
"நீங்க மூணு பேரு, நாங்க மூணு பேரு. எங்கமேல கருணை காட்டுங்க.''
அதைப் பார்த்து பாதிரியார் புன்னகைத்தார்.
"நீங்க எல்லாருக்கும் கேட்கும்படி கடவுளைப் பற்றி சில வார்த்தைகள் சொல்றீங்க.'' அவர் சொன்னார்: "ஆனா, நீங்க சரியா பிரார்த்தனை பண்ணல. நீங்க என் அன்புக்கு பாத்திரமா ஆயிட்டீங்க. கடவுளோட மக்களே! கடவுள் சந்தோஷப்படுற மாதிரி ஏதாவது சொல்ல விரும்புறீங்க. ஆனா, அவருக்கு எதைச் சொல்றதுன்னு உங்களுக்குத் தெரியல. அப்படி பிரார்த்தனை பண்ணக் கூடாது. என்னையே பாருங்க. நான் உங்களுக்கு எப்படி பிரார்த்தனை பண்றதுன்றதை கற்றுத் தர்றேன். நான் என் சொந்த வழிமுறைகளை உங்களுக்குச் சொல்லித் தரல. எல்லாரும் தன்னை எப்படி வணங்கணும்னு புனித நூல்ல கடவுள் சொல்லியிருக்கிறாரோ, அதைத்தான் உங்களுக்கு நான் சொல்லித் தரப் போகிறேன்:''
தொடர்ந்து கடவுள் மனிதர்களிடம் தன்னை எப்படி வெளிப்படுத்திக் கொண்டார் என்பதை பாதிரியார் விளக்க ஆரம்பித்தார். தந்தை வடிவில், மகன் வடிவில், புனித ஆவி வடிவில் வந்த கடவுளைப் பற்றி அவர் அவர்களிடம் சொன்னார்.
"மகன் வடிவில் கடவுள் பூமிக்கு வந்தார்.'' அவர் சொன்னார்: "மனிதர்களைக் காப்பாற்றுவதற்காக... இப்படித்தான் தன்னை பிரார்த்தனை செய்யணும்னு நம்ம எல்லாரையும் பார்த்து அவர் சொன்னார். என்னையே பாருங்க... நான் சொல்றதை அப்படியே திருப்பிச் சொல்லுங்க.. நம் தந்தை...''
இருப்பதிலேயே வயதில் மூத்தவராக இருந்த மனிதர் பாதிரியார் சொன்னதைத் திரும்பச் சொன்னார்: "நம் தந்தை''. இப்போது அதற்கடுத்து வயதான மனிதர் சொன்னார்: "நம் தந்தை'': மூன்றாவது மனிதர் அதற்கடுத்து சொன்னார்: "நம் தந்தை.''
"சொர்க்கத்தில் இருக்கும்...'' பாதிரியார் தொடர்ந்து சொன்னார்.
முதல் துறவி அவர் சொன்னதைத் திரும்பச் சொன்னார்: "சொர்க்கத்தில் இருக்கும்...'' ஆனால், அந்த வார்த்தைகளை இரண்டாவது துறவியால் சரியாகச் சொல்ல முடியவில்லை. வார்த்தைகளை உச்சரிக்க முடியாமல் அவர் தடுமாறினார். அவருடைய வாய்க்கு மேலே முடி வளர்ந்திருந்ததால், அவரால் எதையும் ஒழுங்காகப் பேச முடியவில்லை. மிகவும் வயதான துறவிக்கு வாயில் பற்களே இல்லாததால், அவர் இப்படியும் அப்படியும் மென்று கொண்டிருந்தாரே தவிர, வார்த்தைகளே வெளியே வரவில்லை.
பாதிரியார் மீண்டும் தன்னுடைய வார்த்தைகளைச் சொன்னார். அந்த வயதான மனிதர்கள் அவர் சொன்னதைத் திரும்பச் சொன்னார்கள். பாதிரியார் அங்கிருந்த ஒரு கல்மீது உட்கார்ந்திருக்க, அந்த வயதான மனிதர்கள் அவருக்கு முன்னால் நின்றிருந்தார்கள். அவர்கள் அவருடைய வாயையே உற்றுப் பார்த்தவாறு, அவர் சொன்ன வார்த்தைகளை திரும்பக் கூறிக்கொண்டிருந்தார்கள். அந்த முழு நாளும் பாதிரியார் மிகவும் கஷ்டப்பட்டு அந்த வார்த்தைகளை அவர்களுக்கு கற்றுத் தந்து கொண்டிருந்தார். ஒவ்வொரு வார்த்தையும் இருபது முறை, முப்பது முறை, ஏன்... நூறுமுறைகள் கூட திரும்பத் திரும்ப அவர் கூறிக் கொண்டிருந்தார். அவர் சொன்னதை அந்த வயதான மனிதர்கள் திரும்பச் சொன்னார்கள். அவர்கள் தடுமாற, பாதிரியார் அவர்களைத் திருத்தி, மீண்டும் ஆரம்பத்திலிருந்து கூறிக் கொண்டிருந்தார்.
கடவுளின் பிரார்த்தனையை அவர்களுக்கு முழுமையாக அவர் கற்பிக்க, அவர்கள் அதைத் திரும்பச் சொல்ல... அவர்களாகவே அதைக் கூறும் வரை பாதிரியார் அவர்களை விடவில்லை. இரண்டாவது துறவிதான் அவர் சொன்ன அந்த பிரார்த்தனை வார்த்தைகளை சரியாகப் புரிந்துகொண்டு, அதை முழுமையாக எந்தவித தவறும் இல்லாமல் திரும்பக் கூறினார். பாதிரியார் அவரைத் திரும்பத் திரும்ப அதைக் கூற வைத்தார். கடைசியில் மற்ற இருவரும்கூட அதை முழுமையாகக் கூறினார்கள்.
