புகை வண்டியில்...
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 4504
புகை வண்டியில்...
எஸ்.கெ. பொற்றெக்காட்
தமிழில்: சுரா
ஜனதா எக்ஸ்பிரஸ்ஸில் நான் ஷொர்னூர் புகை வண்டி நிலையத்தில் இறங்கினேன். அதிகாலை மூன்று மணி. எர்ணாகுளத்திற்குச் செல்ல வேண்டும். பக்கத்து ப்ளாட்ஃபாரத்தில் கொச்சிக்குச் செல்லும் வண்டி நின்று கொண்டிருந்தது. ஆனால், அது ஐந்தரை மணிக்குத்தான் புறப்படும். ஷொர்னூர் ஸ்டேஷனில் வந்து சிக்கிக் கொண்டால், எந்தச் சமயத்திலும் உண்டாகக் கூடிய அனுபவம் இதுவாகத்தான் இருக்கும்.
எங்கிருந்து வந்தாலும், எங்கு போவதாக இருந்தாலும் அந்த ஸ்டேஷனில் குறைந்த பட்சம் மூன்று மணி நேரமாவது பயணிகள் தவம் செய்வதைப் போலத்தான் ரெயில்வே அதிகாரிகள் புகை வண்டிகள் புறப்படும் நேரத்தைத் திட்டமிட்டு வைத்திருப்பார்கள். ஆனால், இந்த அதிகாலை வேளையில் வரும் வண்டியில் அங்கு வந்து இறங்கினால், ஒரு லாபம் இருக்கிறது. மூட்டைப் பூச்சி கடி, அடி, சொறி, முனகல் ஆகியவற்றுடன் வெயிட்டிங் அறையின் பிரம்பு நாற்காலியில் ஓய்வெடுத்துக் கொண்டு நேரத்தைச் செலவிட்டுக் கொண்டிருக்க வேண்டிய தேவையில்லை. கொச்சிக்குச் செல்லும் வண்டியில் இரண்டாம் வகுப்பில் இருக்கும் குஷன் மெத்தையில் ஏறி படுத்து சுகமாக உறங்கலாம். அங்கு இடம் கிடைத்தால், அதிர்ஷ்டம் என்றுதான் சொல்ல வேண்டும்.
பேக்கை கையிடுக்கில் வைத்தவாறு கொச்சிக்குச் செல்லும் வண்டிக்குள் இருக்கும் அறைகளை எட்டி பார்த்துக் கொண்டே நான் நடைமேடையின் வழியாக சற்று நடந்தேன். வண்டிக்குள் பிரகாசமோ, வெளிச்சமோ, ஓசையோ, அசைவோ எதுவுமேயில்லை. எனினும், மனிதர்கள் இருந்தார்கள். தூங்கிக் கொண்டிருப்பவர்கள், தேவையில்லாமல் இடத்தைக் கைப்பற்றி தூங்குவதைப் போல நடித்துக் கொண்டு படுத்திருந்தவர்கள் என்று நிறைய பேர் இருந்தார்கள். ஒரு இரண்டாம் வகுப்பு பெட்டியின் கதவு பாதியாக திறந்து கிடந்தது. நான் உள்ளே டார்ச் விளக்கை அடித்து பார்த்தேன். பொது மருத்துவமனையின் பிணவறையில் பார்ப்பதைப் போல கீழேயும் மேலேயும் இருந்த ‘பெர்த்’களிலெல்லாம் ‘பிணங்கள்’ இடங்களைப் பிடித்திருந்தன. கீழேயிருந்த ஒரு பெர்த்தில் ஷுக்களை ‘பேக்’ செய்ததைப் போல, இரண்டு பேர் ஒருவரோடொருவர் காலையும் தலையையும் எதிரெதிரே வைத்துக் கொண்டு சுருண்டு படுத்திருந்தார்கள். நான் முன்னோக்கி நடந்தேன். அடுத்த இரண்டாம் வகுப்பு பெட்டியின் கதவைச் சற்று பிடித்து அசைத்துப் பார்த்தேன். திறக்கவில்லை. கேடு கெட்டவர்கள் உள்ளேயிருந்தவாறு அடைத்து வைத்திருந்தார்கள். அதற்குள் சுகமாக உறங்கிக் கொண்டிருப்பவர்கள் யார் யாரெல்லாம் என்று எனக்கு தெரியும். சுமை தூக்குபவருக்கு நான்கணா கொடுத்து காரியத்தைச் சாதிக்கும் மூன்றாம் வகுப்புக்காரர்கள். இரவு உணவு சாப்பிட்டு முடித்து, பஞ்சு மெத்தையில் படுத்துத் தூங்குவதற்காக வரும் ரெயில்வே பணியாட்கள் அப்படிப்பட்ட தொல்லைகளை உண்டாக்குபவர்களில் சிலர். வேறு வழியில்லை. இறுதியில் காலியாக கிடந்த ஒரு சாதாரண மூன்றாம் வகுப்பு பெட்டிக்குள் நான் போய் சேர்ந்தேன்.
