ஒரு ரூபாய் கடன்
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 7048
எட்டு வருடங்களுக்கு முன்பு அது நடந்தது. ஆனால், இப்போதும் அந்த சோகம் கலந்த ரகசியம் என்னைத் துன்பப்படுத்திக் கொண்டேயிருக்கிறது.
1934-ஆம் வருடம் மே மாதத்தின் இறுதி வெள்ளிக்கிழமை. மங்காளபுரத்திலிருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு வாரத்திற்கு இரண்டு முறை பாம்பாய்க்குச் செல்லக் கூடிய கப்பல் மழைக் காலம் வந்து விட்டால் ஓடுவதில்லை.
மழைக் கால ஆரம்பத்தின் இறுதிப் பயணம் அது. அதனால் எப்போதையும்விட அதிகமான பயணிகள் கப்பலின் "டெக்"கில் இடம் பிடித்திருந்தார்கள். "டெக்"கில் நிறைந்திருந்த பயணிகளுக்கு மத்தியில், வேலை தேடியும் புதிய அனுபவங்களைச் சுவைத்துப் பார்க்கத் தயார்படுத்திக் கொண்டும் யாரிடமும் கூறாமல் வீட்டை விட்டு ரகசியமாக ஓடி வந்த மாணவனான இந்த கட்டுரை எழுதுபவனான நானும் இருந்தேன். அதற்கு முன்பு ஒரு நீண்ட பயணம் செய்த அனுபவம் எனக்கு இல்லை. முன்பு ஒரு கப்பலைப் பார்க்கக் கூட செய்திராத எனக்கு இந்தக் கப்பல் பயணம் மிகப் பெரிய புத்துணர்ச்சியை அளிப்பதாகத் தோன்றியது. தாய்- தந்தையையும் வீட்டையும் நன்கு அறிமுகமான இடங்களையும் விட்டுப் பிரிந்து, ஆபத்துக்கள் நிறைந்த அனுபவங்களைப் பெறவேண்டும் என்ற இளைஞர்களுக்கே உரிய ரசனையின் வேகமான வெளிப்பாட்டுடன் தயாராகிப் புறப்பட்ட விகேகமற்ற அறிவைக் கொண்ட எனக்கு முன்னால், இருட்டும் தெளிவற்ற தன்மையும் உள்ள வழியின் இன்னொரு எல்லையில் ஒன்றை மட்டும் நான் மங்கலாகத் தெரிவதைப் பார்த்தேன். மிக மதிப்பு மிக்க அழகுணர்வுடன் இருந்த
கட்டிடங்கள் வரிசையாக நின்றிருந்த மிகப் பெரிய ஒரு நகரமான "பாம்பாய்".
பயணிகளின் பேச்சு சத்தங்களும், பாய் விரிப்பதும், பொருட்களைத் தேடுவதும், உரத்த குரல்களும், ஆரவாரங்களும் ஒரு விதத்தில் அடங்கின.
நான் ஒவ்வொரு இடமாக சவுகரியமாக இருப்பதற்காகத் தேடிப் பார்த்தேன். "டெக்"கின் நடுவில் எனக்கு மிகுந்த சிரமத்திற்குப் பிறகு போர்வையை விரிப்பதற்கு மட்டும் ஒரு இடம் கிடைத்தது. என்னுடைய சூட்கேஸையும் சுமையையும் விரிப்பின் தலைப்பகுதியில் பத்திரமாக வைத்துவிட்டு நான் சற்று சாய்ந்து படுத்தேன். கப்பலும் சற்று அசைந்து, சாய்ந்து, "தக்...தக்" என்ற சத்தத்தை எழுப்பியவாறு சிறிது நேரம் நின்றது. தொடர்ந்து ஒரு முறை கூவியவாறு மெதுவாக நகர்ந்தது.
கடல் அமைதியாக இருக்கவில்லை. வானம் கறுத்து மேகங்களுடன் இருந்தது. அவ்வப்போது ஒரு காற்றும் வீசிக் கொண்டிருந்தது. கடல் மேலும் கீழுமாக ஆடிக் கொண்டிருந்தது. அலைகள் குட்டிக் கரணம் அடித்துக் கொண்டிருந்தன. குலுங்கிக் கொண்டும் சாய்ந்து கொண்டும் "பத்ராவதி" நகர்ந்து கொண்டிருந்தது.
பத்து மணி அடித்தபோது மங்களாபுரம் துறைமுகம் பார்வையிலிருந்து முழுவதுமாக மறைந்தது. தென்னை மரங்களால் பச்சைக் கரை போட்ட கடற்கரையைப் பார்த்துக் கொண்டே, கரையிலிருந்து மிகவும் தூரத்தில் கப்பல் நீங்கிக் கொண்டிருந்தது. துறைமுகத்திலிருந்து நீங்க நீங்க என்னுடைய இதயமும் அந்தக் கப்பலைப்போல அமைதியற்றதாக ஆகிவிட்டது. வீட்டையும் வீட்டிலிருக்கும் சுக சவுகரியங்களையும் தாய்- தந்தையின் பாசமும் அன்பும் அடங்கிய பாதுகாப்பையும் விட்டுவிட்டு, இளமைப் பருவத்திற்கும் வாலிபப் பருவத்திற்குமிடையே
உண்டான போராட்டத்தின் விளைவாக மன தைரியம் என்ற ஒன்றை மட்டுமே கருவியாக வைத்துக் கொண்டு, வாழ்க்கையின் புதிய ஒரு போராட்ட களத்தை நோக்கி பாய்ந்து செல்வதற்குத் துணிச்சல் கொண்டு இந்த அளவிற்கு வந்து விட்டாலும், இந்த நிலையில் இடையில் அவ்வப்போது ஒரு கவலையும் இனம் புரியாத ஒரு பயமும் என்னை அசைக்க ஆரம்பித்தது. பயம், கவலை ஆகியவற்றின் ஓட்டம் அதிக நேரம் நீடிக்கவில்லை. கப்பல் அடுத்த துறைமுகத்தை அடைந்தபோது, புதிய காட்சிகளில் என்னுடைய மனம் மூழ்க ஆரம்பித்தது. படிப்படியாக நான் எல்லாவற்றையும் மறந்து விட்டு, காட்சிகளைப் பார்த்து ரசிக்க ஆரம்பித்தேன்.
