பிறந்த நாள் - Page 6
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 6752
நான் நம்முடைய சில சிறுகதை எழுத்தாளர்களின் பெயர்களைச் சொன்னேன். அவர்களில் பெரும்பாலானவர்களின் பெயர்களைக் கூட இவர்கள் கேட்டதில்லை.
நான் சொன்னேன்:
"ஆங்கிலத்தில் மட்டுமல்ல. உலகத்தில் உள்ள எல்லா மொழிகளின் சிறுகதைகளோடும் போட்டி போடுற அளவுக்குத் தகுதியான நல்ல சிறுகதைகள் நம்ம மொழியில இருக்கு. நீங்க ஏன் இவற்றையெல்லாம் படிக்கிறது இல்ல?''
"ஓ... கொஞ்சம் படிச்சிருக்கேன். இன்னொரு விஷயம் நம்ம மொழியில இருக்கிற கதைகள்ல பெரும்பாலானவை வறுமையைப் பற்றி எழுதப்பட்டவை. இதைத் தவிர வேற எதையும் எழுதவே தெரியாதா?''
நான் அதற்குப் பதில் ஒன்றும் கூறவில்லை.
"உங்களோட கதைகளைப் படிச்சால்...'' தங்கக் கண்ணாடிக்காரன் சொன்னான்: " உலகத்தில் என்னவோ பெரிய குழப்பம் இருக்குறது மாதிரி தெரியும்.''
உலகத்தில் என்ன குழப்பம்? பெற்றோர்கள் கஷ்டப்பட்டு ஒவ்வொரு மாதமும் பணம் அனுப்பி வைக்கிறார்கள். அதை நன்றாகச் செலவு செய்து இவர்கள் படிக்கிறார்கள். சிகரெட், தேநீர், காபி, ஐஸ்கிரீம், திரைப்படம், குட்டிக்குரா பவுடர், வாஸ்லெய்ன், ஸ்ப்ரே, விலை உயர்ந்த ஆடைகள், விலை உயர்ந்த உணவு, மது, போதை மருந்து, ஸிபிலிஸ், குனோரியா... இவர்களின் விஷயம் இப்படிப் போகிறது. எதிர்கால ராஜாக்கள்! நாட்டை ஆளப்போகிறார்கள்... சட்டத்தைச் செயல்படுத்தப் போகிறவர்கள். அறிவுஜீவிகள், பண்பாட்டுக் காவலர்கள், மதத் தலைவர்கள், அரசியல் தலைவர்கள், தத்துவவாதிகள்... உலகத்தில் என்ன குழப்பம்?
எனக்கு ஒரு பெரிய சொற்பொழிவு ஆற்ற வேண்டும்போல் இருந்தது.
"இன்றைய உலகம்...'' நான் ஆரம்பித்தேன். அப்போது கீழே இருந்து சிறு பையன்களின் சப்தம்:
"காலணி வாங்கலியா, காலணி?''
"கொண்டு வா'' கண்ணாடிக்காரன் கட்டளையிட்டான். அவ்வளவு தான். விஷயம் மாறியது. மேலே ஏறி வந்தது நான் காலையில் பார்த்த சிறுவர்கள். அவர்கள் மிகவும் களைத்துப் போயிருந்தனர். அவர்கள் கண்கள் உள்ளே போயிருந்தன. முகம் வாடிப் போயிருந்தது. உதடுகள் வறண்டு போயிருந்தன. பையன்களில் மூத்தவன் சொன்னான்:
"சாருக்கு வேணும்னா ஒரு ஜோடி ரெண்டரை அணா.''
காலையில் அதன் விலை மூன்று அணாவாக இருந்தது.
"ரெண்டரை அணாவா?'' கண்ணாடிக்காரன் காலணியையே இப்படியும் அப்படியுமாய்த் திருப்பிப் பார்த்தான்.
"பிள்ளைகளே... உங்க வீடு எங்கே இருக்கிறது?'' நான் கேட்ட கேள்விக்கு மூத்த பையன் பதில் சொன்னான்- இங்கிருந்து மூன்று மைல் தூரத்தில் உள்ள ஒரு இடத்தில் இருக்கிறது இவர்களின் வீடு.
"ரெண்டு அணாவுக்குத் தர முடியுமா?'' கண்ணாடிக்காரன் கேட்டான்.
"சார்... ரெண்டே கால் அணா.''
"அப்படின்னா வேண்டாம்...''
"ஓ...''
கவலையுடன் பையன்கள் கீழே இறங்கினார்கள். தங்கக் கண்ணாடிக்காரன் அவர்களை மீண்டும் அழைத்தான்:
"கொண்டு வாடா.''
அவர்கள் மீண்டும் மேலே வந்தார்கள். நல்ல காலணியாக ஒரு ஜோடியைத் தேர்ந்தெடுத்து பத்து ரூபாய் நோட்டு ஒன்றை மூத்த பையன் கையில் அவன் தந்தான். அந்தச் சிறுவர்கள் கையில் காசே இல்லை. அவர்கள் காலையில் இருந்து ஒரு ஜோடி காலணி கூட விற்கவில்லை. பொழுது புலர்ந்தது முதல் வெறுமனே தெருத் தெருவாக அலைந்து திரிந்ததுதான் மிச்சம். மூன்று மைல் தூரத்தில் உள்ள ஏதோ ஒரு குடிசையில் அடுப்பில் உலை வைத்துவிட்டு, தங்களின் மகன்களின் வரவிற்காகத் காத்திருக்கும் தாய் தந்தையின் உருவங்கள் என் ஞாபகத்தில் வந்தன.
