ராசலீலை - Page 8
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6385
“யார் அது பாலா?”
அவன் குரலைத் தாழ்த்திக்கொண்டு கேட்டான்.
“ஸ்ரீதரனோட அப்பா...”
அவர்கள் பேசுவதை அந்த அறிமுகமில்லாத மனிதன் கேட்டான்.
“என்னை அறிமுகப்படுத்து...”
கிருஷ்ணன் கெஞ்சுகிற குரலில் சொன்னான். பாலன் எழுந்து அந்த அறிமுகமில்லாத மனிதனின் முன்னால் நின்றுகொண்டு சொன்னான்.
“இது மிஸ்டர் கிருஷ்ணன். முன்னாடி இந்த நகரத்துலதான் இவர் இருந்தாரு. லீலா சொல்லியிருப்பா.”
கிருஷ்ணன் எழுந்து கைகளைக் கூப்பினான். அப்போது அவனுடைய மடியில் இருந்த பிரம்பு கீழே விழுந்தது. அறிமுகமில்லாத அந்த மனிதன் எதுவும் புரியாமல் பாலனையும் கிருஷ்ணனையும் மாறி மாறிப் பார்த்தான்.
“நாங்க லீலாவைப் பார்க்க வந்திருக்கோம்.”
“அப்படியா?”
அவன் ஒருவித வெறுப்புடன் அவர்களைப் பார்த்துச் சிரித்தான். சட்டையி+லிருந்த எல்லா பொத்தான்களையும் போட்ட பிறகு அவன் பையிலிருந்து ஒரு சீப்பை எடுத்து தலையை வாரத் தொடங்கினான். முன்பு கண்ட அந்தப் பெண் அங்கு ஒரு ஓரத்தில் ஒதுங்கி நின்று கொண்டிருந்தாள். அந்த மனிதன் ஒரு நோட்டை எடுத்து அந்தப் பெண்ணிடம் தந்தான். அவன் பணத்தை வாங்கி தொழுதவாறு உள்ளே போனாள். அவன் அந்த இடத்தைவிட்டுக் கிளம்பினான்.
ஸ்ரீதரனின் தந்தை எதுவுமே பேசாமல் நடந்துகொண்ட விதத்தைப் பார்த்து கிருஷ்ணன் ஒரு மாதிரி ஆகிவிட்டான்.
கதவருகில் ஒரு வளையல் சத்தம் கேட்டது. கிருஷ்ணனின் இதயம் நின்று விடுவதைப்போல் ஆனது. அவன் கதவுக்கு நேராகத் திரும்பி நின்றான். அவன் இடது கால் பெருவிரலில் உண்டான ஒரு நடுக்கம் மேல்நோக்கி நகர்ந்து உடம்பெங்கும் பரவியது. கிருஷ்ணனின் வாய் வறண்டுபோனது மாதிரி ஆனது.
“கிருஷ்ணா... லீலா...”
“உட்காருங்க.”
லீலா சொன்னாள். பாலன் கிருஷ்ணனை ஸோஃபாவில் பிடித்து உட்கார வைத்தான். முன்னாலிருந்த மற்றொரு ஸோஃபாவில் அவள் உட்கார்ந்தாள். அவளுடைய உதடுகளில் அடர்த்தியான சிவப்புச் சாயம் பூசப்பட்டிருந்தது. அந்த இடத்தில் மூச்சை அடைக்கக்கூடிய நறுமணம் பரவியிருந்தது. கிருஷ்ணன் என்ன பேசுவது என்று தெரியாமல் தயங்கியவாறு உட்கார்ந்திருந்தான்.
“இங்கே வண்டியைவிட்டு இறங்கியதுல இருந்து உன்னைப் பார்க்கணும்னு சொல்லிக்கிட்டே இருந்தான் கிருஷ்ணன்.”
அதைக்கேட்டு லீலா சிரித்தாள். முன்பு இருந்த கள்ளங்கபடமில்லாத சிரிப்பு அல்ல அது. செயற்கையான சிரிப்பு இப்போது அவளுக்கு அப்படி சிரிக்க மட்டுமே தெரியும்.
