ஒரு ரூபாய் கடன் - Page 3
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 7051
"இந்த நண்பர் எங்கே போகிறார்!'' கர்நாடகாவைச் சேர்ந்த மாணவர்களில் ஒருவன் கேட்டான்.
நான் நாராயண மேனனின் நிலைமையைச் சுருக்கமான அவர்களிடம் கூறித் தெரிய வைத்தேன்.
"கம்ப்டாவிற்கா? அய்யோ... அங்கு போய் இவர் என்ன செய்யப் போகிறார்? வறுமையின் பிடியில் சிக்கிய ஒரு இடம் அது. புகைவண்டி பாதை இல்லாததால் ஒரு சிறிய துறைமுகமாக இருக்கும் அந்த இடத்தில், கையில் காசு இல்லாமல், மொழி தெரியாமல், தெரிந்த மனிதர்கள் யாருமில்லாமல், சாதாரண ஒரு குழந்தையைப்போல இருக்கும் இவர் எப்படி இருக்க முடியும்? அங்கே கிடந்து சாவதைத் தவிர வேறு வழியே இல்லை. தப்பித்துச் செல்வதற்குக்கூட வழியில்லை.
அப்படிக் கூறப்பட்டதில் ஒரு பகுதியை நாராயண மேனனும் கேட்டிருக்க வேண்டும். அவன் மெதுவாகத் தலையைத் தூக்கி, அந்த மாணவனை நோக்கிப் பரிதாபமாக ஒரு பார்வை பார்த்தான்.
எங்களுக்கு மேனனின்மீது மிகுந்த பரிதாபம் உண்டானது. மாணவர்களுக்கு எல்லா இடங்களிலும் இரக்கம் கிடைக்கும். அவனுக்கு பணத்தைக் கொண்டு உதவக் கூடிய நிலைமை எங்கள் யாருக்கும் இல்லாமலிருந்தது.
இன்னொரு மாணவன் சொன்னான்:
"நாம் இவரை இப்படி விட்டுவிடக் கூடாது. பாருங்க... கடல் எந்த அளவிற்கு ஆரவாரித்துக் கொண்டிருக்கிறது? கப்பல் நள்ளிரவு நேரத்திற்குள் அங்கு போகும். படகிலேயே இவருடைய வேலை முடிந்து விடும்.''
"இவரை எப்படிக் காப்பாற்றுவது?''
"நாம் ஆலோசனை செய்து முடிவு எடுக்க வேண்டும்.''
நாங்கள் நீண்ட நேரம் ஆலோசித்தோம். ஆனால், ஒரு முடிவையும் எடுக்கவில்லை.
மத்தியானம் கடந்தது. உணவு சாப்பிட வேண்டும். கப்பலில் ஒரு போற்றியின் ஹோட்டல் இருந்தது. சாப்பாட்டுக்கு 6 அணா கட்டணமாக வாங்கப்பட்டது. நான் இரண்டு சாப்பாட்டுக்கு ஆர்டர் கொடுத்தேன். மேனன், சாதத்தில் குழம்பை ஊற்றிக் குழைத்து ஒரு கைப்பிடி அளவை எடுத்து வாய்க்குள் போட்டான். அதை மென்று உள்ளே இறக்க அவனால் முடியவில்லை. குழம்பின் ருசி அவனுக்கு வாந்தியை வரவழைத்தது. சாதம் இருந்த தட்டைத் தூரத்தில் நகர்த்தி வைத்துவிட்டு, அவன் தலையைக் குனிந்து கொண்டு உட்கார்ந்திருந்தான். அழ ஆரம்பித்தான்.
என்னுடைய வற்புறுத்தலால் அவன் கொஞ்சம் வெறும் சாதத்தையும் ஊறுகாயையும் சாப்பிட்டான். எஞ்சியிருந்த சாதத்தையும் குழம்பையும் நாங்கள் கடலுக்குள் ஏறிந்தோம்.
இரவிலும் அதேதான் நடந்தது. ஒரு பிடி சோறுகூட வயிற்றுக்குள் போகவில்லை. நான் மேனனை பாசத்துடன் தட்டினேன்: "நீங்கள் எதையாவது சாப்பிட வில்லையென்றால், சோர்வு காரணமாக உடல் நலக்கேடு உண்டாகும். கவனமாக இருக்க வேண்டும்.''
அவன் தலையைக் குலுக்கியவாறு "முடியவில்லை" என்று மட்டும் சொன்னான். இறுதியில் நான் அவனுக்கு ஒரு ரொட்டியை வாங்கிக் கொண்டு வந்து கொடுத்தேன். அவன் கொஞ்சமாகப் பிய்த்துத் தின்ன ஆரம்பித்தான்.
மிகவும் பலமாக வீசிக் கொண்டிருந்த ஒரு காற்றின் வேகத்துடன் சேர்ந்து கப்பல் கம்ப்டாவை அடைந்தது. இருள் சூழ்ந்த கடலின் ஓரத்தில் ஊஞ்சலாடிக் கொண்டிருந்த படகுகளில் இருந்த சிவப்பு நிற வெளிச்சம் மட்டுமே கண்களில் தெரிந்தது.
கப்பலில் இருந்து பயணிகளையும் பொருட்களையும் ஏற்றிக் கொண்டு போவதற்கான கம்பெனியைச் சேர்ந்த படகு, காற்றின் காரணமாக தாமதமாக அங்கு வந்து சேர்ந்தது. கப்பலில் இருந்து படகிற்கு ஏணி இறக்கப்பட்டது.
