பருந்துகள்
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6348
அவள் முதல் தடவையாக அந்தப் பருந்தைப் பார்த்தபோது அது ஆகாயத்தில், கடலுக்கு மிகவும் மேலே அந்த அடர்த்தியான நீலத்தில் மெதுவாக வட்டமிட்டுப் பறந்து கொண்டிருந்தது. அவளுடைய மனதிற்குள் கடுமையான ஒரு வெறுப்பு திடீரென்று வந்து நிறைந்தது. அதற்கான காரணங்களை அவள் தேடவில்லை. காரணங்களைத் தேடக்கூடிய ஒரு குணம் அவளிடம் இல்லாமலிருந்தது.
தன் உள்ளே தலைக்குள்ளோ, நெஞ்சிற்குள்ளோ, அல்லது சிவப்பு நிற நதியைப் போல ஓடிக் கொண்டிருக்கும் அந்த நரம்புகளுக்குள்ளோ- எங்கேயோ இருக்கும் மனம்- ஓய்வே இல்லாமல் முனகிக் கொண்டிருக்கும் அந்த மந்திரம்- அதைப் பின்பற்ற மட்டும் அவள் படித்திருந்தாள். இந்த முகத்தைக் காதலி- அது சொல்லி, அவள் காதலித்தாள். எண்ணங்களால் மட்டுமல்ல- தன்னுடைய உதடுகளாலும், விரல் நுனிகளாலும் காதலித்தாள். இந்த நிமிடத்தை வெறு; இந்தப் பாம்பை வெறு... அவள் எப்போதும் அது கூறியபடி கேட்டாள். அப்படியே நாட்கள் நகர்ந்து கொண்டிருக்க, அவளுடைய உடல் அந்த சுதந்திரப் பிறவியின் அடிமையாக ஆனது. அதற்குப் பிறகும் அவளுடைய உள்ளுக்குள் இருந்து- எல்லையற்ற ஒரு ஆழத்திற்குள்ளிருந்து திருப்தியின்மையைக் காட்டும் முணுமுணுப்பு எழுந்து கொண்டிருந்தது. சுதந்திரம்- அது சொன்னது. எனக்கு மேலும் மேலும் சுதந்திரமாக இருக்க வேண்டும்.
தன்னுடைய மெலிந்த உடல் ஒரு கூடு என்பதையும், அதன் பலகைகளை, நன்கு வளர்ந்த சிறகுகளைக் கொண்டு மோதி ஒரு உயிரினம், அதை உடைத்துவிட்டு வெளியே போக முயற்சிக்கிறது என்பதையும் அவள் உணர்ந்தாள். தன்னுடைய கழுத்து எலும்புகளின்மீது விரல் முனைகளை வைத்து அழுத்தியவாறு அவள் களைப்படைந்த குரலில் சொன்னாள்: "என்னால் முடியாது. என்னால் முடியவே முடியாது.''
அவளுடைய கணவர் வாசித்துக் கொண்டிருந்த பேப்பர்களைத் தரையில் போட்டுவிட்டு அவளையே பார்த்தார். அந்த வார்த்தைகள் தலை வேதனையைப்போல அவரைப் பாடாய்ப்படுத்தியது. "என்னால் முடியாது." அவளுடைய மகள் சணலில் கட்டி இழுத்துக் கொண்டிருந்த சக்கரவண்டி திடீரென்று நின்றது. வேலைக்காரர்கள் பாத்திரங்களைச் சுத்தம் செய்வதற்கு மத்தியில் திடுக்கிட்டு, தலையைத் திருப்பி, அந்த வார்த்தைகளை கவனமாகக் கேட்டார்கள். அவளுக்கு எதனால் முடியாமல் போனது? அவள் வீட்டு வேலைகளைக்கூட செய்வதில்லையே! ஒரு விலை குறைவான ஆடையின் சுமையைக்கூட தாங்கக்கூடிய சூழ்நிலை அவளுக்கு இதுவரை உண்டானதில்லை. வெள்ளிப் பாத்திரங்களில் வைக்கப்பட்டிருந்த பூந்தண்டுகளுக்கும் பட்டுத் தலையணைகளுக்கும் நடுவில் நின்று கொண்டு அவள் அந்த வார்த்தைகளை எதற்காகக் கூறினாள்? அன்று அவர்கள் யாருக்கும் அந்தக் கேள்விக்கு பதில் காண முடியவில்லை. ஆனால் பிறகு கொஞ்சம் பணத்தைக் கொடுத்தவுடன், நகரத்தின் மிகச் சிறந்த இதய நிபுணர்களில் ஒருவர் அந்த பதிலை அவர்களுக்குப் பரிசாகத் தந்தார். வேறு என்ன? அவள் ஒரு இதய நோயாளி. அவ்வளவுதான். அவள் இனிமேல் படிகளில் ஏறக்கூடாது. மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் இடங்களுக்கு எந்தச் சமயத்திலும் போகக் கூடாது. எப்போதும் ஓய்விலேயே இருக்க வேண்டும். எந்த அளவிற்கு சிறந்த ஒரு அறிவுரை! ஓய்வெடுக்க வேண்டும். பாத்திரத்தில் பறித்து வைத்த மலர்களைப்போல, நகர்த்தப்பட்டுக் கொண்டிருக்கும் அந்த நாளை எதிர்பார்த்து, பொறுமையுடன், மன அமைதியுடன் ஓய்வெடுக்க வேண்டும்.
