புகை வண்டியில்... - Page 4
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 4505
சந்திரிகா, சாரதா, குஞ்ஞிலட்சுமி, அம்புஜாக்ஷி, ஆனந்தவல்லி – இவர்களையெல்லாம் முன்னால் பார்ப்பதைப் போல, எனக்கு தோன்றியது. அப்பிராணி இளம் பெண்கள். ‘சே...’ கிராமத்தில் கனவு கண்டு கொண்டு உறங்கிக் கொண்டிருக்கும், அந்த செல்விகளுக்குத் தெரியுமா... ஷொர்னூர் ஸ்டேஷனிலிருக்கும் ஒரு புகை வண்டியின் பெட்டிக்குள் வைத்து தாங்கள் போஸ்ட் மார்ட்டம் செய்யப்படும் கதை!
பிள்ளை பெற்ற தாயின் குழந்தை உரத்த குரலில் அழுதது. இடைவிடாமல்... இந்த முறை அந்த குழந்தை தன் அழுகையை நிறுத்துவதைப் போல தெரியவில்லை.
‘ஏய்... குழந்தையின் அழுகையைச் சற்று நிறுத்து. குழந்தையின் தாய் உறங்கிட்டாளா?’ – பட்டாளக்காரன் ஆண்மைத் தனம் நிறைந்த குரலில் சத்தம் போட்டு கேட்டான். சிறிது நேரம் அவர்களுடைய உரையாடல் நின்று விட்டது.
‘நான் வீட்டில் ட்யூஷன் சொல்லித் தரும் விஷயம்... மேனன், உங்களின் அத்தைக்கு அந்த அளவுக்கு விருப்பமில்லை’ – மென்மையான குரல்.
‘அப்படியா? ஏன் அத்தைக்கு விருப்பமில்லை?’
‘மாமா மீது சந்தேகமாக இருக்கும்.’
ராணுவத்தில் பணியாற்றும் மனிதன் உரத்த குரலில் சிரித்தான். அவள் தொடர்ந்து சொன்னாள்: ‘எனினும், சந்திரனுக்கும் உஷாவிற்கும் என்னை மிகவும் பிடிக்கும். அந்த குழந்தைகள் வைத்திருக்கும் அன்பு காரணமாகத்தான் நான் உங்களுடைய வீட்டிற்கு ட்யூஷன் எடுப்பதற்கே செல்கிறேன்... என் ராஜன், ரமா ஆகியோரின் வயதைக் கொண்ட பிள்ளைகள்!’
‘டீச்சர், உங்களுடைய பிள்ளைகளின் அப்பா இறந்த போது, இன்சூரன்ஸ் பணம் இரண்டாயிரம் ரூபாய் கிடைத்தது அல்லவா? அதை என்ன செய்தீர்கள்?’
‘அவருடைய சம்பாத்தியம் அது மட்டும்தான். அது எதையும் தொடாமல் வங்கியில் போட்டிருக்கிறேன்.’
பட்டாளத்துக்காரன் சிறிது நேரத்திற்கு எதுவும் பேசவில்லை.
நான் பயப்பட்டேன். அந்த அப்பிராணி விதவைப் பெண்ணின் வங்கி சேமிப்பைத் தட்டிக் கொண்டு போவதற்கு அந்த ராணுவத்தில் பணி புரியும் மனிதன் திட்டமிட்டிருப்பானோ? நடக்கக் கூடாது என்றில்லை. அந்த ஆசிரியைக்கு அந்த இளைஞனிடம் அந்த அளவிற்கு காதல் இருந்தது.
திடீரென்று பெட்டியில் விளக்குகள் எரிந்தன. எஞ்ஜின் மாட்டப்பட்டு, வண்டி புறப்படுவதற்கு தயாராகிறது.
சிறிதும் எதிர்பாராமல் விளக்குகள் எரிந்ததும், பட்டாளத்துக்காரன் சற்று தடுமாறி விட்டான். அவன் அந்தப் பெண்ணின் மடியில் தலையை வைத்து அதுவரை படுத்திருந்திருக்கிறான்.
