மீசை - Page 2
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 7548
ஆடைகள் இல்லாத உடலைப் போன்றது. ஆடைகள் அவசியம் வேண்டும். உன் விருப்பப்படி இருந்துகொள். ஆனால், கொஞ்சமாவது ஆடைகள் வேண்டும்.
காதலையும் காமத்தையும் மறைத்து வைத்துக் கொண்டு, சதையின் அரிப்பையும் மார்பகங்களையும் மறைத்து வைக்க வேண்டியது அவசியமானது என்று படைத்தவன் (இப்படிப்பட்ட விஷயங்களைப் பற்றிக் கூறும்போது வேறெந்த சொல்லையும் என்னால் பயன்படுத்த முடியவில்லை) நினைக்கிறான். மனிதர்களின் தாகத்தைத் தணிப்பதற்கு, உபயோகமாக இருந்த ஒரு நீர் தடாகத்தை தன்னகத்தே பாதுகாத்து வைத்திருக்கும் மனிதர்களின் வசிப்பிடமாக இருந்த ஒரு காட்டை வெட்டி நிர்மூலமாக்கியதைப்போல, எனக்கு அந்த சவரம் செய்யப்பட்ட முகம் தெரிந்தது.
கடந்த மூன்று மாதங்களாக என் மூளைக்குள் குடியிருக்கும் ஒரு வாசகத்தை, ஒரு அரசியல்வாதியின் வாசகத்தை அது என்னை ஞாபகம் கொள்ளச் செய்கிறது. ஒவ்வொரு நாளும் எனக்கு பத்திரிகையை வாசித்துக் காட்டும் கணவர், அப்போதைய விவசாய அமைச்சராக இருந்த எம். மெலினின் ஒரு சொற்பொழிவை எனக்கு வாசித்துப் காட்டினார். மெலின் என்ற பெயரில் வேறு ஒரு மனிதரும் அந்த காலகட்டத்தில இருந்திருப்பாரோ? எனக்குத் தெரியவில்லை.
நான் அதைச் சரியாக கவனிக்கவில்லை. ஆனால் மெலின் என்ற அந்தப் பெயர் என்னைக் கவர்ந்துவிட்டது. என்ன காரணம் என்று எனக்குத் தெரியவில்லை. ‘ஸின்ஸ் ஆஃப் தி பொஹிமியன் லைஃப்’ என்பதைப்பற்றி நான் நினைத்துப் பார்த்தேன். அவர் ஒரு க்ரிஸற்றெ (சாதாரண விலைமாது)யுடன்தான் வசித்தார் என்பதை நான் நம்பினேன். அதில் இருந்த சிறிய விஷயங்கள் தான் என் ஞாபகத்தில் இருக்கின்றன. ஆனால், அமியன் தீவில் வசிக்கும் மனிதர்கள் மத்தியில் மெலின் நடத்திய சொற்பொழிவின் அர்த்தம் எனக்கு அப்போதுதான் புரிந்தது. சொற்பொழிவு இப்படி இருந்தது: ‘விவசாயம் இல்லாமல் சொந்த நாட்டுப்பற்று இல்லை.’ நான் இப்போது கண்டுபிடித்த அதன் இன்னொரு அர்த்தம் இதுதான்: ‘மீசை இல்லாமல் காதல் இல்லை.’ இதை யாராவது அவரிடம் கூறினால், அது அசாதாரணமானதாக இருக்கும். அப்படித்தானே?
‘மீசை இல்லாமல் காதல் இல்லை.’
‘விவசாயம் இல்லாமல் சொந்த நாட்டுப்பற்று இல்லை’ - எம். மெலின் கூறுகிறார். அந்த அமைச்சர் கூறியது சரிதான். இப்போது எனக்கு அது புரிகிறது.
மற்றொரு கோணத்தில் பார்த்தால் மீசை கட்டாயம் தேவையான ஒன்று. அது முக அழகைத் தீர்மானிக்கிற ஒரு விஷயமாக இருக்கிறது. அது இனியையும், அழகையும், கள்ளங்கபடமற்ற தன்மையையும், தைரியத்தையும், செயலாற்றலையும் தந்து உற்சாகம் நிறைந்த ஒரு சூழ்நிலையை உண்டாக்குகிறது. எப்போதும் தன்னுடைய ரோமக் காடு (ஓ... அதுதான் அந்தக் கெட்ட பெயர்) கொண்டு நடந்து திரியும் தாடி உள்ளவர்களால்... சரியான தாடியைக் கொண்டவர்களால் தங்களுடைய எண்ணத்தை எந்தச் சமயத்திலும் வெளிப்படுத்த முடியாது. அவர்களுடைய எண்ணங்கள் அனைத்தும் ரோமக்காட்டிற்குள்ளேயே மறைந்து கிடக்கின்றன.
ஒரு ஆண் தன் மீசையில் ஒரே நேரத்தில் தன்னுடைய வசீகரத்தையும் புத்திசாலித்தனத்தையும் பாதுகாத்து வைக்கிறான்.
இந்த மீசைகளுக்குத்தான் எப்படி எப்படியெல்லாம் மாறுபட்ட வடிவங்கள் இருக்கின்றன! சில மீசைகள் வளைந்து இருக்கின்றன என்றால், சில மீசைகள் சுருண்டும், வேறு மீசைகள் காம உணர்வுகளை வெளிப்படுத்தும் சேட்டைகள் கொண்டவையாகவும் இருக்கின்றன. எவற்றையும்விட அவை பெண்களைக் காதலிக்கின்றன!
