நெய் திருட்டு
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 6873
நீண்ட காலத்திற்கு முன்பு நடைபெற்ற சம்பவம் இது. பிள்ளைகளாக நானும் அப்துல் காதரும் ஹனீஃபா வும் பாத்தும்மாவும் மட்டுமே அப்போது இருந்தோம். ஆனும்மாவை அப்போது உம்மா பெற்றுவிட்டாளா என்பது சந்தேகம். அபு பிறக்கவே இல்லை.
வீட்டில் பசுக்கறவை இருந்தது. பாலும் தயிரும் சாதாரணமாக கிடைத்துக் கொண்டிருந்தன.
அப்போது வாப்பாவிற்கு படகு வியாபாரம் இருந்தது. மர வியாபாரத்திற்கு மத்தியில் மலைகளில் இருந்து மரத்தடியை வெட்டி, அங்கு வைத்தே படகாக ஆக்கி, நதிகளின் வழியாகக் கூட்டம் கூட்டமாகக் கொண்டு வந்து, மலைவாழ் மக்களைக் கொண்டு இயக்கி, மொத்தமாகப் பெரிய தொகைக்கு விற்பனை செய்வது என்பது வாடிக்கையாக இருந்தது.
அப்போது வீட்டில் எப்போதும் நெய் இருக்கும். மஞ்சள் நிறத்தில் பெரிய மணல் துகள்களைப்போல இருந்த நெய். அது ஒரு பெரிய கண்ணாடிப் பாத்திரம் நிறைய அங்கே இருக்கும்.
குடயத்தூர் மலைகளில் இருந்த பசும்புல்லைத் தின்று நன்கு வளர்ந்திருக்கும் பசுவின் நெய் அது. இப்படி வாப்பா கூறியதாக நான் நினைத்துப் பார்க்கிறேன். நெய் இருக்கும் பாத்திரத்திற்கு அருகிலேயே கண்ணாடிப் பாத்திரத்தில் சர்க்கரையும் இருக்கிறது. இரண்டும் இருப்பது மூலையில் இருந்த பலகையில்.
சாதத்திலும் பலகாரத்திலும் நெய்யைச் சேர்த்து சாப்பிடுவது உண்டு.
அந்தக் காலத்தில் வாப்பாவின் கையால் நான் நிறைய அடிகள் வாங்கியிருக்கிறேன். அப்துல் காதருக்கு சிறிதுகூட அடி கிடையாது. எனக்கு மட்டும் சர்வ சாதாரணமாக அடி கிடைக்கும். சில நேரங்களில் காரணம் இருக்கும். சில நேரங்களில் காரணம் இருக்காது. தந்தைகள் பிள்ளைகளை அடிப்பார்கள். தாய்மார்களும் அடிப்பார்கள். ஓ... என்னுடைய உம்மாவும் என்னை அடித்திருக்கிறாள். கரண்டியின் கைப்பிடியை வைத்து அடித்து அடித்து என்னைச் சமையலறை யிலிருந்து விரட்டி விட்டிருக்கிறாள். எதையாவது தின்ன வேண்டும். சமையலறைக்குள் நுழைந்து எதையாவது கைவிட்டு எடுத்துத் தின்பேன். அப்படி அப்துல் காதரும் தின்றிருக்கிறான். ஆனால் யாரும் நம்பமாட்டார்கள். அவன் திருடித் தின்றாலும் அது நான்தான். அடி எனக்குத்தான்.
அன்றொரு நாள் காலை நேரத் தேநீருக்கும் மதிய சாப்பாட்டிற்கும் இடையில் இருக்கும் சுபமுகூர்த்தம். பசி சற்று தோன்ற ஆரம்பித்திருந்தது. கொஞ்சம் எதையாவது தின்பதற்கு ஏற்ற நேரமாக அது இருந்தது. சமையலறையை நோக்கி நான் சென்றேன். அங்கு உம்மா இருந்தாள். வேலைக்காரியும் இருந்தாள். நங்ஙேலி என்பது வேலைக்காரியின் பெயர். இந்த நங்ஙேலியும் என்னை அடிப்பாள். அடித்து விரட்டியிருக்கிறாள்.
