ராசலீலை - Page 6
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6385
பாலன் கதவைத் தட்டினான்.
“யாரு?”
“கொஞ்சம் கதவைத் திறக்க முடியுமா?”
ஓசையுடன் கதவு திறந்தது. உள்பாவாடையும், ரவிக்கையும் அணிந்த ஒரு பெண் நின்றிருந்தாள். கதவை முழுமையாகத் திறக்காமல் ‘என்ன வேண்டும்?’ என்று கேட்பது மாதிரி அவள் பாலனின் முகத்தைப் பார்த்தாள்.
“இவர் இந்த அறையைக் கொஞ்சம் பார்க்க விரும்புறாரு...”
“இதை வாடகைக்குக் கொடுக்குறதா இல்ல.”
“அது எங்களுக்கும் தெரியும்” -பாலன் சிரித்தான். “இவர் இந்த அறையில பதினைஞ்சு வருஷமா இருந்தவரு. தன்னோட பழைய அறையை மீண்டும் ஒருமுறை பார்க்குறதுக்காக மட்டுமே இவரு இங்கே வந்திருக்காரு.”
“இவருக்கு கண் பார்வை தெரியாதா?”
அவள் சற்று விலகி நின்றாள். பாலன் கிருஷ்ணனின் கையைப் பிடிக்க முயற்சித்தபோது, கிருஷ்ணன் அன்புடன் தன் நண்பனின் கையை¬ நீக்கிவிட்டு உள்ளே நடந்தான். அங்கு அந்தப் பெண்ணின் ஆடைகள், பாத்திரங்கள், தகரப் பெட்டிகள் எதையும் கிருஷ்ணன் பார்க்கவில்லை. ஜன்னலுக்கு அருகில் சுவரோடு சேர்த்து போடப்பட்டிருந்த தன்னுடைய சிறிய கட்டிலை அவன் பார்த்தான். அந்தக் கட்டிலில் படுத்துத்தான் பதினைந்து வருடகாலம் அவன் வாசித்ததும், கனவுகள் கண்டதும், காதல் நினைவுகளில் மூழ்கியதும், உறங்கியதும்...
பிரம்பின் உதவியில்லாமல் சர்வ சாதாரணமாக அவன் அந்த இருளடைந்த அறைக்குள் சுற்றிச் சுற்றி வந்துகொண்டிருந்தான்.
“நீங்க சொன்னது மாதிரி இல்லையே! இவருக்குக் கண்கள் தெரியும் போல இருக்கே!”
அந்தப் பெண் சொன்னாள். கிருஷ்ணன் வாசல் கதவுகளையும், ஜன்னல்களையும், சுவரையும் மெதுவாகத் தடவிக்கொண்டிருந்தான். பிறகு அவன் தன்னுடைய தலையைச் சுவரோடு சேர்த்து வைத்து என்னவோ சிந்தனையில் ஆழ்ந்தான். அவனுடைய முகத்தில் கனமான கவலை நிழலிட்டது.
“நீங்க சீக்கிரமாக இங்கேயிருந்து போயிடுங்க.”
அந்தப் பெண் சொன்னாள். “என் புருஷன் இப்போது வந்திடுவாரு. முன்கோபம் கொண்ட அந்த மனிதனுக்கு என்மேல எப்பவும் சந்தேகம்.”
“எனக்கு ஒரு தம்ளர் தண்ணி தரமுடியுமா?”
அறையின் மூலையில் வைத்திருந்த குடத்திலிருந்து அவள் ஒரு கண்ணாடி தம்ளரில் நீர் எடுத்து கிருஷ்ணனிடம் கொடுத்தாள். நீரைக் குடித்துவிட்டு கையால் உதடுகளைத் துடைத்துக்கொண்ட கிருஷ்ணன் பிரம்பைக் கையிலெடுத்துக் கொண்டு வெளியே நடந்தான். படிகளில் இறங்குவதற்கு அவனுக்குப் பாலனின் உதவி தேவைப்பட்டது. அவனுடைய கண்ணுக்கு முன்னால் இருட்டு பயங்கரமாகப் பரவியிருந்தது.
“பாலா, என் அறையில இப்போ யார் இருக்காங்க?”
“ஒரு பல்கலைக்கழக பேராசிரியையும் அவளோட கணவரும்.”
“அவ்வளவு சிறிய அறையிலயா?”
“கிருஷ்ணா, நீ போனபிறகு இந்தக் கட்டிடத்தை முழுமையா புதுப்பிச்சு கட்டினாங்க. நீ ஒரு அறையைத்தான் பார்த்தே. அதோடு சேர்ந்து இன்னொரு அறையும் இருக்கு. அங்கேதான் அந்தப் பெண்ணும் அவளோட கணவரும் படுப்பாங்க.”
“அவ அணிஞ்சிருக்குற ஆடையோட நிறம் என்ன?”
“இளம் சிவப்பு வண்ணத்துல ட்ரெஸ்ஸிங் கவுன்தான் அவ அணிஞ்சிருந்தது...”
“என்னோட பழைய அறை இப்போ எப்படி இருக்குன்றதை நீ கொஞ்சம் விளக்கமா சொல்ல முடியுமா?”
“கட்டாயம்...” -பாலன் ஒரு நீண்ட பெருமூச்சுவிட்டான். “பழைய ஜன்னலை எடுத்துட்டு அதுக்குப் பதிலா காற்றும் வெளிச்சமும் வர்ற மாதிரி ஒரு பெரிய ஜன்னலை வச்சிருக்காங்க. ஜன்னல் திரையோட நிறம் இளம்பச்சை. ஜன்னலுக்குக்கீழே ஒரு ரேக்குல புத்தகங்களும் வார இதழ்களும் அடுக்கி வைக்கப்பட்டிருக்கு. அதே ரேக்கின் மேல் ஸ்டீரியோ டெக் வச்சிருக்காங்க. ஜன்னலுக்கு எதிர்ல சுவரோட ஒரு மூலையில ரெஃப்ரிஜிரேட்டர் இருக்கு. அதுல இருந்து எடுத்த தண்ணியைத்தான் அந்தப் பெண் உனக்குக் குடிக்கத் தந்தா...”
