பருந்துகள் - Page 4
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6350
ஆனால் என்னுடைய இதயம் சிறகற்ற பறவையைப்போல கிடந்து துடிக்கிறது. அது கடவுளிடம் கேட்கும் கேள்விகளுக்கு பதில்களே இல்லை. சிறகுகளின் சத்தம் கேட்கவில்லையா? முடிவே இல்லாமல் நீண்டு நீண்டு போய்க் கொண்டிருக்கும் அந்த சிறகடிப்புகள்? வேதனையின் அர்த்த மில்லாத, தேவையற்ற அந்த சிறிய அழுகைச் சத்தங்கள்?
நீ ஒரு கடிதத்தை விருப்பப்பட்டாய். அது இதோ. இதனால் உனக்கு என்ன பயன்? ஒருவேளை நீ சிரிக்கும் உதடுகளைக் கொண்ட உன்னுடைய சம வயதுக்காரர்களிடம் காட்டலாம். உங்களுடைய வார்த்தைகள் என் பெயரைக் குத்திக் காயப்படுத்தலாம். நீ எப்போதும் வளர்ச்சி அடையாத ஒரு குழந்தையே. அதனால் என்னுடைய இந்த வேதனையும் உன்னுடைய இன்னொரு விளையாட்டு பொம்மையாக மட்டுமே இருக்கும்
காதலுடன்,
- சொந்தம்
இந்திரா."
கடிதத்தை வாசித்து முடித்தபோது தன்னுடைய கண்கள் திடீரென்று ஈரமாகப் போகின்றன என்று அவனுக்குத் தோன்றியது. ச்சே.... தான் எந்த அளவிற்குக் கேவலமான ஒரு மனிதனாக இருக்கிறோம்! தான் எதற்கு இந்த அளவிற்குப் பேரழகு படைத்த ஒரு பெண்ணை இவ்வளவு வேதனைப்படச் செய்திருக்க வேண்டும்? உரலுக்குள் தலையிட்டதைப் போன்ற ஒரு தோணல். அவன் வேகமாகக் குளித்து முடித்து, ஆடைகளை மாற்றி, கோட்டில் ஒரு சிவப்புநிற மலரை அணிந்து வெளியேறினான்.
வால்காவில், அந்த இரவு வேளையில் ஆட்கள் அதிகமாக இல்லை. அவன் தூணுக்கு அருகிலிருந்த ஒரு மேஜைக்கு அருகில் அமர்ந்து உணவை வரவழைத்தான். அவனுடைய இடப் பக்கத்தில் பத்தடிகள் தாண்டி இரண்டு கைகளிலும் மைக்ரோஃபோனைப் பிடித்துக் கொண்டு ஒரு அழகான பெண் பாட்டு பாடிக் கொண்டிருந்தாள். பாடலுக்கேற்றபடி இடுப்பையும் தோள்களையும் குலுக்கும் போதெல்லாம் அவளுடைய பொன் நிறத்தில் இருந்த மேலாடை மினுமினுத்துக் கொண்டிருந்தது. "ஓ... ஓ... ஓ... என்னை விட்டுப் போகாதே'' என்று அவள் ஆங்கிலத்தில் பாடிக் கொண்டிருந்தாள். "வரப் போகும் இரவிற்கு நான் பயப்படுகிறேன்''- அவளுடைய குரல் ஒரு சங்கைப்போல முழங்கிக் கொண்டிருந்தது. குல்ட்டியானோ சற்று வெறுப்புடன் அவளிடமிருந்து பார்வையை விலக்கி முகத்தைத் திருப்பிக் கொண்டான். இடையில் அவள் அவ்வப்போது அந்தப் பக்கமும் இந்தப் பக்கமுமாக நடந்து கொண்டிருந்தாள். அறையின் ஒரு மூலையில் அமர்ந்திருந்த இரண்டு ஆப்பிரிக்க மாணவர்கள் அவளுடைய ஒவ்வொரு அசைவுகளையும் மிகுந்த ஈடுபாட்டுடன் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
குல்ட்டியானோ உணவு சாப்பிடுவதற்கு மத்தியில் அவ்வப்போது தன்னுடைய பாக்கெட்டிற்குள் கையை விட்டு, அந்த கடிதத்தைத் தொட்டுக் கொண்டேயிருந்தான். பக்கத்து மேஜைக்கு உணவு சாப்பிடுவதற்காக வந்த இளைஞர்களுக்கிடையே இருந்த ஒரு சிவப்புநிறப் பாவாடை அணிந்த கோவாவைச் சேர்ந்த பெண் அவனைச் சுட்டிக் காட்டி, ஒரு உயிரற்ற வெறும் சிரிப்பை உதிர்த்தாள். அவன் அது எதையும் கண்டுகொள்ளவே இல்லை. அதைப் பற்றிக் கேட்கவும் இல்லை. "நான் உன்னைக் காதலிக்கிறேன்... நான் உன்னைக் காதலிக்கிறேன்"- அந்த வார்த்தைகள் ஒரு சோர்ந்துபோன இதயத்தின் துடிப்புகளைப்போல அவனைப் பாடாய்ப்படுத்திக் கொண்டிருந்தன.
"என் அறைக்குள் இருள் பரவத் தொடங்கிவிட்டது. ஓ... ஓ.... ஓ... என்னை விட்டுப் போகாதே''- பாடகி பாடிக் கொண்டிருந்தாள். அவளுடைய மார்பகங்களின் அசைவுகளைப் பார்த்துக்கொண்டே குல்ட்டியானோ நினைத்தான்: "எனக்கு என்னவோ நடந்திருக்கு. இது காதலாக இருக்குமோ?"
