சலாம் அமெரிக்கா! - Page 5
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 7611
"அமெரிக்காவைத் தாண்டி... பூமியோட இன்னொரு பக்கத்திற்கு... கடுத்துருத்திக்கு! மச்ச நாடு ஆற்றின் கரைக்கு!" ஆனால், நான் அந்த டொயாட்டாவை ஓட்டுகிறேன் என்று பல இடங்களிலும் இடித்து, வண்டியை ஒரு மாதிரி ஆக்கிவிட்டேன். என் முகத்தில் எட்டு இடங்களில் தையல் போடப்பட்டது. ஒரு கால் ஒடிந்துவிட்டது. நான் ஒரு காரில் போய் இடிக்க, காரில் இருந்த வெள்ளைக்காரப் பெண்மணிக்கு பற்கள் கீழே விழுந்துவிட்டன. எல்லாமே ராயல் கொஞ்சம் அதிகமாக உள்ளே போனதன் விளைவு. போலீஸ் என்னிடம் இருந்த வாசனையை வைத்து அதைக் கண்டுபிடித்துவிட்டார்கள். என் லைசன்ஸைப் பிடுங்கிக் கொண்டார்கள். நான் அதற்குப்பிறகு பல நாட்கள் எங்கும் போகாமல் வீட்டிலேயே இருந்தேன். அப்போதுதான் மகன் பிறந்தான். டெஸ்ஸி என்மீது பயங்கர கோபத்தில் இருந்தாள். அவளை அந்த அளவுக்குக் கொண்டு வந்தது நான்தான். அதற்காக இப்படியா சதா நேரமும் முகத்தைத் தூக்கி வைத்துக்கொண்டு இருப்பது! பிறகு நான் எதற்கு அமெரிக்காவில் இருக்க வேண்டும்? கொஞ்ச நாட்களில் டெஸ்ஸி இன்னொரு புதிய காரை விலைக்கு வாங்கினாள். காரின் பெயர்- லிங்கன் ஃபேமிலி. எனக்கு அதைப் பார்த்தாலே பிடிக்கவில்லை. அதன் அருகில் போகவே எனக்கு விருப்பமில்லை. என் உள்ளத்தைப் புரிந்துகொண்ட மாதிரி அது இல்லை. நான் அதை பல இடங்களுக்கும் இப்படியும் அப்படியுமாய் வளைத்து ஓட்டிச் சென்றிருக்கிறேன். ஒருநாள் அந்தக் கார் நியூ ஜெர்ஸியில் ஒரு எக்ஸ்பிரஸ் வேயில் செத்துப்போன பிணம் மாதிரி நின்றுவிட்டது. என்ன செய்து பார்த்தும், கார் அசையக் காணோம். நான் அதற்கு இரண்டு அடிகள் கொடுத்தேன். இரண்டு கற்களை எடுத்து அதன்மேல் எறிந்தவாறு சொன்னேன்: "போடி நாயே... நீ இல்லாம இந்த அமெரிக்காவுல நான் வாழ்ந்துகாட்டுறேன் பாரு.'' வீட்டை நான் அடைந்தபோது, குழந்தையை ஜோஸஃபீனாவிடம் கொடுத்து விட்டு டெஸ்ஸி வேலைக்குச் சென்றிருந்தாள். நானும் ஜோஸஃபீனாவும் சேர்ந்து சிறிது நேரம் குழந்தைக்கு விளையாட்டு காண்பித்தோம். அப்போது மருத்துவமனையில் இருக்கும் டெஸ்ஸி என்னை பிடி பிடி என்று பிடித்துவிட்டாள். நான் சொன்னேன்: "என் தங்கமே... டெஸ்ஸி... அந்த கார் ஒரு பிசாசு. அது மனசுல என்னவோ இருக்கு. இல்லாட்டி தேவையில்லாம நான் வீட்டுக்கு ஏன் தாமதமா வரப்போறேன்?
நீ என்னை என்ன வேணும்னாலும் பண்ணிக்கோ. ஆனா, அந்தக் கார் நல்லது இல்ல.'' மனதில் கோபமும், வருத்தமும் நிறைய உண்டானது. அதனால், வேகமாக மேலே போனேன்.
ஜோஸஃபீனாவிற்கு ஒரு குப்பி பீரும், எனக்கு ஒரு குப்பி ஜானிவாக்கரும் எடுத்துக்கொண்டு கீழே வந்தேன். குழந்தை சில நிமிடங்களில் உறங்கத் தொடங்கிவிட்டான். நானும் ஜோஸஃபீனாவும் வாட்டர் பெட்மேல் ஏறி சுழலத் தொடங்கினோம். தெய்வகோபம் என்றுதான் சொல்லவேண்டும்- இதற்கு வேறு என்ன சொல்வது? நாங்கள் இருவரும் அப்படியே உறங்கி விட்டோம். உண்மையாகச் சொல்லப்போனால்- நாங்கள் இருவரும் எங்களையே மறந்துவிட்டோம். இதற்கு முன்பு எப்போதுமே இப்படி நடந்ததில்லை. நான் ஏதோ அரவம் கேட்டு, கண்களைத் திறந்து பார்த்தபோது, குழந்தை அழுது கொண்டிருந்தது. டாக்டரும், அவளின் கணவரும் எங்களையே பார்த்தவாறு அறையில் நின்று கொண்டிருந்தார்கள்.
