ஒரு முத்தத்தின் ஞாபகம் - Page 2
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 6183
“உள்ளே யார்? அறிமுகமில்லாத ஒரு ஆள்..”
குஞ்ஞம்மா சொன்னாள் :
“பொன்னம்மா!”
“எந்தப் பொன்னம்மா?”
“அம்மாவுடைய ஒரு அண்ணனின் மகள்.”
மிகுந்த ஆர்வத்துடன் அல்ல அவள் அதைக் கூறியது. அந்த வீட்டில் அக்கறை செலுத்தப்பட்ட ஒரு உயிர் அல்ல அவள் என்பதை நான் புரிந்துகொண்டேன். அந்த வீட்டுடன் மிகவும் நெருக்கமாகி, தெரியாமலிருந்த பல விஷயங்களையும் தெரிந்துகொண்டபோது, பொன்னம்மாவைப் பற்றி மேலும் பல விஷயங்களைத் தெரிந்துகொண்டேன். குஞ்ஞம்மாவின் அன்னைதான் கூறினாள்:
“அவளுக்கு ஒரு உடல்நலக் கேடு இருக்கிறது குழந்தை. வலிப்பு நோய்... ஒவ்வொரு மாதமும் மூன்று நான்கு நாட்கள் தொடர்ந்து அது வரும். எவ்வளவோ சிகிச்சை செய்து பார்த்தாச்சு. இனி தெய்வமே மனசு வச்சாத்தான். அந்த நோய் குணமாகும்.”
உண்மைதான். உதவியையும் மனநிம்மதியையும் அவளைப் பொறுத்த வரையில் தெய்வத்திடமிருந்து மட்டுமே எதிர்பார்க்க முடியும் என்பதை நான் சீக்கிரமே தெரிந்துகொண்டேன். பொன்னம்மாவும் குஞ்ஞம்மாவும் ஒரே வயதைக் கொண்டவர்கள். அவர்கள் ஒரே மாதத்தில் பிறந்திருக்கிறார்கள்.
“உடல்நலக்கேடு இல்லாமலிருந்தால், இருப்பதில் எதையாவது கொடுத்து, அவளை ஒருத்தன்கூட அனுப்பியிருப்போம் குழந்தை...” என்று குஞ்ஞம்மாவின் தாய் கூறியதையும் நான் நினைத்துப்பார்க்கிறேன். ஆனால், அவளுக்கு அந்த உடல்நலக்கேடு இருப்பது ஒரு வகையில் நல்ல விஷயம் என்றல்லவா அவர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்? அந்த வீட்டிலிருக்கும் வேலைகள் முழுவதையும் அவள்தான் செய்கிறாள். நான் அங்கு விருந்தாளியாகச் சென்றபிறகு ஒரு நிமிடம்கூட பொன்னம்மா வெறுமனே அமர்ந்திருந்து பார்த்ததே இல்லை. என்னுடைய தேவைகளை நிறைவேற்றுவதில் குஞ்ஞும்மாவைவிட அவள் அதிக ஈடுபாட்டைக் காட்டினாள் என்றே கூற வேண்டும். முதல்முறையாக நான் அவளிடம் பேசியதை நினைத்துப் பார்க்கிறேன். திருமணம் நடந்த சில நாட்களில் நடந்தது அது. ஏரியின் கரையில் நின்றுகொண்டு, பச்சைப் பசேல் என்றிருந்த மலைப்பகுதியின் வனப்பை நான் ரசித்துக்கொண்டிருந்தேன். ஏரியின் கரையிலிருந்த காய்கறித் தோட்டத்தில் பயறு பறிப்பதற்காக வந்திருந்தாள் பொன்னம்மா. பயறு கொடிகளுக்கு மத்தியில் அவளுடைய கைகள் அசைவதைத்தான் முதலில் பார்த்தேன். பிறகு... அவளடைய ஆர்வம் நிறைந்த முகத்தை, நான் அங்கு நின்றுகொண்டிருப்பேன் என்பதை அவள் நினைத்திருக்கவேயில்லை. என்னைப் பார்த்ததும், கிள்ளி எடுத்த ஒரு பயறின் நுனியைக் கடித்தவாறு முகத்தை குனிந்துகொண்டு நின்றாள். நான் அருகில் சென்று கேட்டேன்:
“பொன்னம்மா, உனக்கு என்மீது கோபம்... அப்படித்தானே?”
