ஒரு முத்தத்தின் ஞாபகம்
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 6177
ஒரு முத்தத்தின் ஞாபகம்
பாறப்புரத்து
தமிழில் : சுரா
இளம் மஞ்சள் நிறமுடைய சிறிய இலைகளையும், சிவப்பு நிற சிறிய மலர்களையும் கொண்ட அழகான முட்புதரால் மூடப்பட்டுக் கிடந்தது அந்த மண்மேடு. மண்மேடு என்ற வார்த்தையைப் பயன்படுத்தினாலும், உயிர்பிரிந்த ஒருவன் அங்கு அடக்கம் செய்யப்பட்டிருக்கிறான் என்பதற்கு ஆதாரமாகக் கூறும் வகையில் என்ன இருக்கிறது? குஞ்ஞுமோள் கூறியிருக்காவிட்டால், அதைப்பற்றி எனக்கு எதுவுமே தெரிந்திருக்காது.
அழகாகக் கட்டி எழுப்பப்பட்டிருந்த கல்லறைகளுக்கு மத்தியில், ஒரு சிறிய மண்மேட்டிற்கு என்ன முக்கியத்துவம் இருந்துவிடப் போகிறது? ஒரு மழைக்காலத்தின் பாதிப்பால், அந்த மண்மேடு கிட்டத்தட்ட தரைமட்டமாகிவிட்டிருந்தது. நான்கு மழைக்காலங்களுக்குப்பிறகு அங்கு எதுவுமே இருந்ததில்லை என்னும் நிலைமை உண்டாகிவிடுமோ? அது தன்னுடைய அடையாளத்தையே இழந்துவிட்டிருக்கலாம். என்ன காரணமென்று தெரியவில்லை - சிவப்பு நிற மலர்களைக் கொண்ட முட்செடியின் கொடிகள் மட்டும், அந்த மண்மேட்டின் மீது தனிப்பட்ட காதலை வெளிப்படுத்திக் கொண்டிருந்தன. எந்தச் சமயத்திலும் வாடாமல் இருக்கும், ஒரு மலர் வளையத்தைப்போல அவை அந்த மண்மேட்டின்மீது பின்னிப் பிணைந்து கிடக்கின்றன. ஒருவேளை - காதல் உணர்வு நிறைந்த அந்த இதயத்திலிருந்து அந்த முட்செடிகள் முளைத்தெழுந்திருக்கலாம்! நிறைவேறாத ஆசைகளின் வெளிப்பாடுகளாக அந்த சிறிய பூக்கள் இருக்கலாம்.
என் கைவிரலைப் பிடித்துக்கொண்டு நின்றிருந்த குஞ்ஞுமோள் சொன்னாள் “பொன்னம்மா அக்கா புதைக்கப்பட்ட இடத்திற்குப் பக்கத்தில் சிறிஸ்துமஸ் நாளில் நாங்கள் மெழுகுவர்த்திகளை எரிய வைத்தோம். நானும், குஞ்ஞம்மா அக்காவும், அம்மாவும், அச்சன்குஞ்ஞும் மெழுகுவர்த்திகள் கொளுத்தினோம். அப்போது அம்மா அழுதாங்க. குஞ்ஞம்மா அக்காவும் அழுதாங்க. நல்ல பொன்னம்மா அக்கா! அப்படித்தானே அண்ணா?”
“ம்.”
‘அம்மாவைவிட குஞ்ஞம்மா அக்காவை விட.... பொன்னம்மா அக்கா நல்லவங்க. பொன்னம்மா அக்காவை கடவுள் அழைச்சிக்கிட்டாரு.
