புகை வண்டியில்... - Page 2
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 4505
‘நம் இருவருக்கும் முன் பதிவு செய்யப்பட்டிருக்கிறது’ – ஒரு ஆணின் உரத்த குரல் தொடர்ந்து கேட்டது.வண்டியின் நடைபாதைக்கு மிகவும் அருகில் காலியாகக் கிடந்த பெஞ்சில் டார்ச் அடித்து சோதித்துப் பார்த்துக் கொண்டே, ஒரு பெரிய பெட்டியை பெஞ்சிக்குக் கீழே வைத்து விட்டு, இரண்டு பேர் – ஒரு ஆணும் ஒரு பெண்ணும் அங்கு இடம் பிடித்தார்கள். பெண் மூலையில் சாய்ந்து உட்கார்ந்தாள். ஆண் அங்கு கால்களை நீட்டி படுத்தான்.
அவர்களுக்கு அருகில் மேலேதான் நான் படுத்திருந்தேன்.
ஒரு குளிர்ச்சியான காற்று பெட்டிக்குள் வேகமாக நுழைந்தது. அந்த ஆண் எழுந்து சாளரங்களை கீழே இறக்கி அடைத்து விட்டு, மீண்டும் படுத்தான்.
‘ஓ... தாங்க முடியாத அளவிற்கு குளிர்... காஷ்மீரில் குளிர் எப்படி?’ – மென்மையான குரல்.
‘தேவகி டீச்சர், காஷ்மீரிலிருக்கும் குளிரைப் பற்றி உங்களுக்கு எப்படி தெரியும்?’ – ஆண் குரலின் பதில்: ‘அங்கு மூக்கைச் சிந்தினால், கிடைப்பது ஐஸ் கட்டிதான்... ஐஸ் கட்டி. அதை மூக்கிலிருந்து பிரித்து எடுப்பதற்கு பேனாக்கத்தி வேண்டும்.’
அழகான ஒரு சிரிப்பு. தொடர்ந்து ‘அய்யோ’ என்றொரு குரலை எழுப்பியவாறு குழைந்து நீண்ட ஒரு குலுங்கல் சிரிப்பு. அந்த ஆண் அவளுடைய சரீரத்தில் எங்கேயோ சற்று தொட்டு கிச்சுக் கிச்சு மூட்டியதால் உண்டான சிரிப்பு.
‘மேனன், இனி அந்த கடுமையான குளிரைத் தேடி நீங்கள் போக வேண்டுமல்லவா? விடுமுறையும் சுற்றிப் பார்ப்பதும் முடிவுக்கு வந்து விட்டதல்லவா?’ – இனிய குரல்.
ஆண் குரல் பதில் கூறியது: ‘இந்த விளையாட்டிற்கும், சிரிப்பிற்கும் தண்டனை ராணுவ முகாமின் அந்த குளிர் மூலம் கிடைக்கும். இந்த விளையாட்டுக்களையெல்லாம் நினைத்துக் கொண்டு வேதனைப்பட்டவாறு இரவுகளைக் கழிக்க வேண்டும்.’
‘ஓ.... அங்கு சென்று விட்டால், கிச்சுக்கிச்சு மூட்டியதையெல்லாம் நினைச்சுப் பார்ப்பீங்க. நான் கேட்க விரும்பல. காஷ்மீர் இளம் பெண்களே இல்லாத ஊராச்சே!’
‘இருந்தாலும்... ஊரிலிருக்கும் பெண்ணின் வாசனையை மறக்க முடியுமா?’
‘ஓ... போதும்.. போதும்... அதெல்லாம் இருக்கட்டும். மேனன், உங்களுடைய திருமண காரியம் எதுவும் நடக்கலையே?’
‘தேவகி டீச்சர், அந்த காரியங்களை நான் உங்களிடம் ஒப்படைத்து விட்டேனே!’
‘அதற்கு தடையெதுவும் இல்லை. மேனன், உங்களுக்கு ஒரு இளம் பெண் கிடைப்பது என்பது சிரமமான விஷயமா என்ன? அந்த ராதாவைத்தான் நீங்கள் திருமணம் செய்து கொள்ள போகிறீர்கள் என்று கேள்விப்பட்டேனே!’
‘ஓ... அதை வேண்டாம் என்று நினைத்தேன். அந்த பெண்ணுக்கு ஒரு காதலன் இருக்கிறானாம். ஆலுவாவில் உத்தியோக மண்டலத்திலோ வேறு எங்கோ....’
‘ச்சீ... ச்சீ...’ – மூலையில் படுத்திருந்த நூற்றைம்பது ரூபாய் வயதான மனிதனின் குரல். அவன் திடீரென்று தட்டுத் தடுமாறி எழுந்து ஓலமிடும் குரலில் சத்தம் போட்டு கூறினான்: ‘ஏய் அம்மா... குழந்தை மூத்திரம் பெய்து நாசமாக்கிடுச்சு.’
