ரோகிணி - Page 6
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6349
இது வெறும் மிருகத்தனமான வெறியா? அவள் தனக்குத்தானே கேட்டுக் கொண்டாள். நல்ல திடகாத்திரமான உடலைக் கொண்டிருக்கும் ஒரு ஆணுக்கு முன்னால் தன்னுடைய மரத்துப்போன தன்மை திடீரென்று இல்லாமல் போய்விடுவதா? அப்படி இருக்கவே கூடாது. உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த வேண்டும். போதாதற்கு, அவனைப் பார்க்கும்போது ஒரு பொறுக்கி மாதிரி இருக்கிறான். அவளை இருபது வருடங்களுக்கு முன்பே தெரியும் என்பது அவனே கற்பனை பண்ணி உண்டாக்கிய ஒன்று என்று அவள் உறுதியாக நம்பினாள். ஒருவேளை அவனுடைய ஆரம்ப அடி வைத்தல் என்பதாகக் கூட அது இருக்கலாம். தான் தெளிவான மனதுடன் நடந்து கொண்டோம் என்பதைக் குறித்து அவளுக்கு மகிழ்ச்சி உண்டானது. அது உண்மையாகவே மிகவும் இக்கட்டான ஒரு விஷயம்தான். அவனை அங்கு வரவழைத்துத் தன்னை அறிமுகப்படுத்தியதற்காக அவள் தன் கணவனைக் குறைப்பட்டாள். அவனுக்கு அந்த மனிதனுடன் பேச வேண்டுமென்றால், அவர்கள் இருவரும் ஒன்று சேர்ந்து ஒரு ஹோட்டலுக்கோ வேறு எங்காவதோ போயிருக்கலாமே! வீட்டில் இருக்கும் பெண்களுக்கு அறிமுகப்படுத்தி வைக்கக்கூடிய தரமான மனிதன் இல்லை அவன். இந்த விஷயத்தைப் பற்றித் தன் கணவனிடம் பேச வேண்டும் என்று அவள் முடிவெடுத்தாள். நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் என்று தங்களைக் குறிப்பிட்டுக் கூறிக் கொள்ளும், நகர வாழ்க்கைக்கு முற்றிலும் பொருத்தமாக இல்லாதவர்களின் நகாரிகத்திற்கு எதிராக அவனுக்கு எச்சரிக்கை தர வேண்டியது அவசியமும் கூட என்று அவள் நினைத்தாள். அப்படிப்பட்டவர்கள் பெண்களைக் கூட்டிக் கொடுப்பவர்களும் வழிப்பறிச் செயலில் ஈடுபடக் கூடியவர்களுமாக இருப்பார்கள். தன்னுடைய மென்மையான, நிரபராதியுமான கணவனிடமிருந்து பணம் பறிக்க இந்த விஜயன் திட்டமிட்டிருக்கலாம். நிச்சயமாக பண விஷயமாக இல்லையென்றாலும், வேறு ஏதோ ஒன்றில் தரகராக அவன் இருக்க வேண்டும். அந்த மனிதனின் சிரிப்புச் சத்தம் அவள்மீது படர்ந்து வந்தது. அடிபட்டவளைப் போல அவள் கண்களைச் சுருக்கினாள். சூரிய ஒளி வந்திருந்த விருந்தாளியின் கன்னங்களை ஒளிரச் செய்தன. பொறுக்கி எவ்வளவு அழகாக இருக்கிறான்! கண்களை வேறு பக்கம் திருப்ப வேண்டும் என்று விரும்பிய அவள் நினைத்தாள்: ‘என்னைத் திரும்பவும் வீட்டுக்கு அழைச்சிட்டுப் போகும்படி கணவனைக் கட்டாயப்படுத்தணும்.’
மதியத்திற்குப் பிறகு சுசீந்திரத்திற்குப் போகலாம் என்று விஜயன்தான் சொன்னான். அவள் சொன்னாள்: “எனக்குத் தலை வலிக்குது.” அதைக்கேட்டு அவளுடைய கணவன் நிதானத்தை இழந்துவிட்டான். “நீ நாடகம் ஆடுறே!”- அவன் அவளுடைய கையைப் பிடித்துக் கொண்டு சொன்னான்: “உனக்கு எந்தவொரு பிரச்சினையும் இல்லை. இன்னைக்குக் காலையிலதானே கோவிலுக்குப் போகலாம் என்று நீ சொன்னே? அதுதானே உண்மை? அப்படிப்பட்ட பயணத்திற்கு கூட வர்றதுக்கு சரியான ஆள் விஜயன்.”
