மீசை
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 7544
ஸோல்ஸ் வில்லா ஜூலை 30, 1883.
என்னுடைய பிரியமான லூஸி,
புதிதாக ஒன்றுமில்லை. மழை பெய்வதைப் பார்ப்பதற்காக நாங்கள் முன்னாலிருக்கும் அறையில் காத்திருக்கிறோம். இந்த இருண்ட கால நிலையில் வெளியே போவது என்பது சாதாரண விஷயமல்ல. நகைச்சுவையாக ஏதாவது நடித்துக்காட்ட மட்டுமே எங்களால் முடியும்.
வரவேற்பறை என்று முன்னாலிருக்கும் அறையில் வைக்கப்பட்டிருக்கும் அந்தப் பொருட்கள் எந்த அளவிற்கு முட்டாள் தனமானவை! கட்டாயப்படுத்தப்பட்டவை, சுமையானவை, முரட்டுத்தனம் கொண்டவை... தமாஷ்கள் துப்பாக்கியிலிருந்து வெளியே வரும் குண்டுகளைப்போல. அவை எப்போதும் யாருடைய உடலிலாவது விழுந்து கொண்டேயிருக்கும். எதுவும் பிரகாசம் கொண்டவையோ, இயற்கையானவையோ, அழகானவையோ, அமைதியானவையோ அல்ல. இந்த எழுத்தாளர்களுக்கு உலகத்தைப் பற்றி எதுவும் தெரிவதில்லை. நமக்கு மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதர்கள் எப்படி சிந்திக்கின்றார்கள், பேசுகின்றார்கள் என்பதைப்பற்றி அவர்கள் முற்றிலும் தெரியாமல் இருக்கிறார்கள். நம்முடைய பாரம்பரியங்களையோ, மரியாதைகளையோ, கிண்டல் பண்ணுவதற்காக என்னால் அவர்களை எளிதில் மன்னித்துவிட முடியும். ஆனால், அவர்களைப் பற்றி எதுவும் தெரியாது என்று காட்டிக் கொண்டால் அவர்கள் மன்னிக்கத் தயாராக இல்லை. பட்டாளத்தில் இருப்பவன் தண்டிக்கத் தயாராவதைப்போல அவர்கள் வார்த்தைகளைக் கூர்மைப்படுத்த இறங்கி விடுகிறார்கள். சந்தோஷப்படுத்துவதற்காக பொலிவார்டில் ஐம்பது வருடங்களாக ஒரே விரும்பத்தகாத ஆபாசங்களைத் திரும்பத் திரும்ப அள்ளி விட்டுக் கொண்டிருக்கிறார்கள். கலைஞர்கள் என்று அழைக்கப்படும் அந்த மனிதர்களின் பீர் கடைகளில் கேட்டு வெறுப்படைந்த தமாஷ்கள் முன்னால் நின்று கொண்டிருக்கின்றன.
ஆமாம்... நாங்கள் தமாஷாக விளையாடிக் கொண்டிருக்கிறோம். மொத்தம் இரண்டு பெண்களே இருக்கிறார்கள் என்பதால், என் கணவர் தாசியின் வேடத்திற்காகத் தன் முகத்தைச் சவரம் செய்து கொண்டிருக்கிறார். என் லூஸி, அது அவரை எந்த அளவிற்கு மாற்றிவிட்டிருக்கிறது என்பதை உன்னால் நினைத்துப் பார்க்கக்கூட முடியாது. அவரை என்னாலேயே அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை. அது பகலில் ஆனாலும் சரி... இரவில் ஆனாலும் சரி. அவருடைய மீசை உடனடியாக வளரவில்லையென்றால், அதோடு எனக்கு இருக்கும் வெறுப்பைப் போல நானே அவலட்சணமாகி விட்டதைப்போல உணர்கிறேன்.
உண்மையாகச் சொல்லப் போனால் மீசை இல்லாத ஆண் ஒரு ஆணே அல்ல. தாடி மீது எனக்கு அந்த அளவிற்கு விருப்பம் இல்லை. அது எப்போதும் அலட்சியத்தை வெளிப்படுத்தும் வடிவமாக இருப்பது. ஆனால், மீசை... ஓ... உதட்டுக்கு மேலே இருக்கும் அந்த ரோமத்தைக் கொண்டிருக்கும் ப்ரஷ். ஒரு ஆணின் முக அழகிற்கு விலக்க முடியாத ஒன்று. கண்களுக்கு மேலேயிருக்கும் புருவத்தைப்போல, திருமணமானவர்களுக்கிடையே இருக்கும் உறவைப் போல எந்த அளவிற்குப் பயனுள்ளது அது என்பதை யாரால் நினைத்துப் பார்க்க முடியும்? இந்த விஷயத்தில் எனக்கு ஏராளமான நினைவுகள் இருக்கின்றன. ஆனால், அவை அனைத்தையும் உனக்கு எழுத எனக்கு சக்தி இல்லை. எனக்கு எல்லாவற்றையும் உன்னிடம் மிகவும் எளிதில் கூறிவிட முடியும். மெதுவான குரலில் கூறிவிட முடியும். ஆனால், சில விஷயங்களை வெளிப்படுத்துவதற்குப் பொருத்தமான சொற்கள் கிடைப்பதில்லை. தாளில் அவற்றைப் பற்றி வினோதமான எழுத்துக்களை எழுதி எழுதிக் கூறுவது என்பது மிகவும் சிரமமான ஒரு விஷயமே. அதனால்
அவற்றைப்பற்றி மிகவும் அரிதாகவே நான் எழுதுகிறேன். இந்த விஷயம் மிகவும் குழப்பமானதும், கொடுமையானதும், அவலட்சணம் கொண்டதும் என்பதால், யாருக்கும் பாதிப்பு உண்டாகாத வகையில் அதை அணுக அளவற்ற அறிவு கட்டாயம் தேவைப்படுகிறது.