பிள்ளை பெற்ற பெண்ணின் குரல்:
‘குழந்தைகள் மூத்திரம் பெய்றது என்பது சாதாரண விஷயம்தான். அதற்கு இப்படி கூக்குரல் போட்டு ஆர்ப்பாட்டம் செய்யணுமா?’
அந்த ராணுவக்காரனின் கருத்து அது. அந்த வகையில் தேவையற்ற ஒரு கருத்தை வெளியிட்டு, அவனும் அந்த இனிய குரலும் அழுத்தமாக சிரித்தார்கள்.
‘சே....ல் நல்ல இளம் பெண்கள் தேவையான அளவிற்கு இருப்பார்களே?’ – மென்மையான குரல் திருமண விஷயத்தைத் தொடர்ந்தது.
‘ம்... சே....ல் இருக்கும் ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசையும்.’
நான் நினைத்தேன்: ‘சே...’ கிராமம்தான் வரலாற்று இடம். திருச்சூருக்கு அருகிலிருக்கும் அந்த கிராமம் என்னைக் கவர்ந்த ஒரு மூலை. மூன்று வருடங்களுக்கு முன்பு ஒரு முறை ஒரு நண்பனின் வீட்டைத் தேடி அந்த கிராமத்தைச் சுற்றி நடந்து திரிந்த கதையை நான் நினைத்துப் பார்த்தேன். கேரளத்திற்கென்று இருக்கக் கூடிய பெண்களுக்கான அழகின் ஆச்சரியப்படத்தக்க முன்மாதிரியை நான் பார்த்தது கூட அந்த கிராமத்தின் ஒரு ஒற்றையடிப் பாதையில்தான். அவள் குளத்திலிருந்து குளித்து முடித்து கறுத்த சீனப்பட்டைப் போன்ற கூந்தலைத் துவட்டியவாறு திரும்பி வந்து கொண்டிருந்தாள். எதிரில் வந்து கொண்டிருந்த ஒரு இளைஞன் அவளுக்கு அருகில் வந்ததும், ஆபாசமான ஒரு கிராமிய பாணி காதல் பாடலை உரத்த குரலில் பாடினான். அவளோ முகத்தில் எந்தவொரு உணர்ச்சி வேறுபாடுகளையும் வெளிப்படுத்தாமல் தலையைக் குனிந்து கொண்டு நடந்து சென்றாள். நான் கேட்டதிலேயே மிகவும் ஆபாசமான ஒரு பாட்டாக அது இருந்தது. அந்த இளைஞனின் ஆபாசப் பாட்டையும் நடவடிக்கையையும் என்னால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அந்த அளவிற்கு போக்கிரித்தனமா? அந்த அப்பிராணி இளம் பெண்ணின் சார்பாக எதிர்த்து கேள்வி கேட்பதற்காக நான் திரும்பி நின்றேன். அந்த இளைஞனும் திரும்பி நின்று ஒரு திருட்டுச் சிரிப்பு சிரித்தான்.
‘ஊமை, சார்... ஊமை. ஆசாரிப் பெண்...’ – அந்த இளைஞன் உற்சாகத்துடன் கூறினான்.
அதைக் கேட்கும் நானும் சிரிப்பேன் என்று அந்த குறும்புக்கார இளைஞன் மனதில் நினைத்திருக்க வேண்டும். நான் திகைத்துப் போய் நின்று விட்டேன்.
வேலாயுதன் என்ற பெயரைக் கொண்டிருந்த அந்த இளைஞன்தான் எனக்கு என்னுடைய நண்பனின் வீட்டிற்குச் செல்லும் வழியைக் காட்டினான். நாங்கள் பல ஒற்றையடிப் பாதைகளின் வழியாகவும் நடந்து சென்றோம். வேலாயுதன் அந்த பகுதி சம்பந்தப்பட்ட பல தகவல்களையும் என்னிடம் கூறினான். அந்த தகவல்களில் அந்த ஊரிலிருக்கும் பள்ளிக் கூடத்தில் வேலை செய்யும் மரியா டீச்சருக்கு வகுப்பறையில் காக்காய் வலிப்பு நோய் ஊண்டாகி, அதை சரி பண்ணச் சென்ற தலைமை ஆசிரியர் மேனனின் மூக்கைக் கடித்து பிய்த்த ஒரு செய்தியும் இருந்தது.
கிறிஸ்தவர்களின் ஏதோ ஒரு நேர்த்திக் கடன் அப்போது நடைபெற்றுக் கொண்டிருந்தது. வீடுகள் மற்றும் குடிசைகளின் வாசல்களில் வாழை மரங்களை நட்டு, அதன் மீது வண்ணத் தாள்களால் ஆன கொடிகளை ஏராளமாக தொங்க விட்டிருந்தனர். நாங்கள் அந்த வகையில் பல ஒற்றையடிப் பாதைகளையும், நிலப் பகுதிகளையும் சுற்றி இறுதியில் வயலின் கரையிலிருந்த புற்களால் வேயப்பட்ட ஒரு பழைய வீட்டிற்கு முன்னால் போய் நின்றோம். நண்பனின் வீடு. ஆனால், நண்பன் அங்கு இல்லை.