முதல் முத்தம் - Page 2
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 7841
எல்லாரும் அமைதியாக உட்கார்ந்திருந்தனர். யாரை நாம் முதன்முதலாக முத்தமிட்டோம்? அவர்கள் ஒவ்வொருவரும் அந்த யோசனையில் ஆழ்ந்துவிட்டனர். ஆனால் அவர்களுக்கு அது ஞாபகத்திலேயே இல்லை. உண்மையிலேயே அது எவ்வளவு பெரிய நஷ்டம்! அந்தச் சம்பவம் மீண்டும் ஒருமுறை அவர்களின் வாழ்க்கையில் வரப்போகிறதா என்ன? "ஓ... கடந்துபோன காலமே! உன்னை ஏன் மறைத்துக் கொண்டிருக்கிறாய். கொஞ்சம் வெளியே வா. இதயத்திற்குக் கிளர்ச்சியூட்டும் அந்த இனிய சம்பவத்தை மீண்டும் ஒருமுறை நான் காண விரும்புகிறேன்...” அங்கு கூடியிருந்த எல்லாருமே இறந்த காலத்தில் மூழ்கிப்போய்க் கிடக்க, அங்கிருந்தவர்களிலேயே வயது குறைந்தவனும் திருமணமாகாதவனும் கூச்ச சுபாவம் உடையவனுமான ஒரு சிறுகதை எழுத்தாளன் திடீரென்று சொன்னான்:
“என்னால சொல்ல முடியும்.''
“சரி... சொல்லு...'' எல்லாரும் அவனையே பார்த்தனர். “நீ யாரை முதல் முறையாக முத்தமிட்டே?''
அவன் கூச்சத்துடன் நெளிந்தவாறு சொன்னான்:
“ஒரு விமர்சகியை.''
“விமர்சகியையா?'' ஒரு விமர்சகன் கேட்டான்: “யார் அவ?''
“அவள் என்னோட ரசிகையா இருந்தா. அவளைத்தான் நான் வாழ்க்கையிலேயே முதல் தடவையா முத்தமிட்டேன். அந்தக் காட்சி இப்பவும் மனசுல பசுமையா நிக்குது...''
“அந்தக் காட்சியை இப்ப விவரமா எங்களுக்குச் சொல்லுடா தம்பி...'' கருப்பு நிறத்தைக் கொண்டவரும் பென்சிலால் மீசையை வரைந்து வைத்திருப்பவரும் தடிமனான தேகத்தைக் கொண்ட கண்ணாடிக்காரக் கதாசிரியருமான மனிதர் சொன்னார்: “நீ முத்தமிட்ட அந்தக் கதையைக் கேட்க நாங்க ரொம்பவும் ஆவலா இருக்கோம்.''
கதைகள் இல்லாமல் முத்தம் தர முடியுமா? கூர்மையான- சிறிய கண்களைக் கொண்ட, வெற்றிலை- பாக்குப் போட்டு பற்கள் சிவப்பாகிப் போயிருந்த, உயரம் குறைந்த, மெலிந்துபோய் காணப்பட்ட கதாசிரியர் சொன்னார்:
“அந்தக் கதையை உடனே இங்க எடுத்து விடுடா படவா!''
அந்தக் கூச்ச சுபாவம் உள்ள சிறுகதை எழுத்தாளன் நல்லவனான வழுக்கைத் தலையனைப் பார்த்தான். வழுக்கைத் தலை மனிதன் சொன்னான்:
“சும்மா சொல்லு... பயப்படாதே... மனசுல என்ன தோணுதோ அதை அப்படியே சொல்லு...''
காதலைப் பற்றி மட்டுமே எப்போதும் இதயத்தில் நினைத்துக் கொண்டிருக்கும் கவிஞர் உணர்ச்சிவசப்பட்ட குரலில் சொன்னார்:
“நான் உன் கதையைக் கேட்க மிகவும் ஆர்வம் உள்ளவனா இருக்கேன். சீக்கிரம் சொல்லு தம்பி...''
கூச்ச சுபாவம் கொண்ட அந்த இளைஞன் பேச ஆரம்பித்தான்:
“அவளோட உதடுகள் சிவப்பு ரோஜாப்பூவைப்போல சிவந்து இருக்கும்.''
“அடடா...'' எல்லாரும் ஒரே குரலில் சொன்னார்கள்: “அப்படியா?''
“அவளோட முகமும் உடலும் வெள்ளை வெளேர்னு இருக்கும்.'' அவன் உணர்ச்சிவசப்பட்ட குரலில் சொன்னான்: “அவளோட தலைமுடி கருப்பா சுருள் சுருளா இருக்கும். அவளோட மார்பகங்கள் அப்பத்தான் முளைச்சு லேசா வந்துக்கிட்டு இருக்கு. கண்கள் பிரகாசமா இருக்கும். அவ நல்லா பாடுவா. அவளைப் பார்க்கிறப்போ எனக்கும் பாடணும்போல இருக்கும். சில நேரங்கள்ல நான் உதட்டளவுல பாடவும் செய்வேன். அவளை அப்படியே இறுக மார்போடு சேர்த்துக் கட்டிப்பிடிச்சு முத்தம் கொடுக்கணும்போல இருக்கும். அவள் என்னோட ஜாதியைச் சேர்ந்தவள் இல்ல... இருந்தாலும் என்னை அவளுக்கு மிகவும் பிடிக்கும். நான் அவள் மேல் வெறித்தனமான காதல் வச்சிருந்தேன். அவள் எதுவுமே தெரியாத ஒரு சின்னப் பொண்ணு. அவளோட வயசு வெறும் பதினாலுதான். அந்தச் சின்ன வயசுல காதலைப்பற்றி அவளுக்கு என்ன தெரியும்?