ஜோஸஃபீனா- பீரையும், ஜானிவாக்கரையும் கலந்து குடித்ததன் விளைவு- அப்போதுகூட கல்லைப்போல அசைவே இல்லாமல் உறங்கிக் கொண்டிருந்தாள் அவள். இதற்கு முன்பு டாக்டருக்கும் எனக்கும் அறிமுகமே இல்லை. எனினும், அந்தப் பெண்மணியைப் பார்த்து, நான் லேசாகச் சிரித்தேன். வெள்ளைக்காரனின் கையைப்பிடித்துக் குலுக்கினேன். அடுத்த நிமிடம்- குழந்தையைக் கையில் எடுத்துக்கொண்டு வெளியே வேகமாக ஓடினேன்.
எல்லாம் அந்த நாசமாய்ப்போன விங்கன் ஃபேமிலியால் வந்த வினை! லிங்கன் என்ற பெயரில் அமெரிக்காவில் முன்பு ஒரு
ஜனாதிபதி இருந்தார். அவரின் பெயரை இந்தப் பிசாசுக்கு வைத்தவர்களை என்னவென்று அழைப்பது? பேமிலி! என் ஃபேமிலியை அந்தக் கார் நாய் குழிதோண்டிப் புதைத்துவிட்டது. என்னை கென்னடி விமான நிலையத்தில் கொண்டுவந்து விட்டபோது, டெஸ்ஸி ஆயிரம் டாலர்களை என் கையில் தந்தாள். இப்போதுகூட அவ்வப்போது அவள் ஏதாவது அனுப்பி வைத்துக்கொண்டுதான் இருக்கிறாள். குழந்தையை முழுக்க முழுக்க இப்போது அவள்தான் பார்த்துக்கொள்கிறாள். சில நேரங்களில் அவனை, வேலைக்குச் செல்கிறபோது தன்னுடன் அழைத்துப் போகிறாள். இல்லாவிட்டால், குழந்தைகள் காப்பகத்தில் விட்டுவிட்டும் போகிறாள். உண்மையிலேயே அவள் பாவம்... என் பையன் அவளைவிட பாவம்... அவன் அந்த வெள்ளைக்காரர்களுடனும், வெள்ளைக்காரிகளுடனும் படுத்துக் கிடந்து ஆங்கிலம் பேசவும், லிஃப்டில் ஏறவும், இறங்கவும், ஓடவும், நடக்கவும் படிப்பான். அதைவிட்டால் அவன் தெரிந்து கொள்ள என்ன இருக்கிறது? மேன்மையான விஷயங்கள் எத்தனையோ இருக்கின்றன- அவன் அதைத் தெரிந்துகொள்ளப் போகிறானா என்ன? பல கார்களுக்கு மத்தியில் அவனும் ஒரு ஒழுங்கே இல்லாமல் செய்யப்பட்டிருக்கும் ஒரு காரை ஓட்டுவான். யாராவது பல வண்ணங்களைக் கொண்ட ஒரு வெள்ளைக்காரப் பெண் அவனைக் கொண்டு போகத்தான் போகிறாள். என்னை இனி டெஸ்ஸி அமெரிக்காவிற்கு அழைப்பாளா? நிச்சயம் சந்தேகம்தான். அவளுக்கு இப்போது வேறு யாராவது ஆள் கிடைத்திருக்கும். அவள் எழுதும் கடிதங்களைப் படிக்கிறபோது, அப்படி எண்ணத் தோன்றவில்லை. என்றாலும், அவள் இருப்பது அமெரிக்கா ஆயிற்றே! பிறகு... நான் ஏற்கெனவே கையும் களவுமாகப் பிடிப்பட்ட ஒரு மனிதனாயிற்றே! என்னைப்பார்த்து அவள் உரத்த குரலில் சத்தம் போட்டதையும், திட்டியதையும் மறந்தால்கூட, நடந்த அந்த நிகழ்ச்சியை அவளால் அவ்வளவு எளிதில் மறக்கத்தான் முடியுமா?
சில நேரங்களில் சாயங்கால நேரங்களில் ஆற்றங்கரையில் நின்று கொண்டிருக்கும்போது, அங்கு வளர்ந்திருக்கும் செடிகளில் இருந்து நல்ல வாசனை வரும். ஜோஸஃபீனாவின் கையில் இதே வாசனையை நான் முகர்ந்திருக்கிறேன். அப்போது என்மனதில் இனம்புரியாத ஒரு கவலை உண்டாகும். நான் அக்கரையைப் பார்த்தவாறு கூறுவேன்: "ஜோஸஃபீனா... என் தங்க ஜோஸஃபீனா... நாளை... நாளை... நோ! அமெரிக்கா, சலாம்!"