தனக்கு விருப்பமானவர்களை கடவுள் முன்கூட்டியே அழைத்துக்கொள்வார் என்று அம்மா சொன்னாங்க. கிழக்குப் பக்க வீட்டைச் சேர்ந்த கொச்சுப்பாப்பன்தான் பலா மரத்திற்கு அடியிலிருந்து பொன்னம்மா அக்காவைத் தூக்கி எடுத்துக்கொண்டு வந்தார். பலா மரத்தின் வேருக்கு நடுவில் கால் சிக்கியிருந்தது. இல்லாவிட்டால் நீரின் ஓட்டத்துல அவங்க அரிக்கப்பட்டுப் போயிருப்பாங்க. உடல்நலம் சரியில்லாம இருந்ததால பொன்னம்மா அக்காவை எங்கேயும் அனுப்புறதே இல்லை. நானும் அம்மாவும் பொன்னம்மா அக்காகூடவே இருப்போம். தினமும் ஏரிக்கு குளிபப்தற்காகப் போவோம். அன்றைக்கு கிழக்குப் பக்க வீட்டைச் சேர்ந்த பெரியம்மா என்னை அழைச்சிட்டுப் போனாங்க. துணி துவைப்பதற்குப் போகவேண்டாம் என்று பொன்னம்மா அக்காகிட்ட சொல்லியிருக்காங்க. குளித்துக்கொண்டு இருந்தபோதுதான் பொன்னம்மா அக்காவிற்கு உடல்நலக் கேடே வந்திருக்கு. குஞ்ஞம்மா அக்கா எல்லா விவரங்களையும் உங்களுக்கு கடிதம் மூலம் எழுதி அனுப்பலையா?”
“ம்.”
“கடவுளுக்கு என்மீதும் பாசம்தான். நான் தினமும் கடவுளை வணங்கிக்கொண்டிருக்கிறேன். அதனால கடவுள் என்னையும் சீக்கிரம் அழைத்துக்கொள்வார். அண்ணா, நீங்களும் என்னுடன் வரணும்.”
“என்ன?”
அதிர்ச்சியடைந்துவிட்டதைப்போல நான் குஞ்ஞுமோளை கண்களை விரிய வைத்துக்கொண்டு பார்த்தேன். தான் அடையப்போகும் மிககப்பெரிய காரியத்தைப் பற்றிய சந்தோஷம் அவளுடைய கள்ளங்கபடமற்ற முகத்தில் தெரிந்தது. மையால் வரைந்ததைப்போல நீல நிறத்திலிருந்த பெரிய கண்களைத் திறந்து அவள் என்னையே பார்த்தாள். அவளுடைய மிகப்பெரிய அற்புதப் பிறவியான ‘அண்ணன்’ என்ற இந்த மனிதன் கடவுளை நோக்கிச் செல்வதற்கு தயார்தானா என்று கேட்பதைப்போல அவளுடைய பார்வை இருந்தது. அவள் கூறியதைப்போல நடந்துவிடுமோ என்று சந்தேகப்பட்டதைப்போல நான் அவளைப் பிடித்து நெருக்கமாக நிற்க வைத்துக்கொண்டு கூந்தலை வருடினேன். இப்போது அவளுக்கு என் கைவிரலைப் பிடித்து நிற்கக்கூடிய அளவிற்கு உயரம் உண்டாகிவிட்டிருக்கிறதே! முதல்முறையாக நான் அந்த வீட்டிற்குச் சென்ற போது, குஞ்ஞுமோளுக்கு மூன்று வயதுதான் இருக்கும். அவளுக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து எங்கோ தூரத்திலிருக்கும் நாட்டில் பணி செய்துகொண்டு, தன்னுடைய மூத்த அக்காவுக்கு கடிதங்கள் எழுதியும் பணம் அனுப்பிக்கொண்டும் இருக்கும் அண்ணனைப்பற்றி கேள்விபப்ட்டுக் கொண்டிருக்கிறாள். வருடத்திற்குகொருமுறை ஆர்வத்தைத் தூண்டக்கூடிய விசேஷமான பொருட்களுடன் அண்ணன் வருகிறான்.
“குஞ்ஞுமோளே?”
“என்ன?”
“உன்னை கடவுள் இப்போது எந்த காரணத்தைக் கொண்டும் அழைக்கமாட்டார். நீ போய்விட்டால், பிறகு... இந்த சின்ன தங்கச்சியை அண்ணனான என்னால் எப்படிப் பார்க்க முடியும்?
“அண்ணா, நீங்களும் என்கூட வரணும்.”
“சரி. நாம ஒண்ணா சேர்ந்து போவோம். இப்போதல்ல. எவ்வளவோ நாட்கள் கழிந்தபிறகு...”
“ம்... எது எப்படி இருந்தாலும்.... அண்ணா, நீங்க என்கூட சேர்ந்து வரணும்...”
“வர்றேன்.”
“அண்ணா. எனக்கு எல்லாரின்மீதும் இருப்பதைவிட உங்கள்மீதுதான் பாசம் அதிகம்.”
