பருந்துகள் - Page 10
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6350
தலையணையை நோக்கி குனிந்து அமர்ந்திருந்த - அந்த வேதனை அனுபவித்துக் கொண்டிருந்த உருவத்தைப் பார்ப்பதற்காக, திடீரென்று மருத்துவமனை அறைக்குள் குல்ட்டியானோ வந்தான். அவன் அதிர்ச்சியடைந்து நின்றுவிட்டான். தான் வீட்டையும் நாட்டையும் குடும்பத்தையும் உதறி எறிந்துவிட்டு, இந்திராவைச் சொந்தமாக்கிக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்துடன் வந்தது வீணாகிவிட்டதோ?
"இந்திரா, என்ன ஆச்சு?'' - ஆனால் இந்திரா என்று அழைத்து முடித்தவுடன் அவனுக்குத் தோன்றியது - இது இந்திராதானா?
நீர் வந்து, மஞ்சள் படர்ந்து, கன்னங்கள் வீங்கி, கண்கள் சுருங்கி, நீல நிறத்தில் கால் விரல்கள் என்று இருக்கும் இந்த உருவம்? இதைத்தான் காதலித்தோமா? மூக்கு துவாரங்களுக்குள் நுழைக்கப்பட்டிருக்கும் ஆக்சிஜன் குழாய்களைப் பிடுங்கி எறிய முயற்சிப்பதைப் போல கனமான ஒரு கை எப்போதும் அசைந்து கொண்டே இருந்தது. அவன் இதயம் நொறுங்க அழைத்தான்.
"இந்திரா.... என் இந்திரா... உனக்கு என்னைத் தெரியலையா?''
"நீங்க தயவுசெய்து வெளியே போங்க, மிஸ்டர் குல்ட்டியானோ. அவளை சிரமப்படுத்தாதீங்க.''
அவளுடைய கணவர் சொன்னார். டாக்டர் திடீரென்று குல்ட்டியானோவின் கையைப் பிடித்துக் கொண்டு சொன்னார்:
"போக வேண்டாம்... இருங்க...''
நாற்காலியில் எந்தவிதமான அசைவும் இல்லாமல் உட்கார்ந்திருந்த லீலாவின் கூர்மையான கை நகங்கள் நாற்காலியின் கையின் பழைய மரத்தின்மீது திடீரென்று இறங்கின.
"என்னைத் தெரியலையா?'' - அவன் நோயாளிப் பெண்ணிடம் கேட்டான்: "உன் பெப்பே....''
அவளுடைய சுருங்கிப் போன கண்களில் எந்தவொரு உணர்ச்சி வேறுபாடும் உண்டாகவில்லை. அவளுடைய வாய் ஒவ்வொரு முறை மூச்சுவிடும்போதும் திறந்தும் மூடிக்கொண்டும் இருந்தது. அவன் கண்களை மூடிக்கொண்டு, ஓசை உண்டாக்காமல் அழுதான்.
இறுதியில் அவளுடைய உடலை ஒரு சிதிலமடைந்த தெய்வத்தின் சிலையைப்போல போர்த்தி மூடி, குங்குமப் பொடியைத் தூவி, மருத்துவமனையில் இருந்து வேறொரு இடத்திற்குக் கொண்டு போனபோது, அவன் கட்டுப்பாட்டை இழந்து உரத்த குரலில் அழுதான். குண்டடி பட்ட ஒரு காட்டு மிருகத்தின் அழுகையைப் போல அவனுடைய அழுகைச் சத்தம் இருந்தது. லீலா திரும்பிப் பார்க்காமல் காரில் ஏறி உட்கார்ந்தாள்.
எதிர்பார்த்ததைப் போலவே அன்று லீலா அவனைப் பார்த்தாள். அவர்களுடைய வீட்டிற்கு முன்னால், கடற்கரையில், ஒரு கறுத்த பாறையின்மீது அவன் உட்கார்ந்திருந்தான். லீலா வேகமாக கேட்டைத் திறந்து அவனை நோக்கி ஓடிச் சென்றாள்.
"வாங்க... உள்ளே வாங்க...''
அவன் தலையை ஆட்டினான்.
"இங்கே இப்படித் தனியாக இருக்க வேண்டிய அவசியம் என்ன?''
அவன் எதுவும் பேசவில்லை. பின்னால் சிவக்க ஆரம்பித்திருந்த சூரியனும் ஒரு கடலும். அவன் கடலில் இருந்து மேலே எழும்பி வந்த ஒரு கடவுளைப் போல லீலாவுக்குத் தோன்றினான்.
"என் செல்லமே.....'' - அவள் அழைத்தாள்: "என்னைத் தொட விடுங்க. நான் உங்களுடைய கண்களைத் துடைத்துவிடுறேன். எனக்கு தைரியத்தைத் தாங்க!''
அவனுடைய கண்கள் எரிந்து கொண்டிருக்கும் சூரியனைப் போல இருந்தன. அந்த உடலுக்கு முத்துக்களின் வெண்மை நிறம் இருந்தது.
"நான் உங்களுக்காக- இந்தக் காதலுக்காக எல்லாவற்றையும் சகித்துக் கொண்டேன்....'' அவள் சொன்னாள்: "அனைத்தும் மீதமிருக்கும் எல்லா உணர்ச்சிகளும்... இரக்கத்தையும் சேர்த்துத்தான்... என்னை ஏற்றுக் கொள்ளவில்லையென்றால், இனி வாழ்க்கையில் எதுவும் இல்லை!''
