கவர்னர் வந்தார்! - Page 2
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by sura
- Hits: 6922
"நீ என்ன சொன்னே?"
"சார்... என் குழந்தை..."
துக்காராம் தான் சொல்ல வந்ததை முழுமையாகக் கூட முடிக்கவில்லை. அதற்குள் குறுக்கிட்டார் குல்கர்ணி : "இன்னைக்கு நம்ம ரூட்ல யார் போறாங்கன்னு தெரியுமா? கவர்னர் சுற்றுப் பயணம் முடிஞ்சு இந்த வழியாத்தான் போறார். அதனால..."
"சார், என் மகனுக்கு 104 டிகிரி காய்ச்சல் அடிச்சுக்கிட்டிருக்கு." துக்காராமின் குரலில் பதற்றம் தெரிந்தது. கண்களில் நீர்கூட அரும்பிவிட்டது. சிறிய அந்த வாடகை வீட்டின் ஓர் அறையில் தாழ்ந்த கட்டிலில் கண்மூடி வாடித் தளர்ந்து போய்க் கிடக்கும் தன் மகனுடைய முகமும், அவனருகே கண்ணீர் வழிய அமர்ந்திருக்கும் துளசியின் முகமும் அப்போது அவனுடைய மனத்திரையில் தோன்றின.
"இங்கே பார், துக்காராம்..., இன்னிக்கு யாருக்கும் நான் லீவு தரப் போறதில்லை. ஏய்... விட்டல்!"
அடுத்த நிமிடம் ஹெட் கான்ஸ்டபிள் விட்டல் அட்டென்ஷனில் வந்து நின்றான்.
"எல்லாருக்கும் அவங்கவங்க நிற்க வேண்டிய இடத்தை நல்லா விளக்கி சொல்லிடணும், தெரியுதா?
"சரி. சார்..."
"சார்... என் குழந்தைக்கு எதிர்பாராம ஏதாவது நடந்துருச்சுன்னா..."
"என்னால இப்ப ஒண்ணும் செய்ய முடியாது, துக்காராம். டி.எஸ்.பி. சார் யாருக்கும் கண்டிப்பா லீவு தரக் கூடாதுன்னு சொல்லியிருக்கிறப்போ, என்னால் என்ன செய்ய முடியும்? நீயே சொல்லு!"
"எனக்கு ஒரு அரை நாளாவது..." - துக்காராம் அழுதுவிடுவான் போலிருந்தது.
"முடியாது" என்ற பாவத்தில் கையை ஆட்டிய குல்கர்ணி கண்டிப்பான குரலில் கூறினார்: "நான் இப்போ ஒண்ணும் செய்றதுக்கில்ல."
துக்காராமுக்குத் தொண்டையை அடைத்தது. கண்களில் நீர் அரும்பி குளமாகிக் கொண்டிருந்தது. துடிக்கிற உதட்டைக் கடித்தபடி ஹெட் கான்ஸ்டபிள் விட்டல் முன் போய் நின்றான்.
"பன்ஸாரா!"
"ஜீ ஸாப்."
"மெயின் போஸ்ட் ஆபிஸ் ஜங்ஷன்"
"ஹரிகிஷன்."
"ஜீ ஸாப்."
"சுங்கம் வளைவு."
"முனிராம்"
"ஜீ....ஸாப்!"
"கவர்மெண்ட் ஆஸ்பத்திரி முச்சந்தி."
"துக்காராம்"
"ஜீ ஸாப்."
"கண்டோன்மெண்ட் லிமிட் வளைவு."
"ஸாப், என் குழந்தைக்கு...."
"புகாரெல்லாம் பிறகு. இப்போ போய் வேலையைப் பார்."
"சரி... சார்."
ஒவ்வொருவரும் நிற்க வேண்டிய இடங்களைக் கூறிய விட்டல் சொன்னான்: "கவர்னர் சரியா பன்னிரண்டரை மணிக்கும் இரண்டரை மணிக்கும் இடையில் இந்த வழியில வருவார். பைலட் ஜீப்ல டி.எஸ்.பி. சார் இருப்பார். இடையில ஒண்ணு ரெண்டு தடவை குல்கர்ணி சாரும் ரவுண்ட் வருவார். யாரும் ட்யூட்டியை மறந்து தூங்கிக்கிட்டிருக்கக் கூடாது, தெரியுதா? ட்யூட்டியில மட்டும் யாரும் இல்லைன்னா, அப்புறம் பேசாம தொப்பியைக் கழற்றிக் கொடுத்துட்டு, வீட்டுக்கு ஒரேயடியா போயிட வேண்டியதுதான்."
"விட்டல் ஸாப், என் குழந்தைக்கு..."
தலையைக் கைகளால் அடித்துக் கொண்டு கத்தினான் விட்டல்.
"உனக்கு உன் குழந்தைதான் பெரிசு!... அதுதான் லீவு தர மாட்டேன்னு இன்ஸ்பெக்டர் சாரே சொல்லிட்டார்ல! அதுக்கப்புறம் என்ன? போக்குவரத்தை ஒழுங்குபடுத்த வேற ஆள் யாரும் இல்லை புரியுதா?