அப்படிக் கேட்கும் அளவிற்கு, தான் நடக்கக்கூடாத வகையில் ஏதாவது நடந்துவிட்டோமோ என்ற பதைபதைப்பு உண்டானதைப்போல அவள் முகத்தை உயர்த்திப் பார்த்தாள்.
உடனடியாக முகத்தை குனிந்துகொண்டு கையிலிருந்த பயறை நசுக்கிக்கொண்டே சொன்னாள் :
“அண்ணா... உங்களுக்கு விருப்பமில்லாததால்தானே என்னுடன் இதுவரை பேசாமலே இருந்தீர்கள்?”
“அண்ணா என்று யார் அழைக்கச் சொன்னார்கள்? பொன்னம்மா, குஞ்ஞம்மாவைவிட நீ ஒரு வாரத்திற்கு மூத்தவள்... அப்படித்தானே?”
வெட்கத்தால் அவளுடைய முகம் மீண்டும் குனிந்துகொண்டது. பிறகு... மெதுவான குரலில் கூறினாள்:
“பிறகு... நான் எப்படி அழைப்பது? அத்தையிடம் நான் கேட்டேன்? எப்படி அழைக்க வேண்டுமென்று.”
“பிறகு?”
“உனக்கு எப்படி அழைக்கணும்னு தோணுதோ, அப்படி அழைச்சிக்கோன்னு சொல்லிட்டாங்க.”
“பொன்னம்மா, அண்ணா என்று அழைப்பதுதான் உனக்குப் பிடித்திருக்கிறதா?”
பொன்னம்மா எதுவும் கூறவில்லை. ஆரோக்கியமான அவளுடைய சரீரத்திற்குள் நாசமாய்ப்போன அந்த நோய் மறைந்துகொண்டிருக்கிறது என்பதை நம்புவதற்கே மிகவும் சிரமமாக இருந்தது. கறுப்பிற்கும் வெளுப்பிற்கும் இடைப்பட்ட அவளுடைய நிறமே ஆரோக்கியத்தை வெளிப்படுத்தியது. அடர்த்தியான சுருண்ட தலைமுடியும், மெல்லிய இடையும், உற்சாகமும் ஆர்வமும் நிறைந்த முகமும் அவளின் அழகை அதிகரித்துக்கொண்டிருந்தன. நான் கேட்டேன்.
“எதற்கு பயறு பறிக்கிறாய்?”
“அவியல் வைப்பதற்கு. அவியல் என்றால் மிகவும் பிடிக்குமென்று குஞ்ஞம்மா சொன்னாளே!”
“ஓஹோ...”
“அண்ணா, பிறகு... உங்களுக்கு வேறென்ன பிடிக்கும்?”
“பிறகா? பலாப்பழம், முந்திரிப்பருப்பு, சீமைச்சேம்பு... இப்படி விருப்பமானவை பல இருக்கின்றன. பொன்னம்மா, உன்னையும் எனக்குப் பிடிக்கும்.
அப்போது பொன்னம்மாவால் சிரிப்பை அடக்க முடியவில்லை ஒரு நிமிடம் மட்டுமே. சிரித்ததை யாராவது கேட்டிருப்பார்களோ என்று பயத்துடன் சுற்றிலும் பார்த்தாள்.
“நான் போகட்டுமா அண்ணா? ஒரே ஓட்டத்துல வந்துவிடணும்னு அத்தை சொல்லிவிட்டாங்க. அண்ணா, நாளைக்குப் போறீங்களா?”
“நாளை அதிகாலை வேளையில்...”
“நாளைக்கு வேண்டாம் அண்ணா. இரண்டு நாட்கள் கழிந்தபிறகு போனால் போதும்.”
“என் விடுமுறை முடிந்துவிட்டது. பொன்னம்மா, நாளைக்கு வேலை செய்யும் இடத்திற்கு திரும்பிப் போயாகணும்.”
“குஞ்ஞம்மாவை உங்களுடன் அழைத்துப் போறீங்களா?”
