ரோகிணி - Page 2
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6349
ப்ளாஸ்டிக் வலைகளுக்குள் மூடப்பட்ட கூந்தலுடனும் நைலானின் மூடிய, பார்க்க சகிக்காத தோற்றத்துடனும் நடந்து செல்லும் அவர்களைப் பார்ப்பது என்பது எவ்வளவு மோசமான விஷயம்! அவர்களுடைய கேடு கெட்ட நிலை தனக்கு வரவிடாமல் செய்த நட்சத்திரங்களுக்கு நன்றி கூறுவதற்காக மட்டுமாவது அவள் அவர்களுடன் நட்பைத் தொடர்ந்து கொண்டிருந்தாள். அவள் ஆசைப்பட்டவை அனைத்தும் அவளுக்குக் கிடைத்திருந்தன. பெரிய வீடு, நிறைய வேலைக்காரர்கள், ரத்தினம் பதிக்கப்பட்ட நகைகள், குளிர்சாதன வசதி இணைக்கப்பட்ட படுக்கையறை, ஊரிலேயே மிகச் சிறந்த சமையல்காரன்- எல்லாம் அவளுக்குக் கிடைத்தன. ஆனால், அவற்றுடன் அவள் விலைபேசி வாங்காத வேறு சிலவும் இருந்தன. உதாரணத்திற்கு- பகல் முழுவதும் தொல்லைகள் கொடுத்துக் கொண்டிருக்கும்- அவள் எங்கு சென்றாலும் பின் தொடர்ந்து வந்து கொண்டிருக்கும் மாமியார், இரவில் கணவனின் குளிர்ந்து போன மென்மையான கைகள்... தன்னைச் சீக்கிரமே விதவை ஆக்கக் கூடாதா என்றுகூட அவள் ரகசியமாக கடவுளிடம் ஒன்றிரண்டு தடவை வேண்டிக் கொண்டதும் உண்டு. “ஓ... நான் என்னை நானே வெறுக்கிறேன்”- அவள் கண்ணாடியைப் பார்த்து முணுமுணுத்தாள்: “நான் ஒரு பாவி...” அந்த நேரத்தில் கதவைத் திறந்து கொண்டு அவளுடைய கணவன் அறைக்குள் வந்தான்.
“நீ தயாராயிட்டியா?”- அவன் கேட்டான். கடுகு நிறத்திலிருந்த ஒரு சட்டையையும் அகலம் அதிகமாக இருந்த கால் சட்டையையும் அவன் அணிந்திருந்தான். அவனுடைய முகத்தை மீண்டும் ஒருமுறை பார்ப்பது என்பது அவளுக்கு சகித்துக் கொள்ள முடியாத ஒரு விஷயமாக இருந்தது. ‘அவன் தன்னுடைய உணவு விஷயத்திலாவது கவனமாக இருக்கக் கூடாதா?’ அவள் தனக்குத்தானே கூறிக் கொண்டாள்: ‘கொலைச் சோறு உண்ணும் குற்றவாளியைப் போல இருக்கும் நாசமாகப் போன தீனியையாவது நிறுத்தியிருக்கக் கூடாதா?’ தன்னுடைய சொந்த முகத்தை மீண்டும் கொண்டு வந்து அவள் புன்னகைத்தாள். அவன் தன் இரு கைகளாலும் அவளுடைய இடுப்பைப் பிடித்தான். நிர்வாணமாகவும் குளித்து முடித்து இப்போதும் சிறிது ஈரத்துடனும் இருந்த தோள்களில் முத்தமிட்டான். வலையில் சிக்கிக் கொண்ட ஒரு மிருகத்தைப்போல தன்னுடைய மனம் பயந்து போய் உள்ளே இழுத்துக் கொள்வதை அவளால் உணர முடிந்தது. எனினும், அவனுக்கு எந்தவித சந்தேகமும் உண்டாகவில்லை. அவளுடைய மரத்துப்போன நிலையை அவன் கணக்கிலேயே எடுத்துக் கொள்ளவில்லை. பெண்களைப் பற்றி அவனுக்கு சில தீர்மானிக்கப்பட்ட கருத்துக்கள் இருந்தன. நல்ல முறையில் வளர்ந்த பெண்கள் மிகவும் அமைதியானவர்களாக இருப்பார்கள் என்று அவன் நினைத்தான். அதனால் அவனுடைய வியர்வை வழிந்து கொண்டிருக்கும் உடலுக்குக் கீழே ஒரு சிலையைப்போல அவள் படுத்துக் கிடந்தபோது, அவன் அவளிடமும் தன்னுடைய திருமணத்திலும் திருப்தி அடைந்தான். காம வெறியைத் தணித்துக் கொள்வதற்காக அவன் சிறு நகரங்களிலிருந்துக்கும் விலைமாதர்களைத் தேடிச் சென்றான். அவன் கொடுத்த பணத்திற்கு விலையாக அவர்கள் முனகல்களையும் பெருமூச்சுகளையும் அவனுக்குத் திருப்பித் தந்தார்கள்.
“கோவிலுக்குப் போவோமா?”- அவன் அவளிடம் கேட்டான்: “வெயில் அதிகமாவதற்கு முன்னால் நாம திரும்பி வந்திடணும்.”
