பருந்துகள் - Page 8
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6350
"கடவுள் மீதா? நான் இப்போதுகூட அவருடன் அறிமுகமானவளாக இல்லையே!''
"கடவுள் தன்னுடைய விசிட்டிங் கார்டுடன் உன் வரவேற்பு அறையைத் தேடி ஒருநாள் நடந்து வருவார் என்று நீ நினைத்துக் கொண்டிருக்கிறாயா?''
"ஆமாம்....''
"எந்த வேடத்தில் வருவார் என்று நீ நினைத்துக் கொண்டிருக்கிறாய்?''
"எந்த வேடத்தில் வந்தாலும் எனக்குப் புரியும். சிரிப்பாகவோ வேதனையாகவோ..... எப்படி வேணும்னாலும் வரட்டும்.''
"ஓ! நீ எப்படியெல்லாம் பைத்தியக்காரத்தனமா பேசிக்கிட்டு இருக்கே!''
வெளியே உச்சி வெயில் மரங்களின் இலைகளைச் சுட்டெரித்துக் கொண்டிருந்தது. இந்திரா தன் கூந்தலில் இருந்த ஊசிகளைக் கழற்றி மேஜை மீது வைத்தாள். அவளுடைய தலை முடிச் சுருள்கள் தோளில் கனமாக வந்து விழுந்து கொண்டிருந்தன. பிறகு அவள் அந்தக் கடிதத்தை எடுத்து மீண்டும் வாசிக்க ஆரம்பித்தாள்.
"நீ தலைமுடியை அவிழ்த்த பிறகே இந்தக் கடிதத்தை வாசிக்க முடியும். அந்தத் தலை முடிச் சுருள்கள் உன்னுடைய தோள்களையும் மார்பையும் முத்தமிட்டுக் கொண்டிருக்கட்டும். இனி தலையணைகளில் சாய்ந்து, வலது முழங்காலை மடக்கி வைத்துக் கொண்டு ஓய்வெடு. இப்போது நீ என் காதலியாகி விட்டாய். கண்களை மூடிக்கொண்டு, உன்னுடைய உருவத்தை மனதில் நினைத்தவாறு நான் சிறிது நேரம் அமைதியாக உட்கார்ந்திருக்கிறேன். நினைவுகள் என்னை சதி செய்கின்றன. அந்த கறுப்பு மச்சம் உன்னுடைய வலது கன்னத்திலா இருக்கிறது? என்னால் சரியான முடிவுக்கு வர முடியவில்லை.
கடிதம் எழுதக்கூடாது என்று நீ சொன்னாய். நம்முடைய பிரிவு ஒரு உறுப்பு இழப்பைப் போல முழுமையானதாக இருக்கட்டுமே என்று நீ சொன்னாய். ஏனென்றால் சில நாட்களுக்குள் வேதனையை மறந்து விட முடியும். ஆனால் அறுபட்ட நரம்புகளில் இப்போதும் இரத்தம் ஓடிக் கொண்டிருப்பதாக ஒரு ஆணுக்குத் தோன்றினால்....?
என்னால் தெளிவாக சிந்திக்க முடியவில்லை. இந்தியாவில் வாழ்ந்த மூன்று மாதங்களைப் பற்றிய கட்டுரையைக் குறித்து பத்திரிகை ஆசிரியர் ஞாபகப்படுத்திக் கொண்டிருந்தார். அவர்கள் எனக்காக இருபதாயிரம் டாலர்கள் செலவழித்திருக்கிறார்களே! ஆனால், நான் என்ன எழுதுவது? எலிஃபெண்டா குகைகளுக்குள் நுழைந்து மூக்கு உடைபட்ட கடவுளைப் பார்த்தேன். முதுமையின் காரணமாக பாடலைக் கேட்டாலும், தலையை உயர்த்த முயற்சிக்காமல் மண்ணில் கிடந்து நெளிந்து கொண்டிருந்த அந்த நல்ல பாம்பைப் பார்த்தேன். ஏராளமான பணத்தைச் செலவழித்து இந்திய அரசாங்கம் குடியரசு தினத்தைக் கொண்டாடியபோது, தெருவின் ஓரத்தில் சுருண்டு படுத்திருந்த ஒரு பிச்சைக்காரி கிழவியை மக்கள் கால்களால் மிதித்துக் கொன்றதையும் நான் பார்த்தேன்... இவை எதுவும் நான் மறக்காத காட்சிகளே. ஈசல்களைப் போல வெளிச்சத்தைப் பார்க்கும் ஆர்வத்துடன் முன்னோக்கி வேகமாகப் போய்க் கொண்டிருக்கும் மக்கள், ஒரு பிணத்தை மூடி வைப்பதற்காக மட்டும் அகம்பாவத்துடன் ஒரு மன்னன் கட்டிய பளிங்குக் கல் அரண்மனை, குழந்தைகளின் வழிபாட்டு நாயகன் என்று கூறப்படும் உங்களுடைய பிரதம அமைச்சர்... இப்படி நிறைந்த ஒரு கூடையுடன்தான் நான் மணிலாவிற்குத் திரும்பியிருக்கிறேன். எனினும், எழுத உட்காரும்போது என்னுடைய பேனா செயல்படவில்லை. அதனால் உன் பெயரை மட்டுமே எழுத முடிகிறது.