நான் சின்ன எஜமான். சின்ன எஜமானை வேலைக்காரி அடிக்கக்கூடாது. இந்த நியாயம் அங்கு செல்லுபடியாகாது. உம்மாவிடம் சொன்னால் "நல்லாப் போச்சு, நீ கையை விட்டு திருடினேல்ல?' என்று கூறுவாள். போதாக் குறைக்கு இந்த நங்ஙேலியின் மார்பகத்தில் நான் பால் வேறு குடித்திருக்கிறேனாம்! (நிறைய பெண்களின் மார்பகங்களில் நான் பால் குடித்திருக்கிறேன். உம்மாவும் கூறிய விஷயம் இது). பிறகு நான் யோசித்தேன். ஒரு பச்சை மாங்காயைத் தின்போம். ஆனால் அதுவும் கிடைக்க வழியில்லை. நங்ஙேலி கூறுவாள்:
“கொஞ்ச நேரம் அப்படியே பசியுடன் இரு. இப்போ சாப்பிடலாம். இல்லாவிட்டால் அடி வேணுமா?''
ம்ஹும்! எதுவும் பேசாமல் அப்படியே நடந்து வீட்டிற்குள் நுழைந்தபோது, நான் புதிதாக ஒன்றைக் கண்டுபிடித்தேன். நெய்யும் சர்க்கரையும் அருகருகே இருக்கின்றன. இரண்டும் ஒன்றாகச் சேர்ந்தால் சில நல்ல விஷயங்கள் இருக்கின்றன. ம்ஹும்! பிறகு அதிக நேரம் தாமதிக்கவில்லை. யாருக்கும் தெரியாமல் நான் ஒரு குழிவாக இருந்த கிண்ணத்தை எடுத்தேன். யாருக்கும் தெரியாமல் வாப்பா படுக்கும் அறையை அடைந்தேன். நெய் பாத்திரத்தை மெதுவாக எடுத்து வாப்பாவின் கட்டிலில் வைத்தேன். மூடியை மெதுவாகக் கழற்றி என்னுடைய சுத்தமான கையால் நெய்யை எடுத்து கிண்ணத்தின் பாதிவரை நிறைத்தேன். பிறகு நெய் பாத்திரத்தை எடுத்து மூலையில் இருந்த பலகையில் வைத்தேன். சர்க்கரையையும் அதே மாதிரி குழியாக இருந்த கிண்ணத்தில் தாராளமாக எடுத்துப் போட்டேன். பாத்திரங்கள் இரண்டும் மூலையில் இருந்த பலகையில் இருந்தன. யார் பார்த்தாலும் ஒரு மாற்றமும் உண்டானதாகத் தோன்றாது. வாப்பா எடுப்பதைப்போலவே செய்து நான் வைத்திருந்தேன். வாப்பா கரண்டியால் எடுத்து விட்டு மெதுவாகப் பாத்திரங் களுக்குள் சமப்படுத்தி வைத்து விடுவார். அதேமாதிரி நான் கையால் செய்துவிட்டு, வாப்பாவின் கட்டிலில் உட்கார்ந்து நெய்யையும் சர்க்கரையையும் சேர்த்துக் குழைத்து கொஞ்சம் வாய்க்குள் போட்டு கருமுரா என்று மென்று தின்றேன். பெரிய பெரிய சர்க்கரை. நன்றாகக் கலக்கவில்லை. எனினும் ஸ்டைலாக தின்று கொண்டிருந்தேன். அப்போது மெதுவாக, மிகவும் மெதுவாக தாழ்ந்த
குரலில் ஒரு கேள்வி! நான் அதிர்ந்து போய்விட்டேன். கேள்வி கேட்டவன் அப்துல் காதர். அவன் அருகிலேயே நின்றிருந்தான். எப்படி எப்போது அந்த அறைக்குள் வந்தான்? ஒரு முடிவுக்கும் வர முடியவில்லை. அவன் மெதுவான குரலில் கேட்டான்:
“அண்ணா, நீங்க என்ன தின்றீங்க?''
நான் மெதுவான குரலில் சொன்னேன்:
“ஒரு மருந்து...''
“நான் உங்க பின்னாடிதான் இருந்தேன். எல்லாவற்றையும் நான் பார்த்தேன். எனக்கும் தாங்க. இல்லைன்னா நான் சொல்லிடுவேன்!''
மிகவும் ரகசியம் என்பதைப் போல மெதுவான குரலில் நான் கேட்டேன்:
“டேய், நீ என் தம்பிதானே?''
“அப்படின்னா எனக்கும் தாங்க.''
நான் அவனுக்குக் கொடுத்தேன். பாத்திரத்தை நக்கி சுத்தமாக்கியது அவன்தான்.