ரோகிணி - Page 5
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6238
“அது சரிதான்”- அவன் சொன்னான்: “ஆனால், நமக்கு ஒரு குழந்தை இல்லைன்ற விஷயத்துல, எனக்கு அப்படியொண்ணும் வருத்தம் இல்ல. உனக்கு இருக்கா?”
“இல்ல... நான் இப்போ இருக்குறது மாதிரி எப்போதும் சந்தோஷமாகத்தான் இருக்கேன்”- அவள் சொன்னாள். அவன் தயார் பண்ணித் தந்த தேநீரைப் பருகியவாறு அவர்கள் இருவரும் ஒன்றாகச் சிரித்தார்கள். அந்தக் காலை வேளையில் அவன் சிவந்துபோய் நல்ல உற்சாகத்துடன் இருந்தான். காற்று வீசிய இரவு அவனுக்கு எந்தவொரு தொந்தரவையும் தரவில்லை. அவனுக்கு அதிகபட்சம் முப்பது வயது இருப்பது மாதிரிதான் தோன்றும். பளபளப்புடன், சதைப் பிடிப்பு கொண்ட, நன்றாக சாப்பிடக்கூடிய ஒரு குழந்தையைப் போல அவன் இருந்தான். அவனுடைய வாயைச் சுற்றி எப்போதும் பாலின் வாசனை வந்து கொண்டிருந்தது. அவன் ஒவ்வொரு மணி நேரம் ஆகிறபோதும், ஒரு கோப்பை பால் குடித்துக் கொண்டிருந்தான். இல்லாவிட்டால் தனக்கு இருக்கும் அல்சர் நோய் பெரிதாகிவிடும் என்று அவன் பயந்தான். அவனுக்கு மதுவின்மீது அப்படியொன்றும் விருப்பம் இல்லை. அவன் புகை பிடிப்பதில்லை. ஒருவகையான `அம்மாவின் பிள்ளை’யாக அவன் இருந்தான். ‘அவனுடைய தாய் இறந்தபிறகு நான் அவனைத் தாயைப் போல பார்த்துக் கொள்வேன்’- அவள் மனதிற்கும் கூறிக் கொண்டாள். அவனுக்கு எப்போதும் மனைவியைவிட ஒரு தாய்தான் வேண்டும்.
“நான் காலையில குளிக்கப் போனப்போ யாரைப் பார்த்தேன் தெரியுமா?”- அவன் சொன்னான்: “என்னுடைய பழைய தோழன் விஜயன் பல வருடங்களாக வெளியே எங்கேயோ இருந்தான். அவனை உயிரோடு பார்க்க முடியும் என்றுகூட நான் நினைச்சது இல்லை. அவன் நீண்ட காலமாக பஹரினில் இருந்தான். திருமணம் செய்வதற்காக இந்தியாவுக்கு வந்திருப்பதாகச் சொன்னான். அப்படின்னா கன்னியாகுமரியில் என்ன பண்றேன்னு நான் கேட்டேன். அதற்கு அவன் திரும்பி என்னைப் பார்த்துக் கேட்கிறான், ‘ஏன், தமிழ்நாட்டுல இளம் பெண்கள் இல்லையா?’ என்று. அவன் அதே பழைய விஜயன்தான். நகைச்சுவையாக ஏதாவது பேசிக் கொண்டிருப்பதும் சிரிப்பதும்... அவன் இங்கு மதிய உணவிற்கு வர்றப்போ உனக்கு அவனை அறிமுகப்படுத்தி வைக்கிறேன். நான் அவனை வரச் சொல்லி இருக்கேன்...”
“நீங்க இந்த நண்பனைப் பற்றி ஒருமுறைகூட என்னிடம் சொன்னது இல்லையே!”- அவள் சொன்னாள்.
“இல்ல... சொன்னது இல்ல... அவன் இறந்து போயிட்டான்னு நினைத்ததால், நான் சொல்லாம இருந்துட்டேன். இப்போ என்னன்னா அவன் உயிருடன், திடகாத்திரமா இருக்கான்.”
“இந்த இடத்தின் சோர்வை மாற்றுகிற விஷயத்தில் அவன் நமக்கு உதவியாக இருப்பான்”- அவள் சொன்னாள்: “அவன் தன்னுடைய இந்தியாவிற்கு வெளியில் இருந்த வாழ்க்கையைப் பற்றி ஏதாவது கூறுவான்.”
“நீ அவனைக் காதலிக்க மாட்டேன்னு நான் நினைக்கிறேன்”- கணவன் சொன்னான்: “அவன் இளம் வயதில் பெண்களை ஈர்க்கக் கூடியவனாக இருந்தான். இப்போதும் பார்க்க அழகன்தான். உன்னைப் பார்த்தால் அவன் குழைவான் என்பதை மட்டும் என்னால உறுதியா சொல்ல முடியும். பஹரினில் இருக்கும் பெண்களைவிட நீ நாகரிகமானவன். அது மட்டும் உண்மை.”
3
அவள் மகிழ்ச்சியுடன் சிரித்துக் கொண்டே அவனுடைய கையைப் பிடித்து அழுத்தினாள். அது வழக்கம்போல குளிர்ச்சியாக இருந்தது.
