ராசலீலை - Page 4
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6385
சொந்தத்தில் ஒரு கம்பெனி ஆரம்பித்து ஒரு பஸ் சொந்தக்காரரின் மகளைத் திருமணம் செய்து இரண்டு பிள்ளைகளுடன் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருக்கும் பாலனின் வசதியான வாழ்க்கையை நினைத்து உண்மையிலேயே ஆனந்த வெள்ளத்தில் திளைத்தான் கிருஷ்ணன்.
“நீ போறதுக்கு முன்னாடி ரமாவும் குழந்தைகளும் வராம இருக்கமாட்டாங்க! அப்படி அவங்க வரலைன்னா நாம ரமாவோட அப்பா வீட்டுக்குப் போய் அவங்களைப் பார்ப்போம்.” - பாலன் சொன்னான்.
“பாலா, உன் குழந்தைகளோட புகைப்படத்தை எனக்குக் கொஞ்சம் காட்டேன்.”
பாலன் சுற்றிலும் பார்த்தான். சுவரில் நிறம் மங்கிப்போய் ஒரு திரைப்பட நட்சத்திரத்தின் படமுள்ள காலண்டர் தொங்கிக் கொண்டிருந்தது.
“தாராளமா... இதோ புகைப்படத்தைக் கொண்டு வர்றேன்...” -பாலன் சொன்னான்.
அவன் அடுத்த அறையில் வசிப்பவர்களைத் தேடிச் சென்று ஏதோவொரு கண்ணாடி போட்ட புகைப்படத்தை எடுத்துக் கொண்டு வந்தான். அந்தப் புகைப்படம் அந்த வீட்டுக்காரன் வேலையிலிருந்து ஓய்வுபெற்று வந்தபோது அச்சகத்தில் மற்ற தொழிலாளிகளுடன் சேர்ந்து எடுத்துக்கொண்டது. ஒட்டிப்போன கன்னங்களுடைய ஒரு வயதான கிழவன், பத்து, பன்னிரண்டு தொழிலாளிகளுக்கு மத்தியில் கழுத்தில் பூமாலை அணிந்து ஒரு புது மணமகனைப் போல புகைப் படத்தில் நின்றிருந்தான்.
“இதோ... இதுதான் என் குடும்பப் புகைப்படம்!” - பாலன் புகைப்படத்தை கிருஷ்ணனின் மடியில் வைத்தான். “இதோ இதுதான் நான்...”
அவன் கிருஷ்ணனின் விரலைப் பிடித்து மாலையணிந்து நின்றிருக்கும் கிழவனைத் தொட்டுக் காட்டினான்.
“பாலா, நீ சூட்டா அணிஞ்சிருக்கே?”
“ஆமா... கோடுகள் போட்ட ஒரு டைகூட நான் கட்டியிருக்கேன். இதோ... இதுதான் என் மனைவி.”
அந்த க்ரூப் புகைப்படத்தில் பற்கள் வெளியே நீட்டிய கோலத்துடன் நின்று கொண்டிருந்த வயதான ஒரு பெண் இருந்தாள். அவள் அச்சகத்தில் பெருக்கி சுத்தம் செய்யும் வேலை செய்பவள். பாலன் கிருஷ்ணனின் விரலைப் பிடித்து அந்தப் பெண்ணின் முகத்தில் வைத்தான்.
“இளம் சிவப்பு நிறத்துல ஒரு பனாரஸ் புடவையை ரமா கட்டியிருக்கா. பிறகு... கிருஷ்ணா, நீ சொன்னா நம்பமாட்டே அவ கழுத்துலயும் கைகள்லயும் சேர்த்து மொத்தம் அறுபது பவுன் நகை போட்டிருக்கா, நகைகள் அணியிறது பொதுவாகவே எனக்குப் பிடிக்காது. ஆனா அவளோட அப்பா கொடுத்ததாச்சே! போட்டுக் கொள்ளட்டும்னு விட்டுட்டேன்...”
பாலன் உரத்த குரலில் சிரித்தான்.
“இனி நான் உனக்கு என் பிள்ளைகளைக் காட்டப் போறேன்... இது என் மகள்.”
கிருஷ்ணனின் விரல் அச்சகத்தின் அச்சு கோர்க்கும் மனிதனின் வழுக்கைத் தலையைத் தொட்டது.
“இது என்னோட மகன்.”
பாலன் கிருஷ்ணனின் கையிலிருந்து மெதுவாக அந்தப் புகைப்படத்தை வாங்கி பக்கத்து வீட்டுக்காரர்களிடம் திரும்ப கொண்டு போய் கொடுத்தான். பாலனின் மகிழ்ச்சி நிறைந்த குடும்பத்தைப் பார்த்த சந்தோஷத்துடன் கிருஷ்ணன் நாற்லிகாலியில் சாய்ந்து உட்கார்ந்தான். தான்தான் இப்படி ஆகிவிட்டோம். பாலனாவது நல்ல நிலையில் இருக்கட்டும் என்று மனப்பூர்வமாக நினைத்தான் கிருஷ்ணன். பாலனின் குழந்தைகளைத் தன்னால் பார்க்க முடியவில்லையே என்ற ஒரே கவலைதான் அவனுக்கு.