அந்த அழகான வீடு ஒரு வளர்ப்புத் தாயாக மாறியது. அது அவளிடம் முணுமுணுக்கக் கற்றுக்கொண்டது. தலையணைகள் இடப்பட்ட படுக்கைகள் அவளிடம் முணுமுணுத்தன: "உட்காரு.. ஓய்வெடு." வராந்தாவில் போடப்பட்டிருந்த நாற்காலி சொன்னது: "நிற்கக் கூடாது. இங்கு ஓய்வெடு." அவள் ஓசை உண்டாக்காமல் அழுதாள். கண்ணீர் அவளுடைய மனதிற்குள் ஒரு மழையைப்போல விழுந்து கொண்டிருந்தது. பல நேரங்களில் அந்த விசாலமான வரவேற்பறையில் அங்குமிங்குமாக அவள் நடைபோட்டுக் கொண்டிருந்தாள். வேகமாக- எந்தவொரு காரணமும் இல்லாமல்- ஒரு அவசரத்துடன். தன்னுடைய வியர்த்துக் கொண்டிருந்த கால்களின் சலனத்தை இன்னொரு ஆளின் உதவி இல்லாமல் நிறுத்தத் தன்னால் முடியாது என்ற விஷயமும் அவளுக்குத் தெரிந்திருந்தது. அந்த பைத்தியம் பிடித்த சலனம் ஒரு இயந்திர பொம்மையின் ஓட்டத்தைப்போல இருந்தது... வேறு சில நேரங்களில் நிலைக்கண்ணாடிக்கு முன்னால் நின்றுகொண்டு அவள் தன்னுடைய தலைமுடியை கோபத்துடன் வாரிக்கொண்டிருந்தாள். வாருவது, வாருவது, பிறகும் கோபத்துடன் வாருவது. இறுதியில் அந்தத் தலைமுடிச் சுருள்கள் உயிருள்ள பாம்புகளைப்போல அவளுடைய தோள்களைத் தொட்டு, சீறி எழுந்துகொண்டு அந்த சிவந்த கன்னங்களில் மோதின.
"வேண்டாம்.''
அவளுடைய கணவர் சொன்னார்.
"என்ன?''
"இந்த சோர்வடையச் செய்தல்.''
"ஹா!''
அவளுடைய இந்தப் பழக்கம், சிரிப்பதற்கு பதிலாக "ஹ" என்று உச்சரிக்கும் குறும்புத்தனமான பழக்கம் புதிதாக அவளிடம் வந்து சேர்ந்திருந்தது. அது அவரை ஆழமாக வேதனை கொள்ளச் செய்தது. ஒரு காலத்தில் அதிகாலைப் பொழுதில் மெல்லிய வெளிச்சத்தைப் போல மென்மையாக இருந்த அவளுடைய சிரிப்பு இப்படி வடிவமெடுக்கும் அளவிற்கு என்ன நடந்தது? இந்தப் போலிச் சிரிப்பு, இந்த அவசரமான நடை, இந்த கோபத்துடன் தலை வாரும் செயல்- இவை அனைத்தும் அவனவனை அழிப்பதற்காக அவள் தயார் பண்ணும் ஆயுதங்கள்தானே? அவளை ஒரு தெய்வ விக்ரகத்தைப்போல தன்னுடைய எல்லா வசதிகளையும் கொண்ட வீட்டில் பிரதிஷ்டை செய்து, என்றென்றும் வழிபட அவர் தயாராக இருந்தார். ஆனால் அவளுக்கு ஒரு விக்ரகத்திடம் இருக்கும் அமைதியான குணம் இல்லை. அவள் அங்கும் இங்குமாக நடந்தாள். ஜன்னல் கதவுகளின் திரைச்சீலைகளை இழுத்து நகர்த்தினாள். ஆகாயத்தைப் பார்த்து நீண்ட பெருமூச்சை விட்டாள். வராந்தாவின் பலகைகளில் பலத்துடன் மிதித்தாள். கடலில் இருந்து காற்று வீசும்போதெல்லாம் வார்த்தைகளைப் பொறுக்கி எடுக்க முடியாத சில பாடல்களைப் பாடினாள்.
அப்படியே வருடங்கள் நகர்ந்து கொண்டிருந்தன. அவளுடைய மகள் நல்ல உடல்நலத்தைக் கொண்ட ஒரு பதினாறு வயது பெண்ணாக இருந்தாள். மெலிந்து காணப்பட்ட அழகான தாய், சிறிய ரோமங்கள் உள்ள கன்னங்களையும் சதைப்பிடிப்பான கைகளையும் கால்களையும் கொண்டிருந்த மகளைப் பார்த்துப் பல விஷயங்களையும் சிந்திக்க ஆரம்பித்து விடுவாள். அவள் எப்படிப்பட்ட குணத்தைக் கொண்டவளாக இருக்கிறாள்? தன்னிடம் மட்டுமல்ல- அவளுடைய தந்தையிடம்கூட சிறிதும் நெருங்கிப் பழகுவதில்லை.
"நீ உஷாவின் வீட்டுக்குப் போயி குளிக்கலாம்ல?''
மகள் தலையை ஆட்டுவாள். தாய்க்கு மெல்லிய கோபம் வரும். அதற்குப் பிறகும் அவள் கேட்பாள்.
"உனக்கு தோழிகள் யாரும் இல்லையா? எப்போதும் இங்கே உட்கார்ந்து படிச்சிக்கிட்டே இருக்குறதா?''
மகள் எழுந்து தன்னுடைய படுக்கையறைக்குச் செல்வாள்.