ஒரு முத்தத்தின் ஞாபகம் - Page 3
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 6183
மூன்று வருடங்களுக்கு முன்பு நடைபெற்றது அது. எப்போதையும்விட வேலைகள் அதிகமாக இருந்த ஒரு விடுமுறைக் காலமது. விடுமுறை முடிகிற நேரத்தில்தான் குஞ்ஞம்மாவுடன் சேர்ந்து என்னால் அந்த வீட்டிற்குச் செல்ல முடிந்தது. நாங்கள் வரப்போவதை எதிர்பார்த்துக் காத்திருந்தாள். பொன்னம்மா நான் கேட்கவேண்டும் என்பதற்காக குஞ்ஞம்மாவிடம் அவள் தன் மனக்குறைகளைக் கூறிக்கொண்டிருந்தாள்:
“பெரிய மனிதர்கள் இப்போதெல்லாம் அப்பாவிகளை நினைத்து பார்க்கிறார்களா? அண்ணன் இப்போது முன்பு இருந்த ஆளில்லையே எனினும், நாங்கள் அண்ணனை மறக்கமாட்டோம்...”
இரண்டு மூன்று வருடங்கள் பொன்னம்மாவிடம் பெரிய அளவில் மாற்றங்களை உண்டாக்கிவிட்டன என்று கூறுவதற்கில்லை. நோய் அவளை மேலும் சற்று பாதித்து விட்டிருந்ததால், சரீரத்தின் அழகிற்கு சிறிது குறைபாடு உண்டாகியிருந்தது. எனினும், பழைய உற்சாகம் அப்படியே இருந்தது. என்னுடன் உரையாடுவதிலும், நான் கூறும் தமாஷான விஷயங்களைக் கேட்டு சிரிப்பதிலும் ஒவ்வொரு நிமிடமும் அவள் விருப்பம் கொண்டிருந்தாள். சமையலறையில் மிகவும் தீவிரமாக வேலை செய்து கொண்டிருப்பதற்கு மத்தியிலும், இடையில் ஒருமுறை வெளியே வந்து நான் என்ன செய்கிறேன் என்று பார்த்துவிட்டுச் செல்வாள். பயறையோ மிளகையோ பிரித்துப் போட்டுவிட்டு வரும் வழியில், அருகில் வந்து மெதுவான குரலில் கேட்பாள் : “அண்ணா, காப்பி போட்டுக் கொண்டு வரட்டுமா? ஓட்டை நீக்கிவிட்டு முந்திரிப்பருப்பு கொண்டு வந்து தரட்டுமா?”
நான் அங்கு சென்றதற்கு மறுநாள். பொழுது புலர்ந்து கொண்டிருந்தது. குஞ்ஞம்மா எழுந்துபோவதை நான் உணர்ந்தேன். அதிகாலை வேளையில் யாருடைய தொந்தரவும் இல்லாமல் தூங்குவதற்கு நான் விரும்புகிறேன் என்ற விஷயம் அவளுக்கு நன்கு தெரியும். தூக்கத்தில் யாரோ காதில் முணுமுணுப்பதைப்போல தோன்றியது.
“காப்பி...”
நான் கண்களைத் திறக்கவில்லை. அப்போது என்னுடைய நெற்றியில் ஒரு முத்தம் பதிந்ததைப்போல இருந்தது. எனினும், கண்களைத் திறக்காமலேயே, “இன்னும் கொஞ்ச நேரம் தூங்கிக்கொள்ளட்டுமா” என்று முணுமுணுத்துக்கொண்டே நான் திரும்பிப் படுத்தேன். அப்போது குளிர்ச்சியான ஒரு கை என்னுடைய நெற்றியை வருடியது. கண்களைத் திறக்காமலே நான் அந்தக் கையைப் பற்றினேன். என்ன? வளையல் அணியாத கையாக இருக்கிறதே! அதிர்ச்சியடைந்து நான் கண்களைத் திறந்தேன். பொன்னம்மா ! வென்டிலேட்டரின் வழியாக உள்ளே வந்துகொண்டிருந்த மெல்லிய வெளிச்சத்தில் அவளுடைய முகத்தை தெளிவாக பார்க்க முடியவில்லை. கையை விடுவித்துக்கொண்டு அவள் அங்கிருந்து ஓடினாள்.
