சலாம் அமெரிக்கா! - Page 3
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 7611
அதன் அருமையான சுவையும், மணமும்... அடடா! நான் அதை வாயில் விட்டு, சில நொடிகள் அப்படியே வைத்திருப்பேன். அதன் மணத்தை மூக்கிற்குள்விட்டு, உலகையை மறந்திருப்பேன். அப்போது... டெஸ்ஸிக்கு உறக்கம் வர ஆரம்பிக்கும். குழந்தை ஏற்கெனவே உறங்கத்தொடங்கி இருப்பான். அடுத்த வேலை எனக்குத்தான். நான் குழந்தையை எடுத்துக்கொண்டுபோய் அவன் படுக்கும் இடத்தில் அவனைப் படுக்க வைத்துவிட்டு, டெஸ்ஸியிடம் வந்து அவளைப் போர்வையால் மூடுவேன். அவளின் அருகில் நின்றவாறே மெதுவாகச் சொல்வேன்: "டெஸ்ஸி... காரோட சாவியைக் கொஞ்சம் தா. நான் ஒரு சுத்துசுத்திட்டு வர்றேன்.'' அப்போது அவள் என்னை பாதி உறங்கிக் கொண்டிருக்கின்ற கண்களுடன் பார்ப்பாள். என்னை மட்டும் தனியே வெளியே அனுப்புவதில் அவளுக்கு எப்போதுமே விருப்பம் இல்லை. இன்னும் சொல்லப்போனால் என்னை நம்பி காரைத் தர அவள் தயாராக இல்லை என்பதே உண்மை. எனக்கு ஏதாவது நேர்ந்துவிட்டால், பாவம் அவள் என்ன செய்வாள்? குழந்தையை யார் பார்ப்பது? என்னைவிட்டால் வீட்டில் ஆண் என்று கூற வேறு யாரும் இல்லையே! என்னை ஒரு குற்றவாளியைப் பார்ப்பது மாதிரி மேலும் கீழும் பார்த்தவாறே அடுத்தநிமிடம் கார் சாவியை எடுத்து என் கையில் தருவாள். நாள் அதைக் கையில் வாங்கிக் கொண்டு, ஃப்ரிட்ஜைத் திறந்து ஒரு சிறு பீர்கேனை எடுத்துத் திறந்து வாய்க்குள் ஊற்றியவாறு கதவை அடைத்துவிட்டு வெளியேறுவேன். டெஸ்ஸியும் குழந்தையும் தூக்கம் கலைந்து எழுவதற்கு இன்னும் மூன்று மணி நேரங்கள் இருக்கின்றன. ஹா... ஹா... மூன்று மணி நேரங்கள்! நான் லிஃப்டில் ஏறாமல், மெதுவாக படியைவிட்டு இறங்கி, கீழே இருக்கிற தளத்திற்கு வந்து வாசல் கதவைத் தட்டினேன். பெல்லை அடிக்கக்கூடாது என்று ஜோஸஃபீனா ஏற்கெனவே என்னிடம் சொல்லியிருக்கிறாள். அதாவது- அவள் என்னிடம் சைகை காட்டி சொன்ன விஷயம் இது. அவள் பேசுவது ஆங்கிலத்தில்கூட இல்லை. ஸ்பானிஷ் மொழியில். நான் லிஃப்டில் வைத்துத்தான் அவளை முதல் முறையாகப் பார்த்தேன். அவளைப் பார்த்ததும், என்ன காரணத்தாலோ உதடுகள் விரிய சிரித்தேன். அவளைப் பார்த்ததும், என் மனதில் மகிழ்ச்சி உண்டாகி இருக்க வேண்டும். அதனால்தான் அந்தச் சிரிப்பு. அவளும் பதிலுக்கு சிரித்தாள்.
ஜோஸஃபீனாவைப் பார்த்தால், திருச்சூரோ அல்லது தெற்கில் இருக்கிற ஏதோ ஒரு ஊரைச்சேர்ந்த- நல்ல ஒரு குடும்பத்தில் பிறந்த அழகான ஒரு பெண் என்பது மாதிரி தோன்றும். சிவந்த நிறம். வெள்ளைக்காரப் பெண்களுக்கு இருப்பது மாதிரி பல நிறங்களில் அவளின் தலைமுடி இருக்கவில்லை. மாறாக, நல்ல கருப்பு நிறம். சுருள்முடி. அழகான உடல்வாகு. லிஃப்டில் நாங்கள் இரண்டு பேர் மட்டுமே இருந்தோம். நான் "ஹலோ" என்று சிரித்தவாறு சொன்னேன். என்னையும் மீறி அவளைப் பார்த்துச் சொன்னேன்: "ப்யூட்டிஃபுல்''. அடுத்த நிமிடம்- அவள் என் கொம்பு மீசையைச் சுட்டிக் காட்டியவாறு சிரித்தாள். நான் சொன்னேன்: "நீ வேணும்னா இந்த மீசையைப் பக்கத்துல வந்து தொட்டுப் பாரு.'' அவளுக்கு நான் சொன்னது புரிந்திருக்குமா என்ன? நான் என் நெஞ்சைக் கையால் தட்டியவாறு சொன்னேன்: "ஐ... மலையாளம்!'' அவள் சிரித்தாள். கண்களைச் சிமிட்டியவாறு சொன்னாள்: "எஸ்பானா!'' அவளின் கையில் நிறைய பொட்டலங்கள் இருந்தன. அவளுக்குப் பக்கத்தில் கீழேயும் நிறைய இருந்தன. அறுபத்தெட்டாம் தளத்தில் லிஃப்ட் நின்றபோது, அவள் வெளியே செல்வதற்காக என்னைப் பார்த்தாள். என் வீடு இருப்பது அறுபத்தொன்பதாவது தளத்தில். நான் சொன்னேன்: "ஐ...ஐ...சிக்ஸ்டி நைன்! ஐ ஹெல்ப்...'' அவள் என்னைப்பார்த்து கண்களைச் சிமிட்டியவாறு முப்பத்திரண்டு பற்களும் தெரிகிற மாதிரி காட்டி சிரித்தவாறு சொன்னாள்: "சிக்ஸ்டி நைன்! சிக்ஸ்டி நைன்! கம்!'' நான் அன்று ஜோஸஃபீனாவின் பொட்டலங்களைத் தூக்கிக் கொண்டு அவளுக்கு உதவி செய்வதற்காகப் போனேன். அவள் "சிக்ஸ்டி நைன்" என்று சொல்லியவாறு என்னைப் பார்த்து ஏன் கண்களைச் சிமிட்டினாள் என்பதன் அர்த்தமே எனக்கு பின்னால்தான் தெரிந்தது. பெண் என்றால் அவள்தான் பெண்! அவளின் எஜமானி டெஸ்ஸியின் தோழியான ஒரு மலையாள டாக்டர்.