“உன் குழந்தைகள் எங்கே லீலா?”
கிருஷ்ணன் கேட்டான். அவர்களுக்கும் கொடுப்பதற்காக நூறு ரூபாய் நோட்டு ஒன்றை அவன் தன் கையில் வைத்திருந்தான்.
“குழந்தைகளா?”
“சின்னக் குழந்தை உறங்குது. மூத்தது பள்ளிக்கூடம் போயிருக்கு.”
-பாலன் இடையில் புகுந்து சொன்னான். “மூத்தவன் ஆங்கிலோ இந்தியன் கான்வென்ட்ல படிக்குறான். பேரு சதீஷ்...”
“சின்னக் குழந்தையோட பேரு என்ன லீலா?”
அந்தக் கேள்விக்கும் பாலனே பதில் சொன்னான்.
“சுமா. வர்ற மிதுனம் வந்தா ரெண்டு வயசு ஆகுது.”
அவர்களுக்கிடையே அமைதி நிலவியது. லீலா ஏன் தன்னிடம் எதுவுமே பேசாமல் இருக்கிறாள் என்று நினைத்தான் கிருஷ்ணன். அவனுக்கு வருத்தம் உண்டானது.
“லீலா...”
அவள் தூக்கக் கலக்கத்துடனிருந்த தன்னுடைய கண்களை அவனுக்கு நேராக உயர்த்தினாள்.
“நீ என்ன நிறத்துல இப்போ புடவை கட்டியிருக்கே?”
“இளம் மஞ்சள் நிறத்துல...”
உண்மையாகச் சொல்லப்போனால் அவள் மெல்லிய கவுனைத்தான் அப்போது அணிந்திருந்தாள். கிருஷ்ணன் மனதில்கூட காணமுடியாத வயலட் நிறத்தில் அது இருந்தது.
“உன் காதுகள்ல இப்பவும் பெரிய வளையங்கள் இருக்கா?”
“இருக்கு...”
அவளுடைய காதுகளில் கனமான தங்கக் கம்மல்கள் இருந்தன.
“ஸ்ரீதரன் எப்போ அலுவலகத்துல இருந்து வருவாரு? நான் அவரைப் பார்க்கணும்...”
அவள் பாலனின் முகத்தைப் பார்த்தாள். அவன் சொன்னான்.
“ஸ்ரீதரன்... உன்னோட கணவர்...”
“அவருக்கு இப்போ வேலை அதிகம். வர்றதுக்கு ராத்திரி ஆயிடும்...”
மீண்டும் அமைதி. லீலாவின் உடம்பிலிருந்து வந்த வாசனை திரவியத்தின் நறுமணம் அந்த இடம் முழுக்கப் பரவியிருந்தது.
“லீலா, நீயும் ஸ்ரீதரனும் இருக்குற திருமணப் புகைப்படத்தை எனக்குக் காட்ட முடியுமா?”
லீலா அதைக் கேட்டு ஒருவித பதைபதைப்பிற்கு உள்ளானாள். பாலன் ஒரே பார்வையில் அவளை அமைதியாக இருக்கும்படி செய்தான். அவன் சுவரிலிருந்த ஒரு புகைப்படத்தை எடுத்து லீலாவின் கையில் தந்தான். அது பல வருடங்களுக்கு முன்னால் மரணமடைந்த லீலாவின் தந்தை இருக்கும் படம். கிருஷ்ணன் அந்தப் புகைப்படத்தை வாங்கி மெதுவாக அதைத் தடவினான்.
“ஸ்ரீதரன் நல்ல உயரமா?”
“ஆமா...”
லீலா மெதுவான குரலில் சொன்னாள்.
“நிறம்...?”
“நல்ல வெள்ளை...”