“ம்..”
“அண்ணா, தினமும் நான் உங்களுக்காக கடவுளிடம் வேண்டிக் கொள்வேன்.”
“எனக்கும் இந்த குட்டி தங்கச்சியின்மீது அதே மாதிரி பாசம் இருக்கு..”
“அம்மாவும் கிழக்குப் பக்க வீட்டிலிருக்கும் பெரியம்மாவும் சொல்லுவாங்க... ‘ஓ... பொண்ணுக்கு ஒரு அண்ணன் இருக்கான். அதைப்பற்றி பெரிய நினைப்பு’ என்று...”
“அப்படியா?”
“அண்ணா, பொன்னம்மா அக்காவுக்கும் உங்கமேல பெரிய அளவுல அன்பு இருந்தது. அண்ணா, பொன்னம்மா அக்கா எப்போ பார்த்தாலும் உங்களைப் பற்றி பேசிக்கிட்டே இருப்பாங்க.”
“அப்படியா?”
நான் சற்று அதிர்ச்சியடைந்தேன். மேற்கு திசையிலிருந்த அடர்த்தியான மரங்களுக்கு மத்தியில் தெரிந்த, மறைந்துகொண்டிருந்த சூரியனின் வெளிச்சம் கல்லறைகளில் இளம் சிவப்பு நிறத்தைப் பரவச் செய்துகொண்டிருந்தது. தேவாலயத்தின் கட்டடங்கள், மறைந்து கொண்டிருக்கும் சூரியன் விட்டுச்செல்லும் பிரகாசத்தை வாங்கிக்கொண்டு ஜொலித்துக்கொண்டிருந்தன. பொன்னம்மா புதைக்கப்பட்டிருந்த இடத்தில் படர்ந்து கிடக்கும் முட்புதர்களிலிருக்கும் சிறிய பூக்களும், முன்பு இருந்ததைவிட அதிகமான சிவப்பு வண்ணத்துடன் இருக்கின்றனவோ? ஆமாம்... ஆசைகள் நிறைந்த அந்த இதயத்திலிருந்து உருவானவைதானே அந்த ரத்தப் பூக்கள்! ஆசைகள் நிறைந்த.... அனைத்தும் இந்த மண்ணில் கலந்துவிட்டிருக்கின்றன. கடைந்தெடுத்ததைப் போன்ற அழகான வடிவம் கொண்ட அவளுடைய சரீரத்தையும், கள்ளங்கபடமற்ற தன்மை சிறிதும் விலகியிராத முகத்தையும் நான் பார்க்கிறேன். அவை அனைத்தும் மண்ணாகப் போயிருக்கின்றன என்பதை நினைக்கும்போது, மனதிற்குள் இனம்புரியாத ஒரு வேதனை உண்டாகிறது.
பெண் பார்ப்பதற்காக நான் அந்த வீட்டிற்குச் சென்றபோது, பொன்னம்மா என்ற பெயரைக்கொண்ட ஒரு இளம்பெண் அங்கு இருக்கிறாள் என்ற விஷயமே எனக்குத் தெரியாது. தெரிந்துகொள்ளும் அளவிற்கு, பொன்னம்மா அந்த வீட்டைச் சேர்ந்த ஒருத்தியாக இல்லையே! தூரத்து உறவிலிருந்த ஒரு குடும்பத்தில் அனாதையாகிவிட்ட மூன்று இளம்பெண்களில் மூத்தவள் பொன்னம்மா. இரண்டு தங்கைகளை, வேறு இரண்டு உறவினர்கள் தங்களுடன் அழைத்துச் சென்றுவிட்டார்கள். திருமணம் முடிந்து நான் அந்த வீட்டிற்குச் சென்றபோதுதான் நான் அவளையே பார்க்கிறேன். கதவிற்குப் பின்னால் முகத்தை மட்டும் வெளியே காட்டிக்கொண்டு, ஒரு ஆச்சரியத்தைப் பார்ப்பதைப்போல அவள் என்னையே கண்களை அகலத் திறந்து பார்த்துக்கொண்டு நின்றிருந்தாள். நான் பார்க்கிறேன் என்பதைப் புரிந்துகொண்டதும் உடனடியாக தன்னுடைய முகத்தை உள்ளே இழுத்துக்கொண்டாள். நான் கேட்டேன்.