இந்திரா..... இந்திரா.... முதல் தடவையாக அம்மா என்று உச்சரிக்கக் கற்ற ஒரு குழந்தையைப் போல நான் எப்போதும் ஒரு பெயரை மட்டுமே முணுமுணுத்துக் கொண்டிருக்கிறேன் - இந்திரா. நீ எப்படிப்பட்ட ஒரு பெண்! உன்னுடைய ஈர்ப்பு சக்திக்கான ரகசியம் என்ன என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. நான் உன்னுடன் சேர்ந்து அமர்ந்திருந்தபோது, நான் பேசியது எதுவும் முக்கியத்துவம் உள்ளதாக இல்லை. நீயும் எதுவும் கூறவில்லை. அப்படியே கூறியிருந்தாலும், மறக்க முடியாத அளவிற்கு அப்படியெதுவும் அந்த வார்த்தைகளில் இல்லை. என்னவோ நடக்கப் போகிறது என்ற ஒரு பொய்யான நடிப்பு உன்னிடம் இருந்தது. நானும் அதை நம்ப ஆரம்பித்துவிட்டேன். எனினும், என்ன நடந்தது? எதுவும் நடக்கவில்லை. ஆனால், நான் விடை பெற்றுக் கொண்டு திரும்பி வந்த பிறகு, என்னுடைய இதயம் காரணமே இல்லாமல் உனக்கு அருகில் திரும்பவும் வருவதற்கு ஏங்குகிறது. என் உலகம் உன்னுடையதாக இருக்க வேண்டும். என் உலகம் நீ இருக்கக்கூடியதாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால், நான் ஒரு மரப்பொம்மையாக ஆகிவிடுவேன். எனக்கு விதி இல்லை. சொந்தமாக ஒரு சட்டம் இல்லை. உனக்குப் புரிகிறதா? எப்படிப் புரியும்? மொழிகளின் வரையறை என்னை ஒரு உடல் ஊனமுற்ற மனிதனாக ஆக்கிக் கொண்டிருக்கிறது. காதலர்களுக்காக இந்த உலகம் புதிய ஒரு மொழியையே உண்டாக்க வேண்டும். வெள்ளி ஆற்றைப்போல, தெளிவாகவும் பிரகாசமாகவும் இருக்கும் ஒரு மொழி... அதன் ஒவ்வொரு வார்த்தைக்கும் சொந்தமான ஒரு மதிப்பு இருக்க வேண்டும். தனித்து நிற்கக்கூடிய ஆற்றல் இருக்க வேண்டும். அப்படியென்றால், சக்தியே இல்லாத இந்த சாதாரண வார்த்தைகளை நான் ஓரங்கள் கரிந்த வழிபாட்டு மலர்களைப் போல உன்னுடைய பாதங்களில் எந்தச் சமயத்திலும் சொரிய மாட்டேன்.
ஒரு நாள் நீ சொன்னாய் - இந்தக் காதல் என்பது ஒரு சதுரங்க விளையாட்டைப் போன்றது என்று. உண்மையான வார்த்தைகள் என் ஞாபகத்தில் இல்லை. அந்த நிமிடத்தின் சூழ்நிலையை மட்டும், நாடகத்தைப் பார்த்த ஒரு குழந்தையைப் போல நான் இப்போதும் மனதில் நினைத்துப் பார்க்கிறேன். பனி மூடிவிட்டிருக்கும் அந்த மிகவும் நீளமான கடற்கரை... மிகவும் தூரத்தில் எங்கோ இருக்கும் கவலை நிறைந்த உலகத்தை நோக்கிக் கண்களை அனுப்பிக் கொண்டிருக்கும் உன்னுடைய அந்த இருப்பு... அன்று நீ எதைப் பார்த்தாய்? பாலைவனத்தில், மஞ்சள் நிற மணலில் அங்குமிங்குமாக ஓடிக்கொண்டு நீருக்காக உரத்த குரலில் அழுதுகொண்டிருக்கும் என்னையா? ஓ - இந்திரா! என் செல்லமே! நாம் நம்முடைய சொந்த உலகத்திற்குள் இருந்து கொள்ளக்கூடாதா? யாரையும் கடுமையாக வேதனைப்படுத்தாமல், நாம் நம்முடைய சதுரங்க விளையாட்டை ஆரம்பிப்போம். அவர்களுடைய வேதனை நான் இப்போது அனுபவிக்கும் வேதனையைப் போல இருக்காது. அது மட்டும் உண்மை. லில்லி சொன்னாள் - நம்முடைய தொலைக்காட்சிப் பெட்டியின் அளவு போதாது. இந்த மாதம் புதிதாக ஒன்று வாங்க வேண்டும் என்று. மூத்தமகன் சொன்னான்- நான் பேஸ் பந்து குழுவில் சேரணும் என்று. அவர்களுடைய ஆசைகள் நிறைவேறும். ஆனால், என்னுடைய ஆசை?