கோவிலை அடைந்தபோது வயதான ஒரு வழிகாட்டி அவளுக்கு அருகில் வந்தார். “என் பெயர் பிள்ளை”- அவர் சொன்னார்: “நானும் ஒரு மலையாளிதான்.” அவர்கள் அந்த மனிதரைப் பின் தொடர்ந்து நடந்தார்கள். அவர் பெருமையாகக் கூற வேண்டியவற்றைப் புகழ்ந்து கூறினார். அவளுக்குச் சோர்வு உண்டானது. திரும்பவும் கெஸ்ட் ஹவுஸுக்குச் சென்று படுத்துத் தூங்க வேண்டும்போல் அவளுக்கு இருந்தது. மதிய தூக்கத்திற்கான நேரமாக அது இருந்தது. அது இல்லாமல் போனால், அவளுக்குக் கோபம் வந்துவிடும். ஒரு இருட்டான மூலையில் திரும்பியபோது, விஜயனின் கை அவளுடைய தொடையில் பட்டது. அவள் அதிர்ச்சியடைந்து நடுங்கினாள். அவன் தன்னைத் தொட முயற்சிக்கிறானோ? கண்களை மூடி, பின் பாகத்தை குலுக்கிக் கொண்டு, ஆண்களுக்கு வலை வீசிக் கொண்டு, நகரத் தெருக்களில் அலைந்து கொண்டிருக்கும் விலை குறைந்த சரக்குகளில் ஒன்றுதான் என்று அவன் நினைத்திருக்கிறானோ? – இப்படியெல்லாம் அவள் நினைத்தாள். “நான் திரும்பப் போகணும்”- அவள் உரத்த குரலில் சொன்னாள்: “நான் மிகவும் சோர்வாக இருக்கேன்.”
“உங்களுக்கு திடீர் திடீர்னு சோர்வு வரும். அப்படித்தானே?”- விஜயன் கேட்டான். அதைக் கேட்டு அவளுடைய கணவன் சிரித்தான். “விஜயா, உனக்குப் பெண்களைப் பற்றி தெரியாது. அவங்க என்னையும் உன்னையும் மாதிரி இல்ல...”
4
“அதெல்லாம் எனக்கும் தெரியும்”- அந்த மனிதன் சொன்னான்: “பெண்களைப் போல நம்மைப் போன்றவர்கள் இல்லை என்பதைக் கண்டுபிடிப்பதற்கான சந்தர்ப்பம் எனக்கு கிடைச்சிருக்கு.” தான் ஏதோ மிகப் பெரிய நகைச்சுவையைக் கூறிவிட்டோம் என்பது மாதிரி அவன் உரத்த குரலில் சிரித்தான். ரோகிணியின் கோபம் பல மடங்கு அதிகமானது. அவள் காரை நோக்கி நடந்தாள். “எனக்கு இந்த கோவில்கள் போதும்”- அவள் சொன்னாள்.
“நீங்க நகரத்தைச் சேர்ந்த பெண்ணைப் போலவே பேசுறீங்க!”- விஜயன் சொன்னான்: “எனக்கு இந்த சிலைகள் மீது நம்பிக்கை இல்லை. நாம ஏன் சதையும் எலும்பும் கொண்ட தேவர்களாகவும் தேவிகளாகவும் ஆகக் கூடாது? ஒரு மாறுதலுக்காகவாவது அப்படிப்பட்ட ஒரு தேவி எனக்கு இருந்தாள் என்றால், என்ன கேட்க வேண்டும் என்று எனக்குத் தெரியாது. அந்த அளவிற்கு வாழ்க்கையில் எனக்கு சந்தோஷம் இருக்கும்.”
“நீ எவ்வளவு சீக்கிரமா முடியுமோ, அவ்வளவு சீக்கிரமா நீ திருமணம் செய்துக்கணும்”- ரோகிணியின் கணவன் சொன்னான்: “ஒருவேளை உனக்குப் பொருத்தமான ஒரு ஜோடியை என் மனைவியே தேர்ந்தெடுக்கலாம்.”
“அது கொடுமையான ஒரு செயலாக இருக்கும்”- அவளுடைய கண்களை உற்றுப் பார்த்துக் கொண்டே விஜயன் சொன்னான். அவள் வேகமாக காருக்குள் ஏறினாள்.
“ஏறு”- அவளுக்கு அடுத்து உட்காரும்படி விஜயனை அழைத்தவாறு அவளுடைய கணவன் சொன்னான். அவள் கணவனுக்கும் புதிய அறிமுகமில்லாத மனிதனுக்கும் நடுவில் நசுங்கிப்போய் உட்கார்ந்திருந்தாள். கார் வளைவில் திரும்பும் போதெல்லாம் அவன் அவளுடைய மார்பகத்தை நோக்கிச் சாய்ந்தான். தன் கணவனுக்கு என்ன ஆகிவிட்டது என்று அவள் தன்னைத்தானே கேட்டுக்கொண்டாள். அவன் நடப்பவை எதையும் பார்க்கவே இல்லையா? அந்த மனிதன் தன்னை பலாத்காரம் செய்ய முயல்கிறான். நாற்பதாவது வயதில்... காருக்குள் வைத்து... பல வண்ணங்களில் ஆடைகள் அணிந்திருக்கும் ஒரு பொறுக்கி மனிதனால் முரட்டுத்தனமாக கை வைக்கப்படுவது என்பது... அவள் அமைதியாகத் தன் விதியை நொந்து கொண்டாள். அன்று சாயங்காலம் உணவு எதுவும் சாப்பிடாமல் அவள் எடுத்து விட்டாள். உள்ளே நுழைவதற்கு முன்னால் அவள் இருவருக்கும் குட் நைட் சொன்னாள். அவர்கள் அப்போதும் விஸ்கியும் சோடாவுமாக அமர்ந்திருந்தார்கள்.
அந்த இருட்டு வேளையில், இதற்கு முன்னால் அறிமுகமாகியிராத இரண்டு கைகளால் உறக்கத்திலிருந்து தட்டி எழுப்பப்பட்ட அவள் உரத்த குரலில் கத்தினாள்: “நீங்க யாரு? நீங்க இந்த நேரத்தில் என் படுக்கையறையில் என்ன செய்றீங்க?”