பிறந்த நாள் - Page 5
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 6752
ஆனால், நான் சொன்னதைக் கேட்கிற அளவிற்கு அந்த ஆளிடம் பொறுமை இல்லை.
"நீங்கள்லாம் ஏன் வாழணும்?'' அந்த ஆள் கேட்டார். அவர் கேட்டதில் தப்பே இல்லை. இப்படி எதற்காக வாழ வேண்டும்? நான் இந்தக் கட்டிடத்திற்கு வந்து மூன்று வருடங்கள் முடிந்துவிட்டன. மூன்று அடுக்களைகளை நான்தான் நல்லதாக மாற்றினேன். அதற்கு இப்போது நல்ல வாடகை கிடைத்துக் கொண்டிருக்கிறது. இப்போது நான் இருப்பது ஒரு ஸ்டோர் ரூமாக இருந்தது. என்னை விட்டு வேறு யாராவது இந்த அறைக்கு வந்தால், வாடகை நிச்சயம் அதிகமாகக் கிடைக்கும். வாடகையைக் கூட்டி நானே தந்துவிடுறேன் என்று சொல்லலாம்- இல்லாவிட்டால் அறையைக் காலி செய்துவிட்டு வெளியேறலாம்.
வாடகை அதிகமாகக் கொடுப்பதில் எனக்கு உடன்பாடில்லை. அறையைக் காலி செய்யவும் தயாராக இல்லை. பிறகு என்னதான் செய்வது?
மணி நான்கு: எனக்கு இந்த ஊரே வெறுத்துப் போய்விட்டது. எனக்குப் பிடித்தது மாதிரி இந்த நகரத்தில் ஒன்றுமே இல்லை. தினமும் நடக்கிற- பயணம் செய்கிற சாலைகள், தெருக்கள்- தினமும் பார்க்கிற கடைகளும், முகங்களும். பார்த்ததையே மீண்டும் மீண்டும் பார்ப்பது. கேட்டதையே மீண்டும் மீண்டும் கேட்பது. மனம் மிகவும் வெறுத்துப் போய்விட்டது. எதையும் எழுதக்கூடத் தோன்றவில்லை. அப்படியே எழுதினாலும் எதை எழுதுவது?
மணி ஆறு: மயங்கி நிற்கும் மாலை நேரம். சூரியனை கடல் கொஞ்சம் கொஞ்சமாக விழுங்கிக் கொண்டிருக்கிறது. இரத்தச் சிவப்பில் சூரியன் சிரிக்கிறான். வானத்தில் ஆங்காங்கே திட்டுத் திட்டாக மேகங்கள். கரையே கண்ணில் தென்படாத அளவிற்கு கடல் மட்டுமே பரந்து கிடக்கிறது. அலைகள் புரண்டு புரண்டு கண்ணாமூச்சி ஆடிக் கொண்டிருக்கின்றன. கடற்கரையில் சிகரெட் புகைத்தவாறு நடந்து செல்லும் இளைஞர்கள். காண்போரைச் சுண்டி இழுக்கக்கூடிய காந்தக் கண்களுடன் பல வண்ணங்களில் புடவை அணிந்து வானத்து தேவதைகளென ஒய்யாரமாக நடந்து செல்லும் இளம் பெண்கள். காதல் நாடகங்களுக்குப் பின்புல இசைபோல இதயத்தைக் குளிர்வித்துக் கொண்டிருக்கும் பூங்காவின் வானொலிப் பாட்டு. பூக்களின் மேல் மோதி இனிய நறுமணத்தை அந்தப் பகுதியெங்கும் பரப்பி ஆனந்தக் கிளர்ச்சியூட்டும் இளம் காற்று... ஆனால், நான் தளர்ந்து கீழே விழப்போகிறேன்.
மணி ஏழு: ஒரு போலீஸ்காரன் நான் தங்கியிருக்கும் இடத்திற்கு வந்து இன்றும் என்னை அழைத்துக் கொண்டு போனான். கண்களைக் கூச வைக்கும் பெட்ரோமாக்ஸ் விளக்கொளியில் என்னை உட்கார வைத்தார்கள். அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு உரிய பதில்களை நான் சொல்லும்போது என் முக பாவங்கள் எப்படி இருக்கின்றன என்று எனக்குப் பக்கத்தில் கையைக் கட்டி இங்குமங்குமாய் நடந்து கொண்டிருந்தார் போலீஸ் டெபுட்டி கமிஷனர். அவரின் பார்வை எப்போதும் என் முகத்தில்தான். அவரின் பார்வையையும், அவரின்
நடையையும் பார்க்க வேண்டுமே! நான் ஏதோ பயங்கரக் குற்றத்தைச் செய்த மனிதன் என்பது மாதிரியும், இதுவரை யார் கையிலும் பிடிபடாத ஒரு மனிதனைப் பிடித்து உள்ளே வைத்திருக்கிறோம் என்பது மாதிரியும் இருந்தது. அவரின் பார்வை. ஒருமணி நேரம் என்னிடம் கேள்விமேல் கேள்வி கேட்டார்கள். என் நண்பர்கள் யார் யார்? எங்கிருந்தெல்லாம் எனக்குக் கடிதங்கள் வருகின்றன? அரசாங்கத்தையே ஆட்டுவிக்கும் ஒரு மிகப்பெரிய தீவிரவாதக் கும்பலில் நானும் ஒருவன் என்ற நினைப்பு இவர்களுக்கு. இப்போது புதிதாக நான் என்னவெல்லாம் எழுதுகிறேன்? எல்லா விஷயங்களையும் கொஞ்சம்கூட மறைக்காமல் இவர்களிடம் சொல்ல வேண்டும். அதற்குப் பிறகு...
