தங்கமாலை - Page 2
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 6938
பலமான தன்னுடைய இரண்டு கைகளாலும் கயிறை இறுகப் பற்றியவாறு பக்கவாட்டுச் சுவரை மிதித்துக்கொண்டே கிணற்றின் அடியை நோக்கி நீரை நெருங்கி அவர் போய்க்கொண்டிருந்தார். நீர் கண்ணீரைப் போல கீழே கிடந்தது. அதற்குக் கீழே தங்கமாலை பிரகாசமாகத் தெரிந்தது. இப்போது எதைப்பற்றியும் நினைத்துப் பார்க்கும் நிலையில் அவர் இல்லை. தைரியத்துடன் பிடியை விட்டவாறு அவர் நீருக்குள் இறங்கினார். நீர் எவ்வளவு இருக்கிறது என்பதைப் பற்றி அவருடைய மனதில் ஒரு கணக்கு இருந்தது. கால்களால் நீரைத் துழாவிக் கொண்டே அவர் நீருக்குள் மூழ்கிச் சென்றார். அவருடைய கணக்குத் தவறிவிட்டது. அவர் மனதில் கற்பனை பண்ணியிருந்ததைவிட நீரின் அளவு இரண்டு மடங்காக இருந்தது. மூச்சை அடக்கிக்கொண்டார். கால்களில் நீரைத் துழாவியவாறு மீண்டும் கீழே சென்றார். அடிப்பகுதியை இன்னும் அவர் அடையவில்லை. மூச்சை அடைப்பது போல் அவருக்கு தெரிந்தது. அதற்குப்பிறகும் அவர் கீழே சென்றார். தலைக்குள் மணியடிப்பதைப் போல் அவருக்குத் தோன்றியது. மூச்சு ஒரேடியாக நின்றுவிடுமோ? சங்கு வெடிக்கப்போகிறதோ? நீரின் அடிப்பகுதியை அவர் அடைந்தார். மாலையைக் கையில் எடுத்துக் கொண்டு மேல்நோக்கி வந்தார். கயிற்றைப் பிடித்துக்கொண்டு மூச்சை விட்டார். மேலும் கீழும் மூச்சு வாங்கியது. உடம்பு மிகவும் தளர் வடைந்துவிட்டதைப் போல் இருந்தது. மாலையை வாயில் கடித்துக் கொண்டு இடுப்பில் கட்டப்பட்டிருந்த துண்டைப் பிழிந்தார். தலையை துவட்டினார். பிறகு மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கச் சொன்னார் :
“வாளியை கீழே இறக்கு...”
வாளி கீழே வந்தது. அதில் தங்க மாலையையும் கண்ணாடியையும் போட்டார். மாலையுடனும் கண்ணாடியுடனும் வாளி உயர்ந்து மேலே வந்தது.
பதைபதைப்பு, தளர்ச்சி கைகள் வலித்தன. கயிற்றில் பிடித்திருந்த பிடி விடுவதைப்போல் இருந்தது.
“நீ ஓடிப்போயி நம்ம ஏணியைக் கொண்டுவா.”
அடுத்த நிமிடம் மரத்தில் செய்யப்பட்ட ஏணியை மனைவி அங்கு கொண்டுவந்தாள். மெதுவாக அதை அவள் கிணற்றுக்குள் இறக்கினாள். அதன் உச்சியிலிருந்த ஒரு பலகை மட்டும் நீருக்கு மேலே நீட்டிக் கொண்டிருந்தது. கயிற்றைப் பிடித்தவாறு அவர் அந்தப் பலகை மீது கால்வைத்து நின்றிருந்தார். கால்கள் பயங்கரமாக நடுங்கின. உடம்பெல்லாம் வலித்தது. மூச்சுவிடவே மிகவும் கஷ்டமாக இருந்தது. மேலே அண்ணாந்து பார்த்தார். ஒரு பெரிய குழாய்க்கு அடியில் தான் நின்று கொண்டிருப்பதைப் போல் அவருக்குத் தோன்றியது. ஆகாயம் எங்கோ உயரத்தில் இருந்தது. கிணற்றின் மேற்பகுதிக்கு மேல் மனைவியின் தங்கையும் மனைவியும் மகளும் நின்றிருந்தார்கள். மகனின் தலையும் தெரிந்தது.
ஒரே பதைபதைப்பு. ஏறி இங்கிருந்து தப்புவதற்கு முடியாதுபோல் தோன்றியது. மேலே ஏறுவதற்கு வழியேயில்லை. தப்பிப்பதற்கு வழியே இல்லை என்று அவருடைய மனம் சொன்னது.
நிமிடங்கள் வேகமாக ஓடிக்கொண்டிருந்தன. நிமிடங்கள் மணிகளாக மாறும். மாலைநேரம் வரும். இரவு வரும்... இரவு... கிணற்றுக்குள் எப்படி இருப்பது? நடுங்கி விரைத்துப்போய் நீருக்குள் விழ வேண்டியதுதான்!
இறுதி நிமிடம் நெருங்கிவிட்டது. மரணத்தைத் தழுவுவதற்காக நேரம் வந்து விட்டது. மரணம்!
“அடியே!” - அவர் மெதுவான குரலில் அழைத்துச் சொன்னார்: “என்னால மேல வரமுடியாது. ரொம்பவும் தளர்ந்து போயிட்டேன்.”
அடுத்த நிமிடம் மனைவியும் மகளும் கூப்பாடு போடத் துவங்கி விட்டார்கள். அவர்களின் சத்தத்தைக் கேட்டு மகனும் அழத் தொடங்கினான். மனைவியின் தங்கையும் அழுதாள்.