கிருஷ்ணனின் கை விரல்கள் புகைப்படத்தின் கண்ணாடிமீது நகர்ந்து கொண்டிருந்தன. கண்ணாடிக்குக் கீழே கொம்பை நீட்டிக்கொண்டு ஒரு பூச்சி ஒளிந்திருந்தது. மேலே நகர்ந்து கொண்டிருந்த விரல்களைப் பார்த்து ஒரு முன்எச்சரிக்கை நடவடிக்கை என்பதைப் போல அது சட்டத்திற்குள்ளிருந்த துவாரத்திற்குள் போய் ஒளிந்துகொண்டது. இப்போது அதன் அசைந்து கொண்டிருந்த கொம்புகள் மட்டும் வெளியே தெரிந்தன. ஒரு நீண்ட பெருமூச்சு விட்டவாறு கிருஷ்ணன் அந்தப் புகைப்படத்தைத் திரும்பத் தந்தான்.
முன்பு பார்த்த வயதான அந்தப் பெண் இரண்டு கப்புகளில் தேநீர் கொண்டுவந்தாள். லீலா ஒரு கப்பை எடுத்துக் கிருஷ்ணனின் கையில் தந்தாள். அப்போது அவளுடைய கைவிரல்கள் அவனைத் தொட்டன. அவ்வளவுதான் ஒரு காலைநேரக் காற்றைப்போல அவனுடைய உடல், மனம் எல்லாமே ‘ஜில்’லென்று குளிர ஆரம்பித்தன. அவன் பார்வை தெரியாத கண்களில் அவள்மீது கொண்ட ஈடுபாடு நிறைந்திருந்தது.
“நீ கணவன், குழந்தைகளுடன் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழறதுக்காக நான் ரொம்பவும் சந்தோஷப்படுறேன். எனக்கு கண்பார்வை இல்லைன்னாலும் உன் கணவரை என்னால பார்க்கமுடியுது. நல்ல குணத்தைக் கொண்டவரும் நல்ல உடல் நலத்தைக் கொண்டவருமான மனிதரா அவர் இருப்பாருன்ற நம்பிக்கை எனக்கு இருக்கு. சொல்லப்போனா அவர் ஒரு உயர்ந்த நிலையில இருக்காரு. என்னை நீ திருமணம் செய்திருந்தா இந்த வசதியான வாழ்க்கை உனக்குக் கிடைச்சிருக்காது. ஒரு விதத்துல பார்க்கப்போனா நான் குருடனா ஆனதே நல்லதுகூட. அன்பின் அடிப்படையில் கேக்குறேன்- என்னை ஒரே ஒரு சின்ன தப்பு செய்ய நீ அனுமதிக்கணும். உன் காதுகள்ல இருக்குற வளையங்களையும், நீ அணிஞ்சிருக்குற இளம்மஞ்சள் நிறப் புடவையையும் உன்னோட சிரிப்பையும் என் மனசுல நினைவுகளா காலாகாலத்துக்கும் நான் வச்சிப் பாதுகாக்கணும்...”
தனக்குள் பேசிக்கொண்டான் கிருஷ்ணன்.
“சரி... நாங்க புறப்படுறோம்” -பாலன் எழுந்தான்.
“இனியும் நிறைய இடங்களை நாங்க பார்க்க வேண்டியதிருக்கு...”
அவன் கிருஷ்ணனின் கையைப் பிடித்துக்கொண்டு வெளியே நடந்தான். கிருஷ்ணனின் மனதில் கடவுளின் சந்நிதியில் இருப்பதைப் போன்ற அமைதியும் மகிழ்ச்சியும் நிறைந்திருந்தன.
நிரந்தரமான இருட்டில் தட்டுத் தடுமாறி நடந்தபோது நகரத்திற்கு வந்த தன்னுடைய பயணம் நல்லமுறையில் முடிந்ததாக அவன் உணர்ந்தான். இனிமேல் வேறு எதையும் பார்ப்பதற்கு அவனுக்கு விருப்பமில்லை. அவனுடைய பயணம் இத்துடன் முடிவடைந்தது.