டும் தனியா வீட்ல இருக்கா.'' அவர்கள் பாஸ்போர்ட், டிரைவிங் லைசென்ஸ் என்று என்னவெல்லாமோ என்னிடம் கேட்டார்கள். நான் சொன்னேன்: "சார்... எனக்கு எதுவுமே தெரியாது. எல்லாமே டெஸ்ஸிக்குத்தான் தெரியும்!'' இதைச் சொல்லிய நான் அடுத்து என்ன செய்தேன் தெரியுமா? அடி வாங்காமல் இருப்பதற்காக சின்னப் பையனாக இருந்தபோது என் தாயிடம் என்ன பண்ணினேனோ, அதைச் செய்தேன். அதாவது- எல்லாரும் கேட்கும்படி உரத்த குரலில் அழ ஆரம்பித்தேன். வெள்ளைக்காரர்கள் அத்தனைப் பேரும் அணிந்திருக்கும் கூலிங்கிளாஸ் வழியாக மிரண்டு போய் பேந்தப் பேந்த விழித்தவாறு என்னை ஒருமாதிரி பார்க்க ஆரம்பித்து விட்டார்கள். ஆனால் நான் நினைத்தது நடக்கவில்லை. அவர்கள் நான் அழுவதைப் பார்த்து வாய்பிளக்கச் சிரிக்க ஆரம்பித்து விட்டார்கள். அன்பு மேலோங்க எனக்கு முன்னாலும் பின்னாலும் கார்களை ஒட்டியாவாறு- ஒரு ஊர்வலம் போவது மாதிரி என்னை வீட்டுக்குக் கொண்டு போனார்கள். போலீஸ் காரர்களுடன் நான் வீட்டுக்குள் நுழைந்தபோது, டெஸ்ஸியின் முகம் என்னவோபோல் ஆகிவிட்டது. அதற்குப் பிறகு இரண்டு நாட்கள் அவள் என்னுடன் பேசவில்லை. நாளடைவில் போகப் போக சாலைகளில் இருந்த போர்டுகளில் என்ன எழுதப்பட்டிருக்கிறது என்பதைப் புரிந்துகொண்டேன். வெள்ளைக்காரர்களை அப்போதுதான் என்னால் முழுமையாக அறிந்துகொள்ள முடிந்தது.
எனக்கு எங்கேயாவது போக வேண்டுமென்று ஒரே மன உந்துதல். இந்த சாலைகள் எல்லாம் எங்கெங்கோ போய்க் கொண்டிருக்கின்றன- நான் மட்டும் இப்படியே உன்மத்தம் பிடித்தவன் மாதிரி உட்கார்ந்து கொண்டிருந்தால் எப்படி என்று சதா நேரமும் சிந்திக்கத் தொடங்கினேன். ஆனால் குழந்தை உண்டான பிறகு நான் வெளியே போவது கிட்டத்தட்ட குறைந்துவிட்டது. கொஞ்ச நாட்களில் டெஸ்ஸி அந்த ஃபோர்டை விற்று விட்டு, டொயாட்டா வாங்கினாள். அவள் அந்தக் காருடன் வந்து அதை வண்டிகள் நிறுத்துமிடத்தில் நிறுத்தியபோது, என் மனதில் இனம்புரியாத ஒரு துள்ளல். ஜோஸஃபீனாவைப்போல இருந்தது அந்தக் கார். ஜோஸஃபீனாமேல் எப்படி நான் ஒரு காதலை வைத்திருக்கிறேனோ, அதே காதல் அந்த டொயாட்டா மீதும் எனக்கு உண்டானது. நான் அதில் உட்கார்ந்து பெல்ட்டை மாட்டிக்கொண்டு புறப்படுகிறபோது நான் எப்படியெல்லாம் போகவேண்டும் என்று நினைக்கிறேனோ, அப்படியெல்லாம் போகும் கார். ஓ... அந்தக் காரில் எங்கெங்கெல்லாம் போயிருக்கிறேன். நியூயார்க்கிற்கு வெளியே இருக்கிற பல இடங்களுக்கும் நான் அதில் போயிருக்கிறேன். நான் உரத்த குரலில் சொல்வேன். "அமெரிக்கா, இதோ வர்றான் ஜோஸி. கடுத்துருத்திக்காரன். மச்சநாடு ஜோஸி. வெள்ளைக்காரர்களே... வெள்ளைக்காரிகளே... இதோ ஜோஸி வந்து கொண்டிருக்கிறான். உங்களிடம் அருமையான சாலைகள் இருக்கின்றன. என் மனைவியிடம் இந்த டொயாட்டா கார் இருக்கிறது. வேறு என்ன வேண்டும்?'' நான் காரின் இரண்டு பக்கங்களிலும், காற்று "படபட"வென்று அடிப்பதைக் கேட்டவாறு, ப்ளேயரில் "பெரியாறே பெரியாறே" என்ற பாடலைப் பாடச் செய்தவாறு என் டொயாட்டாவின் ஸ்டியரிங்கை இறுகக் கையில் பிடித்தவாறு உட்கார்ந்திருப்பேன். "டேய் ஜோஸி... எங்கடா போற?" என் மனம் என்னைப் பார்த்துக் கேள்வி கேட்கும்.