என் தந்தை - Page 3
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 8167
கையில் இருந்த மடலால் முதலில் வார்ப்பின்மேல் பாட்டி ஒரு அடி கொடுத்தாள். மணிநாதத்தைப்போல, அரக்கர்கள் கூப்பாடு போடுவதைப்போல வார்ப்பின் அழுகைச் சத்தம் கேட்டது. அந்த மடலால் பாட்டி குட்டனின் தலையில் ஒன்றிரண்டு அடிகள் கொடுத்தாள். அப்போது அவனின் அழுகை தானாகவே நின்றது. அவன் தூணில் ஒரு கொடியைப் போல் துவண்டு கிடந்தான்.
அப்போது வேலைக்காரர்களும், பக்கத்தில் உள்ளவர்களும் ஓடிவந்து பாட்டியைப் பிடித்து ஒதுக்கினார்கள். பாட்டி குட்டனின் இடுப்பில் மீண்டும் முண்டைக் கட்டிவிட்டாள். குட்டனை எல்லோரும் சேர்ந்து தூக்கி மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றார்கள். பாட்டி எந்தவித மனக்கிலேசமும் இல்லாமல் தூணருகில் அமர்ந்து வெற்றிலைப் பெட்டியைத் திறந்து, அதையே பார்த்துக் கொண்டிருந்தாள். ஆனால், வெற்றிலை போடவில்லை.
மறுநாள் என் தந்தை வந்தார். “எங்கேடா அவள்?” - பாட்டி கத்தினாள். என் தந்தை சொன்ன கதை இதுதான். எர்ணாகுளம், திருச்சூர், கோழிக்கோடு, தலைச்சேரி - எல்லா ஊர்களையும் தாண்டி மஞ்சேஸ்வரத்தில்தான் என் தந்தை என் தாயைப் பார்த்திருக்கிறார். வாசலில் நின்றவாறு அவர் என் தாயின் பெயரைச் செசல்லி கூப்பிட்டிருக்கிறார். அவள் வீட்டிற்குள் இருந்தவாறே மெதுவான குரலில் சொல்லியிருக்கிறாள்: “நான் இனி வர்றதா இல்ல” “அம்மாவுக்கு உன்னை உடனடியா பார்க்கணுமாம்...” - என் தந்தை சொல்லியிருக்கிறார். “நான் பார்க்க விரும்பல...” - என் தாய் சொல்லியிருக்கிறாள்: “என் மேல பாசம் உள்ளவங்கதான் எனக்கு வேணும். நான் நல்லா இருக்கேன்னு என் மகன்கிட்ட சொல்லுங்க.”
மஞ்சேஸ்வரத்தில் இருக்கும் தாய் என்னை நினைத்ததற்காக சந்தோஷப்பட்ட நான் காயம் பட்டிருந்த என் தந்தையின் முகத்தையே பார்த்தவாறு நின்றிருந்தேன்.
பாட்டியின் வார்த்தைகளை ஞாபகப்படுத்திப் பார்த்த என் தந்தை வீட்டிற்குள் நுழைந்து என் தாயின் கைகளைப் பிடித்திருக்கிறார்... தாயின் காதலனின் ஆட்கள் என் தந்தையை அடியோ அடி என்று அடித்திருக்கிறார்கள். தாய் அழுதவாறு என் தந்தையைக் கட்டிப் பிடித்திருக்கிறாள். மன்னிப்பு கேட்டிருக்கிறாள். “வெட்கம் கெட்ட நாயே... நீ என் மகன்தானா?” என்று கூறியவாறு பாட்டி அடுப்பில் இருந்த ஒரு விறகுக்கட்டையை வேகமாக எடுத்தாள். வேலைக்காரி பாட்டியை இறுக பிடித்துக் கொண்டு விறகுக் கட்டையை அவளிடமிருந்து பிடுங்கினாள். தந்தை என்னைத் தூக்கி மார்போடு சேர்த்து அணைத்தவாறு திண்ணையில் வந்து உட்கார்ந்தார்.
குட்டனைச் சேர்ந்தவர்கள் போலீஸ்காரர்களை அழைத்துக் கொண்டு வந்தபோது, பாட்டி வீட்டில் கட்டிலில் படுத்திருந்தாள். என் தந்தைதான் எல்லோரிடமும் நடந்ததை விவரித்துக் கொண்டிருந்தார்.
பாட்டி முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டு வழக்கு நடந்தது. வக்கீல் வீட்டிற்கு வரும்போதெல்லாம் நடு முற்றத்தில் இருக்கும் தென்னை மரத்தைப் பார்த்தவாறு சொல்லுவார்: “அருமையான வார்ப்பு இது நாராயணபிள்ளை... நான் இந்த வழக்குல இருந்து எப்படியும் காப்பாற்றி விட்டுர்றேன். இந்த வார்ப்பை எனக்கு நீங்க தந்திடணும்....” நான் சற்று தூரத்தில் நின்றவாறு எனக்குள் கூறுவேன்: “இல்ல... இல்ல... தர்றதா இல்ல...”
குட்டன் கொஞ்ச நாட்கள் மருத்துவமனையிலேயே இருந்தான். அங்கிருந்தவாறே பெருவந்தானத்திற்குப் போனான். வழக்கை அப்படியே விட்டு விட்டான். அதற்கெல்லாம் முன்பு என் தந்தை, என் தாயைத் தேடிப் போய்விட்டு திரும்பி வந்த நாளன்று கிணற்றின் கரையில் மறைவிடத்தில் பாட்டிக்கு எண்ணெய் தேய்க்கிறபோது வேலைக்காரி இடுப்புக் கொடியை பாட்டியின் இடுப்பில் பார்த்திருக்கிறாள். உள்ளறையைச் சுத்தம் செய்த அன்று தான் அதை எடுத்து அணிந்ததை மறந்துபோய்விட்டதை பாட்டி அவளிடம் கூறியிருக்கிறாள். அவற்றை இப்போது அசை போட்டுப் பார்க்கிறபோது, பாட்டி அந்த தங்கத்தால் ஆன இடுப்புக் கொடியை உள்ளறையின் இருட்டுக்குள் இருந்தவாறு குட்டனுக்காக அணிந்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் அவனைக்கொண்டு அவள் தன் இடுப்பில் அதை அணியச் செய்திருக்க வேண்டும் என்ற தீர்மானத்திற்குத்தான் என்னால் வர முடிகிறது.
என்னுடைய அப்பாவித் தந்தை என்ன நினைத்திருப்பார் என்பதைப் பற்றி என்னால் அறிய முடியவில்லை. சிறிது நாட்கள் கழித்து நான் அழ... அழ.. வக்கீல் ஸ்ரீதரன் நாயர் என் தந்தைக்கு மிகவும் பிடித்த அந்த வார்ப்பை எடுத்துக்கொண்டு போனார்.
என் தந்தை அழுதவாறு என்னைக் கண்டுபிடித்த, அவரின் அன்பிற்கு சாட்சியாக இருந்த, அந்த வார்ப்பு கூட இப்போது இங்கு இல்லாமல் போய்விட்டது. எதுதான் நிரந்தரம், தந்தையே?