புகை வண்டியில்... - Page 3
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 4505
எனினும், ‘சே...’ கிராமத்தின் வழியாக நடைபெற்ற அந்த மாலை நேர பயணம் வீண் என்று தோன்றவில்லை. கேரளத்தின் சுத்தமான இயற்கை அழகு ஆட்சி செய்யும் ஒரு கிராம மூலையாக அது இருந்தது. சிவந்த மண்ணால் ஆன சுவர்களின் மூலைகளில் பச்சை நிற புத்தம் புதிய திரியைப் பற்ற வைத்து பிடித்ததைப் போல எழுந்து நிற்கும் செடிகளும், கொம்புகளால் ஆன வேலியில் மறைந்து நின்றிருக்கும் மருதாணிச் செடிகளும், பச்சை நிற குடை பிடித்து நின்றிருக்கும் பரங்கி மாமரங்கள் அழகூட்டும் சிறிய நிலப் பகுதிகள் மாலை நேர வெயிலில் பிரகாசித்து நிற்கும் காட்சிகளும் தேவகி டீச்சர் அந்த கிராமத்தின் பெயரை உச்சரித்த நிமிடத்தில் என் மனதில் தோன்றின.
அந்த கிராமத்தைச் சேர்ந்த ஒரு இளம் பெண்ணைத்தான் ராணுவத்திலிருக்கும் மேனன் திருமணம் செய்து கொள்ள போகிறான். நல்லதுதான். என் வாழ்த்துக்கள்!
‘அந்த நளினி இருக்கிறாளே, நளினி... அந்த இளம் பெண் பள்ளிக்கூட இறுதி வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்கிறாள்’ – மென்மையான குரல்.
‘நளினி வேண்டாம்’ – ராணுவக்காரன் ஒரு சிகரெட்டை வாயில் வைத்து, நெருப்புக் குச்சியை உரசி பற்ற வைத்தான். அதன் வெளிச்சத்தில் அவனுடைய முகத்தின் பகுதியைப் பார்க்க முடிந்தது. ஒரு நீண்ட முரட்டுத்தனமான மூக்கும் முறுக்கு மீசையும். அவன் வாயின் வழியாக புகையை விட்டபோது, ஒரு போர் விமானம் நெருப்பு பிடித்து தலை கீழாக விழுவதைப் போல தோன்றியது.
‘ஏன் நளினியை வேண்டாம் என்று சொன்னீர்கள்?’ – மென்மையான குரலின் விசாரிப்பு.
ராணுவத்தில் பணி புரிபவன் பதிலெதுவும் கூறவில்லை – அவனுக்கு கூறக் கூடிய அளவிற்கு காரணம் ஏதாவது இருக்க வேண்டும்.
சிறிது நேரம் சென்றதும் அந்த பட்டாளத்தில் பணியாற்றும் மனிதன் நளினியை வேண்டாம் என்று கூறியதற்கான காரணத்தை மனம் திறந்து கூறினான்: ‘அந்த நளினியின் தந்தை இருக்கிறாரே... அந்த பென்ஷன் வாங்கும் தலைமை ஆசிரியர்... அவர் என்னை ஒருமுறை காவல் துறையிடம் பிடித்துக் கொடுப்பதற்கு ஒரு முயற்சி செய்து பார்த்தார். நளினியின் அண்ணி கமலம்தான் வழக்கிற்குக் காரணம் – கமலம் இப்போது எங்கு இருக்கிறாள்?’
‘கமலம் நாகப்பூரிலோ வேறு எங்கோ இருக்கிறாள்’ – மென்மையான குரலின் பதில்: ‘ஒரு கல்லூரியில் விரிவுரையாளராக இருக்கிறாள்.’
ராணுவக்காரன் ஏதோ பழைய நினைவுகளுடன் சீட்டி அடித்தான்.
‘அந்த அம்மிணி இருக்கிறாளே! அவள் ஒரு அருமையான பெண்ணாச்சே?’ – மென்மையான குரல் இன்னொரு பெண்ணைப் பற்றி கூறினாள்.
‘ஓ... அவளை எனக்கு நன்றாக தெரியும். ஆண்களைப் பார்த்தால் அவளுக்கொரு ‘நெவர் மைன்ட்’ குணம். எனக்கு வேண்டாம்.’
‘இருந்தாலும், பார்ப்பதற்கு அழகான ஒரு இளம் பெண் அவள்.’
அந்த பெண்ணுக்கு அம்மிணி மீது ஏதோ ஒரு தனிப்பட்ட பிரியம் உள்ளதைப் போல் தோன்றியது. ஆனால், ஆணுக்கு அந்த அடங்காத பெண் வேண்டாம். அனுபவம் காரணமாக அவன் அப்படி கூறியிருக்க வேண்டும்.
‘அந்த கமலாக்ஷி இருக்கிறாள். அவள் எப்படி?’ – மென்மையான குரல்.
‘அந்த குள்ளப் பெண்... அப்படித்தானே? வேண்டாம்.... வேண்டாம். இளம் பெண்களுக்கு கொஞ்சம் உயரமெல்லாம் இருக்கணும்.’
அதற்கு அந்த மென்மையான குரல் பதில் கூறவில்லை. தனக்கும் அந்த குறைபாடு இருப்பது காரணமாக இருக்க வேண்டும்.