“ஆமாம்... அங்கு வீடு எடுத்து வைத்துவிட்டுத்தான் வந்தேன்.”
பொன்னம்மா எதுவும் கூறவில்லை. நான் சொன்னேன்:
“பொன்னம்மா, உன் திருமணம் முடிவு செய்யப்படும் தகவல் தெரிந்ததும், நாங்கள் வருகிறோம்.”
எரிந்து கொண்டிருந்த விளக்கு திடீரென்று அணைந்து விட்டதைப்போல, அவளுடைய முகம் மங்கலாகிவிட்டது. வேகமாக நடந்துகொண்டே சொன்னாள் :
“நான் போகட்டுமா, அண்ணா?”
தனக்கிருக்கும் நாசமாய்ப்போன நோயைப் பற்றியும், தன் பரிதாபப்படக்கூடிய மோசமான நிலைமையைப் பற்றியும் எந்தச் சமயத்திலும் அவள் கவலைப்பட்டு நான் பார்த்தே இல்லை. கவலைப்படுவதாக இருந்தால், ஒரு நிமிடம்கூட சந்தோஷப்பட முடியாத அளவிற்கு காரணங்கள் தான் இருந்தனவே! முக்கியமானது - நோய். மிகவு“ இளம்வயதிலேயே அந்த நோய் அவளை இறுகப் பிடித்துக்கொண்டது. நான்கைந்து வயது நடந்துகொண்டிருந்தபோது, ஒருமுறை வீட்டு வாசலில் மற்ற பிள்ளைகளுடன் சேர்ந்து விளையாடிக்கொண்டிருந்தபோது, இரண்டு கைகளாலும் கண்களை மூடிக்கொண்டு அவள் சத்தம் போட்டுக் கத்தினாள்:
“என் கண்களில் இருள் வருகிறது.”
ஒவ்வொரு வருடமும் புதிய வடிவங்களுடன் அந்த நோய் அவளுக்குள் வளர்ந்துகொண்டிருந்தது. ஒரு காலத்தில், சந்தோஷமாக வாழ்ந்துகொண்டிருந்த ஒரு சிறிய குடும்பத்தின் செல்ல மகளாக அவள் இருந்தாள். அப்பா பேருந்து நடத்துனராக இருந்தார். அவள் எதைக் கேட்டாலும் அதை வாங்கிக் கொடுத்துக்கொண்டிருந்த அப்பா. வீட்டில் எப்போதும் அசைவம்தான். மீனும் மாமிசமும் இல்லாமல் அப்பா சாப்பிடவே மாட்டார். தன் மகள் பொன்னம்மாவைத் தன்னுடன் படுக்க வைத்துக்கொண்டுதான் அப்பா உறங்குவார். சாயங்காலம் வரும்போது அந்த மகளுக்காக ஏதாவது விசேஷமாக வாங்கிவருவார். ஆனால், அந்தக் காலமெல்லாம் கனவைப்போல கடந்து போய்விட்டன. பேருந்து விபத்தில் சிக்கி அப்பா இறந்துவிட்டார். அதே வருடத்தில் அம்மாவும் இறந்து விட்டாள்.
சந்தோஷமாக வாழ்ந்தார்கள் என்பதைத் தவிர, பிள்ளைகளுக்காக எதுவுமே சம்பாதித்து வைத்துவிட்டுப் போவதற்கு அப்பாவால் முடியவில்லை. அந்த வகையில் அனாதையாகிவிட்ட ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவள்தான் அவள் என்ற விரக்தி உணர்வு எந்தச் சமயத்திலும் அவளிடம் இருந்ததில்லை. தீவிரமான நோய், அவளுடைய வாழ்க்கையின் சந்தோஷங்களுக்கு முன்னால் கட்டிவிட்ட உயரமான கோட்டையைக்கூட அவள் கண்டுகொள்ளவே இல்லை என்பதை ஆச்சரியத்துடன் நினைத்துப் பார்க்கிறேன். நோய் பாதித்த நிலையில் ஒருமுறை மட்டுமே நான் பார்த்திருக்கிறேன். ஒரே ஒருமுறை மட்டும்.