நான் அந்த மனிதனை தலையிலிருந்து கால் வரை சிறிது பார்த்தேன். வெளுத்து தடிமனான உருவத்தைக் கொண்டிருந்த ஒரு கடோத்கஜன். அவனுக்கு வாழ்க்கையிலேயே மிகவும் பொருத்தமான பணி பட்டாள வேலைதான் என்று தோன்றுகிறது. நன்கு உணவு சாப்பிடலாம். அறிவுக்கு வேலையே இல்லை. காதலையோ, ரொமான்ஸையோ கண்டு பிடித்து செயல்படுத்துவதற்கான பொறுமையும் நேரமும் இல்லை. உடலுறவு தேவைகளை, தட்டினால் திறக்கப்படும் இடத்தில் நிறைவேற்றிக் கொள்ள வேண்டும். எல்லாவற்றையும் வெளிப்படையாக கூற வேண்டும். யாருடனும் வெறுப்பு இல்லை. ஆனால், பார்த்தால் மனிதர்களுடன் ஒன்றாகக் கலந்து பழகக் கூடியவன் என்பதைப் போல தோன்றவில்லை. கேட்காமலே காரியத்தைச் செய்வான். அங்கு விட்டெறிந்தால், சில நேரங்களில் வேறு ஆளை தேடிக் கொள்ள வேண்டும் என்று கூறுவான். அப்படி சில தனி குணம் கொண்ட மனிதர்கள் இருப்பார்கள் அல்லவா? நம்முடைய பட்டாளத்துக்காரன் மேனன் அந்த வகையைச் சேர்ந்த ஒரு வினோதமான மனிதன் என்ற விஷயம் ஒரே பார்வையிலேயே எனக்கு புரிந்தது.
அந்த பெண் ஒரு நடுத்தர வயதைக் கொண்டவள். ஒரு முப்பத்தைந்து வயது இருக்கும். முகத்திலிருந்து அழகு அப்படியொன்றும் அதிகமாக மறைந்து போயிருக்கவில்லை. இழக்கப்பட்டதை கவர்ச்சியான நடவடிக்கைகளால் சரி பண்ணுவதற்கான திறமையைக் கொண்ட ஒரு புத்திசாலி அந்த ஆசிரியை.... ராஜன், ரமா ஆகியோரின் தாய்.
அவர்களுடைய உரையாடல்களில் குறிப்பிடப்பட்ட விஷயங்களிலிருந்து பதினைந்து வருடங்களுக்கு முன்பு நடைபெற்ற சம்பவங்களைப் பற்றிய ஒரு சிறிய வரைபடத்தை நான் வரைய ஆரம்பித்தேன்.
தேவகி டீச்சர் அன்று ‘சே...’ கிராமத்திலிருந்த பள்ளிக் கூடத்தில் புதிதாக வந்து சேர்ந்த பத்தொன்பது வயது கொண்ட ஒரு ஆசிரியை. அவன் – நாம் அந்த மனிதனை சேகரன் என்று அழைக்கலாம் – ஆமாம்.... சேகரன் அன்று எட்டாவது வகுப்பில் இரண்டு வருடங்கள் தோல்வியைத் தழுவி, மூன்றாவது முறையாகவும் அங்கேயே படித்துக் கொண்டிருந்தான். தேவகி டீச்சர் அவனை திட்டவும் தண்டிக்கவும் செய்திருக்கலாம்.
அதற்குப் பிறகும் சேகரன் தோற்று, இனிமேலும் தோல்வியைத் தழுவினால், தன்னுடைய ஆசிரியர்களுக்கு அவமானமாக இருக்கும் என்றெண்ணி தன் பள்ளிக்கூட படிப்பையே நிறுத்திக் கொண்டான்.
சேகர மேனனின் அதற்குப் பிறகு உள்ள செயல்களைப் பற்றி அதிகமாக எதுவும் தெரியாது. வீட்டில் சாப்பிடுவதற்கான வசதிகள் இருக்கின்றன. அந்த வகையில் பெருமையைப் பறை சாற்றிக் கொண்டு நடப்பான். தேநீர், சிகரெட், திரைப்படம் ஆகியவற்றிற்கும், நண்பர்களுக்கு தேவைப்படும் சில்லறை செலவிற்கும் பணத்தை ஏதாவது வகையில், நிலத்திலிருந்து தேங்காய்களைத் திருடியோ வேறு ஏதாவது செய்தோ தயார் பண்ணுவான். இடையில் காவல் நிலையத்தின் வாசற்படி வரை கொண்டு போய் விட்ட சில காதல் வழக்குகளும்.
