என் தந்தை
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 8165
என் தந்தை ஒரு அப்பிராணி மனிதராக இருந்தார். அவரை நினைத்து நான் பல நேரங்களில் கவலைப்பட்டிருக்கிறேன். என் சின்னப் பையன் சேட்டை செய்யும் சமயங்களில் நான் அவனைப் பார்த்து சொல்வேன்: “டேய், உன்னோட தாத்தா எவ்வளவு அமைதியான ஆளு தெரியுமா? நீ ஏன்டா இப்படி நடக்குற? சேட்டை பண்ணவே கூடாது. நாம எப்பவும் அமைதியா, எளிமையா வாழணும்.” அப்படிச் சொல்லும் அதே நேரத்தில் நான் நினைப்பேன், என் தந்தையைப் போல நானும் கஷ்டப்பட்டு வாழ வேண்டும் என்று நினைக்கிறேனோ என்று. என் தந்தை வாழ்க்கையில் எவ்வளவோ கஷ்டப்பட்டிருக்கிறார். அவர் அடைந்த இழப்புகளும் கொஞ்ச நஞ்சமல்ல.
என் தந்தைக்கு மிகவும் பிடித்த ஒரு வார்ப்பு அவரிடம் இருந்தது. என் தாத்தா சம்பாதித்த அழகான, விலை மதிப்புள்ள ஒரு வார்ப்பு அது. அருமையான வேலைப்பாடுகள் அமைந்த புன்னகை புரியும் கம்பீரமான தலைகளைக் கொண்ட - இரண்டு கைப்பிடிகளையும் கொண்ட வார்ப்பு அது. என் தாத்தா யாருமே செய்யாத ஒரு காரியத்தைச் செய்தார். நாற்புறமும் அமைந்திருந்த வீட்டின் ஒரு முற்றத்தில் ஒரு தென்னங்கன்றை கொண்டு வந்து வைத்தார். அது வளர்ந்து பெரிதாகி வீட்டின் ஓடுகளை காய்களாலும், ஓலைகளாலும் தகர்க்க ஆரம்பித்தபோது, எல்லாரும் என் தாத்தாவைக் குறை சொல்லத் தொடங்கினார்கள். அப்போது என் தந்தை சொன்னார்: “தென்னை ஒரு கற்பக விருட்சம். நடு முற்றத்துல அது இருக்கட்டும். நாம எல்லோரும் செத்துப் போனாக்கூட, அதுக்குப் பிறகும் அது அங்கேயே நின்னுக்கிட்டு இருக்கும்.” என் தாத்தா இந்தத் தென்னை மரத்திலிருந்து ஒரு இளநீரைக்கூட குடிக்க முடியாமலே போய்விட்டது. அவர் நடுத்தர வயதிலேயே இந்த உலகை விட்டு போய்விட்டார்.
தென்னைமரத்தின் அடியில் இருந்த வார்ப்பு மழை நீரால் நிறைகிறபோது, நான் அதில் ஒரு சிறு குளத்தில் குளிப்பதைப்போல குளித்திருக்கிறேன். நெல் அவிக்கிறபோது, அதிலிருந்து கிளம்பி வருகிற அருமையான வாசனையை நான் என்னையே மறந்து உள்வாங்கி மகிழ்ந்திருக்கிறேன். வார்ப்பு நெருப்பு ஜுவாலைகளால் சூழப்பட்டு அடையாளம் தெரியாத ஒன்றைப்போல அடுப்பின்மீது இருக்கும். எரிந்து கொண்டிருக்கும் தீ ஜுவாலையின் நிழலுக்குள் நானும் யாரோ ஒரு ஆள்போல மறைந்து போவேன். வேக வைத்த நெல்லின் மணத்துடன் வார்ப்பு மீண்டும் இருட்டில் என்னைத் தேடி வரும்.
ஒருநாள் ஒளிந்து விளையாடிக் கொண்டிருக்கும்பொழுது என்னைவிட வயதில் மூத்த பையன்களில் யாரோ மேலே கிடந்த வார்ப்பை தூக்கி எடுத்து அதற்கு அடியில் என்னைப் போட்டு மூடி விட்டார்கள். என்னை வார்ப்பிற்கு அடியில் ஒளியச் செய்தவர்கள் விளையாட்டை நிறுத்திவிட்டு எப்போதே தங்களின் வீடு தேடிச் சென்று விட்டார்கள்.