அவளோட அக்காமார்கள் என் பேரைச் சொல்லி அவளைக் கிண்டல் பண்ணுவாங்க. என்னைப் பார்க்குறப்போ அவங்க அவளைப் பார்த்துச் சொல்லுவாங்க:
"அதோ வர்றார்டி உன்னோட கதைக்காரர்!'
அவர்கள் அப்படிச் சொல்றதைக் கேட்குறப்போ எனக்கே கூச்சமா இருக்கும். அவள் வெறுமனே எதுவும் பதில் பேசாம நின்னுக்கிட்டு இருப்பா. நான் ஏதோ அவளோட சொந்த சொத்து அப்படின்ற மாதிரி அவளோட செயல் இருக்கும். அவள் புன்சிரிப்பு தவழ ஓடி வருவா... என்னைப் பார்த்துக் கேட்பா:
"கதை கொண்டு வந்திருக்கீங்களா?'
அதாவது- நான் போறப்ப எல்லாம் என்கிட்ட ஒரு புதுக் கதை இருக்கணும். நான் ஒவ்வொரு நாளும் கிட்டத்தட்ட நாலு தடவையாவது அவளைப் பார்க்கப் போவேன். நாளொண்ணுக்கு ஒரு கதையாவது கட்டாயம் என்கிட்ட இருக்கும். அவள் என்னோட கதையைப் படிக்கிறப்போ அவளோட முகத்தையே நான் பார்ப்பேன். கதை அவளுக்குப் பிடிச்சிருக்கா, அவள் முகம் வெளிறிப் போகுதா, இல்லாட்டி சிவப்பாகுதா, வியர்க்குதா அப்படீன்னெல்லாம் பார்ப்பேன். துடிக்கிற இதயத்தோட அவளை அப்படியே பார்த்துக்கிட்டே இருப்பேன். கதையைப் படிச்சு முடிச்சப்புறம் அவள் சொல்லுவா:
"கதை எனக்கு ரொம்பவும் பிடிச்சிருக்கு...'
சொன்னதோடு நிற்காமல் அவள் அந்தக் கதையை முத்தமிடுவா. அதற்குப் பிறகு கதையை என்கிட்ட தருவா. நான் மனசுக்குள் நினைப்பேன்- என் முகத்துல அவ ஒரு முத்தம் தந்தால் என்னன்னு.
நான் அவளைப் பற்றி நெனச்சுப் பார்ப்பேன்- என்ன இருந்தாலும் சின்னப் பொண்ணுதானே! இதைப் பற்றியெல்லாம் அவளுக்கு எங்கே தெரியப்போகுது?
சில நேரங்கள்ல அவள் கதையைப் படிச்சிட்டு கேட்பா:
"கதையைக் கிழிச்செறியட்டா?'
கதையை முத்தம் எதுவும் கொடுக்காம என்கிட்ட தருவா... நான் அதைக் கிழிச்சி சின்னச் சின்ன துண்டா ஆக்கி காத்துல பறக்கவிடுவேன். அந்தக் கதை அவளுக்குப் பிடிக்கல. கதையை வாசிக்கிறப்போ அவள் விரும்புற மாதிரி அது இல்ல... ஏதோ நான் எழுதினேன்றதுக்காகப் படிச்சா, அவ்வளவுதான். முதல்லயே அவளுக்கு அது பிடிக்காமப் போனா, பிறகு எப்படி அவள் அதைப் படிக்கிறா?
இதை அவள் சொல்லல. என் மனசுல அப்படித் தோணிச்சு. அவள் இப்படித்தான் நடக்கணும்னு நான் எப்படிச் சொல்ல முடியும்? அவள் கதையைக் கிழிச்சு எறியச் சொன்னா நான் எறிவேன். அவளுக்காக நான் எதை வேணும்னாலும் செய்வேன். காரணம்- நான் அவள் மேல அளவுக்கு மேல் காதல் வச்சிருக்கேன். அவள் உடம்புல இருந்து வர்ற மணம் எனக்கு ரொம்பவும் பிடிக்கும். சோப்பு, பவுடர், சென்ட் மணத்தை நான் சொல்லல. அவளோட ஆத்மாவின், அவளோட இதயத்தின், அவளோட உடம்பின் மணத்தை நான் சொல்றேன். அவளோட உடம்பை கால்ல இருந்து தலை வரை முத்தம் கொடுக்கலாமான்னு நினைப்பேன். மனசுல- சொல்லப்போனா அந்த எண்ணம் ஒரு தாகமாகவே எனக்கு இருக்கும். இருந்தாலும் நான் அதை வெளியே காட்டிக்க மாட்டேன். மனசுக்குள்ளயே வச்சு மூடிக்குவேன். என்ன இருந்தாலும் அவ சின்னப் பொண்ணாச்சே!