ஒரு ரூபாய் கடன் - Page 5
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 7051
கப்பல் நின்றவுடன் என்னுடைய நண்பர்கள் எல்லாரும் ஆரவாரம் உண்டாக்கியவாறு வெளியேறி பல வழிகளிலும் சிதறிக் காணாமல் போனார்கள். சுங்க அதிகாரிகள் என்னுடைய பெட்டிகளையும் சுமைகளையும் கூர்மையாக சோதனை செய்து முடிப்பதற்குச் சற்று
நேரம் ஆனது. சுங்க இலாகா கட்டிடத்தை விட்டு வெளியே வந்தபோது, என்னுடைய பொருட்களை எங்கே வைப்பது என்று தெரியாமல் நான் தவித்தேன். எது எப்படி இருந்தாலும், பார்வையாளருக்கான டிக்கெட் வாங்குவது என்று தீர்மானித்து, நான் புக்கிங் அலுவலகத்தை நோக்கிச் சென்றேன்.
"ஒரு மணி நேரம் ஆனபிறகுதான், பார்வையாளருக்கான டிக்கெட் கொடுப்போம்'' என்று அதற்குள்ளிருந்து பதில் கிடைத்தது.
நான் காத்திருப்பது என்று தீர்மானித்தேன். முக்கால் மணிநேரம் ஆன பிறகு, கப்பலில் என்னுடைய நண்பர்களில் ஒருவன் ஒரு சிறிய பெட்டியுடன் அந்த வழியே வந்தான். நாராயண மேனனை எஞ்ஜின் அறையின் வழியாகக் காப்பாற்றிய வித்தையைச் சொல்லித் தந்த அந்த இளைஞன்.
அவன் என்னைப் பார்த்ததும், "ஹலோ மிஸ்டர்... உங்களுடைய நண்பர் தப்பித்து விட்டாரா?'' என்று கேட்டான்.
நான் எல்லா விஷயங்களையும் அவனிடம் சொன்னேன்.
"சரி... பொருட்களை நான் பார்த்துக் கொள்கிறேன். நீங்கள் இரண்டு பார்வையாளர்களுக்கான டிக்கெட்டுகளை வாங்கி, நேரம் வந்ததும் கப்பலில் சென்று பாருங்கள்.''
ஒரு மணி நேரம் ஆனவுடன், நான் இரண்டு டிக்கெட்டுகளை வாங்கிக் கொண்டு கப்பலுக்குள் நுழைந்தேன். அங்கு ஒரு மனிதப் பிறவியும் வெளியே தெரியவில்லை. ஒன்றிரண்டு கூலி வேலை பார்ப்பவர்கள் மட்டும் ஒரு மூலையில் தூங்கி வழிந்து கொண்டு உட்கார்ந்திருந்தார்கள். நான் கப்பல் முழுவதும் சோதித்துப் பார்த்தேன். நாராயண மேனன் இருப்பதற்கான ஒரு சிறிய அடையாளம்கூட அங்கு எந்த இடத்திலும் இல்லை.
ஏமாற்றத்துடன், கவலையுடன், பதைபதைப்புடன் நான் திரும்பி, என்னுடைய பொருட்களும் நண்பனும் இருந்த இடத்திற்கு வந்தேன். என்னுடைய பொருட்களோ அந்த "உதவி செய்வதில் விருப்பம் கொண்ட" கர்நாடகத்தைச் சேர்ந்த மாணவ நண்பனோ அங்கு இல்லை. நான் பதைபதைப்புடன் பல இடங்களையும் போய் பார்த்தேன். ஒரு பிடியும் கிடைக்கவில்லை- இன்று வரை.
பொருட்கள் மட்டுமே போய்விட்டன என்ற ஒரு சமாதானம் எனக்கு உண்டானது. பணத்தை என்னுடைய கோட் பாக்கெட்டிற்குள் பத்திரமாக வைத்திருந்தேன். அதனால் சிறிதும் அறிமுகமில்லாத அந்த நகரத்தில் பட்டினி கிடந்து கஷ்டப்பட வேண்டிய நிலை வரவில்லை என்பது மட்டுமே...
ஆமாம்... அந்த சம்பவங்கள் நடந்து எட்டு வருடங்களாகிவிட்டன. இன்று வரை நாராயண மேனனைப் பற்றிய எந்தவொரு தகவலும் எனக்குக் கிடைக்கவில்லை. பம்பாயில் பல மாதங்கள் நான் அவனைத் தேடிப் பார்த்தும், ஒரு பலனும் உண்டாகவில்லை.
அவனுக்கு என்ன நடந்தது? பல நேரங்களிலும் அந்தக் கேள்வி என்னை கவலைக்குள்ளாக்கியிருக்கிறது. கப்பல்காரர்கள் அவனைக் கொண்டு போய் சிறையில் அடைத்திருப்பார்களோ? இல்லாவிட்டால், வெறுமனே விட்டிருப்பார்களோ? அப்படி எதுவும் இல்லையென்றால், விரக்தியின் காரணமாக அவன் ஏதாவது செய்யக் கூடாததைச் செய்திருப்பானோ? எதையும் தீர்மானிக்க முடியவில்லை. ஒருவேளை அவன் இப்போதும் ஒரு நல்ல நிலையில்- ஏதாவது பெரிய நகரத்தில்- பம்பாயிலே கூட- ஒரு உயர்ந்த நிலையில் இருந்து கொண்டிருக்கலாம். எது எப்படியோ, இந்தக் கட்டுரையை அவன் வாசிக்க நேர்ந்தால், அவனுக்கு ஒரு ரூபாய் கடன்பட்டிருக்கும் ஒரு மனிதன் மலபாரில் வாழ்ந்து கொண்டிருக்கிறான் என்பதையும், அந்த மனிதன் இன்றைய கப்பல் பயணத்தின் அனுபவங்களை இப்போதும் மனதில் நினைத்துப் பார்த்து
ரசிப்பதும் கவலைப்படுவதும் உண்டு என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும்.