அதாவது- மனோதத்துவ டாக்டர். அவளின் கணவர் ஒரு வெள்ளைக்காரர். அந்த ஆள் ஐக்கிய நாடுகள் சபையில் ஒரு பெரிய பதவியில் இருக்கிறார். அந்த மனிதருக்கு சிகிச்சை செய்கிறேன் என்று படிப்படியாக அவரையே கைக்குள் போட்டுக் கொண்டாள் அந்த மலையாள டாக்டர் என்று டெஸ்ஸி என்னிடம் கூறியிருக்கிறாள். அப்படியே இல்லை என்றால்கூட மனோதத்துவ டாக்டருக்கு கிடைக்கக்கூடிய பணம் என்ன சாதாரண பணமா? அதன் வாசலில் கட்ட முடியுமா ஒரு நர்ஸ் ஓவர்டைம் எல்லாம் சேர்த்து வாங்கக்கூடிய சம்பளத்தை? இன்னொரு விஷயம்... இந்த வெள்ளைக்காரர்கள் மனது எப்போதும் சமநிலையில் இருக்காது. அவர்களுக்கு எப்போதுமே பயமும், விரக்தியும்தான்... எப்படி அவர்களுக்கு அவை உண்டாகாமல் இருக்கும்- இந்த லிஃப்டுக்குள் ஏறுவதும், இறங்குவதும், ஓடுவதும், பாய்வதும், காரை ஓட்டுவதும்... இதுவே வேலையாக இருந்தால்?
ஒரு நிமிடம் காலை நீட்டி ஒரு இடத்தில் அமர்ந்து ஓய்வு எடுக்க முடிகிறதா? ஜோஸஃபீனா வேலை செய்யும் வீட்டுக்காரர்கள் காலையில் வீட்டை விட்டுப் புறப்பட்டால் இரவு எட்டு மணிக்கு முன்னால் நிச்சயம் வீட்டுக்கு வரமாட்டார்கள். சனிக்கிழமையும் ஞாயிற்றுக்கிழமையும் மட்டும் கொஞ்சம் கவனமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும். அவள் தான் யாருக்கும் தெரியாமல் ஒளிந்திருக்கக் கூடிய இடத்தைக்கூடச் சொல்லி வைத்திருக்கிறாள் என்பதிலிருந்தே அவளை உங்களால் புரிந்து கொள்ள முடிகிறது அல்லவா? மனோதத்துவத்தின் மதிப்பு எனக்கு எப்போது தெரிந்தது என்றால்- முதல்நாள் ஜோஸஃபீனாவைக் கட்டிப் பிடித்தவாறு டாக்டரின் பெரிய படுக்கையறையில் இருந்த வட்ட வடிவமான வாட்டர் பெட்டின் நடுவில் மேலே தெரிந்த கண்ணாடியைப் பார்த்தவாறு படுத்துக்கிடந்த போதுதான். அப்போது ஜோஸஃபீனா கையை நீட்டி ஒரு பொத்தானை அழுத்தினாள். அடுத்த நிமிடம்- படுக்கை அறைக்குள் சுற்றத் தொடங்கிவிட்டது. மனம் எப்படி பல விஷயங்களையும், அசை போட்டுக்கொண்டு சுற்றிக்கொண்டிருக்கிறதோ, அப்படித்தான் படுக்கையும் சுழன்றது. நான் அந்த நிமிடத்தில் என்னவெல்லாமோ நினைக்க ஆரம்பித்துவிட்டேன். நான் ஜோஸஃபீனாவைப் பார்த்துச் சொன்னேன்: "அடியே பெண்ணே... உன்னை எங்கே இருந்து கொண்டு வந்தாங்க?'' அவள் ஸ்பானிஷ் மொழியில் என்னவோ கூறியவாறு என்னைக் கடிக்க ஆரம்பித்தாள். அவள் இப்போது மனதில் என்ன நினைத்துக் கொண்டிருப்பாள் என்று நான் எண்ணிப் பார்த்தேன்.