இரண்டு நாட்கள் மட்டுமே அவன் இந்த நகரத்தில் இருக்கிறான். திரும்பிப் போவதற்கான டிக்கெட்டை ஏற்கனவே பாலன் முன்பதிவு செய்து வைத்திருந்தான். இந்த இரண்டு நாட்களில் பல இடங்களுக்கும் அவன் போக வேண்டியிருக்கிறது. பத்து வருடங்களுக்கு முன்பு அவன் தங்கியிருந்த இடத்திற்குப் போக வேண்டுமென்று அவன் நினைத்திருந்தான். லீலாவைப் பார்க்க வேண்டும் என்றும் தீர்மானித்திருந்தான். பிறகு... தன்னுடைய நினைவுகளில் இரண்டறக் கலந்திருக்கும் சில பாதைகள், கட்டிடங்கள், பூங்காக்கள்... எல்லாம் முடிந்த பிறகு தான் வேலை பார்த்த கடுகு எண்ணெய் வியாபாரம் செய்யும் கம்பெனிக்கு ஒருமுறை போய் வர வேண்டுமென்று அவன் திட்டமிட்டிருந்தான்.
“நாம சாயங்காலம் ஒரு பூங்காவுல போய் உட்காருவோம்ல! காந்தி சிலைகூட அங்கே இருக்குமே...!”
“நீ எதையும் மறக்கல...”
“முதல்ல நாம அங்கே போவோம்.”
“கட்டாயம். அந்தப் பூங்கா இங்கேயிருந்து ரொம்பவும் தூரத்துல இல்ல. நடந்துபோகும் தூரம்தான்.”
பாலனும் கிருஷ்ணனும் காய்ந்துபோன சப்பாத்தியும் உருளைக்கிழங்கு சப்ஜியும் சாப்பிட்டார்கள்.
“ரமா இங்கே இல்லாமப் போயிட்டா. அவ ரொம்பவும் நல்ல சைனீஸ் உணவு வகைகளை சமையல் பண்ணுவா. என் ரெண்டு பிள்ளைகளுக்கும் சிக்கன் சௌமீன்னா உயிர்...”
“எனக்கு இது போதும். கடந்த நாலு வருடங்களாக நான் மாமிசமோ, மீனோ சாப்பிடுறது இல்ல.” - கிருஷ்ணன் சொன்னான்.
சைவ உணவு சாப்பிடக்கூடிய மனிதனாக மாறிய பிறகு அவனுக்கு உணவு விஷயத்தில் பெரிய அளவில் விருப்பமில்லாமல் ஆகிவிட்டது. உயிருடன் இருக்கவேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக இப்போது அவன் சாப்பிடுகிறான்.
“அப்படி இருக்கக்கூடாது... ரமாவோட கார்லிக் சிக்கன் சாப்பிடாம உன்னை நான் விடமாட்டேன்.” -பாலன் சொன்னான்.
“அதைச் சாப்பிடச் சொல்லி என்னைக் கட்டாயப்படுத்தாதே பாலா.”
“ரெண்டு நாட்கள் நீ பழைய கிருஷ்ணனா இருக்கணும். உனக்கு ஞாபகம் இருக்கா? லீலா உன்னைப் பார்த்து முதல்தடவையா சிரிச்சப்போ கோழிக்கறியோட நாம ரம் குடிச்சதைச் சொல்றேன்...”
“நான் இப்போ மது அருந்துறது இல்ல...”
நம்பிக்கை வராமல் பாலன் தன்னுடைய நண்பனின் முகத்தைப் பார்த்தான். பாலனுடைய அறையின் மூலையில் காலியான சாராயப் புட்டிகள் கூட்டமாகக் கிடந்தன.
மீன் சாப்பிடுவதில்லை. மாமிசம் சாப்பிடுவதில்லை. மது அருந்துவதில்லை.
கிருஷ்ணன் இப்போது பார்ப்பது கண்களைக் கொண்டல்ல. மனதைக் கொண்டு...
சாப்பிட்டு முடித்ததும் பாலனுக்குச் சிறிது நேரமாவது தூங்க வேண்டும். ஆனால், அதற்கு கிருஷ்ணன் சம்மதிக்கவில்லை. முடிவில் அவர்கள் காந்தி சிலையிருக்கும் பூங்காவை நோக்கி நடந்தார்கள்.
முன்பு விடுமுறை நாட்களில் கிருஷ்ணனும் பாலனும் அந்த காந்தி சிலைக்குக் கீழே போய் அமர்ந்திருப்பார்கள். பணம் சம்பாதிப்பதில் இருக்கும் கஷ்டங்களைப் பற்றியும் திருமணம் செய்யப் போகும் இளம்பெண்களைப் பற்றியும் புதிதாகத் திரைக்கு வந்திருக்கும் இந்தி திரைப்படங்களைப் பற்றியும் அவர்கள் அங்கு அமர்ந்து பேசிக் கொண்டிருப்பார்கள். அந்தச் சிலை உயிருள்ளதைப் போலவே இருக்கும். ஊன்றுகோலின் மேற்பகுதியிலிருந்து மூக்கிற்கு மேலே இறங்கிக் காட்சியளிக்கும் கண்ணாடி வழியாகக் கீழ்நோக்கிப் பார்க்கும் அந்த காந்தியை கிருஷ்ணன் மனதிற்குள் ஆராதித்தான். அப்போது அவன் வசித்துக் கொண்டிருந்த தோபி காட்டிற்கருகில் உள்ள தன்னுடைய அறையில் காந்தியின் படத்தை அவன் கண்ணாடி போட்டு வைத்திருந்தான். ஒரு காலண்டரிலிருந்து வெட்டியெடுக்கப்பட்ட படமது.
வெயில் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்துவிட்டிருந்ததால் கிருஷ்ணனுக்குச் சுற்றிலும் ஒரே இருட்டாக இருந்தது.