அந்த வகையில் ஒருநாள் அவன் கிராமத்தை விட்டு கிளம்பி, பட்டாளத்தில் போய் சேர்ந்தான். பொருத்தமான ஒரு வாழ்க்கையைப் பெற்றதும், அவன் அங்கேயே தங்கி விட்டான். இப்போது காஷ்மீரிலிருந்து விடுமுறையில் வந்திருக்கிறான்.
வீட்டிற்கு வந்ததும் அவன் முதலில் பார்த்தது தன் மாமாவின் குழந்தைகளுக்கு ட்யூஷன் கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்த அந்த பழைய தேவகி டீச்சரைத்தான். அதற்குப் பிறகு நடந்தது உறுதியாக தெரியவில்லை. இப்போது அவர்கள் இருவரும் எங்கோ ரகசியமாக சுற்றி விட்டு, யாருக்கும் தெரியாது என்பதைப் போல திரும்பி வருகிறார்கள்.
வண்டி பூங்குன்னம் ஸ்டேஷனை அடைந்தது.
‘நான் இங்கே இறங்கிக் கொள்கிறேன்’ – தேவகி டீச்சர் கூறினாள்.
மிஸ்கி பெருங்காயத்தின் விளம்பரம் தமிழில் எழுதப்பட்டிருந்த ஒரு சணல் பையையும், புடலங்காய் துண்டைப் போல இருந்த ஒரு சிறிய குடையையும் கையில் பிடித்தவாறு அந்த டீச்சர் அங்கு இறங்கி முகத்தை தாழ்த்தி வைத்துக் கொண்டு நடந்து போய்க் கொண்டிருந்தாள். பட்டாளக்காரன் கதவிற்கு அருகில் நெஞ்சை நிமிர்த்தி நின்று கொண்டிருந்தான். சிறிது தூரம் சென்றதும், அவள் முகத்தைத் திருப்பி அவனை நோக்கி ஒரு கவர்ச்சியான சிரிப்பை வெளிப்படுத்தியவாறு நேராக வெளியே செல்லும் வாசல் வழியாக கடந்து சென்றாள்.
பிள்ளை பெற்ற பெண்ணும் குழந்தையும் அங்கேயே இறங்கினார்கள்.
வண்டி நகர்ந்தது. நூறு அடிகள் செல்லவில்லை. திடீரென்று வண்டி ஒரு கிறுகிறுப்புடன் நின்றது. யாரோ சங்கிலியைப் பிடித்து நிறுத்தியிருக்கிறார்கள். நான் தலையை நீட்டி பார்த்தேன். அந்த பட்டாளக்காரனின் உரத்த சத்தம் கேட்டது: ‘என் தோல் பெட்டி... என் தோல் பெட்டி....’
அவனுடைய தோல் பெட்டி காணாமல் போய் விட்டதாம்.
‘பெட்டி திருடு போவது சாதாரணமாக நடக்கக் கூடியதுதான். அதற்காக இந்த அளவிற்கு ஆரவாரம் செய்ய வேண்டுமா?’ – மூலையிலிருந்து ஒரு கருத்து. நான் அந்த கருத்தைக் கூறிய ஆளை சிறிது பார்த்தேன். நூற்று ஐம்பது ரூபாய்காரன்தான். கறுத்து, குள்ளமாக, கழுத்தில் வீக்கத்தைக் கொண்டிருந்த ஒரு வயதான மனிதன் ஒரு பிசாசுச் சிரிப்பு வேறு.
‘உங்களுடைய பெட்டியின் அடையாளம் என்ன?’ – அவன் பட்டாளக்காரனிடம் கேட்டான்.
‘ஒரு சிவப்பு நிற புதிய தோல் பெட்டி.’
‘ஓ... அப்படிப்பட்ட ஒரு பெட்டியை முள்ளூர் கரையில் வைத்து ஒரு இளைஞன் இந்த பெட்டியிலிருந்து எடுத்துக் கொண்டு செல்வதைப் பார்த்தேன். அது உங்களுடைய பெட்டியா?’