கண்களிலிருந்து வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்ட துக்காராம் கழன்று போன தன் சைக்கிள் பெடலை ஓர் அழுத்து அழுத்தினான். விடுமுறை வாங்கிக் கொண்டு தன் கணவன் எப்படியும் சிறிது நேரத்தில் வந்து விடுவான் என்று பாவம் துளசி வழிமேல் விழி வைத்து வீட்டில் காத்துக் கொண்டிருப்பாள். கண்மூடி துவண்டு கிடக்கிற மகனின் உடலை வருடியபடி அவள் கண்ணீர் சிந்திக் கொண்டிருப்பாள். என்னதான் இருந்தாலும் பத்து மாதம் சுமந்து பெற்ற வயிறாயிற்றே! கலங்காமல் வேறு என்ன செய்யும்?
நகரத்தின் எல்லைப் புறத்தில், மூன்று வீதிகளும் கூடுகிற இடத்தில் சைக்கிளை நிறுத்தி விட்டு கீழே இறங்கினான் துக்காராம். அதுதான் அவன் ட்யூட்டி பார்க்க வேண்டிய இடம்.
"ராம் ஸாப், இன்னிக்கு என்ன விசேஷம்?" சிறிது தூரத்தில் இருந்த தேநீர் கடைக்காரன் லட்சுமணன் சத்தம் போட்டு கேட்டான்.
"என்னத்தை சொல்லட்டும், லட்சுமணன்! வீட்டுல என் மகனுக்கு ஒரே காய்ச்சல். லீவு கேட்டாக்கா, தர மாட்டேன்னுறாங்க. கவர்னர் இன்னிக்கு இந்த வழியே போறாராம்!"
அப்போது லட்சமணணின் முகம் வியப்பால் விரிந்தது.
பள்ளிக் குழந்தைகளின் கூட்டம் ஒன்று அப்போது புத்தகப் பைகளைச் சுமந்தபடி அவர்களைக் கடந்து போய்க் கொண்டிருந்தது. அவர்கள் துக்காராமை அதிசயக் கண்களுடன் பார்த்தார்கள். அந்தக் கூட்டத்தில் தன் மகனை அவனால் காண முடியவில்லையே!
"அவனுக்கு ஏதாவது எதிர்பாராதது நடந்துட்டா... சத்தியமா சொல்றேன் நானும் அந்த நிமிடமே செத்துப் போவேன்" துளசி காலையில் சொன்னது துக்காராமிற்கு நினைவுக்கு வந்தது.
"அப்படியெல்லாம் சொல்லாதே, துளசி! இன்னிக்கு எப்படியும் நான் லீவு வாங்கிட்டு வர்றேன்" என்றான் துக்காராம்.
கிராமத்திலிருந்து நகரத்துக்குப் போகும் பால்காரர்கள் சைக்கிளை வேகமாக மிதித்துக் கொண்டு கடந்து போனார்கள்.
"ராம் ஸாப், இன்னிக்கு யார் வர்றது?"
"கவர்னர் ஸாப்."
தோள்களைக் குலுக்கியபடி அவர்கள் சிறிது நேரத்தில் பார்வையிலிருந்து மறைந்து போனார்கள். கதிரவன் நடுவானை நெருங்கிக் கொண்டிருந்தான். வெயில் என்னவோ சற்று அதிகம்தான். சாலையில் வெப்பத்தைத் தாங்க முடியாமல் தார் சில இடங்களில் உருகிக் கொண்டிருந்தது.
சிறிது நேரம் சென்றிருக்கும். கரும்பு ஏற்றிக் கொண்டு வந்த ஒரு லாரி துக்காராமின் அருகே வந்ததும் நின்றது; டிரைவர் தலையை வெளியே நீட்டிக் கேட்டார்:
"ட்ராஃபிக் செக்கிங் ஏதாவது?"
"இல்லை. கவர்னர் ஸாப் இந்த வழியே வர்றார். ட்ராஃபிக் ட்யூட்டி. அவ்வளவுதான்."
"ம்... பெரிய இடத்து விஷயம். நாம என்ன சாதாரண குடிமக்கள்! வாங்க, சாயா குடிக்கலாம்."
"இல்ல... டி.எஸ்.பி. சார் எந்த நேரத்துலயும் ரோந்து வரலாம்."
"அப்படின்னா, பரவாயில்லை. கொஞ்சம் கரும்பு தர்றேன். வீட்டுக்கு எடுத்துட்டுப் போயி குழந்தைக்குக் கொடுங்க."
"வேண்டாம், ஸாப்! வீட்டுல மகனுக்குக் கடுமையான காய்ச்சல்!"
"அப்படின்னா லீவு போட வேண்டியதுதானே?"
பெருமூச்சு விட்டுக் கொண்டே கூறினான் துக்காராம் : "நமக்கு யார் லீவு தர்றேன்றாங்க? நம்ம மாதிரி ஏழை பாழைங்களோட கஷ்டத்தை யாரு பார்க்குறாங்க?"
"ம்... எல்லாத்தையும் அந்தக் கடவுள் பார்த்துக்கிட்டுத்தானே இருக்கார்.!" - வானத்தை நோக்கிக் கையை உயர்த்தியபடி கூறினார் டிரைவர்.
"நீங்க சொல்றது உண்மைதான், ஸாப். அவருக்கு இதெல்லாம் தெரியாமலா இருக்கப் போகுது?"
"சரி அப்போ நான் வர்றேன் ராம்ஸாப்..." டிரைவர் லாரியை ஓட்டியவாறு கிளம்பினார்.