தனி மலையாளி பாணியில் ஆடைகள் அணிந்த ஒரு இளைஞன் எனக்கு அருகில் நின்று கொண்டிருந்தான். உரையாடுவதற்கு ஒரு ஆள் கிடைக்காமல் கவலைப்பட்டுக் கொண்டிருந்த நான் புன்சிரிப்பைத் தவழவிட்டவாறு அவனிடம் கூறினேன்: "பார்க்கும்போது ஒரு மலையாளி என்று தோன்றுகிறதே!'' அவன் என்னுடைய வார்த்தைகளைக் கேட்டது மாதிரியே காட்டிக் கொள்ளவில்லை.
நான் அவனையே கூர்ந்து பார்த்தேன். வாலிபத்திற்குள் இன்னும் நுழையவில்லை. இளம் பிராயத்தைச் சேர்ந்தவனாகவும் இல்லை. வெளுத்த அழகான உடலைக் கொண்டிருந்தான். கறுத்து அடர்த்தியாக வளர்ந்திருந்த சந்தேகப்படுகிற அளவிற்கு சுருள்களைக் கொண்ட தலை முடி... கறுத்த, அகலமான, கவலைகள் நிறைந்த விழிகள்... வெள்ளை நிற வேட்டியையும் மெல்லிய கோடுகள் போட்ட அரைக்கை சட்டையையும் அணிந்திருந்தான். "டெக்"கின் பலகையைப் பிடித்துக் கொண்டே அவன் கடலையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.
"ஏய் மிஸ்டர்... சொந்த ஊர் எது'' நான் ஆங்கிலத்தில் கேட்டேன்.
அவன் முகத்தைத் திருப்பி என் முகத்தையே வெறித்துப் பார்த்தான். அவனுடைய பேரமைதியையும் சந்தேகம் கலந்திருந்த பார்வையையும் பார்த்து நான் மிகவும் தர்மசங்கடமான நிலைக்குள்ளாகி விட்டேன். என்றாலும், ஒரு நண்பன் கிடைக்க வேண்டும் என்ற ஆவல் என்னுடைய நாக்கிற்கு மீண்டும் பலத்தை அளித்தது. "அங்கு அப்படி கவலைப்பட்டுக் கொண்டு நிற்க வேண்டாம். இங்கே உட்காரலாம்.''
அவன் தயங்கியவாறு ஒரு சிலையைப்போல அங்கேயே நின்றிருந்தான். எந்தவொரு அசைவுமில்லை.
"நாயர்... உட்காருவதற்கு ஒரு மேற்துண்டுகூட எடுக்காமல் கப்பலில் ஏறியாச்சு.''
பின்னாலிருந்து ஒரு முஸ்லிம் அதைக் கூறினார். பம்பாயில் இருக்கும் ஒரு மேஜை, நாற்காலிகள் தயாராகும் இடத்தில் பிரம்பு வேலைகள் செய்யும் மனிதர்.
"ஏய் மிஸ்டர்...'' நான் அவனை அன்புடன் மீண்டும் அழைத்தேன். "அங்கே அப்படியே நின்று கொண்டிருந்தால், கப்பல் குலுங்குவதால் தவறி விழுந்து விடுவீர்கள். ஆட்சேபணை இல்லையென்றால், இந்த விரிப்பில் வந்து உட்காருங்க.''
முஸ்லிம் என்னுடைய காதில் சொன்னார்: "பாவம், எதுவுமே தெரியாத ஒரு அப்பிராணி நாயர் பையன்... நீங்கள் அவனுக்குத் தேவையான உதவியைச் செய்து தரணும். சரியா?''
என்னுடைய வற்புறுத்தலின் காரணமாக அவன் என்னுடைய விரிப்பின் தலைப் பகுதியில் வந்து உட்கார்ந்தான். ஆனால், அந்த மவுன விரதத்திற்கு எந்தவொரு குறைவும் உண்டாகவில்லை.
சிறிது நேரம் அதே நிலை நீடித்தது. நான் என்னுடைய பலகாரப் பொட்டலத்தை அவிழ்த்து விரிப்பில் பிரித்து வைத்தேன். அந்தக்
கப்பலில் பயணம் செய்து பழக்கமான ஒரு மனிதரின் அறிவுரையின்படி மங்களாபுரம் கடை வீதியில் வாங்கிய அவல் பழம், பேரீச்சம் பழம், ஆரஞ்சு போன்ற தின்னும் பொருட்கள் நிறைந்த பொட்டலம் அது.
"சாப்பிடுவோம்...'' நான் என்னுடைய புதிய நண்பனை அழைத்தேன். அவன் தயங்கினான். நான் மீண்டும் வற்புறுத்தியபோது, அவன் ஒரு பேரீச்சம் பழத்தை எடுத்தான்.