ஒரு ரூபாய் கடன் - Page 4
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 7051
சாயங்காலம் ஆறு மணிக்கு கப்பல் கோவா துறைமுகத்தை விட்டுப் புறப்பட்டது. மிகவும் குறைவான விலையில் வெளிநாட்டு மது வகைகளும் உள்நாட்டு மது வகைகளும் கிடைக்கக் கூடிய ஒரு இடம்
கோவா. மதுவை விரும்பக் கூடிய பயணிகள் எல்லாரும் தங்களால் முடிந்த அளவிற்கு மதுவை உட்கொண்டு விட்டுத்தான் கப்பலுக்கே வந்தார்கள். கப்பல்காரர்களின் கதையைப் பற்றிக் கூறவே வேண்டாம். மாலுமிகளிலிருந்து கூலி வேலை செய்பவர்கள் வரை மூக்கு முனைவரை குடித்துவிட்டு மதி மறந்த நிலையில்தான் திரும்பியே வந்தார்கள். போதையில் மூழ்கி இருந்த பயணிகள், பாட்டு பாடிக்கொண்டும் ஒவ்வொன்றையும் கூறிப் புலம்பிக் கொண்டும் தங்களுக்குள் ஆரவாரம் எழுப்பியவாறு கூத்தாடிக் கொண்டிருந்தார்கள்.
கோவாவை விட்டுப் புறப்பட்டவுடன், சூழ்நிலை மிகவும் அமைதியாகவும் பிரகாசமானதாகவும் மாறியது. கருமேகங்கள் இல்லாத வானத்திலிருந்து மறைந்து கொண்டிருந்த சூரியன் கடலின் மீது தங்க ஊசிகளைப் பொழிந்து கொண்டிருந்தது. கடலின் மேற்பகுதி நீலப்பட்டையைப்போல மின்னிக் கொண்டிருந்தது. நாங்கள் இரண்டு குழுக்களாக அமர்ந்து சீட்டு விளையாடிக் கொண்டிருந்தோம். விளையாட்டில் பங்கு பெறாத நாராயண மேனன் என்னுடைய விரிப்பில் கண்களை மூடிக் கொண்டு தூக்கத்தில் இருப்பதைப்போல படுத்திருந்தான். திடீரென்று எங்களின் கூட்டத்திலிருந்த ஒரு இளைஞன் ஓடி வந்து சொன்னான்: "டிக்கெட்டை சோதித்துப் பார்க்கிறார்கள்!''
நாராயண மேனன் வேகமாக எழுந்தான். "கப்பல் இதோ மூழ்கப் போகிறது!'' என்று கூறினால்கூட, ஒரு மனிதனின் முகம் அந்த அளவிற்கு கலவரம் நிறைந்ததாகவும், பார்க்க சகிக்க முடியாத அளவிற்கும் இருக்காது. அவனுடைய முகத்தில் தெரிந்த உணர்ச்சி வெளிப்பாடு மிகவும் பயங்கரமாக இருந்தது.
நாங்கள் விளையாட்டை நிறுத்திவிட்டு ஒன்றாக உட்கார்ந்து தீவிரமாக ஆலோசனை செய்வதில் ஈடுபட்டோம். "நாம இப்போ என்ன செய்வது?''
மாணவர்களில் ஒருவன் சொன்னான்: "அந்த டிக்கெட் பரிசோதகரின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு தப்பிப்பது என்பது மிகவும் சிரமமான விஷயம். கப்பலின் இரண்டு "டெக்"க்கும் சந்திக்கக் கூடிய இடத்திலிருந்து இரண்டு டிக்கெட் பரிசோதகர்கள் ஆளுக்கொரு வழியில் வந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுடைய வலையில் இவர் சிக்கி விடுவார். பிடித்து அழைத்துக் கொண்டு சென்றால், அவர்கள் என்னவெல்லாம் செய்வார்கள் என்று தெரியாது. குடித்து போதையில் இருக்கும் அந்த முரட்டுத்தனமான மனிதர்கள் கேப்டனின் அறைக்குள் அடைத்து வைக்கவோ, அடுத்த துறைமுகத்தில் இறக்கி விடவோ செய்யலாம். இரண்டில் எது நடந்தாலும் கஷ்டம்தான்.''
இன்னொரு மாணவன் முன்னோக்கி நகர்ந்து வந்து சொன்னான்: "நான் ஒரு வழியைக் கண்டிருக்கிறேன். கிழக்கு பக்க "டெக்"கில் பயணிகள் குறைவாக இருப்பார்கள். அங்கு டிக்கெட் பரிசோதகர் "டெக்"கின் பகுதியைக் கடந்து சென்ற பிறகு, நான் வந்து கூறுகிறேன். அப்போது இவர் என்ஜின் அறைக்குள் போகட்டும். (கப்பலின் மத்தியில் எஞ்ஜின் அறை இருக்கிறது). இரண்டு "டெக்" குகளையும் இணைத்துக் கொண்டு ஒரு இடைவெளி இருக்கிறது. அங்கு யாரும் நுழைய முடியாது. எனினும், காரியத்தைச் சாதிக்க அதுதான் வழி. அங்கு சென்று ஃபயர்மேனிடம் கொஞ்சம் நெருப்பு வேண்டும் என்று கேட்க வேண்டும். அவர் திட்டி, வெளியே போகும்படி கூறுவார். அப்போது கிழக்குப் பக்க வாசல் வழியாக கிழக்கில் இருக்கும் "டெக்"கிற்குள் நுழைந்து தப்பித்துவிட முடியும்.''