சரி... இது எதையும் நீ புரிந்து கொள்ளவில்லையென்றால், அது அந்த அளவிற்கு ஆபத்தாகிவிடும். என் தங்கமே... இனியாவது நீ வரிகளுக்கிடையில் இருப்பதைக் கொஞ்சம் படிக்கப் பழகு.
என் கணவர் சவரம் செய்துவிட்டு வந்தபோது, ஒரு பாதிரியாரைப் போலவோ, அலட்சியமாக சுற்றித்திரியும் பயணியைப்போலவோதான் அவர் எனக்குத் தெரிந்தார். அவர்களில் மிகவும் அதிகமாக காம இச்சையை உண்டாக்கியவர் அந்தப் பாதிரியார்தான். பிறகு நான் அவருடன் (என் கணவர்) ஒன்று சேர்ந்தபோது அதுதான் மிகவும் மோசமான அனுபவமாக இருந்தது.
ஓ... என் பிரியமுள்ள லூஸி, மீசையே இல்லாத ஒரு ஆணிடமிருந்து எந்தச் சமயத்திலும் ஒரு அணைப்பு கிடைக்காமலே இருக்கட்டும். எப்படிப் பார்த்தாலும் அந்த மனிதரின் உதடுகளுக்கு எந்தவொரு சுவையும் இருக்காது. அந்த அழகோ மென்மையோ எரிச்சலோ... ஆமாம்... சரியான முத்தத்தில் இருக்கும் அந்த எரிச்சலோ அதில் இல்லை. மீசை தான் அதன் வாசனைப் பொருள். வரண்டுபோயோ ஈரமாகவோ இருக்கும் ரோமங்கள் நம்முடைய உதடுகளில் செயல்படுவதைப் பற்றி நீ சிறிது நினைத்துப் பார். சவரம் செய்யப்பட்ட ஒரு மனிதரின் கொஞ்சல் அதுதான். உண்மையாகவே யாருக்கும் அப்படிப்பட்ட கொஞ்சல்கள் மீது ஆர்வமே உண்டாகாது.
ஆனால், மீசையின் காம இச்சையைத் தூண்டும் விஷயங்கள் எங்கிருந்து வருகின்றன என்று நீ என்னிடம் கேட்டாய் அல்லவா? எனக்கு அது எப்படித் தெரியும்? முதலில் சந்தோஷம் உண்டாகிற மாதிரி அது கிச்சு கிச்சு மூட்டும். வாய்க்கு முன்னால் நாம் அது தொடுவதை உணர்கிறோம். அது நம்முடைய உடலில் இன்பமான ஒரு சிலிர்ப்பைப் படர விடுகிறது. கால்விரல் வரைக்கும்கூட.அதுதான் அந்தக் கொஞ்சல். நம்முடைய உடலில் இருக்கும சதையைச் சிலிர்க்க வைக்கும். கிளர்ச்சி உண்டாக்கும். நரம்புகளுக்கு அசாதாரணமான எழுச்சியை உண்டாக்கும். ‘ஆஹ்’ என்ற சத்தத்தை நம்மிடம் எழச் செய்யும் சிறிதும் எதிர்பார்த்திராத ஒரு குளிரின் கிளர்ச்சியூட்டல்.
இனி கழுத்தில்... ஆமாம்... எப்போதாவது ஒரு மீசை உன் கழுத்தில் தொட்டதை நீ நினைத்திருக்கிறாயா? அது உன்னைப் பைத்தியம் பிடிக்கச் செய்யும். சிலிர்ப்படையச் செய்யும். அந்த அனுபவம் உன்னுடைய முதுகெலும்பு வழியாகப் பரவி விரல் நுனியை அடைகிறது. நீ திரும்பிப் பார்க்கிறாய். தோள்களை அசைக்கிறாய். தலையை வெட்டுகிறாய். எங்கேயும் போகாமல் அங்கேயே நின்றிருக்க நீ ஆசைப்படுகிறாய். அது ஒரே நேரத்தில் வழி படக்கூடியதாகவும் துன்பப்படுவதாகவும் இருக்கிறது. ஆனால், அது இனிமையான அனுபவம்தானே!
இனி மீண்டுமொருமுறை - உண்மையாகவே, மீண்டும் ஒருமுறை நான் அதைக் கூற வேண்டுமா? உன்னைக் காதலிக்கும் கணவருக்கு முத்தங்களை மறைத்து வைத்திருக்க வேண்டிய இடங்கள் எவையெவை என்பது நன்றாகவே தெரியும். ஆமாம்... மீசை இல்லாத அந்த முத்தங்களுக்கு அவற்றின் கிளர்ச்சி இல்லாமல் போகிறது என்பதைக் கூறாமல் இருக்க முடியாது. அதைப் பற்றி உனக்கு உன் விருப்பம்போல் விளக்கிக் கூறலாம். என் விஷயத்தில் நான் கண்டுபிடிக்கும் காரணம் இதுதான். மீசை இல்லாத உதடு நிர்வாணத்தைப் போன்றது.