சில மீசைகள் ஊசிகளைப்போல கூர்மையாக இருக்கும். அவற்றுக்கு மது, குதிரை, போர் ஆகியவற்றின் மீது விருப்பம் அதிகம்.
சில மீசைகள் பெரியதாகவும், கீழ்நோக்கி இறங்குவதாகவும், பயப்படச் செய்வதாகவும் இருக்கும். அந்தப் பெரிய மீசைகள் நல்ல குணநலன்களை மறைத்துவிடுகின்றன. பலவீனத்திற்கு அருகில் நின்றிருக்கும் நன்மையையும், வெட்கத்தை எல்லையாகக் கொண்டிருக்கும் அடக்கத்தையும் அது வெளிப்படுத்துகிறது.
இவற்றையெல்லாம்விட நான் மீசையை மதிப்பதற்குக் காரணம் அது ஒரு ஃப்ரெஞ்ச் சாயலும் பழக்கமும் கொண்டிருப்பதுதான். அது எங்களுடைய முன்னோர்களிடமிருந்தும், சிறையறைகளிலிருந்தும் வெளியே வந்த பாரம்பரியம் என்பதே உண்மை. அது எங்களுடைய தேசிய அடையாளமாகத் தொடர்கிறது. அது காதல், வீரம், தைரியம் ஆகியவற்றின் சின்னமுமாக இருக்கிறது.
அது ருசியாக இருக்கும் மதுவில் தன்னைத்தானே மூழ்க வைத்துக் கொண்டு எழுகிறது எப்படி அழகாகத் தடவி விடுவது என்பது அதற்கு தெரியும். பெரிய ரோமக் காடுகளைக் கொண்ட தாடிகள் அவை செய்வதைப் பின்பற்றுகின்றன.
மன்னிக்க வேண்டும்! மீசைகளை நினைத்துக் கண்ணீர் விடவும், மீசைகளைக் காதலிக்கவும் என்னைத் தூண்டிய சம்பவத்தை நான் இப்போதும் நினைத்துப் பார்க்கிறேன்.
போர்க் காலத்தில் நடைபெற்றது அந்தச் சம்பவம். அப்போது நான் என் தந்தையின் வீட்டில் இருந்தேன். அப்போது நான் ஒரு சிறிய பெண்ணாக இருந்தேன். ஒருநாள் எங்களுடைய வீட்டிற்கு அருகில் இருந்த வயலில் போர் வீரர்களுக்கு இடையே ஒரு மோதல் உண்டாகி விட்டது. காலையில் இருந்தே பீரங்கி, துப்பாக்கி ஆகியவற்றின் சத்தத்தை நான் கேட்டுக்கொண்டே இருந்தேன். சாயங்காலம் ஆன போது, ஒரு கர்னல் எங்களுடைய வீட்டிற்கு வந்து வராந்தாவில் நின்றிருந்தார். மறுநாள் அவர் அங்கிருந்து கிளம்பிவிட்டார். வெளியே வயலில் ஏராளமான ராணுவ வீரர்கள் இறந்து கிடக்கிறார்கள் என்று என் தந்தையிடம் கூறுவதற்காக வந்திருந்தார். அந்த ராணுவத்தில் பணிபுரியும் அதிகாரி. அவர்களை எங்களுடைய வீட்டிற்குக் கொண்டு வந்து ஒன்றாக அடக்கம் செய்ய வேண்டும் என்பதற்காகத்தான் அவர் அங்கு வந்தார். அந்த பைன் மரங்கள் நிறைந்திருந்த பாதையில், ஸ்ட்ரெச்சரின் இரு பக்கங்களிலும் அவர் பிணங்களை அடுக்கினார். அவை அழுகிப்போய் கெட்ட நாற்றம் எடுத்ததால், ஒரு பெரிய குழியை வெட்டும்வரை அவற்றின் தலையைத் தவிர பிற பாகங்களை மண்ணைப் போட்டு மூடியிருந்தார். அவர்களுடைய தலைகள் மண்ணுக்குள்ளிருந்து வெளியே குதிக்கத் தயாராக இருப்பதைப்போல இருந்தன. அவற்றின் கண்கள் மூடியிருந்தன.
நான் அதைப் பார்க்க வேண்டும் என்று நினைத்தேன் ஆனால், இரண்டு வரிசைகளாகக் கிடக்கும் பரிதாபமான அந்த முகங்கள் என்னை மயக்கமடையச் செய்து விடுமோ என்று நான் பயப்பட்டேன்.
அவை ஒவ்வொன்றும் எந்த நாட்டுக்குச் சொந்தமானது என்பதைத் தெரிந்து கொள்வதற்காக நான் அவை ஒவ்வொன்றையும் கூர்ந்து பார்க்க ஆரம்பித்தேன். அவற்றின் சீருடைகள் மண்ணுக்குக் கீழே இருந்தன. ஆனால், உடனடியாக... ஆமாம்- உடனடியாக... அவர்கள் ஃப்ரெஞ்ச் நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதை நான் புரிந்து கொண்டேன்.
இறுதி நிமிடத்திலும் அவர்கள் அழகானவர்களாக இருக்கட்டும் என்று நினைத்து அந்தப் போராட்ட நாளன்று, அவர்களுடைய முகங்கள் முழுமையாக சவரம் செய்யப்பட்டிருந்தன. எனினும், அவர்களுடைய தாடி ரோமங்கள் வளர்ந்திருந்தன.