ஒரு ரூபாய் கடன் - Page 2
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 7051
"உங்களுடைய சொந்த ஊர் எது?'' நான் தின்று கொண்டிருப்பதற்கு மத்தியில் கேட்டேன்.
"சொச்சி மாநிலம்.'' மென்மையான குரலில் அவன் பதில் கூறினான்.
"எங்கே போறீங்க?''
பதில் இல்லை.
எங்கு போகிறோம் என்பதைப் பற்றி அவனுக்கே உறுதியாகத் தெரியவில்லை போலிருக்கிறது என்று, அந்த முகத்தின் தெரிந்த உணர்ச்சிகளைப் பார்த்தால் தோன்றும்.
அவனுடைய தயக்கத்தைப் பார்த்து நான் மெதுவான குரலில் கேட்டேன்: "டிக்கெட் இருக்கிறதா?''
அவன் பாக்கெட்டிலிருந்து ஒரு டிக்கெட்டை எடுத்துக் காட்டினான். "கம்ப்டா"விற்குச் செல்லக் கூடிய ஒரு கப்பல் சீட்டு.
"அங்கு உங்களுக்குத் தெரிந்தவர்கள் யாரும் இருக்கிறார்களா?''
"யாருமில்லை.''
"பிறகு... அங்கு எதற்காகப் போகிறீர்கள்?''
மவுனம்.
"உங்கள் கையில் பெட்டி, பொருட்கள் எதுவும் இல்லையா?''
அவன் "இல்லை" என்ற அர்த்தத்தில் தலையை ஆட்டினான்.
"உங்களுடைய பெயர் என்ன?''
சிறிது தயக்கத்துடன் அவன் சொன்னான்: "நாராயண மேனன்...''
நாராயண மேனன் என்று அவன் சொன்னான். அவனுடைய பெயர் அதுதானா என்ற உண்மை எனக்கு இப்போதும் தெரியாது.
அவனுடைய பாக்கெட்டில் இருந்த ஒரு சிவப்பு நிறத் தாளைப் பார்த்து நான் கேட்டேன். "என்ன அது? திரைப்பட நோட்டீஸா?''
அவன் அந்தத் தாள்களை வெளியே எடுத்தான். "எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு வினாத்தாள்கள்.''
நான் அவற்றை ஒவ்வொன்றாகப் புரட்டிப் பார்த்தேன். கணக்குத் தாளில் இருந்த கேள்விகளுக்கு நேராக அவன் பதில்களைக் குறித்து வைத்திருந்தான். கூர்ந்து பார்த்தபோது, பதில்கள் பெரும்பாலும் சரியாக இருப்பதை நான் பார்த்தேன்.
தேர்வு முடிந்தவுடன், வீட்டிலிருந்து ஓடி வந்திருக்கும் ஒருவனாக அவன் இருக்க வேண்டும் என்று நான் மனதில் நினைத்தேன்.
என்னுடைய அன்பான உரையாடலையும் நட்பு கலந்த நடவடிக்கைகளையும் பார்த்தபிறகு நாராயண மேனனுக்கு என்மீது ஒரு நம்பிக்கை உண்டானது. தான் வீட்டிலிருந்து யாருக்கும் தெரியாமல் ஓடி வந்துவிட்ட விஷயத்தை அவன் இறுதியில் ஒப்புக் கொண்டான். ஆனால், எவ்வளவு தடவைகள் கேட்ட பிறகும், அதற்கான காரணத்தை அவன் கூறவே இல்லை. அவனிடமிருந்து கேட்டுத் தெரிந்து கொண்ட மீதி விஷயங்களின் சுருக்கம் இதுதான். கைவிரலில் அணிந்திருந்த மோதிரத்தையும் தங்க பொத்தான்களையும் விற்பனை செய்ததன்
மூலம் பயணச் செலவிற்கான பணம் கிடைத்தது. முதலில் கோழிக்கோட்டிற்கு வந்து வேலை தேடி சில நாட்கள் சுற்றித் திரிந்திருக்கிறான். ஒரு வாரம் கடந்ததும். தலசரிக்கு வந்திருக்கிறான். அங்கு நான்கைந்து நாட்களைச் செலவிட்டிருக்கிறான். பிறகு மங்களாபுரத்திற்கு வந்து மிகவும் சிரமப்பட்டிருக்கிறான். பம்பாய்க்குச் செல்வதுதான் சரி என்று யாரோ ஒருவர் அறிவுரை கூறியிருக்கிறார். அங்கிருந்து பம்பாய்க்கு கப்பல் கட்டணம் 9 ரூபாய் 8 அணா. மேனனின் கையில் மூன்று ரூபாய்கள் மட்டுமே மீதியிருந்தது. மங்களாபுரத்தை விட்டு உடனடியாக வெளியேறி ஆகவேண்டும் என்ற அவசரமும் பம்பாயை அடைய வேண்டும் என்ற ஆவலும் அவனை குழப்பத்திற்குள்ளாக்கியது. இறுதியில் தன் கையில் இருந்த பணத்திற்கு எவ்வளவு தூரம் பயணம் செய்ய முடியுமோ, அந்த தூரத்திற்கு ஒரு சீட்டு வாங்கி, கப்பலில் ஏறி உட்கார்ந்திருக்கிறான்.