நேரம் இருட்டிவிட்டது. நீரில் நிலவு தெரிந்தது. பாதிரியார் தன்னுடைய கப்பலுக்குச் செல்வதற்காக எழுந்து நின்றார். அந்த வயதான மூவரையும் விட்டுப் பிரிவதற்காக அவர் தயாரானபோது, அவர்கள் தரையில் விழுந்து அவரை வணங்கினார்கள். அவர் அவர்களை எழுப்பி, அவர்கள் ஒவ்வொருவரையும் முத்தமிட்டார். தான் சொல்லிக் கொடுத்ததைத் கூறி இறைவனை பிரார்த்தனை செய்யும்படி அவர் கூறினார். பிறகு படகில் ஏறி அவர் கப்பலுக்குத் திரும்பினார்.
படகில் ஏறி உட்கார்ந்து கப்பலை நோக்கி அவர் பயணம் செய்து கொண்டிருக்க, கடவுளை நோக்கிப் பிரார்த்தனை செய்யும் வார்த்தைகளை அந்த மூன்று வயதான துறவிகளும் திரும்பத் திரும்ப கூறிக்கொண்டிருப்பது அவருடைய காதுகளில் விழுந்தது. படகு கப்பலை நெருங்கும்போது, அவர்களின் குரல் முழுமையாகக் கேட்கவில்லை. ஆனால், நிலவு வெளிச்சத்தில் அவர்கள் நின்று கொண்டிருப்பது நன்கு தெரிந்தது. அவர்கள் பாதிரியார் அங்கிருந்து புறப்படும்போது எந்த இடத்தில் நின்றிருந்தார்களோ, அதே இடத்தில்தான் இப்போதும் நின்றிருந்தார்கள். குள்ளமானவர் நடுவில் நின்றிருந்தார். உயரமானவர் வலது பக்கம் நின்றிருக்க, இரண்டாமவர் இடது பக்கத்தில் நின்றிருந்தார். பாதிரியார் கப்பலை அடைந்து அதில் ஏறியவுடன் கப்பல் புறப்படுவதற்கு ஆயத்தமானது. எல்லா விஷயங்களும் தயார் செய்யப்பட்டவுடன் காற்று பலமாக வீச கப்பல் புறப்பட்டது. பாதிரியார் மேல் தளத்தில் பின்னாலிருந்த ஒரு இடத்தில் போய் அமர்ந்து, அந்தத் தீவையே பார்த்துக் கொண்டிருந்தார். சிறிது தூரம் வரை அந்த வயதான துறவிகள் அவருக்குத் தெரிந்தார்கள். பிறகு அவர்கள் பார்வையிலிருந்து மறைந்து போனார்கள். ஆனால், தீவு மட்டும் தெரிந்தது. கடைசியில் தீவும் பார்வையிலிருந்து மறைந்தது. கடல் மட்டுமே சுற்றிலும் தெரிந்தது. நிலவு வெளிச்சத்தில் அது "தகதக"வென மின்னிக் கொண்டிருந்தது.
கப்பலில் பயணம் செய்து கொண்டிருந்த புனிதப் பயணிகள் படுத்துத் தூங்க ஆரம்பித்தார்கள். சுற்றிலும் பயங்கர அமைதி நிலவியது. பாதிரியார் தூங்க விரும்பவில்லை. ஆதலால், தான் மட்டும் தனியே அதே இடத்தில் அமர்ந்து கடலை மட்டும் வெறித்து பார்த்துக் கொண்டிருந்தார். தீவு முற்றிலுமாக பார்வையிலிருந்து மறைந்து போனாலும், அவருடைய சிந்தனையை முழுமையாக ஆக்கிரமித்திருந்தார்கள் அந்த மூன்று நல்ல வயதான மனிதர்களும். கடவுளைப் பற்றிய பிரார்த்தனையைக் கற்றுக் கொள்வதில் அவர்களுக்கிருந்த சந்தோஷத்தை அவர் நினைத்துப் பார்த்தார். தன்னை அந்த வயதான மனிதர்களிடம் அனுப்பி வைத்து பிரார்த்தனை வார்த்தைகளைக் கற்றுத் தருவதற்கான வாய்ப்பைத் தந்ததற்காக கடவுளுக்கு அவர் நன்றி கூறினார்.
பாதிரியார் அமர்ந்து, சிந்தித்தவாறு தீவு மறைந்துபோன திக்கையே பார்த்துக்கொண்டிருந்தார். நிலவு வெளிச்சம் கடல் அலைகளுக்கு மேலே இங்குமங்குமாய் ஒளிர்ந்து கொண்டிருந்தது. திடீரென்று நிலவு பட்டு கடலில் நீளமாகத் தெரிந்த ஒளிமயமான கோட்டில், ஏதோ வெள்ளை நிறத்தில் பிரகாசமாகத் தெரிவதை அவர் பார்த்தார். அது ஏதாவது கடல் வாழ் பிராணியா இல்லாவிட்டால் பயணம் செய்து கொண்டிருக்கும் ஏதாவதொரு படகிலிருந்து உண்டாகும் வெளிச்சமா என்று அவர் பார்த்தார். பாதிரியார் அந்த வெளிச்சம் வரும் திசையையே வியப்புடன் பார்த்தவாறு உட்கார்ந்திருந்தார்.
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook