என் தந்தை - Page 2
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 8167
இலஞ்சிப் பூக்கள் பொறுக்கப் போகும்போது நான் எத்தனையோ அதிகாலைப் பொழுதுகளில் தாய்க்குத் துணையாகப் போயிருக்கிறேன். ஒருமுறை மறைந்து கொண்டிருந்த நிலவொளியில் ஒரு மோகினியைப்போல தோன்றி, என் தாய் நடந்தவாறு ‘நீ பார்க்காதே’ என்று என்னிடம் கூறிவிட்டு ஒரு செண்பக மரத்திற்குப் பின்னால் மறைந்துகொண்டு மூத்திரம் பெய்தாள். நான் ஓடிச் சென்று அதைப் பார்த்தேன். என் தாயின் சிரிப்பு நிலவொளியில் பிரகாசித்தது. என் தாய் என்னிடம் கேட்டாள்: “உனக்கு வெட்கமாக இல்லையா?” என் தாய் மூத்திரம் பெய்து முடிக்கும்வரை நான் அவளின் தோளைப் பிடித்துக் கொண்டு ஒரு துவாரபாகனைப்போல அங்கேயே நின்றிருந்தேன். பனித் துளிகள் விழுந்திருந்த புற்களில் இருந்து கிளம்பிய ஒரு அழகிய நறுமணம் என்னைத் தழுவி தாலாட்டியது. செண்பக மரத்தின் கிளைகள் காலை நேரக் காற்றில் அழகாக ஆடின.
“ஓரு நிமிஷம் கூட இங்கே நிற்காமப் போடா” - செண்பக மரத்தினடிவரை பாட்டியின் சத்தம் கேட்டது. என் தந்தை தோளில் இருந்த துண்டால் முகத்தைத் துடைத்தவாறு முற்றத்தில் நின்றிருந்தார். பாட்டி கொஞ்சம் பணத்தை எடுத்து அவர் முன் நீட்டியவாறு சொன்னாள்: “அவளை இங்கே பிடிச்சிட்டு வா. அவனையும்தான். என் உடம்பே நடுங்குது. என்னால முடியல... போடா...”
மறுநாள் வெயிலில் காய்ந்து கொண்டிருந்த முற்றத்தில் ஒரு இளைஞன் வந்து அடக்கத்துடன் நின்று கொண்டிருந்தான். “யார்டா நீ?” பாட்டி கேட்டாள். “நான் ஒரு கொல்லன். பெருவந்தானம் என் சொந்த ஊர். எந்த வேலை வேணும்னாலும் நான் செய்வேன்” - அவன் மரியாதை நிமித்தமாக கையில் இருந்த துண்டை கையிடுக்கில் வைத்தபோது அவனின் மார்பும் மற்ற உடம்பின் பகுதியிலும் வேலை செய்து இரும்பாகிப் போயிருந்த அவனின் சதைகள் ஆடின. “ம்....” - பாட்டி சொன்னாள்.
“நாராயணன் வர்றது வரை நீ இங்கே இரு. நீ எப்படி வேலை செய்யிறன்னு நானும் பார்க்கணும்ல! சரி... உன்னோட பேரு என்ன?”
“குட்டன்”
பாட்டி முற்றத்திற்கு இறங்கி வந்து அவனைப் பார்த்தாள். உயரத்திலும் சரி தடிமனிலும் சரி... குட்டனுக்கு இணையாக இருந்தாள் பாட்டி.
நான் எப்போதும் குட்டனுக்கு பின்னால் ஒரு நிழலைப் போல நடந்து திரிந்தேன். பெருவந்தானத்தில் இருந்து என்னுடைய உலகத்தில் திடீரென்று வந்து குதித்த ஒரு மனிதனின் எல்லா விஷயங்களையும் எனக்குத் தெரிந்து கொள்ள வேண்டும்போல் இருந்தது.
ஒரு வாரம் கழித்து என் தந்தை திரும்பி வந்தது தன்னந்தனியாகத்தான். அவரின் உதட்டிலும் காதுகளிலும் காயங்கள் இருந்தன.
அதற்கு முதல்நாள் உள்ளறையில் இருந்த குலுக்கையின் உள்ளே இருந்த மிட்டாய் பெட்டியில் வைக்கப்பட்டிருந்த பாட்டியின் பொன்னால் ஆன இடுப்புக் கொடி காணாமல் போய்விட்டது. அதற்கு முதல்நாள் பாட்டி குட்டனை வைத்து உள்ளறையை முழுவதுமாக பெருக்கி சுத்தப்படுத்தி அதற்கு மணியோசை உண்டாக்குகிற மாதிரி ஒரு புதிய பூட்டையும் போட்டாள். அறைக்குள் மங்கலாக எரிந்து கொண்டிருந்த மண்ணெண்ணெய் விளக்கின் இருளில் பாட்டியும் குட்டனும் என் காதுகளில் தெளிவற்ற குரல்களாக வந்து விழுந்தார்கள். உள்ளறையில் இருந்த பழைய நெல்லில் இருந்து கிளம்பிய தூசியும் வியர்வை நாற்றமும் நாசியை எட்டின. சிறிது நேரம் கழிந்ததும் காவல் காத்துக் கொண்டிருப்பதை நிறுத்தி விட்டு வாசலில் இருந்த காப்பி செடிகளில், விட்டில் பூச்சிகளைப் பிடிக்க ஆரம்பித்தேன். ஆனால், காப்பி பூக்கள் அவற்றின் அழகில் என்னை மயக்கின. விட்டில் பூச்சிகள் தடிமனான காப்பி கிளைகளை இறுக பற்றிக் கொண்டு வேனல் காற்றோடு சேர்ந்து ஓசை எழுப்பின. மெதுவாக ஆடிக் கொண்டிருந்த கிளையில் உட்கார்ந்தவாறு நான் பெருவந்தானத்தின் மாலைகளில் மேகங்கள் அலைந்து கொண்டிருப்பதை கற்பனை பண்ணி பார்த்தேன்.
மறுநாள் இடுப்புக் கொடி மிட்டாய் பெட்டியில் காணாமல் போனது தெரிந்தவுடன், பாட்டி உரத்த குரலில் சத்தம் போட்டாள். நான் அறைக்குள் ஓடிச்சென்றபோது, உள்ளறையில் இருந்து பாட்டி ராட்சசியைப் போன்று ஒரு ஆடும் நிழலுடன் வந்ததை நான் பார்த்தேன். பயம் பெரிதாக என்னை ஆக்கிரமிக்க, நான் வெளியே வேகமாக ஓடினேன். வாசலில் போய்த்தான் நான் நின்றேன். அப்போது பாட்டி நிலத்தில் நடந்து கொண்டிருந்தாள்.
நிலத்தை கிளறிக் கொண்டிருந்த குட்டன், வியர்வையைத் துடைத்துக் கொண்டே கப்பைச் செடிகளை விட்டு பாட்டியின் பின்னால் நடந்து வாசலுக்கு வந்தான். திடீரென்று பாட்டி திரும்பி நின்றாள். என்ன நினைத்தாளோ, குட்டன் அணிந்திருந்த வேஷ்டியை அவள் வேகமாக இழுத்து அவிழ்த்தாள். அவன் இரண்டு கைகளாலும் தன் நிர்வாண உடம்பை மறைத்தான். பாட்டி அவனை ஒரு சிறு குழந்தையைப் போல நினைத்து ஒரு தள்ளு தள்ளி வராந்தா பக்கம் கொண்டு வந்தாள். குட்டினின் பிறப்பு உறுப்பைப் பார்த்து நான் ஆச்சரியப்பட்டேன். அவனுக்கு இத்தகைய ஒரு உறுப்பு இருப்பதையே அப்போதுதான் நான் தெரிந்து கொண்டேன்.
குட்டனின் மேல் வைத்திருந்த பிடியை விடாமல் பாட்டி பரணிலிருந்து ஒரு கயிறை எடுத்து அவனைத் தூணோடு சேர்த்து கட்டினாள். பாட்டியின் வலிமையைப் பார்த்து உண்மையிலேயே நான் நடுங்கினேன். குட்டன் உதறுகிறானா இல்லாவிட்டால் நிர்வாண கோலத்தை கைகளால் மறைக்கிறானா என்பதையெல்லாம் நான் சரியாக கவனிக்கவில்லை. குட்டன் பாட்டியை கீழே தள்ளிவிட்டு ஓடி விடுவான் என்று நான் எதிர்பார்த்தேன். சற்று தூரத்தில் இருந்தவாறு என் கைகளையும் கால்களையும் குட்டனுக்காக நான் காற்றில் ஆட்டினேன். அவன் ஒரு ராட்சசனைப் போல கயிறுகளை அறுத்தெறிந்து, பாட்டியைக் கொன்று வேகமாக ஓடிவந்து என் கையைப் பிடித்து பெருவந்தானத்தின் மேகங்கள் சூழ்ந்திருக்கும் மலைப்பக்கம் அழைத்துப்போக மாட்டானா என்று நான் மனதிற்குள் ஆசைப்பட்டேன். ஆனால், குட்டன் பலமே கொஞ்சமும் இல்லாதவனைப் போல அங்கேயே கட்டப்பட்டு நின்றிருந்தான்.
பாட்டி குட்டனை அடிக்க ஆரம்பித்தபோது நான் கண்களை மூடிக் கொண்டேன். “என் அருமை தாயே... நான் எடுக்கவே இல்ல...” என்ற அழுகைச் சத்தம் மட்டும் என் காதுகளில் விழுந்தது. பாட்டி குட்டனின் பிறப்பு உறுப்பிலும் அடிக்கிறாளோ என்ற ஒரு பெரிய பயம் என்னை வந்து ஆக்கிரமித்தது. நான் பார்த்தபோது பாட்டி வீட்டை நோக்கி போய்க்கொண்டிருந்தாள். நடு முற்றத்திற்குப் போய் நின்ற பாட்டி தாத்தா வளர்த்த தென்னை மரத்திற்குக் கீழே இருந்த வார்ப்பின் மேல் சாய்த்து வைக்கப்பட்டிருந்த ஓலை செதுக்கப்பட்ட ஒரு மடலைக் குனிந்து எடுத்தாள். அரக்கர்கள் வாய்விட்டு சிரித்தார்கள்.