‘அந்த ராஜலட்சுமி இருக்கிறாளே! அவள் எங்கு போனாள்? திருமணம் ஆகி விட்டதா?’ – ஆண் குரல் விசாரித்தது.
‘எந்த ராஜலட்சுமி? அந்த ஆசிரியரின் மகளா?’
‘ஆமாம். பொன் நிறத்தைக் கொண்ட, மெலிந்து போய் காணப்பட்ட அந்த இளம் பெண்... – அவள்தான் உண்மையிலேயே ப்யூட்டி...’
‘ஓ... உங்களுடைய அந்த ப்யூட்டி இப்போது எங்கே இருக்கிறாள் என்று தெரியுமா?’
‘என்ன? யாருடனாவது சேர்ந்து ஓடிப் போய் விட்டாளா?’
‘அவள் இப்போது மதனப்பள்ளி சயரோக மருத்துவமனையில் கிடக்கிறாள்.’
‘அய்யோ... பாவம் ராஜலட்சுமி.’
மதனப்பள்ளியிலிருக்கும் சயரோக மருத்துவமனையில் படுத்துக் கிடக்கும் ராஜலட்சுமியைப் பற்றி கேள்விப்பட்டதும், எனக்கு மாலதியைப் பற்றிய ஞாபகம் வந்தது. மாலதி என்னுடைய ஊரில் ஒரு முழுமையான அழகியாக இருந்தாள். அழகி என்று மட்டுமல்ல – படிப்பு விஷயத்திலும் அவள் மிகவும் திறமைசாலியாக இருந்தாள். கொஞ்சம் கவிதை எழுதும் திறமையும் இருந்தது. அவள் பள்ளி இறுதி வகுப்பில் மாநிலத்திலேயே முதலிடத்தில் தேர்ச்சி பெற்றாள். அதற்குப் பிறகு சென்றது கல்லூரிக்கு அல்ல – மதனப்பள்ளியிலிருக்கும் அபய மய்யத்திற்குத்தான். அங்கு அவள் ஆறு மாதங்கள் இருந்தாள். பிறகு சொந்த ஊருக்கு வந்து, நீண்ட நாட்கள் ஆவதற்கு முன்பே, மரணத்தைத் தழுவவும் செய்தாள். மாலதியின் இறந்த உடல் துணியில் கட்டப்பட்டு சுடுகாட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்ட அந்த காட்சி என் மனதில் ஊர்வலம் வந்தது.
தவளைகளின் சத்தம் கேட்கிறது. ஒரு புதிய குறட்டைச் சத்தம். திருவிதாங்கூர் ஆட்களில் ஒரு ஆள் பெட்டிக்குள் குறட்டை ஆர்க்கெஸ்ட்ராவில் சேர்ந்திருக்கிறான்.
அந்த பட்டாளக்காரனும் பள்ளிக்கூட ஆசிரியையும் ‘சே...’ கிராமத்தில் திருமண வயதை அடைந்த செல்விகளின் ஜாதக ஆராய்ச்சியை முறைப்படி தொடர்ந்து கொண்டிருந்தார்கள். சந்திரிகா, சாரதா, ஆனந்தவல்லி, லீலா, குஞ்ஞிலட்சுமி – இப்படி பல பெயர்களைக் கொண்ட இளம் பெண்களும் விவாதத்திற்கு விஷயமாக ஆனார்கள். பட்டாளக்காரன் ஒவ்வொரு பெண்ணிடமும் ஒவ்வொரு குற்றத்தைப் பார்த்துக் கொண்டிருந்தான். அம்புஜாக்ஷியின் தலைமுடி இமயமலைக் காட்டிலிருந்து இறக்குமதி செய்ததாம். சாரதா ஒரு காதல் கடித வழக்கு சம்பந்தப்பட்டவளாம். அது போதாதென்று – அவளுடைய தாய்க்கு சிரங்கு நோய் பிடித்திருக்கிறதாம். சந்திரிகாவின் கண்ணும் மூக்கும் உதடும் பரவாயில்லையாம். ஆனால், அவளுடைய சரீரம் ‘அன்ஃபிட்’டாம். அதற்கு நேர் எதிர் ஆனந்தவல்லி விஷயம். சுருண்டு நீளமாக வளர்ந்திருக்கும் தலைமுடியையும் சிறிய இடையையும் கடைந்தெடுத்ததைப் போன்ற பின் பகுதியையும் கொண்டிருந்த அந்த இனிய பதினேழு வயது இளம் பெண்ணை பின்னாலிருந்து பார்த்தால் யாரும் சற்று பார்த்துக்கொண்டு நின்று விடுவார்கள். அந்த முகத்தைப் பார்த்தால், அப்படி பார்த்திருக்க வேண்டியதில்லை என்று தோன்றும். பூனையின் முகத்தை அவள் கொண்டிருந்தாள். குஞ்ஞிலட்சுமியின் குடும்பம் புகழ் பெற்றது. அவளுடைய சகோதரர்கள் உயர்ந்த பதவிகளில் இருந்தார்கள். எல்லாம் சரிதான். அந்த பெண்ணின் தடிமனான சரீரத்தையும் நடையையும் ஒரு முறை பார்த்து விட்டவர்கள் அதற்குப் பிறகு அந்த வழியே போகவே மாட்டார்கள். சைக்கிளில் ஏறி, நசுங்கிப் போன தவளையைப் போல அவளுடைய நடை இருக்கும்.