அன்று பகல் முழுவதும் நான் பொன்னம்மாவை வெளியே எங்கும் பார்க்கவில்லை. சமையலறைக் குள்ளேயிருந்து அவள் வெளியே வரவேயில்லையென்று தோன்றியது. அவளுடைய மாறுபட்ட நடத்தையைப் பார்த்து குஞ்ஞம்மாவின் அம்மா சொன்னாள் :
“பெண்ணுக்கு என்ன ஆச்சு? நோய் வரப்போவதற்கு முன்னால் இருப்பதைப்போல உள்ளேயே அடங்கிப்போய் இருக்கிறாயே! அது வருவதற்கான நேரம் இன்னும் வரவில்லையே! அமாவாசையோ பௌர்ணமியோ நெருங்கி வரும்போதுதானே அது வரும்!”
ஆமாம்... வழக்கத்திற்கு மாறாக அன்று சாயங்காலம் அவளுக்கு அந்த நோய் வந்துவிட்டது. ஒரு அலறலுடன் அவள் சமையலறையின் தரையில் விழும் சத்தத்øக்கேட்டு நான் அங்கு ஓடினேன். அப்போது நான் அன்றுவரை பார்த்த பொன்னம்மாவாக அவள் இல்லை. முகத்தில் பேய்த்தனமான வெளிப்பாடு! பற்கள் ‘நறநற’வென்று கடிக்கப்படும் ஓசை எவ்வளவு அச்சத்தை அளிக்கக்கூடியதாக இருந்தது! கைகளையும் கால்களையும் தரையின்மீது ஓங்கி அடித்துக்கொண்டும் நெளிந்துகொண்டும், வளைந்துகொண்டும் அவள் இருந்ததைப் பார்த்து நானே பயந்துபோனேன். அம்மா சமாதானம் சொன்னாள் :
“ஓ... பயப்படுறதுக்கு எதுவுமில்லை குழந்தை! அரை மணி நேரம் ஆயிட்டா எல்லாம் சரியாயிடும்.”
சிறிது நேரம் ஆனபிறகும் அவள் எந்தவித அசைவும் இல்லாமல் வெறும் தரையில் கிடந்தாள். முகத்தில் நீரைத் தெளித்ததும், கண்களைத் திறந்து பார்த்தாள். நான் முன்னால் நின்றுகொண்டிருக்கிறேன் என்பது தெரிந்ததும், முன்பு எந்தச் சமயத்திலும் பார்த்திராத தோல்வி மனப்பாங்குடன் அவள் கண்களை மூடிக்கொண்டாள்.
அதற்குப்பிறகு நான் அவளைப் பார்க்கவில்லை. அடுத்த விடுமுறையின்போது பொன்னம்மா அவளுடைய தாயின் மூத்த சகோதரி வீட்டில் இருந்தாள்.
‘எவ்வளவோ நேரமாயிடுச்சு. அண்ணா, இருட்டிவிட்டால், ஒற்றையடிப் பாதையின் வழியாகப் போவதற்கு நமக்கு பயமாக இருக்காதா?”
நான் சிந்தனைகளிலிருந்து விடுபட்டேன்.
குஞ்ஞுமோள் கூறியது உண்மைதான். இருள் பரவ ஆரம்பித்திருக்கிறது. சுண்ணாம்பு அடிக்கப்பட்ட கல்லறைகள் உண்டாக்கிய பிரகாசம் மட்டுமே இருந்தது. அந்த மங்கலான வெளிச்சத்திலும் பொன்னம்மா புதைக்கப்பட்ட இடத்திற்கு மேலே, ஒன்றொடொன்று பிணைந்து கிடக்கும் முட்புதரில் சிவப்பு நிறத்தில் சிறிய சிறிய பூக்கள் இருந்தன. காதல் உணர்வு நிறைந்த அந்த இதயத்திலிருந்து முளைத்தெழுந்து வந்த ரத்தப் பூக்கள்!