"உங்களுக்குத் தெரியுமா இந்த இடத்தை விட்டே வேற எங்கேயாவது உங்களை என்னால கடத்திப்போக முடியும்னு...?''
"நல்லாவே தெரியும். நான் ஒரு அப்பாவி சார்... சாதாரண ஒரு போலீஸ்காரன் நினைச்சாலே போதும், என்னைக் கைது பண்ணி லாக்-அப்ல போட்டு அடைச்சிட முடியும்.''
மணி ஏழரை: நான் மீண்டும் என்னுடைய அறைக்கு வந்தேன். நல்ல இருட்டு. உடம்பு நன்றாக வியர்த்தது . பிறந்தநாள்! இன்று நான் தங்கி இருக்கும் இடத்தில் வெளிச்சத்திற்கே வழி இல்லை. மண்ணெண்ணெய்க்கு என்ன பண்ணுவது? பசி அடங்க வேண்டுமென்றால் ஏதாவது தின்றே ஆகவேண்டும். தெய்வமே, யார் தின்னுவதற்குத் தருவார்கள்? யாரிடமும் கடன் வாங்கவும் முடியாது. ஆனால்... மேத்யூவிடம் கேட்டுப் பார்த்தால் என்ன? வேண்டாம்... பக்கத்துக் கட்டிடத்தில் தங்கியிருக்கும் கண்ணாடிக்கார மாணவனிடம் ஒரு ரூபாய் கடன் கேட்டால் என்ன என்று தோன்றியது. அவன் உடல்நலம் பாதிக்கப்பட்டு, அது சரியாவதற்காக ஊசிக்கே ஏகப்பட்ட பணத்தைச் செலவு செய்தான் இதற்கெல்லாம் குணமாகாமல் நான்
கொடுத்த நாலணா மருந்தில்தான் அவன் குணமே ஆனான். அதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் என்னை ஒருமுறை திரைப்படம் பார்க்க அழைத்துச் சென்றான். அவனிடம் போய் ஒரு ரூபாய் கடன் கேட்டால் தராமலா இருப்பான்?
மணி எட்டே முக்கால்: வழியில் மேத்யூவைப் பற்றி விசாரித்தேன். அவன் சினிமா பார்க்கப் போயிருக்கிறான். உரத்த பேச்சு சத்தத்தையும், சிரிப்பொலியையும் கேட்டவாறே நான் பக்கத்து கட்டிடத்தின் மேல் மாடிக்குச் சென்றேன். ஒரே சிகரெட் நெடி. மேஜை மேல் பிரகாசித்துக் கொண்டிருக்கும் விளக்கு. விளக்கொளியில் "பளிச்” எனத் தெரியும் கைக்கடிகாரங்கள், தங்கச்சங்கிலிகள்.
அமைதியாகப் போய் நான் அங்கிருந்த நாற்காலியில் உட்கார்ந்தேன். அவர்கள் என்னவோ பேசிக் கொண்டிருந்தார்கள். அரசியல், சினிமா, கல்லூரி மாணவிகளின் அங்க வர்ணனை, ஒரே நாளில் இரண்டு முறை புடவை மாற்றி வரும் மாணவிகளின் பெயர்கள்- இப்படிப் பல்வேறு விஷயங்களைப் பற்றியும் அவர்கள் பேசிக் கொண்டிருந்தனர். அவர்கள் பேச்சுக்கிடையே அவ்வப்போது நானும் புகுந்து ஏதாவது சொல்வேன். இடையில் ஒரு சிறு பேப்பர் அவசரமாகத் தேவைப்படுகிறது. இரண்டு மூன்று நாட்களில் திருப்பித் தந்துவிடுகிறேன் என்று.
அப்போது கண்ணாடிக்காரன் சிரித்தான்:
"என்ன ஏதாவது சிறுகதை எழுத குறிப்பு எடுத்து வைக்கிறீங்களா?''
"இல்ல...''
அதைத் தொடர்ந்து அவர்களின் பேச்சு சிறுகதைகளைப் பற்றித் திரும்பியது.
அரும்பு மீசை வைத்திருந்த இளைஞன் மிகவும் குறைப்பட்டான்:
"நம்ம மொழியில நல்ல சிறுகதைகளே கிடையாது!''
மொழியிலும் நாட்டிலும் நல்லது ஏதாவது இருக்கிறதா என்ன?
நல்ல ஆண்களும் நல்ல பெண்களும் கடலைத் தாண்டித்தானே இருக்கிறார்கள்!
நான் கேட்டேன்:
"நீங்க யாரோட சிறுகதைகளை எல்லாம் படிச்சிருக்கீங்க?''
"அப்படியொண்ணும் அதிகமா வாசிச்சது இல்ல... இன்னொரு விஷயம்- தாய்மொழியில ஏதாவது வாசிச்சா அது ஒரு அந்தஸ்துக் குறைவான விஷயம்னு பலரும் நினைக்கிறாங்க!''