முதல் முத்தம் - Page 4
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 7841
ஒரு புதிய உலகத்துல இருந்து சந்திரன் உதிச்சு வர்றதுபோல எனக்கு முன்னாடி அவ நின்னுக்கிட்டு இருக்கா.
நான் அவ பக்கத்துல போனேன். அவ அசையவே இல்ல. நான் அவளோட வலது பக்கத்துல நின்னேன். நாங்க ரெண்டு பேரும் பக்கத்துல பக்கத்துல நின்னு முன்னாடி பார்த்தவாறு நின்னுக்கிட்டு இருந்தோம். நகரம்... வாகனங்கள்... மக்கள்... அவர்களைத் தாண்டி கடல்... சூரியன் நெருப்பு உருண்டைபோல கடலைத் தொட்டுக்கிட்டிருக்கு... நான் என்னோட இடது கையால அவ கழுத்துல கிடக்குற முடியை மேல்நோக்கித் தடவியவாறு நின்னுக்கிட்டு இருக்கேன். நாங்க ரெண்டு பேரும் பக்கத்துல பக்கத்துல நின்னுக்கிட்டிருக்கோம். என்னோட இதயம் வெடிச்சிடும்போல நான் உணர்ந்தேன். அவளோட உடம்புல இருந்து வர்ற மணம்! எனக்கு மூச்சையே முட்டும்போல இருந்துச்சு! நான் திரும்பிப் பார்த்தேன். அவ தன் கண்களால் என்னையே பார்த்து நின்னுக்கிட்டு இருந்தா.
நான் மெதுவா அவளோட முகத்தை ரெண்டு கைகளாலும் பிடிச்சேன். அவளோட உதட்டுல என் உதடுகளால் முத்தம் பதிச்சேன். அவ அப்படியே தளர்ந்து போய்... மேல்மூச்சு கீழ்மூச்சு விட்டவாறு, என்னை இறுகக் கட்டிப்பிடிச்சு முத்தமிட்டா. நான் அவ முகத்தையே பார்த்தேன்.
அவள் முகம் தீக்கனல்போல இருந்துச்சு. அந்தக் கண்கள்! அதில் மகிழ்ச்சி... திருப்தி... வெட்கம்... பயம்... உரிமை... காதல்... இப்படி எவ்வளவோ விஷயங்களை அதில் என்னால் பார்க்க முடிஞ்சது!''
அந்த கூச்ச சுபாவம் கொண்ட இளைஞன் கூறி முடித்தபோது கூட்டத்தில் வயது அதிகமாகிப் போயிருந்த ஒரு சிறுகதை ஆசிரியர் உணர்ச்சி வசப்பட்டு சொன்னார்:
“பேஷ்... நீ சொன்ன கதை நல்லவே இருக்கு...''
“உண்மையாகப் பார்த்தா இவர் சொன்ன கதையை ஒரு ஓவியன் ஓவியமா தீட்டணும்.'' இன்னொரு சிறுகதை எழுத்தாளர் சொன்னார். “இல்லாட்டி ஒரு சிற்பி சிலையா இதை வடிச்சிருக்கணும்.''
“இதைப் பற்றி ஒரு காவியமே எழுதலாம்.'' ஒரு கவிஞர் சொன்னார். “அடடா... முதல் முத்தம்!''
“ஆனால்...'' ஒரு விமர்சகன் அந்த கூச்சம் மிகுந்த இளைஞனின் இதயத்தில் கத்தியைக் குத்துவது மாதிரி கேட்டான்: “அவளை முதன் முதலா முத்தம் கொடுத்தது நீங்கதான்னு உங்களுக்கு எப்படித் தெரியும்?''
அவன் கேட்டது சரிதானே? எல்லாரும் அதே கேள்வியைக் கேட்டார்கள்! எப்படித் தெரியும்?
“அது எனக்குத் தெரியும்'' -அந்த கூச்ச சுபாவம் கொண்ட இளைஞன் சொன்னான். அவன் குரலில் வேதனை கலந்திருந்தது.
அவன் சொல்லிவிட்டால் போதுமா! எல்லாரும் அந்த விமர்சகனின் பக்கம் சேர்ந்து கொண்டிருந்தார்கள். அவர்கள் சொன்னார்கள். “எங்களுக்கு இந்த விஷயத்தில் தெளிவான உண்மை தெரியணும். அப்படின்னாத்தான் நாங்க ஒத்துக்குவோம்.''
கதையைச் சொல்லி முடித்த அந்த இளைஞனின் முகம் வெளிறிப்போய் இருந்தது. வாழ்க்கையில் சூடும் வெளிச்சமும் பறிபோய்விட்ட மாதிரி அவன் அப்படியே அசையாமல் உட்கார்ந்திருந்தான்.
அங்கு கூடியிருந்தவர்கள் கேட்டார்கள்.
“இதை உன்னால தெளிவா நிரூபிக்க முடியுமா?''
அவன் சொன்னான்:
“நம்பிக்கைதான். வாழ்க்கையில இதைவிட வேறு என்ன ஆதாரம் வேண்டி இருக்கு?''
“அப்படிச் சொன்னால் போதுமா?'' ஏதோ மிகப் பெரிய வெற்றியை அடைந்து விட்டதைப்போல் அங்கு கூடியிருந்த எல்லாரும் உரத்த குரலில் சிரித்தார்கள்.
அப்போது அந்த கூச்ச சுபாவம் உடைய இளைஞன் அங்குள்ளவர்களின் மனம் வேதனைப்படக் கூடிய விதத்தில்- யாராலும் பதில் கூற முடியாத ஒரு கேள்வியை மெதுவான குரலில் கேட்டான்:
“உங்களோட மனைவியை... இல்லாட்டி... காதலியை முதல் தடவையா முத்தமிட்டது நீங்கதான்றதுக்கு ஏதாவது ஆதாரம் உங்ககிட்ட இருக்கா? எனக்கு ஆதாரம் எதுவுமே வேண்டாம். தளர்ந்து துவண்டுபோய்க் கிடந்த அவள்... சூடாகிப்போன பிரகாசமான அவளோட முகம்... கள்ளம் கபடமில்லாத அவளோட பார்வை... நான் எப்பவும் மறக்க மாட்டேன்... அந்த முதல் முத்தத்தை!''