தங்கக் கண்ணாடிக்காரன் எங்கிருந்தோ இரண்டணாவைத் தேடிப்பிடித்துத் தந்தான்.
"காலணா சார்?''
"இருக்குறதே இவ்வளவுதான். இல்லைன்னா இந்தா, காலணியை எடுத்துக்கோ.''
சிறுவர்கள் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர். அடுத்த நிமிடம் ஒரு வார்த்தைகூடப் பேசாமல் அந்த இடத்தை விட்டு நகர்ந்தனர். எலக்ட்ரிக் விளக்குக்குக் கீழே சாலையில் நடந்து போகும் அந்த பாலகர்களைப் பார்த்தவாறு தங்கக் கண்ணாடிக்காரன் சிரித்தான்.
"நான் ஒரு வேலை பண்ணினேன். என்ன தெரியுமா? நான் கொடுத்ததுல ஒண்ணு செல்லாத காசு.''
"ஹா... ஹா... ஹா...'' -எல்லாரும் விழுந்து விழுந்து சிரித்தார்கள். நான் மனதிற்குள் நினைத்தேன் என்ன இருந்தாலும் மாணவர்களாயிற்றே! நாம் என்ன சொல்வது? வறுமையையும், கஷ்டங்களையும் பற்றி இவர்களுக்கு என்ன தெரியும்? நான் எழுதி வைத்திருந்த சிறு குறிப்பை வேறு யாரும் பார்த்திராதபடி ரகசியமாக தங்கக் கண்ணாடிக்காரனிடம் கொடுத்தேன். அவன் அதைப் படிக்கும்போது என் சிந்தனை ஹோட்டலைச் சுற்றி இருந்தது. ஆவி பறக்கும் சாதத்துக்கு முன்னால் நான் உட்கார்ந்திருப்பது மாதிரி நினைத்துப் பார்த்தேன். ஆனால், அந்தக் குறிப்பைப் படித்த கண்ணாடிக்காரன் எல்லாரும் கேட்கிற மாதிரி உரத்த குரலில் சொன்னான்:
"ஸாரி... என்கிட்ட காசு எதுவும் இல்லை...''
அதைக் கேட்டதும் என் உடம்பு நெருப்பு பட்டது மாதிரி தகித்தது. "குப்”பென வியர்க்க ஆரம்பித்தது. வியர்வையைத் துடைத்தவாறு, நான் கீழே இறங்கி என்னுடைய அறைக்கு வந்தேன்.
மணி ஒன்பது: நான் பாயைத் தரையில் விரித்துப் படுத்தேன். ஆனால், கண்கள் மூட மறுத்தன. தலையில் ஒரே வேதனை. இருந்தாலும் நான் வற்புறுத்தி படுத்துக் கிடந்தேன். உலகத்தில் இருக்கும் ஏழைகளைப்
பற்றி நான் நினைத்துப் பார்த்திருக்கிறேனா? எங்கெங்கெல்லாமோ எத்தனையோ கோடி ஆண்களும் பெண்களும் இந்த அழகான பூமியில் நித்தமும் பட்டினி கிடந்து கொண்டுதான் இருக்கிறார்கள். அந்தக் கூட்டத்தில் நானும் ஒருவன். எனக்கு மட்டும் என்ன தனியான ஒரு விசேஷம் இருக்கிறதா என்ன? நான் மற்றவர்களைப்போல் ஒரு தரித்திரத்தில் உழன்று கொண்டிருக்கும் மனிதன். அவ்வளவுதான். இப்படி நான் பல விஷயங்களையும் அசை போட்டுக் கொண்டு படுத்திருந்தபோது... என் வாயில் எச்சில் ஊறியது. மேத்யூவின் சமையலறையில் கடுகு தாளிக்கின்ற ஓசை கேட்டது. அதோடு வெந்த சாதத்தின் மணமும்...
மணி ஒன்பதரை: நான் வெளியே வந்தேன். இதயம் வெடித்து விடும்போல் இருந்தது. யாராவது பார்த்து விடுவார்களோ? வியர்வையால் என் உடல் தெப்பமென நனைந்துவிட்டிருந்தது. நான் முற்றத்தில் சில வினாடிகள் நின்றேன். பாக்யம் என்றுதான் சொல்ல வேண்டும்! கிழவன் விளக்கை எடுத்துக் கொண்டு குடம் சகிதமாக வெளியே புறப்பட்டான். போவதற்கு முன் சமையலறையின் கதவை மெல்லச் சாத்தி விட்டு, தண்ணீர்க் குழாயைத் தேடிப்போனான் அந்த ஆள். எப்படியும் அந்த ஆள் திரும்பி வர பத்து நிமிடங்களாவது ஆகும். ஓசை எழுப்பாமல் இதயம் "பட் பட்”டென்று அடிக்க, மெதுவாகக் கதவைத் திறந்து சமையலறைக்குள் நான் நுழைந்தேன்.