அவர்கள் கீழே படிகளில் இறங்கி வந்தபோது வேலைக்காரர்கள் அவர்களையே வெறித்துப் பார்த்தார்கள். அவர்களைப் போன்ற வசதி படைத்த ஆட்களுடன் பழகிக் கொள்வது என்பது அவர்களைப் பொறுத்தவரையில் அபூர்வமான ஒரு விஷயமே. பணம் படைத்தவர்கள் எப்படி நடப்பார்கள், எப்படிப் பேசுவார்கள், எப்படி உணவு சாப்பிடுவார்கள் என்பதையெல்லாம் தெரிந்துகொள்ள அவர்களுக்கு ஆர்வமாக இருந்தது. அவர்களுடைய வாழ்க்கை முறை பணக்காரர்களுடையதிலிருந்து வேறுபட்டது என்ற விஷயத்தில் அவர்கள் உறுதியாக இருந்தார்கள். ஆனால், எப்படியாவது அந்த ரகசியத்தைத் தெரிந்து கொண்டால், அவர்களும் பணக்காரர்களாக ஆகிவிடலாம். அவர்களும் அவர்களுடைய ஒல்லியான இடைகளைக் கொண்ட மனைவிகளுடைய கையைப் பிடித்துக் கொண்டு, கஸ்தூரி வாசனையைப் பரவவிட்டுக் கொண்டு படிகளில் இறங்கி வருவார்கள்.
டிரைவர் காரின் கதவைத் திறந்து கையில் பிடித்துக் கொண்டு காத்து நின்றிருந்தான். முதலாளியின் மனைவி பார்க்கும்போது, கன்னங்களில் சிவப்பு நிறம் உண்டாகக்கூடிய இயல்பைக் கொண்ட ஒரு இளைஞன்தான் டிரைவராக இருந்தான். அவன் மோசமான தோற்றத்தைக் கொண்டவன் அல்ல. காரில் ஏறும்போது ரோகிணி நினைத்துப் பார்த்தாள். அவள் அவனிடம் சிறிது குழைந்து பேச ஆரம்பித்தால், அவனுடைய நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பதை அவள் தெரிந்து கொள்ளலாம். அப்படி தெரிந்து கொள்வது மிகவும் சுவாரசியமான ஒரு விஷயமாக இருக்கும். ஒருநாள் வேண்டுமென்றே அவள் அவனுடைய கைகளிலோ காருக்கு அருகிலேயோ மயக்கமடைந்து விழ வேண்டும். அப்போது அவன் அவளைத் தொட வேண்டியதிருக்கும். அவன் வெட்கப்பட்டு சிவப்பான். அவனுடைய இதயம் ‘படபட’வென்று அடித்துக் கொண்டிருக்கும். அந்தக் காட்சியை நினைத்துப் பார்த்து அவள் சிரித்தாள். அவன் தன்னை மிகவும் ஆழமாகக் காதலிக்கிறான் என்ற விஷயத்தில் அவள் உறுதியாக இருந்தாள். அவளுக்கு வயது நாற்பதாகிவிட்டது. ஆனால், மிகவும் வசீகரமான நாற்பது தன்னுடையது என்பதும் அவளுக்குத் தெரியும். உடலில் ஒரு அவுன்ஸ்கூட கொழும்பு அதிகமாக இல்லை. அவளுடைய மெலிந்த உடல், அகலம் குறைவான பாதங்கள், சிறிய உள்ளங்கைகள், பெரிய மார்பகங்கள் ஆகியவற்றின்மீது அவளுக்கு மதிப்பு இருந்தது. ரவிக்கைக்கு உள்ளே ப்ரேஸியர் அணியாமல் அவள் அதை மதிப்புடன் வெளியே காட்டினாள். ரவிக்கைக்கு அடியில் எதையும் அணியாமல் இருப்பதற்குக் காரணம் என்ன என்று அவளுடைய கணவன் பல நேரங்களில் கேட்டிருக்கிறான். ‘பையைப்போல தொங்கிக் கொண்டிருக்கும் மார்பகங்களைக் கொண்ட பெண்களுக்குத்தான் ப்ரா வேண்டும். தனக்கு அது தேவையே இல்லை’ என்று அவள் பதில் சொன்னாள். குழந்தைகள் இல்லாமல் போனது ஒரு வகையில் பார்க்கப் போனால் நல்லது என்றே சொல்ல வேண்டும். இல்லாவிட்டால் அவர்கள் மார்பகங்களின் கண்களைச் சப்பி இழுத்து, மார்பகங்களின் அழகை பாழ் பண்ணியிருப்பார்கள். இது அவள் தன்னுடைய மனதிற்குள் அடைத்துப் பூட்டி வைத்திருந்த இன்னொரு ரகசியம். தன்னுடைய மாமியாருக்கு எந்தக் காலத்திலும் புரியாத இந்த மாதிரியான ரகசியமான சிந்தனைகளும் தன்னிடம் இருக்கின்றனவே என்பதை நினைத்தபோது அவளுக்கு அடக்க முடியாமல் சிரிப்பு வந்தது. ‘என் இதயம் ஒரு வங்கி லாக்கரைப் போன்றது’- அவள் தனக்குத்தானே கூறிக் கொண்டாள்: ‘அதைத் திறப்பதற்கான சாவி என்னிடம்தான் இருக்கிறது.’
அவளுடைய புன்சிரிப்பைப் பார்த்த கணவன் சொன்னான்: “நீ இன்னைக்கு நல்ல மூடில் இருப்பது போல தெரியுதே!”
அதற்கு அவள் ‘ஆமாம்’ என்று தலையை ஆட்டினாள்.