ஆனால், யுத்தம் செய்து கொண்டிருந்த அலைகளில் சிக்கி படகு எந்தவிதத்திலும் கப்பலுடன் சேர்ந்து வந்து நிற்கவில்லை. படகு, கப்பலுடன் சேர்ந்து ஒட்டி நின்றபோது, ஏணியின் இருபக்கங்களிலும்
நின்று கொண்டிருந்த கப்பல் பணியாட்கள், பயணிகளை, ஆண்- பெண் வேறுபாடே பார்க்காமல், வெறும் பொருட்களைப்போல படகிற்குள் தள்ளி விட்டுக் கொண்டிருந்தார்கள். பெண்களின் கூப்பாட்டையும் குழந்தைகளின் பயங்கரமான ஓலத்தையும் காதிலேயே வாங்கிக் கொள்ளாமல் அவர்கள் தங்களுடைய செயலை நிறுத்தாமல் செய்து கொண்டிருந்தார்கள். நாங்கள் அந்தக் காட்சியைப் பார்த்துக் கொண்டு நின்றிருந்தோம். நாராயண மேனன் அங்குதான் இறங்க வேண்டும். அவன் எங்களுடைய முகத்தையே பரிதாபமாகப் பார்த்துக் கொண்டிருந்தான்.
"இங்கே இறங்க வேண்டாம். உங்களை எப்படியாவது பம்பாயில் கொண்டு போய் விடுகிறோம்.'' மாணவர்கள் கூறினார்கள்.
நாராயண மேனன் சந்தேகத்துடன் நின்றிருந்தான். பேரிரைச்சலுடன் புரண்டு கொண்டிருந்த கடல் அவனை பயமுறுத்தியது. அவன் ஏணியின் பக்கமாக நடந்தான். குதித்துப் புரண்டு ஆராவரித்துக் கொண்டிருந்த கடலைப் பார்த்து பின்னோக்கித் திரும்பி வந்தான்.
"நீங்கள் தைரியமாக அங்கே உட்காருங்கள்.'' நான் மேனனை ஒரு இடத்தில் பிடித்து உட்கார வைத்தேன்.
ஒரு மணி நேரம் கடந்தது. கப்பல் அந்தச் சிறிய துறைமுகத்தை விட்டு நகர்ந்தது. நாராயண மேனன் எங்களுடன்தான் இருந்தான்.
இரவில் அவனுக்குச் சிறிதுகூட தூக்கம் வரவில்லை. கம்ப்டாவிலிருந்து கிளம்பியதிலிருந்து டிக்கெட் இல்லாத ஒரு குற்றவாளியைப் போல அவன் பயணம் செய்து கொண்டிருந்தான்.
மறுநாள் காலையில் அவன் ஒரு குழந்தையைப்போல அழுது கொண்டே என்னிடம் சொன்னான்: "எனக்கு என்ன நடக்கப் போகிறது என்று தெரியாது. நீங்கள் என்னைக் காப்பாற்ற வேண்டும்.''
நான் பலவற்றையும் கூறி மேனனைச் சமாதானப் படுத்தினேன். நானும் அவனைப் போலவே வீட்டை விட்டு வெளியே வந்திருக்கிற ஒருவன்தான் என்றும், தன்னம்பிக்கையும் பொறுமை குணமும் தைரியமும்தான் அப்படிப்பட்டவர்களுக்கு வேண்டும் என்றும், பம்பாயை அடைந்து விட்டால் அனைத்தும் நல்லதில் போய் முடியும் என்றும் ஒரு பணியில் இருக்கும் மனிதனாக சொந்த ஊருக்குத் திரும்பி வரலாம் என்றும் நான் கூறியதைக் கேட்டு, அவன் மனதில் சமாதானமடைந்தான்.
மத்தியானம் நாங்கள் கோவா துறைமுகத்தைத் தொட்டோம். கப்பல் அங்கு ஆறு மணி நேரம் தங்கி நிற்கும் என்பதால், கப்பல்காரர்களும் பயணிகளும் கோவா நகரை சுற்றிப் பார்ப்பதற்கும் உணவு சாப்பிடுவதற்கும் அங்கு இறங்குவார்கள். வரலாற்றுப் புகழ் பெற்ற அந்தப் பழமையான போர்த்துக்கீசிய நகரத்தின் அழகான காட்சிகளைப் பார்க்க வேண்டும் என்று நாங்கள் தீர்மானித்தோம். ஆனால், நாராயண மேனனை எங்களுடன் அழைத்துச் செல்ல எங்களுக்கு முடியவில்லை. காரணம்- கப்பலில் இருந்து பந்தருக்குச் செல்லும்போது, அங்கு ஒரு டிக்கெட் பரிசோதனையாளர் நின்று கொண்டிருப்பார். நோய் இருப்பதாகக் காட்டிக் கொண்டு மேனன் கப்பலிலேயே படுத்திருந்தான். நாங்கள் ஒரு வாடகைக் காரில் கோவா நகரம் முழுவதையும் சுற்றிப் பார்த்து விட்டு, ஹோட்டலில் சுகமான உணவையும் சாப்பிட்டு முடித்து விட்டு, சாயங்காலம் ஐந்து மணிக்குத் திரும்பி வந்தோம்.
நான் நாராயண மேனனுக்கு கொஞ்சம் பிஸ்கட், பழம், வறுத்த வேர் கடலை, ஆரஞ்சுப்பழம் ஆகியவற்றை வாங்கி கையில் வைத்திருந்தேன்.