அதைக் கேட்டு கிருஷ்ணனிடமிருந்து ஒரு நீண்ட பெருமூச்சு வெளிப்பட்டது.
தோபிகாட்டுகளில் வெளிச்சம் பளிச்சிட்டது. பச்சை நிறம் கொண்ட தடாகத்தில் இருட்டின் மறைவில் சலவைத் தொழிலாளர்களின் பெண்கள் குளித்துக் கொண்டிருந்தார்கள். பாலனின் உடல்மீது சாய்ந்தவாறு பிரம்பைத் தரையில் தட்டிக்கொண்டே கிருஷ்ணன் மெதுவாக நடந்தான். அவனுக்கு சோர்வு உண்டான மாதிரி இருந்தது. எங்கேயாவது போய் கொஞ்சநேரம் தலையைச் சாய்த்து...
2
காலையில் லீலாவைப் பார்க்க வேண்டுமென்று அவர்கள் தீர்மானித்திருந்தார்கள். எனினும் கிருஷ்ணன் படுக்கையைவிட்டு எழுவதற்கு முன்பு எங்கோ போய் திரும்பிவந்த பாலன் சொன்னான்.
“காலையில நாம உன்னோட சேட்டைப் பார்க்கப் போகலாம். மதியத்திற்குப் பின்னாடி லீலாவைப் பார்க்கப் போகலாம்.”
லீலாவைப் பார்க்க வேண்டும் என்பதில் மிகவும் ஆர்வமாக இருந்தான் கிருஷ்ணன். ஆனால், அதை அவன் வெளியே காட்டிக் கொள்ளவில்லை. லீலா இன்று யாருக்குச் சொந்தமானவள்? கணவன், குழந்தைகள் என்று மகிழ்ச்சியுடன் அவள் வாழ்ந்து கொண்டிருக்கிறாள். அவர்களுக்கு எந்தவித காரணத்தைக் கொண்டும் தான் தொந்தரவாக அமைந்துவிடக்கூடாது என்பதில் மிகவும் தெளிவாக இருந்தான் கிருஷ்ணன். அங்குபோய் பார்க்க வேண்டும், குசலம் விசாரிக்க வேண்டும், லீலாவின் குரலைக் கேட்க வேண்டும்... அது போதும். அது முடிந்தால் தான் திரும்பிப் போகவேண்டியதுதான் என்ற முடிவில் இருந்தான் கிருஷ்ணன்.
காலைச் சிற்றுண்டி சாப்பிட்டு முடித்து அவர்கள் சேட்டைப் பார்ப்பதற்காகக் கிளம்பினார்கள். பாலனுடன் சேர்ந்து நடக்கும்போது கிருஷ்ணனுக்கு மிகவும் உற்சாகமாக இருந்தது. மெயின் ரோட்டை அடைந்தவுடன் அவர்கள் ஒரு குதிரை வண்டியை வாடகைக்குப் பிடித்தார்கள். வார்னிஷின் தாங்க முடியாத வாசனை எங்கிருந்து வருகிறது என்பதைக் கிருஷ்ணனால் புரிந்துகொள்ளவே முடியவில்லை. வார்னிஷ் ஃபாக்டரிக்கு அருகிலிருக்கும் அறையில் தான் இப்போது தங்கியிருக்கவில்லை என்று பாலன் ஏற்கனவே கூறிவிட்டானே! ஒருவேளை தன்னுடைய மனம் இப்படியெல்லாம் நினைத்துக் கொண்டிருக்கலாம் என்று தன்னைத் தானே சமாதானப்படுத்திக் கொண்டான் கிருஷ்ணன்.
நாற்பது நிமிடங்கள் குதிரை வண்டியில் பயணம் செய்தபிறகு அவர்கள் கிருஷ்ணன் முன்பு வேலை செய்த இடத்தை அடைந்தார்கள். காற்றில் கலந்து வந்து கொண்டிருந்த கடுகு எண்ணெயின் வாசனை கிருஷ்ணனின் மனதில் பழைய ஞாபகங்களைக் கிளறிவிட்டன. சரஸ்வதி தேவியின் படங்கள் ஒட்டப்பட்ட எண்ணெய் டின்கள் ஆங்காங்கே இருந்தன. அந்த இடத்தில் யாரையுமே காணவில்லை. கிருஷ்ணன் இதயம் ‘டக்டக்’கென்று அடித்துக் கொண்டிருந்தது. அந்த இடத்தில்தான் அவன் பதினைந்து வருடங்கள் வேலை செய்தான். சாயங்காலம் வேலை முடிந்து திரும்பிச் செல்லும்போது கைகளிலும் ஆடைகளிலும் கடுகு எண்ணெய் பட்டிருக்கும். “நீ நல்லா வேலை செய்கிறவன்” சேட் கூறுவார். “கொஞ்சகாலம் ஆனபிறகு நீயே சொந்தத்துல எண்ணெய் வியாபாரம் செய்யணும். உனக்கு நல்ல எதிர்காலம் இருக்கு.”
படு வெப்பமாக இருந்த ஆஸ்பெஸ்டாஸுக்குக் கீழே கிருஷ்ணனும் பாலனும் நின்றிருந்தார்கள்.