"லீலா, நான் மொத்தத்தில் காதலித்தது அவளைத்தான். இனி நான் தருவதற்கு எதுவும் இல்லை!''
"எதுவும் இல்லையா?''
அவன் தலையை ஆட்டினான்.
"பாருங்க....'' - அவள் சொன்னாள்: "பாருங்க.... என் உடலைப் பாருங்க. நீங்க அன்னைக்கு இரவு எனக்குப் பரிசாக என்ன தந்தீங்கன்னு பாருங்க....''
"என்ன?''
"ஆமாம்.....''
"இந்த விஷயம் அவளுக்குத் தெரியுமா?''
லீலா சிரித்தாள்.
"ம்.... சொல்லிட்டே... அப்படித்தானே? ஓ.... மோசமான பெண்ணே!. நீ அவளைக் கொன்று விட்டாய்... கொன்று விட்டாய்....''
அவன் கண்களை மூடிக்கொண்டு எழுந்தான்.
"எங்கே போறீங்க?'' - அவள் கேட்டாள்.
"எங்கே? எனக்குத் தெரியாது. இந்த உலகம் என்னுடையதாக இல்லாமல் ஆகி விட்டிருக்கிறது. இனி நான் எங்கு செல்வேன்?''
"வாங்க....'' - லீலா அவனுடைய கையைப் பிடித்து இழுத்துக் கொண்டே சொன்னாள்: "எல்லாம் சரியாகிவிடும். நான் சொல்றதைக் கேளுங்க. நாம கணவனும் மனைவியுமாக ஆகலாம். உங்களுக்கு இந்தியாவில் ஒரு வேலை ஏற்பாடு செய்வோம். இல்லாவிட்டால் புத்தகம் எழுதுங்க... நான் உங்களை நல்ல முறையில் சந்தோஷமாக இருக்கும்படிச் செய்வேன். பாருங்க.....''
அவன் அடுத்த நிமிடம் கையை விடுவித்துக் கொண்டு சொன்னான்: "இல்ல.... அவள் எனக்கு சுதந்திரம் என்றால் என்ன என்பதைக் கற்றுத் தந்தாள். இனி நான் எதற்கும் பயப்பட வேண்டிய தேவையில்லை. நான் நீ சொன்னபடி கேட்க மாட்டேன். உன்னை எந்தச் சமயத்திலும் காதலிக்கவும் மாட்டேன்!''
அவன் நடந்து அங்கிருந்து சென்ற பிறகு, அவள் மீண்டும் ஆகாயத்தையே பார்த்தாள். சூரியன் மறைந்த பிறகும் வானத்தில் ஒரு கறுத்த வெற்றுக்குழி எஞ்சி இருப்பதைப் போல அவளுக்குத் தோன்றியது. அவளுக்கு எல்லாவற்றின்மீதும் திடீரென்று ஒரு வெறுப்பு தோன்றியது. பாவாடைக்கு உள்ளே துணியை மடித்து வயிறுடன் சேர்த்துக் கட்டி நடக்கவும், வெறுக்கவும், பொய் கூறவும் செய்த காதல் என்ற அந்த உணர்வையும் அவள் வெறுத்தாள். அந்த அளவிற்கு இனிமையானது என்று கேள்விப்பட்ட அந்த உணர்வும் அவளின் கையில் வந்து சேர்ந்தபோது, சாதாரண ஒரு போலி நகையாக மாறிவிட்டது....
திடீரென்று மழை ஆரம்பித்தது. கடற்கரையில் கடலை விற்றுக் கொண்டிருந்தவர்களும் இளநீர் விற்றவர்களும் குல்ஃபி விற்பனை செய்தவர்களும் தங்களுடைய பொருட்களை எடுத்துக் கொண்டு தெருவின் இன்னொரு பகுதிக்கு ஓடினார்கள். மழைத்துளிகள் ஒரு மூடுபனியைப் போல அந்தக் கடற்கரையை மூடியது. சிறுவர்களில் சிலர் எங்கிருந்தோ உரத்த குரலில் சத்தம் போட்டுக் கொண்டிருந்தார்கள். லீலா எழுந்து, தெருவைக் கடந்து, தன்னுடைய படிகளைத் தாண்டாமல், கனமான மழைத்துளிகள் ஓசை உண்டாக்கியவாறு விழுந்து தெறித்துக் கொண்டிருந்த, மூடப்பட்ட ஜன்னல்களையும், அடைக்கப்பட்டிருந்த கடைகளையும், மோட்டார் வாகனங்கள் கண்ணாடி வழியாகக் காட்டிய கம்பெனி கட்டிடங்களையும் கடந்து, தனக்கு சிறிதும் அறிமுகமில்லாத ஒரு இருண்ட தெருவை அடைந்தாள். எந்தவித நோக்கமும் இல்லாமல் அவள் அவ்வாறு நடந்தாள். நடந்து சென்றால், என்றைக்காவது தன்னுடைய சொந்தம் என்று கூறப்படும் ஒரு மூல உலகத்தைச் சென்று அடைந்து விட முடியும் என்று அவளுக்குத் தோன்றியது. அன்று... அவளும் ஓய்வு எடுக்கலாம்... கண்களை மூடி, அனைத்து பயங்களையும் மறந்து ஓய்வு எடுக்கலாம்.