பாடகி பாடலை நிறுத்திவிட்டு அவனுடைய மேஜையின் வழியாக நீர் குடிப்பதற்காகவோ வேறு எதற்காகவோ உள்ளே சென்றாள். போகும்போது அவனைப் பார்த்து சிவந்த உதடுகளை நீட்டிச் சிரித்தாள். அவன் வெறுப்புடன் எழுந்து வால்காவின் கதவைத் தள்ளித் திறந்து தெருவின் மங்கலான இருட்டிற்குள் நடந்தான்.
"இல்லை... நான் முடிவு செய்தாகிவிட்டது''- அவன் தன் தோள்மீது தலையைச் சாய்த்துப் படுத்திருந்த பெண்ணிடம் சொன்னான்: "ஒன்று- நீ என்னுடன் மணிலாவிற்கு வரணும். இல்லாவிட்டால்...''
"என் முட்டாளே! நீ என்ன சொல்றே? மனைவியும் மூன்று பிள்ளைகளும் இருக்கும் ஒரு கத்தோலிக்க மத நம்பிக்கையாளனிடம் நான் வீட்டையும் குடும்பத்தையும் உதறிவிட்டு வருவதா?''
அவன் அவளுடைய உள்ளங்கையை விரல் நுனிகளால் செல்லமாக வருடினான்.
"ம்... சரிதான்... நான் ஒரு வழி கண்டுபிடிக்கிறேன். நான் ஒரு விஷயம் சொல்லட்டுமா? எனக்கு இதை வேண்டாம் என்று கூற முடியவில்லை.''
"எதை?''
"இந்தக் காதலை...''
"என் பாவம்... அப்பிராணிக் குழந்தை!''- அவள் முணுமுணுத்தாள்.
அன்று இரவில், தன்னுடைய கண்ணாடிக்கு முன்னால் அமர்ந்து கொண்டு தலைமுடியை வாரும்போது, இந்திரா அறையின் கதவுக்கு அருகில் தயங்கியவாறு நின்று கொண்டிருந்த தன் மகளின் உருவத்தைக் கண்ணாடியில் பார்த்தாள்.
"என்ன லீலா?''- அவள் திரும்பிப் பார்க்காமல் கேட்டாள்.
"நான் ஒரு விஷயம் சொல்லணும்.''
"என்ன?''
"நான் இன்னைக்கு சாயங்காலம் கடற்கரைக்கு நடப்பதற்காகப் போயிருந்தபோது உங்களைப் பார்த்தேன். உங்களையும்...''
"குல்ட்டியானோவையும்... அப்படித்தானே?''
"ஆமாம்...''- லீலாவின் முகம் மிகவும் வெளிறிப் போய் இருந்தது. "பார்த்துட்டேல்ல...! நாங்கள் பேசிக் கொண்டிருந்ததையும் ஒருவேளை கேட்டிருக்கலாம். அதனால் இனிமேல் கூறுவதற்கு எதுவும் இல்லையே! நான் எதையும் மறைத்து வைக்கக் கற்றுக்கொள்ளவில்லை லீலா.''
"அம்மா, நீங்க எதற்காக அந்த ஆளை ஏமாத்துறீங்க?''
"ஏமாத்துகிறேனா?''
"ஆமாம்...''- அவளுடைய குரல் திடீரென்று கனமானது. "அப்பாவை ஏமாற்றினது மாதிரியே ஏமாத்துறீங்க. காதலிக்கிறதா சொல்லி அடிமை ஆக்குறது...''
"நான் உன் அப்பாவை ஏமாற்றினேனா? இல்லை, மகளே. நான் எந்தவொரு சமயத்திலும் அவரிடம் காதலிக்கிறதா சொன்னதே இல்லை. நான் பொய் சொன்னது இல்லை. நீ நம்பல. அப்படித்தானே?''
"மோசமான பெண்!''
"அப்படிச் சொல்லாதே லீலா.''
"நீங்க மோசமான பெண்தான். உங்கக்கிட்ட மோசமான விஷயங்களைத் தவிர வேற எதுவும் இல்லை. இந்த உடல்நலக் குறைவும் இந்த அழகும் இந்த வாழ்க்கையும்... எல்லாமே பொய்யானவை. உங்களுடைய வாழ்க்கைக்கு பத்தாயிரம் முகங்கள் இருக்கின்றன. நீங்கள் இறக்கணும்னுகூட நான் வேண்டிக்கிறேன். ஆமாம்... இறக்கணும்னு... இறந்து போகணும்னு...''
அவள் தரையில் அமர்ந்து தன்னுடைய தலையை முழங்கால்களுக்கு மத்தியில் வைத்துக்கொண்டு தேம்பித் தேம்பி அழுதாள்.
இந்திரா தன்னுடைய தலைமுடியை வேகமாகக் கட்டி முடித்து ஸ்டூலை விட்டு எழுந்தாள். அவள் தன் மகளின் தோள்களைக் கட்டிப் பிடித்துக்கொண்டே கேட்டாள்:
"உனக்கு என்ன ஆச்சு?''
"தொடாதீங்க... தொடாதீங்க''- லீலா அழுதாள். "என்னைத் தொடக்கூடாது. இனிமேல் நான் உங்க முகத்தைப் பார்க்கவே விரும்பல. இதுவரை நான் எல்லாவற்றையும் பொறுத்துக்கிட்டேன்.