ஒரு பெரிய சிந்தனையற்ற, முட்டாள்தனத்துடன் அவன் செயல்பட்டிருக்கிறான் என்ற விஷயத்தை வெளிப்படையாக அவனிடம் கூறுவதற்கு நான் தயங்கினேன். இதோ ஒரு பயணி... கம்ப்டாவிற்குச் செல்லக் கூடிய ஒரு கப்பல் டிக்கெட், பாக்கெட்டில் இரண்டு மூன்று தேர்வு வினாத்தாள்கள், அணிந்திருக்கும் சட்டையும் வேட்டியும்... இவ்வளவுதான் கையில்!
அவனை காலிலிருந்து தலை வரை ஒரு பரிதாப நிலை ஆக்கிரமித்துவிட்டிருந்தது. மன தைரியம் என்ற விஷயம் அவனைச் சிறிதுகூட தொட்டுப் பார்க்கவில்லை. பயம் கலந்த எண்ணங்கள் காரணமாக இருண்டு போன மனதுடன், கடலுக்கு அப்பால் தெரிந்த வெற்றிடத்தையே உணர்ச்சியே இல்லாமல் பார்த்துக் கொண்டு, என்னுடைய விரிப்பில் அவன் உட்கார்ந்திருந்த அந்த காட்சியை நான் இப்போதும் தெளிவாக கண்களுக்கு முன்னால் பார்க்கிறேன். அவன் ஒரு புன்னகையின் சிறு அடையாளத்தைக்கூட வெளிப்படையாகக்
காட்டியதாக எனக்கு ஞாபகத்தில் இல்லை. கரையிலிருந்து கடலுக்கு வந்த அவன், கடலிலிருந்து பிடித்துக் கரையில் போடப்பட்ட மீனைப் போல தனியாக உட்கார்ந்து தேம்பிக் கொண்டும் முனகிக் கொண்டும் இருந்தான்.
பம்பாய் பல்கலைக் கழகம் நடத்தும் மெட்ரிகுலேஷன் தேர்விற்காகப் போய்க்கொண்டிருக்கும் சில கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த மாணவர்கள் மங்களாபுரத்திலிருந்து எங்களுடைய கப்பலில் ஏறியிருந்தார்கள். காஷ்மீரைச் சேர்ந்த ஒரு குங்கும வியாபாரி, பம்பாயில் க்ளார்க்காகப் பணியாற்றும் ஒரு மனிதன்- இப்படி நாங்கள் சிலர் நண்பர்களாக ஆனோம். நாங்கள் தமாஷாகப் பல விஷயங்களையும் பேசிக் கொண்டும் நேரத்தைச் செலவிட்டுக் கொண்டிருந்தாலும், நாரயண மேனன் சோகத்தில் மூழ்கியவாறு ஒரு தனிமை உலகில் இருந்துகொண்டு அசையாமல், எதுவும் பேசாமல் விழித்துக் கொண்டு ஒரு மூலையில் உட்கார்ந்து கொண்டிருந்தான். நாங்கள் எவ்வளவு முயற்சி செய்து பார்த்தும், அவனுடைய நடவடிக்கைகளில் ஒரு பிரகாசத்தை சிறிதுகூட உண்டாக்குவதற்கு எங்களால் முடியவில்லை.
மிகவும் வற்புறுத்தினால் ஏதாவது பேசுவான். ஆங்கிலத்தில் உரையாடி அதிகப் பழக்கமில்லை. சைகையால் பதில் கூறுவான். தந்தையும் தாயும் மிகவும் அருமையாக வளர்த்த, வீட்டையும் பள்ளிக்கூடத்தையும் மட்டுமே பார்த்துப் பழகிய ஒரு குழந்தை... பரந்து கிடந்த உலகம் அவனை பதைபதைப்பு கொள்ளச் செய்தது. இருள் மூடியிருந்த எதிர்காலம், அறிமுகமில்லாத மனிதர்கள், சிறிதும் தெரிந்திராத கன்னட மொழி- இவை அவனை சிரமத்திற்குள்ளாக்கின. வீட்டைப் பற்றிய நினைவுகள் கனவு வடிவத்தில் அவனைச் சந்தித்துக் கொண்டிருந்தன. சந்தேகப் பார்வை இல்லாமல் எதையும் பார்க்க அவனால் முடியவில்லை.
காற்றும் மழையும் மிகவும் பலமாக இருந்தன. காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நோயாளியைப்போல கப்பல் நீங்கிக் கொண்டிருந்தது. பயணிகளில் சிலர் வாந்தி எடுக்க ஆரம்பித்தார்கள். கடலைப் பார்த்தால், கடலுக்கு பயங்கரமான வாந்தி வந்து விட்டிருக்கிறதோ என்பதைப்போல தோன்றும்.
நாங்கள் வாந்தி வராமல் இருக்க வேண்டும் என்பதற்காகப் படுத்தோம். திடீரென்று நாராயண மேனன் மிகுந்த சத்தத்துடன் வாந்தி எடுத்தான். நாங்கள் அவனுடைய உடலைப் பிடித்துத் தடவி, முடியக் கூடிய முதலுதவிகளைச் செய்தோம். சிறிது வாந்தி எடுத்த பிறகு, அவன் ஒரு பிணத்தைப்போல படுத்துக் கிடந்தான். அவனுடைய முகம் தாளைப்போல வெளிறிப் போய், முழுமையாக வியர்வையில் குளித்திருந்தது.
"என்ன வேண்டும்?'' நான் கனிவாகக் கேட்டேன்.
"எதுவும் வேண்டாம்" என்ற அர்த்தத்தில் அவன் தலையைக் குலுக்கினான்.