யாரையாவது அழைத்தால் என்ன? யாரை அழைப்பது? பக்கத்தில் மனிதர்கள் இருக்கிறார்கள். அவர்கள் வந்து அவரை எப்படி கிணற்றை விட்டு வெளியே கொண்டுவருவார்கள்? அவர்கள் வருவதுவரை பிடியை விடாமல் நின்றுகொண்டிருக்க முடியுமா? உடல் பயங்கரமாக நடுங்கிக் கொண்டிருந்தது. கீழே விழுந்துவிடுவோமோ என்று அவர் பயந்தார்.
வாழ்க்கையில் இதைப்போல இதற்கு முன்பு ஆபத்தில் சிக்கியிருக்கிறோமா என்பதை அவர் நினைத்துப் பார்த்தார். முன்பு இளைஞனாக இருந்த காலத்தில் ஒவ்வொரு இடமாக அவர் சுற்றிக் கொண்டிருப்பார். உயர்ந்து நிற்கும் மலைகளில் அவர் ஏறியிருக்கிறார். ஆபத்தான குகைகளுக்குள் நுழைந்திருக்கிறார். வெள்ளத்தில் சிக்கி நீந்தித் தப்பியிருக்கிறார். மைசூர்... மைசூரில் எங்கே? சிக்பெல்லாப்பூர், ஹாஸன், ஷிமோகா... இவற்றில் எங்கே? நகரத்திலிருந்து இரண்டு மூன்று மைல்கள் தள்ளியிருக்கும் தன்னந்தனியான ஒரு மலை. அந்த மலையில் ஒரு உருண்டையான பெரிய பாறை. பிரம்மாண்டமான ஒரு பெரிய கறுப்பு முட்டை அது. வானத்தைத் தொட்டுக்கொண்டு கம்பீரமாக நின்றிருந்தது அந்தப் பாறை. அதன் உச்சியில் சிறிய கோவில். அந்தக் கோவிலைப் பார்ப்பதற்காக அவர் மலைமீது ஏறினார். தனியாகத்தான். பிற்பகல் நேரம். மலைமீது ஏறுவதற்காகக் கீழேயிருந்து பாறைகளில் படிகள் உண்டாக்கியிருக்கிறார்கள். வளைந்து வளைந்து போய்க்கொண்டிருந்த அந்தப்படிகள் வழியே அவர் ஏறினார். மேலே சென்றபிறகு அந்த உருண்டையான பாறையை உணரமுடிந்தது. யானையின் உடலைப் போல அது இருந்தது. உச்சியில் கோவில். அங்கு பூஜை எப்போது நடக்கும்? கண்ணுக்கெட்டிய தூரம்வரை அவரால் சுற்றிலும் பார்க்க முடிந்தது. ஒரு இடத்திலும் ஒரு மனிதனைக்கூட பார்க்க முடியவில்லை. தூரத்தில் கண்ணாடியைப் போல ஏராளமான குளங்கள் பிரகாசித்துக் கொண்டிருந்தன. சிறிதுநேரம் சென்றதும் மலையைவிட்டு கீழே இறங்க அவர் தீர்மானித்தார். பார்த்தால் படிகளைக் காணவில்லை.
படிகள் எங்கே?
அவர் எல்லா இடங்களிலும் பார்த்தார். படிகளைக் காணவில்லை. எப்போதாவது பூஜை பண்ணுவதற்காக ஆட்கள் வரும்போது மலையைவிட்டுக் கீழே இறங்கலாம். ஆட்கள் யாரும் வரவேயில்லையென்றால்? ஒரு சிகரெட்டைக் கொளுத்திக்கொண்டு மீண்டும் தேடிப் பார்த்தபோது... அதிர்ஷ்டம் என்றுதான் சொல்லவேண்டும்! படிகள் கண்களில் தெரிந்தன. மகிழ்ச்சியுடன் இறங்கிக் கீழே வந்தார்.
அதைப்போல இதைச் சொல்லமுடியாது. இது ஒரு ஆழமான கிணறு. அவர் இருப்பது கிணற்றுக்கு உள்ளே அடிப்பகுதியில். மரணம் மிகவும் நெருங்கி வந்துவிட்டிருக்கிறது. அப்படிச் சொல்வதுகூட தவறு. மரணம் எப்போதும் நமக்கு மிகவும் அருகில்தான் நின்று கொண்டிருக்கிறது. நேரம் செல்லச்செல்ல பதைபதைப்பு அதிகமாகிக் கொண்டிருக்கிறது. வாயில் நீர் வற்றிவிட்டது. குனிந்து கையால் சிறிது நீரை அள்ளிக் குடித்தார். ஒரு உண்மை தெரிந்தது. அவருக்கு வயதாகி விட்டது. அவர் ஒரு கிழவன். இளைஞன் அல்ல.
கடவுளே, தப்பிப்பதற்கான வழியைக் காட்டு!
மேலே இருந்து அழுதவாறு மனைவி சொன்னாள்:
“கொஞ்சம் மேலே ஏறி வாங்களேன்...”
“கடவுளே!” சிந்தித்தார்.
அதற்குப்பிறகு நடந்ததெதுவும் அவரின் சுயநினைவோடு நடந்ததல்ல. அவரே கயிற்றின் நுனியை எடுத்து ஏணியின் பலகையில் கட்டினார். பிறகு இரண்டு கைகளாலும் கயிற்றைப் பிடித்தவாறு மிதித்து மிதித்து ஏறினார்.