விஜயன் மதிய உணவிற்காக வந்தபோது, அவர்கள் பிரம்பு நாற்காலியில் அமர்ந்திருந்தார்கள். ஒரு நிமிட நேர வழக்கமான உபச்சார வார்த்தைகளை மறந்துவிட்டு அவன், “நான் மழையில மாட்டிக்கிட்டேன்” என்று சொன்னான். ஒரு நிமிடத்திற்கு முன்னால் பெய்த மழை அவனுடைய நீலநிற சஃபாரி சூட்டை நனைத்து விட்டிருந்தது. புதுமணத் தம்பதிகள் புதிய ஆடைகள் அணிந்து நடக்கும் புல் தரையில் சாரல் மழை விழுந்து தூசியைப் பரக்கச் செய்வதை அவன் பார்த்துக் கொண்டிருந்தான்.
“என் மனைவி ரோகிணி”- கணவன் மதிப்புடன் தன்னுடைய மனைவியை விருந்தாளிக்கு அறிமுகப்படுத்தி வைத்தான்.
“நாம இதற்கு முன்னால் பார்த்திருக்கிறோம்னு நான் நினைக்கிறேன்”- அவளுடைய கண்களைக் கூர்மையாகப் பார்த்தவாறு விஜயன் சொன்னான். அதைக் கேட்டு அவள் ஒரு மாதிரி ஆகிவிட்டாள். இப்படிப்பட்ட ஒரு மனிதனைப் பார்த்ததாக அவளுக்கு ஞாபகத்திலேயே இல்லை. உயரமான தோற்றத்தையும், அழகான உடலையும் கொண்டிருந்த அவன் தன் தலை முடியை நீளமாக வளர்த்திருந்தான். அவனுடைய ப்ரவுன் நிறத்தில் இருந்த கண்கள் அவனுடைய பரம்பரையைப் பற்றி சந்தேகங்களை உண்டாக்கின. அவனுடைய உடல் நல்ல வெள்ளை நிறத்தில் இருந்தது. இப்படிப்பட்ட ஒரு மனிதனை ஒருமுறை பார்த்திருந்தால், அவள் மறந்திருக்க மாட்டாள். தொடர்ந்து அவள் சிரித்தாள். அந்தச் சிரிப்பில் இருந்த நட்பின் வெப்பம் அவளுக்குப் பிடித்திருந்தது. அவளுக்கு நிம்மதியைத் தந்தது.
“இல்லை...” அவள் சொன்னாள்: “எனக்குத் தோணல.”
விஜயன் சாதாரணமாகச் சிரித்தான். “ஒருவேளை கடந்து போன வருடங்களில் நான் மிகவும் மாறி இருந்திருக்கலாம்”- அவன் சொன்னான்: “உங்களை போர்டிங்கில் வந்து நான் பார்த்த காலத்தில்...”
அவள் தன் கணவனைப் பார்த்தாள். அவன் அந்த மனிதன் கூறியதை நம்புவதைப் போல இருந்தது. “உங்களுக்கு தவறு நடந்திருக்கணும்”- அவள் தலையைக் குலுக்கிக் கொண்டு மெதுவான குரலில் சொன்னாள்: “நான் எந்த போர்டிங் பள்ளிக் கூடத்திலும் படித்தது இல்லை.”
அதற்குப் பிறகும் விஜயன் சிரித்தான். மரியாதையுடன் அவன் தலை வணங்கினான். “என் தவறாக இருக்கலாம் மேடம்”- அவன் சொன்னான்: “இருபது வருடங்களுக்கு முன்னால் எனக்கு ஒரு ரோகிணியை மிகவும் நெருக்கமாகத் தெரியும்.”
ஒரு தவறு காரணமாக மதிய உணவு அவளுக்கு மகிழ்ச்சியானதாக இல்லை. அவளுடைய கணவன் வந்திருந்த புதிய மனிதனை முழுமையாக நம்பி விட்டதைப் போல் இருந்தது. ஜன்னல் மீது சாய்ந்து நின்று கொண்டு, அந்த ஆண்கள் புகைப் பிடிப்பதை ரோகிணி பார்த்துக் கொண்டு நின்றிருந்தான். விஜயன் அவனுடைய பழைய நண்பனாகத் தெரியவில்லை. அவனுக்கு சதைப் பிடிப்புடன் கூடிய நீளமான கால்கள் இருந்தன. அவனுடைய ஆடைகளுக்குக் கீழே திரண்டு தெரிந்த சதைகளை அவள் பார்த்தாள். தனக்கு இருபது வயது இருக்கும்போது தன்னைத் திருமணம் செய்வதற்கு தன்னுடைய தடிமனான கணவன் வந்ததற்குப் பதிலாக இந்த மனிதன் ஏன் வரவில்லை என்று அவள் நினைத்தாள். அவனைப் போன்ற அழகான தோற்றத்தைக் கொண்டிருக்கும் அவனுடைய பிள்ளைகளைப் பெற்றெடுக்க அவள் விருப்பப்பட்டிருப்பாள். தன்னுடைய வயிற்றுக்குள் ஒரு சுகமான வலியை உண்டாக்கிய அந்த சிந்தனையை அவள் ஒரு தோள் குலுக்கல் மூலம் வீசி எறிந்தாள்.
+Novels
Short Stories
July 31, 2017,
May 28, 2018,
June 3, 2016,
March 7, 2016,