அப்படிச் செய்வது என்று நாங்கள் தீர்மானித்தோம். நான் மேனனிடம், அவன் நடிக்க வேண்டிய பகுதியைத் தெளிவாகச் சொல்லிக் கொடுத்தேன். டிக்கெட் பரிசோதகர் கிழக்குப் பக்க வாசலின் எல்லையைக் கடந்து போய் விட்டார் என்று அந்த மாணவன் வந்து
கூறியவுடன், நாங்கள் மேனனின் கையில் ஒரு பீடியைக் கொடுத்து அவனை எஞ்ஜின் அறைக்குள் தள்ளி விட்டோம்.
எங்களுடைய நோக்கம் சரியாகவே செயல்பட்டது. எஞ்ஜின் அறையில் கரி புரண்ட ஒரு உருவம் மேனனை என்னவோ கூறியது. இந்தியில் கூறியதால், மேனனுக்கு எதுவும் புரியவில்லை. இறுதியில் அந்த உருவம் நிலக்கரி கரண்டியை எடுத்து தூக்கி மேனனை நோக்கி நெருங்கியபோது, மேனன் யாரும் கூறாமலேயே கிழக்கு வாசலுக்குள் பாய்ந்து தப்பித்து விட்டான். அங்கு இருந்த டிக்கெட் பரிசோதகர், சோதனை செய்து முடித்து பத்து நிமிடங்களுக்கு முன்பே அந்த இடத்தை விட்டுச் சென்றிருந்தார்.
மறுநாள் பொழுது விடிந்தது. கடலின் நடுவில் பிரதிபலித்த புலர் காலைப் பொழுதின் வெளிச்சத்திற்கு ஒரு தனிப்பட்ட புதுமை இருந்தது. சிறிது நேரம் சென்றதும், பம்பாய் துறைமுகம் முன்னால் தெரிய ஆரம்பித்தது. மிகப் பெரிய கட்டிடங்களும், கம்பெனிகளின் மிக உயரமான கட்டிடங்களும், மில்களின் புகைக் குழாய்களும் அருகில் தெரிய ஆரம்பித்தவுடன், வார்த்தைகளால் கூற முடியாத ஒரு ஆச்சரியமும் பெருமையும் என் இதயத்தில் பெருகி வந்தது. ஆனால், நாராயண மேனனின் இதயத்தில் ஒரே ஒரு உணர்ச்சிதான் இருந்தது- பயம்.
நான் நண்பர்களிடம் கேட்டேன்: "இனி பம்பாய் துறைமுகத்திலிருந்து இவரை தப்பிக்க வைப்பதற்கு என்ன வழி இருக்கிறது?.''
"அது சிரமமான விஷயமில்லை...'' ஒரு மாணவன் சொன்னான்: "இவருடைய கையில் லக்கேஜ் என்று எதுவுமில்லையே! கப்பல் நின்றவுடன் நீங்கள் வெளியே செல்ல வேண்டும். புக்கிங் அலுவலகத்திற்குச் சென்று இரண்டு பார்வையாளர்கள் டிக்கெட்கள்
வாங்கிக் கொண்டு திரும்பவும் கப்பலுக்கு வந்தால், இவரைக் காப்பாற்றி விடலாம்.''
"அப்போது என்னுடைய பொருட்களை வெளியே எங்கே வைப்பேன்?'' நான் கேட்டேன்.
"நாங்கள் யாராவது பத்திரமாகப் பார்த்துக் கொள்வோம்'' மாணவர்கள் கூறினார்கள்.
அந்த தந்திரச் செயலை நான் நாராயண மேனனிடம் சொன்னேன். கப்பல் துறைமுகத்தின் "டெக்"கில் போய் நின்றது. நாரயண மேனன் என்னைத் தனியாக அழைத்தான். தன்னுடைய வேட்டியின் முனையிலிருந்த ஒரு ரூபாய் நாணயத்தை எடுத்து என்னுடைய கையில் தந்தான். "இது நான் மாற்றாமல் பத்திரப்படுத்தி வைத்திருக்கும் இறுதிக் காசு. ஒருவேளை, கப்பலின் டிக்கெட் பரிசோதகர்கள் என்னை பரிசோதித்தால் இதை எடுத்துக் கொண்டு போய்விடுவார்கள். அதனால் இது உங்களிடம் இருக்கட்டும். நீங்கள் செய்யும் உதவிகளை நான் மறக்க மாட்டேன்'' அவனுடைய கண்களிலிருந்து நீர் வழிந்தது. அவன் ஒரு குழந்தையைப்போல அழ ஆரம்பித்தான்.
என்னுடைய மனம் மிகவும் இளக ஆரம்பித்தது. அந்த மாணவன் மீது சகோதரன்மீது பிறக்கக் கூடிய ஒரு அன்பும் இரக்கமும் எனக்கு தோன்ற ஆரம்பித்தது. நான் அவனைச் சமாதனப்படுத்தினேன்: "கால் மணி நேரத்தில் திரும்பி வருகிறேன்'' என்று மட்டும் கூறிவிட்டு, விடை கூட பெற்றுக் கொள்ளாமல் நான் வெளியே சென்றேன்.