என்னைக் கண்டுபிடிப்பதற்கு அவர்கள் மறந்து போனார்கள். இந்த விஷயம் எனக்குத் தெரியாது. நான் வார்ப்பின் உட்பாகத்தைக் கைகளால் தடவியவாறு, வெளி உலகம் ஒருவகை ஓசையுடன் இயங்கிக் கொண்டிருப்பதைக் காதால் கேட்டவாறு, வார்ப்பின் அடைக்கப்பட்ட இருண்ட உலகத்திற்குள் இருந்தவாறு என்னை அவர்கள் எப்போது கண்டுபிடிப்பார்கள் என்ற எதிர்பார்ப்புடன் காத்திருந்தேன். என்னைத் தேடி வந்தவர்களில் என் தந்தைக்கு மட்டுமே வார்ப்பை உயர்த்திப் பார்க்கத் தோன்றியது. என் தந்தை அழுதவாறு என்னைத் தூக்கிய காட்சி இப்போதும் என் ஞாபகத்தில் பசுமையாய் நிற்கிறது. ஞாபக சக்தி என்றால் என்ன? என் தந்தை தூக்கி எடுத்த அந்தச் சின்ன பையனும், தந்தையும் இப்போது இல்லை. என் தந்தையின் கவலைகளையும் அன்பையும் வேறு யாரோவாக மாறிய நான் மனதில் போட்டு காப்பாற்றிக் கொண்டிருக்கிறேன்.
அந்த வார்ப்பை என் தந்தை தொலைத்து வட்டார். ஒருநாள் என் தந்தை வியர்வை வழிய முற்றத்தில் ஓடி வந்து நின்றதை இப்போது நினைத்து பார்க்கிறேன். வாசலில் இருந்த மணலில் வெயிலின் உக்கிரம் தெரிகிறது. என் தந்தையைப் பார்த்ததும் பெரிய திண்ணையில் இருந்த தூணில் சாய்ந்தவாறு உட்கார்ந்து சிறிய திண்ணையில் கால் நீட்டி அமர்ந்திருந்த பாட்டி ‘சரக்’கென்று எழுந்தாள். பாட்டியிடம் ஒரு நடுக்கம் தெரிந்தது. தந்தைக்கு நேராக அவள் சுண்டு விரலை நீட்டியபோது, அதில் சுண்ணாம்பு காய்ந்து போய் ஒட்டியிருந்தது. பாட்டிக்கு தூணின் அளவுக்கு உயரம் இருந்தது என்று சிறுவர்கள் அனைவரும் கணக்கு போட்டிருந்தோம். உயரத்திற்கேற்றபடி அவளிடம் தடிமனும் இருந்தது. நரை கொஞ்சம் கூட இல்லாமல் அடர்த்தியாக இருந்த கறுத்த கூந்தலை பல அடுக்குகளைக் கொண்ட தலைப்பாகையைப் போல தலையில் அவள் சுருட்டி வைத்திருந்தாள். இப்போது நினைத்துப் பார்க்கிறபோது அந்த வயதில் கூட பாட்டி எவ்வளவு அழகான பெண்ணாக இருந்திருக்கிறாள் என்று தோன்றுகிறது. ஒருமுறை என் தாயின் ஞாபகத்தில் பாட்டியின் மார்பகத்தின்மேல் போய் சாய்ந்து கொண்டது இப்போதும் மனதில் வலம் வருகிறது. பாட்டி என் கைகளைத் தன் கைகளால் நீக்கினாள். ஆனால் ஒரு இளம் பெண்ணின் ‘சிக்’ என்று இருந்த மார்பகங்களாக அவை இருந்தன என்பது மட்டும் இப்போதும் ஞாபகத்தில் இருக்கிறது. மார்பகங்களின் கடினத்தன்மை ஏன் பெண்களின் இதயங்களிலும் இருக்கிறது? மார்பகங்களின் மென்மைத் தன்மையும், அது தரும் பாலின் இனிமையும் யாருக்காக? என் பாட்டி யாருக்குமே பயப்படாத ஒரு பெண்ணாக இருந்தாள்.
பாட்டியின் சுண்டுவிரல் என் தந்தையை அப்படியே முற்றத்தில் மணலில் கட்டிப் போட்டது. “நீ உள்ளே வராதே. போயி அவளோட வர்றதுக்கு வழியைப் பாரு. வெட்கம் இல்லாத பய...”
இது எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டும் கேட்டுக்கொண்டும் நான் வாசலின் ஒரு மூலையில் இருந்த மரத்தின் நிழலில் அமர்ந்தவாறு என் தாயின் சின்ன மார்பகங்களின் கதகதப்பை நினைத்து அழுதேன். என் தாய் என்னை மார்போடு சேர்த்து அணைத்துக்கொண்டு என்னுடைய நெற்றியில் முத்தம் கொடுப்பாள். அவள் காணாமல் போனபோது என் பாட்டி முதல் தடவையாக தன் நெஞ்சில் ஓங்கி அடித்துக் கொண்டாள். பிறகு வேலைக்காரப் பெண்ணை பிரம்பை வைத்து அடித்து கீழே தள்ளினாள். வேலை செய்பவர்களையும் பக்கத்து வீட்டுக்காரர்களையும் வரச்சொன்னாள். என் தந்தைக்கு ஆள் அனுப்பினாள். என் தாய் இல்லாத படுக்கையில் பரவிக் கிடந்த இலஞ்சி பூக்கள் விரிப்பில் இருந்த பூக்களோடு சேர்ந்து காணாமல் போயிருந்தன. அவற்றைப் பொறுக்கி என் நாசியின் அருகில் வைத்து என் தாயை மீண்டும் நினைத்துப் பார்த்தவாறு நான் வாசல் கதவின் பின் நின்றிருந்தேன்.