நடுவில் நீளமான மரத்தாலான மறைவு உண்டாக்கப்பட்டிருந்த ஒரு புதிய மாடல் கம்பார்ட்மெண்ட். சாயத்தின் மணம் மறையாமலிருந்தது. நான் மறைவிற்குப் பின்னால், மேலே இருந்த பொருட்கள் வைக்கப்படும் பலகையின் மீது ஏறினேன். அங்கு என்னுடைய பேக்கை தலையணையாக வைத்து, யாருக்கும் எந்தவொரு தொந்தரவும் இல்லை என்பதைப் போல, சற்று சாய்ந்து படுத்தேன். ஆனால், தூக்கம் வரவில்லை. தூக்கத்தை வர விடாமல் செய்வதற்கு பல வகையான சத்தங்கள் கீழேயிருந்து வந்து கொண்டிருந்தன. அனைத்தும் குறட்டையின் பலவகைப்பட்ட சத்தங்கள்தாம். தூங்கிக் கொண்டிருக்கும் மனிதர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து அங்கு ஒரு ‘ஆர்க்கெஸ்ட்ரா’வை உண்டாக்கி விட்டிருக்கிறார்கள் என்பதைப் போல தோன்றும். என்னென்ன மாதிரியான சத்தங்கள்! ராட்டையைச் சுழற்றுவதைப் போல, தூரத்தில் காரை கிளப்புவதைப் போல, மரம் சாய்ந்து முறிவதைப் போல, சட்டியில் வறுப்பதைப் போல, புறா ஓசை உண்டாக்குவதைப் போல - இப்படி பலவகைப்பட்ட சத்தங்கள் தனியாகவும் சேர்ந்தும் என் காதுகளுக்குள் நுழைந்து ஒலித்துக் கொண்டிருந்தன. சில குறட்டைகளின் இறுதிப் பகுதி தாங்கிக் கொள்ள முடியாத அளவிற்கு இருந்தது. ‘ஹ்ற... ஹ்ற... அம்!’ அந்த வகையில் சில குறட்டைகள் வேத மந்திரங்களை உச்சரிப்பதைப் போல இருந்தன (கற்கால மனிதனின் குறட்டையிலிருந்துதான் வேத மந்திரங்களின் உச்சரிப்புகள் கண்டு பிடிக்கப்பட்டிருக்கிறது என்று நம்ப வேண்டியதிருக்கிறது.) பீங்கான் பாத்திரத்தில் பாலைக் கறப்பதைப் போன்ற ஒரு இனிய சத்தமும் எனக்கு மிகவும் அருகில் கீழேயிருந்த பெஞ்சிலிருந்து அவ்வப்போது கேட்டுக் கொண்டிருந்தது. ஒரு பிள்ளை பெற்ற பெண்ணின் குறட்டைச் சத்தம். அவள் அங்கு ஒரு குழந்தைக்கு பால் கொடுத்துக் கொண்டே உறங்கிக் கொண்டிருந்தாள்.
குறட்டைச் சத்தங்களுக்கு மத்தியில் சில உறக்கத்தின் போது இருக்கக் கூடிய புலம்பல்களும் கேட்டுக் கொண்டிருந்தன. ‘தேவஸ்ஸி முதலாளி நூற்றைம்பது ரூபாய்.’ மேற்கு மூலையில் சுருண்டு படுத்திருந்த ஒரு பிணம்தான் அப்படி புலம்பிக் கொண்டிருந்தது. தேவஸ்ஸி முதலாளியுடன் உள்ள அந்த விஷயம் என்னவாக இருக்கும்? எனக்கு ஒரு ரேஷன் கடைக்காரனைத் தெரியும். அவன் பகல் வேளையில் திருட்டுத்தனமாகச் செய்த வியாபாரம் சம்பந்தப்பட்ட விஷயங்களெல்லாம் அவனுடைய மனைவிக்கு நன்கு தெரியும். தூக்கத்தில் அவை எல்லாவற்றையும் அவன் கூறுவான். இந்த மனிதனும் ஒரு ரேஷன் கடையில் வியாபாரம் செய்யக் கூடியவனாக இருப்பானோ?
திடீரென்று மூக்கிற்குள் நுழையும் ஒரு வாசனை பெட்டி முழுவதும் பரவியது.
‘தொம்மச்சா, இங்கே வாங்க... காலியாக கிடக்குது’ என்றொரு நாகரீகமற்ற குரலும் அங்கு கேட்டது.
ஐந்து நிமிடங்களுக்குள் சுமையும் பொட்டலமுமாக ஒரு குழு திருவிதாங்கூர் கிறிஸ்தவர்கள் – மலபாரில் குடியிருந்த நிலங்களை விட்டு சொந்த ஊருக்குச் செல்பவர்கள் – பெட்டியின் மரத்தாலான மறைவிற்குப் பின்னால் காலியாகக் கிடந்த பெஞ்ச்களிலும் பலகைகளிலும் இடத்தைப் பிடித்தது. அவர்கள் புல் தைலம் நிறைக்கப்பட்ட புட்டிகளைக் கட்டி, மூடி வைத்துக் கொண்டு வந்திருந்தார்கள். அதன் வாசனை நிறைந்த தகவல்தான் முன்பு பெட்டிக்குள் நுழைந்து வந்தது.
பத்து நிமிடங்களுக்குள் ஆரவாரங்கள் அனைத்தும் அடங்கி, பெட்டிக்குள் பழைய குறட்டைச் சத்தங்களின் ஆட்சி தொடர்ந்தது.
அதற்குப் பிறகும் அரை மணி நேரம் கடந்தது. இதற்கிடையில் மூலையில் படுத்திருந்த பெரியவர் ‘தேவஸ்ஸியின் நூற்றைம்பது ரூபாய்’ விஷயத்தை மீண்டுமொரு முறை சத்தமாக கூறினார். பிள்ளை பெற்ற பெண்ணின் குழந்தை, மூட்டைப்பூச்சி கடித்ததாலோ, மார்பின் காம்பைக் கடித்துக் கொண்டிருந்ததை விட்டு விட்டதாலோ, ஏதோ மின்சார ஹாரனின் சத்தத்தில் ஒன்றிரண்டு தடவைகள் அழுதது.
திடீரென்று பெட்டிக்குள் ஒரு டார்ச் விளக்கின் வெளிச்சம் பரவியது.
‘இதோ... அங்கே இருப்போம்’ – ஒரு பெண்ணின் மென்மையான குரல்.